திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
இலங்கையின்  கடலோரத்திலிருந்து  ஜேர்மனியின் கார்ல்ஸ்ரூ  வரையில்   பயணித்த  பெண்ணியவாதி
இலக்கியத்திசை  காட்டிய   வழிகாட்டி  தேவாஹெரால்ட்
சிலம்பினுள்ளே  ஒரு  செல்வியை  கண்டவர், செல்விகளின்   குரலாக   உயர்ந்தார்.
    


இந்திரவிழாவினை  மிகச்சிறப்பாகக்  கொண்டாடிக்கொண்டிருக்கிறது பூம்புகார்.   பட்டும்  பவளமும்  சந்தனமும்  அகிலும்  முத்தும்  மணியும்   பொன்னுமாக  நிறைந்த  விண்ணுலகோ ?  என ஐயுறவுகொள்ள   நினைத்தன-------- நகைகள்  அணிந்து  நனிசிறக்க மாதவியும்   கோவலனும்  இன்பம்  துய்க்கின்றனர்.   இவ்வரிய வேளையிலே  கானல்  வரியினை  கோவலன்  இசைக்கின்றான். மாதவி   தான்  ஒன்றின்  மேல்  பாடுவாள்  போல்  இசைத்தாள். இதனைக்கேட்ட   கோவலன்   சினக்கின்றான்.   வெறுக்கின்றான்.
கானல்வரி  யான்பாடத்  தான்  ஒன்றின்  மேல்   மனம் வைத்து மாயப்பொய்   பல  கூட்டும்  மாயத்தாள்  பாடினாள்  யாழ் இசைமேல்வைத்து   தன்ஊழ்வினை   வந்து   உருத்தது  ஆதலின்--- என்றவாறு   மாதவியை   உதறிகண்ணகியைக் காணச்செல்கின்றான் கோவலன் "     இவ்வாறு    ஒரு   பந்தி சிலம்பினுள்ளே    ஒரு    செல்வி   என்ற  கட்டுரையில்  தொடங்குகிறது.

இது   எழுதப்பட்ட   காலம்    இலங்கையில்  1967  ஆம்  ஆண்டு.
இவ்வாறு    எழுதியவர்,    சுமார்    31  ஆண்டுகளின்  பின்னர்,   1998  ஆம் ஆண்டு  அய்ரோப்பாவில்,   "  கண்ணகி அந்தக்கடற்கரையோரத்திலிருந்து   கடலையே வெறித்துக்கொண்டிருந்தாள்.   நீண்ட    அடர்த்தியான  அவளுடைய கூந்தல்  அலை அலையாய்--- கருநீலம் கொண்டதாய்,  இவள் முகத்தைப்பார்க்கத் துணிந்தேன்.   கோபம்  தணிந்திருப்பாள்.   இவள் என்னைக் கவனித்ததாகவே  தெரியவில்லை.  ஆனால்,  அவள் முகத்தில்   பெரியதொரு  திருப்தி  காணப்பட்டது.    எங்காவது சிலம்பொன்று    தென்படுகிறதாவெனத்தேடினேன்.    இல்லை. கடைசியாய்   அவளிடமிருந்த  ஒரு  சிலம்பையுமே  பாண்டிய மன்னனுக்கு   முன்னால்  போட்டு  உடைத்துவிட்டாளே, எனத்தொடங்கி,    என்   கையை   கண்ணகியின்  தோளில்  வைத்தேன். அவள்   குளிராய்  இருந்தாள்.   விறைத்துப்போயிருந்தாள். கல்லாய்ச்சமைந்திருந்தாள்"   என்று    சிலம்புச்சிலை   என்ற சிறுகதையை    முடிந்திருக்கிறார்.
புதுமைப்பித்தனின்   சாபவிமோசனம்  என்ற  புகழ்பெற்ற சிறுகதையுடன்  ஒப்புநோக்கக்கூடியது   இச்சிறுகதை.



