”Money Is Ultimate என்ற சதுரங்கவேட்டை வசனத்திற்கு ஏற்றார்ப்போல் போலீஸை திசை திருப்பி கோடிகளை கோழிகள் போல் அமுக்கும் வில்லன்களும் அதை காப்பாற்றும் நாயகனும்” இந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படங்கள் வரிசையில் வந்த ஜூலாயி எங்கிற தெலுங்கு படத்தின் ரீமேக்கான சாகசத்தில் கலக்க வந்திருக்கிறார் டாப் ஸ்டார் பிரசாந்த்.
கதை:
வழக்கமான தமிழ் படங்களில் வரும் அத்தனை தகுதிகளும் கொண்ட துறுதுறு கதாநாயகன் பிரசாந்த். IPL பெட்டிங்கில் கலந்து கொள்ள செல்லும் போது அந்த சூதாட்ட மையத்தை போலீஸிடம் காட்டிக்கொடுத்து, போலீசை திசை திருப்பி அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு வங்கியை கொள்ளை அடிக்கிறது வில்லன் கும்பல்.
ஆனால் தன் சாமர்த்தியத்தால் வில்லன்களை பிடிக்க போலிஸுக்கு உதவுகிறார் பிரசாந்த். அதனால் கொள்ளை அடித்த பணம் வில்லனுக்கு கிடைக்காமல் போகிறது. அதன் பின் வில்லனுக்கும் நாயகனுக்கும் ஆடு புலி ஆட்டம் ஆரம்பிக்கிறது. பிறகு அதில் பிரசாந்த எப்படி சாகசம் செய்கிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
அலசல்
நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தாலும் துறுதுறுப்பான கதாப்பாத்திரத்தில் நச் என பொருந்தியிருக்கிறார் பிரசாந்த். நடனம், சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், டைமிங் காமெடியென மிளிர்கிறார் டாப் ஸ்டார். வெல்கம் பேக் பிரசாந்த். சமீப காலங்களில் காமெடியில் கலக்கிவரும் தம்பி ராமையாவின் ஒவ்வொரு வசனத்திற்கும், ஒவ்வொரு எக்ஸ்பிரஷனுக்கும் விசில் பறக்கிறது. வழக்கமாக கொஞ்சிபேசும் நாயகிகள் வரிசையில் இடம்பிடிக்கும் புதுமுக நாயகி அமேண்டா காதல்காட்சிகளில் கவனம் ஈர்த்து பாடல்களில் அதிக கவர்ச்சி காட்டியுள்ளார். ஜூலாயி படத்தின் அதே வில்லன் சோனு தான் இப்படத்திலும் வில்லன் என்பதால் கச்சிதமாக பொருந்தியுள்ளார். நாசர் பொறுப்பான தந்தையாக பக்கா நடிப்பு. இதேபோல் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, கோட்டா ஸ்ரீநிவாஸ் ராவ், ஜான் விஜய், மதன் பாபு, அபி சரவணன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் தங்களின் பாத்திரங்களை சரியாக செய்துள்ளார்கள்.
வழக்கமான மசாலா படம் என்பதால் படத்தில் லாஜிக் என்ற வார்த்தைக்கே இடமில்லை. இருந்தாலும் ஆக்ஷனையும் காமெடியையும் சரியாக பயன்படுத்தி சலிப்பில்லாமல் படத்தை நகர்த்தி செல்கிறார்கள், குறிப்பாக படம் ஆரம்பித்தவுடனே கதைக்குள் செல்கிறது, அதிலும் இடைவேளையிலும் க்ளைமேக்ஸ்ஸில் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வர வைக்கிறது. பல நடிகர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் படத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவுகிறார்கள்.
ஆனால் படத்தினை கையாண்ட விதம் அரத பழசு பாஸ். தமனின் இசையில் ”டேசி கேர்ள்” பாடல் குத்தாட்டம் போட வைக்கிறது. ஆனால் சில பாடல்கள் கதைக்கு வேகத்தடையாக மாறுகிறது. பின்னணியில் தமனின் இசை படத்திற்கு பெரிதும் உதவியுள்ளது என்றே சொல்லலாம். ரீமேக் படம் என்றால் அது எந்த படத்தின் தழுவலோ அதன் காட்சிகளை மீண்டும் படமாக்குவார்கள். ஆனால் இப்படத்தில் அதே படத்தின்( ஜூலாயி) சில காட்சிகளை எடுத்து வைத்துவிட்டார்கள் (அடடடே ஆச்சர்யம்)!
க்ளாப்ஸ் :
வேறென்ன கண்டிப்பாக பிரசாந்த்தின் அதே துறுதுறுப்பான நடிப்பு, தம்பி ராமையாவின் கலக்கல் காமெடி. படத்தின் சுவாரஸ்யத்தை தூண்டும் பல காட்சிகள்.
பல்ப்ஸ்:
என்னதான் புதுப்படம் என்றாலும் சில இடங்களில் பழைய படம் பார்ப்பதுபோல் தோன்றுகிறது. லாஜிக்கை ஒரு ஓரத்திலாவது வைத்திருக்கலாம் என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
மொத்ததில் மசாலா பட விரும்பிகளுக்கு ஏற்ற விருந்து இந்த சாகசம்.