அரசையா இல்லாத யாழ்ப்பாணம் - பேராசிரியர் சி. மௌனகுரு

.

ஒரு  வாரத்தின்  முன்  தொலைபேசியில்  அந்தக் கிழட்டுச்  சிங்கம்  தள தளத்த  குரலில்  என்னுடன்  பேசியது.
குரலின்  கம்பீரம்  குறையவில்லை.
சேர்  என்  நிலைமை  சரியில்லை. உங்களைக்  காணவும்  கன  கதைகள்  சொல்லவும்  ஆசையாக  இருக்கிறது
அரசையா  நான்  தற்சமயம்  நீண்ட  பயணம்  செய்யமுடியாத  நிலை. உடனே வரமுடியாத  நிலையிலுள்ளேன்.  முடியுமான  நிலை வந்தவுடன்  வருவேன்
இல்லை  சேர்  நான்  அதுவரை  இருக்க மாட்டேன். நாம்  சந்திப்போமோ  தெரியாது
" இல்லை  அரசையா  நீங்கள்  இன்னும்  பல  ஆண்டுகாலம்  இருப்பீர்கள்.  நானும்  இருப்பேன்.  அவசியம்  சந்திப்போம்
" சில  முக்கிய  விடயங்கள்  உங்களிடம்  சொல்ல  வேண்டும்  சேர்
அவர்  சொல்ல  ஆரம்பித்துவிட்டார்
நாடக உலகு  பற்றியே  அவர்  பேசினார்.
கம்பீரம்  குறையாவிட்டாலும்  தள  தளத்த  குரல்.
அவர்  மறு  பக்கத்தில்  அழுகிறார்  என்பது  தெரிந்தது.
என்  மனமும்  கண்ணீர் விட்டது.
அன்புக்கும்  உண்டோ  அடைக்கும்  தாள்.
அனைத்தையும்  நான்  பதிவு  செய்திருக்க வேண்டும்.
அந்தக்  குணம்  என்னிடத்தில்  இல்லை.
இன்றா  நேற்றா,   ஏறத்தாள  40  வருட  நெருக்கமான  உறவு.
1975  களில் அவரும்  குழந்தை  சண்முகலிங்கமும்  என்னை  நாடக அரங்கக்  கல்லூரியில்  அங்கத்தவனாக்க  திருநெல்வேலியில்  நான் குடியிருந்த  வீடு  தேடி  ஒரு  காலைப் பொழுது  வந்தமை பசுமையாக ஞாபகம்  இருக்கிறது




வெள்ளை  வேட்டிநீண்ட கதர் ஜிப்பாகாதில்  ஜிவ்  என  நிற்கும் மயிர்கள். சந்தனப் பொட்டு. கம்பீரமான மீசை அகன்ற நெற்றிகம்பீரமான நடைசிம்மக் குரல்ஆஜானுபாகுவான  தோற்றம்.
அவர்   இப்படித்தான்  என்  மனதில்  பதிந்தார்.
குழந்தை  சண்முகலிங்கத்தை  அவர்  “மாஸ்டர்”  என  அழைப்பார்.
என்னை  அவர்  “சேர்”  என  அழைப்பார்.
என்னைவிட  15  வயது  மூத்தவர்
நாம்  அவரை  “அரைசய்யா”  என  அழைப்போம்
அவர்  கதை  சொல்வது  ஒரு  தனி  அழகு.
விறு விறு  என்று  போனான்  என்ற  சொற்தொடரும்,
அவர்  இந்திய இராணுவத்தில்  இருந்து  2 ஆம்  உலக  யுத்ததில்  பங்கு கொண்ட  கதைகளும்  அவசியம்  அவர்  உரையாடலில்  வரும்
பிரான்ஸிஸ்  ஜெனமும்  குழந்தை  சண்முகலிங்கமும்  அதனைக் கிண்டல்  அடிப்பார்கள்.
நான்  ஒன்றும்  சொல்ல  மாட்டேன்அவர் மீது  எனக்கு மஹா  மரியாதை.  மூவரின்  உரையாடல்களும்  வலு சுவராஸ்யமாக  இருக்கும்
நான் ரசிப்பேன்.
யாழ்ப்பாணத்தில்  நான்  வாழ்ந்த  காலம்  (1975-1992)  பதினேழு வருடங்கள்.   அரசையா   நெருக்கமான  குடும்ப  நண்பரானார்
அடிக்கடி  எனது  வீடு  வருபவர்களுள்  ஒருவர்.
அவர்  என்னோடு  உரையாடியவற்றை மீட்டுப்பார்க்கிறேன்.
யாழ்ப்பாணம்,  நல்லூரில்  பிறந்தவர், சென்ட் ஜோன்ஸ் கல்லூரியில் பயின்றவர். இளம் வயதில் இந்திய இராணுவத்தில் இணைந்து 2ஆம் உலக மகாயுத்ததில் பங்களிப்புச் செய்தவர். தமிழ் நட்டில் வாழ்ந்த பண்டைய  காலங்களில் திரவிடக் கழகக் கருத்துக்களால் கவரப்பட்டு சீர்திருத்தவாதியாயும் தமிழ் பற்றாளராயும் மாறியவர். பெரியார் ,அண்ணா ஆகியோரின் தீவிர ஆதரவாளர். சமூக  ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு மனம் கொதித்தவர். பின்னர் யாழ்ப்பாணம் வந்து தமது பகுத்தறிவுவாத சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைக்க நாடகத்தை ஒரு கருவியாகக் கொண்டவர்.


