கவிஞருக்கு ஒரு கவிதை, திருப்பதிக்கே ஒரு லட்டு Reply To Vairamuttu‏

.

என் குருவே உந்தனுக்கு 
ஒரு கோடி நமஸ்காரம் ....
உன்கவியால் மனம் நெகிழ்ந்து 
கவி படிக்க பயின்றவர்களில் 
நானும்ஒருவன்தான் , அது நிற்க....
இடி இடிக்கும் உன் குரலில் 
முல்லைத்தீவு பற்றி ஒரு 
முத்தான கவி சொல்ல 
பித்தாகி போனேன் நான் 
சகயமாய் நீ செய்யும் 
வார்த்தை ஜாலமெனெ 
புரியாமல் போவேனோ .......
கதறி அழைத்தோம் வரவில்லை - கரம் 
கூப்பித் தொழுதோம் வரவில்லை
கூக்குரல் கேட்டதுவே.-.உரைத்தாயோ 
எம் குரலை உன் தலைவன் காதினிலே...
எது செய்தாய் எமக்காக .....
ஆனந்தமாய் இருந்துவிட்டு - பின்னர் 
ஆனந்த புரத்தில் ஆவிதுடித்ததாம் 
நீலிக் கண்ணீர் நீ விட்டழ - நாமென்ன 
மூடரோ, நாடகத்தை நம்பி நிற்க
கையிருந்த போது கரம் நீட்டி அழைத்தோமே 
உன் தலைவன் நினைத்திருந்தால் 
இழப்பின்றி முடிந்திருக்கும் ஈழத்தின் இறுதி யுத்தம் ...
உடன் பிறப்பு காக்குமென காத்திருந்தோம் வரவில்லை, 
கையிழந்த பின்னர் - நம் கரம் குலுக்க வந்தாயோ
உதிரம் ஒழுக உயிர் பிடித்தோடுங்கால் 
வார்த்தைகளால் விளையாடி 
வாய் ஜாலம் காட்டி நின்றாய் 
ஐ.நா. வை சாடி நின்றாய் 
ஆங்கிலேயனை ஏசி நின்றாய்
தாயுடன் சேயினை கருக்கி சருகாக்கி 
நிர்வாணமாக்கியே சுட்டுப் பொசுக்கையில் 
ஏனென கேட்க எமக்காக வந்தீரோ..... 
சீன அமிலமா சிங்கள அமிலமா 
என்றொரு ஆராய்ச்சி ஏன் வேண்டிக் கிடக்குதிப்போ


ஈழ காவியம் எழுதவென 
பிணம் மணக்கும் தேசத்தில் 
பணம் சேர்க்கும் வழி கண்டாய் 
உல்லாச உலா வந்து உழவர் தினம் கொண்டாடி 
மகிழ்வூந்தில் ஊரெல்லாம் வலம் வந்தாய்.... 
எப்படிப் புரியும் உனக்கு எம் இனத்தின் வரலாறு
பொய்யுரைக்கும் புலவரே 
ஒன்றுரைப்பேன் கேளும் நீவிர் 
காற்றாட இருந்து வெற்றுக் 
காகிதத்தில் எழுதி விட 
ஈழ காவியம் என்ன 
கருவாச்சி காவியமோ!
பொய்யாக கவி புனைந்து 
வர்ணனைகள் பல கோர்த்து 
ஆக்கி விட இது என்ன 
இசைஞானி இசையமைப்பில் 
வெளியாகும் திரை இசையோ!
புழுகுப் புலவனே புரிந்திடுக நன்றாக 
ஈழகாவியம் எம் இதய காவியம்... 
வீர மறவரின் உதிரம் கொட்டி 
இதயத்தில் வரைந்த வீர காவியம்....
நண்டும் குஞ்சுமாய் நம் மண் நனைத்த 
உதிரத்தால் உருவான உண்மைக் காவியம் ...
பேரரசே, உன்னால் முடிந்தால் 
இந்தி அதிகாரம் இம் மண்ணில் செய்த 
இழி செயலைக் கவியாக்கு 
கருணையேயின்றி கருணாநிதி செய்த 
துர் செயலை தூற்றிக் கவி பாடு 
ஈழ காவியத்தில் இதுவுமொரு அதிகாரம்.

Nantri seithy.com