1950 களின் பிற்பகுதியில் தமிழரசுக்கட்சியின் அர்ப்பணிப்பு மிக்க தொண்டர்களுள் ஒருவராகி, அன்று சட்ட மறுப்பு சத்தியாக்கிரகம் முதலிய போராட்டங்களில் பங்கு கொண்ட அன்றைய போராளி.
அக்காலங்களில் தமிழுணர்வு மிக்க வீரத் தாய் - வீர மைந்தன் போன்ற நாடகங்களயும் திப்பு சுல்தான் போன்ற அந்நியருக்கு எதிரான உணர்வூட்டும் நாடகங்களையும் போட்டவர். .கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடகங்களில் நடித்தவர்,
பின்னால் மேடை நாடக  நடிகராக, ,நாடக நெறியாளராக, நாடக எழுத்தாளராக, புகைப்படப் பிடிப்பாளராக, இசையாளராக, திரைப்பட நடிகராக, வில்லுப்பாட்டுக்கலைஞராக ஒப்பனையாளராகப் பரிணமித்தவர்
நாடக உலகில் 1950 கள் தொடக்கம்,  தனியாகவும், கலையரசு சொர்ணலிங்கம், சுந்தரலிங்கம், தாசீசியஸ், மௌனகுரு, குழந்தை சண்முகலிங்கம் ஆகியவர்களின் நெறியாள்கையில் நடித்தும் அவர்களின்  நாடகங்களுக்கு  ஒப்பனையாளராகவுமாக சேர்ந்து இயங்கியவர், அவர் செயற்பாடுகளுக்காக மாமனிதர் பட்டம், கலாபூஸண பட்டம் போன்ற  பட்டங்கள் பெற்றவர்.
பல்திறன் கொண்ட ஆற்றல் மிக்கதோர் கலைஞர்.
மறைந்த நாடகக்  கலைஞர்  நா.சுந்தரலிங்கத்தின்  தாய்  மாமன்.
சுந்தரலிங்கத்தின்  நாடக  ஆளுமை  மாமன்  வழி  முதுசம்
மாமனின்  நாடகங்களைப்  பார்த்தும், அவர்  நாடகங்களுக்கு உடை அமைப்பில் உதவி  செய்தும்  தான்  வளர்ந்த  கதைகளை  என்னிடம் சுந்தா  கூறியுள்ளார்.
சுந்தாவின்  நாடகமான  அபசுரத்தை  சுந்தா,  அரங்கக்  கல்லூரிக்காப் பழக்கிக்  கொண்டிருந்தார்.
சுந்தாவும்  தஸிஸியஸும்  நைஜீரியா  பயணமாகினர்.  அபசுரம் நெறியாள்கை  செய்யும்  பொறுப்பை  குழந்தை  சண்முகலிங்கம் என்னிடம் ஒப்படைத்தார்
அரசையாவுடனான   நெருக்கம்  கூடியது
அபசுரத்தில்  அவர்  சிவாயர்  பாத்திரத்தை  அற்புதமாகக்  கொணர்ந்தார்.
சிவாயர்  ஒரு  போலிச்  சாமியார்  பாத்திரம்.
ஆரம்பத்தில்  இதற்கு  நடித்தவர்  சுந்தரலிங்கம்.
வயிறு  குலுங்கச்  சிரிக்கவைத்த,  ஆழமாகச்  சிந்திக்க  வைத்த  அபத்த பாணியிலான  நாடகம்  அபசுரம்.
பின்னர்  எனது  எல்லா  நாடகங்களுக்கும்  அரசையா  ஒப்பனை கலைஞரானார்.


முக்கியமாக  யாழ்ப்பாணத்தில்  நான்  நெறியாள்கை  செய்த  எனது நாடகங்களான,  அபசுரம்,  சங்காரம்,  அதி மானுடன், குருஸேத்ர  உபதேசம்தப்பி வந்த தாடி  ஆடு,   வேடனை  உச்சிய  வெள்ளைப் புறாக்கள்,  நம்மைபிடித்த  பிசாசுகள்,   சக்தி பிறக்குது,  பரபாஸ், ஒரு உண்மை  மனிதனின்  கதை,  மழை, புதியதொரு வீடு.
எல்லாவற்றிற்கும்  உடை,  ஒப்பனை   அரசையாதான்
இசை  கண்ணன்தான்.
இருவரும்  இசை- ஒப்பனை  இரட்டயர்கள்
எனது  நாடக  ஒப்பனை  பற்றி  நானும்  அரசையாவும்  நிறையக் கலந்துரையாடியிருப்போம்
விடிய  விடிய  இருந்து  நுணுக்கமாக  உடைகளைத்  தயாரிப்பார்.
புதிய  புதிய  ஒப்பனைகளைக்  கண்டு பிடிப்பார்.
கண்டுபிடிப்புகளை  ஆர்வத்தோடு  வெளிப்படுத்துவார்.
ஒரு  விஞ்ஞானிக்குரிய  கண்டுபிடிப்பு  மனோபாவம்  அவரிடமிருந்தது.
ஒப்பனை   கலைஞராகப்  பரிணமித்தாலும்,  மேடை  நடிகனான  நான் ஒப்பனையாளனாக   மாறிவிட்டேனே
என்ற   ஆதங்கம்  அவரிடமிருந்தது.


அவரிடம்  நடிப்பும்  ஒப்பனையும்  பயின்றோர்  அநேகம்.
ஒரு  தலைமுறையை  உருவாக்கியுள்ளார்.
  கடைசி  காலங்களில்  ஞாபகங்களை  இழந்து  விட்டிருந்தார்.
முதுமையடையும்  பலருக்கு  இந்நிலை  ஏற்படும்.
கடைசியாக  நான்  அவரைக்  கண்டது  சென்ற  வருடம்  காண்டவ தகனம் நாடகத்தை  கைலாசபதி  அரங்கில்  மேடையிட்டபோது.
கலை  அரங்க  வாசலில்  அரசையாவும்  குழந்தை சண்முகலிங்கமும்பேர்மினஸும்கண்ணனும்  எம்மையும்  எம்  மாணவர்களையும் மகிழ்ச்சியோடு  வரவேற்றது  நேற்றுப் போல்  இருக்கிறது.
எனது  யாழ்ப்பாண  வாழ்க்கையை  அர்த்தமும்  மகிழ்ச்சியுமுடையதாக ஆக்கியவர்களுள்  ஒருவர்  அரசையா
யாழ்ப்பாணம்  செல்கையில்  அகமும்  முகமுமொருங்கே  மலர வரவேற்கும்  யாழ்ப்பாண  உறவுகளுள்  ஒன்றை  நான்  இழந்தேன்
இந்த  இழப்பை  நேற்று  சிதம்பரனாதனும்  குழந்தை  சண்முகலிங்கமும் எனக்கு  போன்   பண்ணிக் கூறினார்கள்.
மனது  ஒரு  தடவை  அதிர்ந்து  நிமிர்ந்தது.
எமது   அன்புக்குரிய  அரசையாவே  சென்று வருக.
கனத்த  இதயத்தோடு  பிரியாவிடை  கூறுகிறேன்
நண்பர்கள்  ஒவ்வொருவராகச்  சென்று  கொண்டிருக்கிறார்கள்
"வாருங்கள்"  என   அழைத்த  அரசைய்யா  போய் விட்டார்.
வருவேன்  என  உரைத்த  நான்  இருக்கிறேன்.
நான்   யாழ்ப்பாணம்  செல்கையில்,  அந்த யாழ்ப்பாணம்
அரசையா  இல்லாத  யாழ்ப்பாணமாக  இருக்கும்.
காலம்   தன்  கடமையச்  செய்தபடி  ஓடிக்கொண்டிருக்கிறது.

----0---