இங்கு  குறிப்பிடப்படும்  முதல்  கட்டுரையை  எழுதியவரும், இரண்டவதாக    சொல்லப்படும்  சிறுகதை  எழுதியவரும்  ஒருவரே. எழுதப்பட்ட   காலம்தான்  மாறியிருக்கிறது.
முன்னையதை   தான்  இளமையில்  கல்வி  கற்ற  நீர்கொழும்பு விஜயரத்தினம்   மகா   வித்தியாலய  மலர்  கலாதீபத்திலும், பின்னையதை  அய்ரோப்பாவில்  வெளியான  எக்ஸில்   (நவம்பர் 1998) இதழிலும்   பதிவாக்கியிருக்கிறார்.
அன்று   பூம்புகாரின்  கானல்வரியை   நீர்கொழும்பிலிருந்து  சித்திரித்த   மாணவி,  பல  ஆண்டுகள்  கழித்து  ஜெர்மனியில் கால்ஸ்ரூ  மாநிலத்திலிருந்து   கல்லாய்  சமைந்து போயிருக்கும் கண்ணகியைப்பற்றி   சிறுகதையாக  சித்திரிக்கும்   பெண்ணியவாதி.
யார்   இவர்----?
அய்ரோப்பாவிலும்  கனடாவிலும்  நடக்கும்  இலக்கியச்சந்திப்பு, பெண்கள்   சந்திப்புகளிலும்  ஊடறு  பெண்களுக்கான  இதழிலும் நன்கறியப்பட்ட   தேவா.
இலங்கையில்  நீர்கொழும்பில்  பாடசாலையில்  பயிலும்  காலத்தில் தேவா  சுப்பையா  எனவும் 1972 - 1974  குறுகிய   காலத்தில்  ஈழத்து இலக்கியப்பரப்பில்  தேவி   என   அறியப்பட்டவருமான    தற்பொழுது ஜெர்மனியில்    வதியும்   தேவா  ஹெரால்ட்.


--------------------------------------
எம்மவர்கள்  தமது  குழந்தைகளுக்கு  பெயர் சூட்டும்பொழுது, தமக்குப்பிரியமான   தெய்வங்களின்,   பிடித்த  மலர்களின்,   கவர்ந்த படைப்பாளிகளின்,   மறக்க  முடியாத  கதாமாந்தர்களின்,   தொடர்ந்து இணைந்து  வராமல்  பாதிவழியில்  கழன்றுவிட்ட,  அல்லது கழற்றிவிடப்பட்ட    முன்னாள்  காதலன்,   காதலியின் பெயர்களைத்தான்    சூட்டுவது  வழக்கம்.
அல்லது  சோதிடர்களின்  ஆலோசனைப்படி  சில  எழுத்துக்கள் முதலாக  வரத்தக்க  பெயர்களை  எண்சாத்திரப்பிரகாரம் பெயர்வைப்பார்கள்.    அதனால்  அந்தப்பெயர்கள்  சற்று நீண்டுவிடுவதும்   உண்டு.
எம்மவர்கள்   புலம்பெயர்ந்த பின்னர்  அந்தந்த  நாடுகளுக்கு  ஏற்ப பெயர்களை    சுருக்கிக்கொள்வார்கள்.
நீர்கொழும்பில்  எங்கள்  தாய்  மாமா   சுப்பையா  தீவிரமான முருகபக்தர்.  முருகன்  அவருக்கு  குலதெய்வம்.   அதனால் தமக்குப்பிறந்த  பிள்ளைகள்  பண்ணிருவரில்  இரண்டு பேரைத்தவிர மற்ற  அனைவருக்கும்  முருகனின்  அல்லது  முருகனின் துணைவிகளின்    பெயரைத்தான்    சூட்டினார்.
இரண்டாவது  பிள்ளையாக  மகள்  பிறந்தபொழுது  தேவசேனா   என்று    பெயர்வைத்தார்.    இவர்  பிறந்த  காலத்தில்  அங்கு சைவத் தமிழ்ப்பாடசாலைகள்   இல்லை.   அதனால்   ஆவேமரியா  மகளிர் பாடசாலையில்    சேர்க்கப்பட்டார்.
அங்கு  தொடர்ந்து  படித்திருந்தால்,  அந்த  சமயத்தைத்தான்  தனது மகளும்   கற்கவேண்டிவந்துவிடும்   என்ற   தயக்கம்  மாமாவுக்கு தோன்றிய   காலத்தில்  1954   இல்  எமது   ஊரில்  முதலாவது சைவத்தமிழ்ப்பாடசாலையாக    விவேகானந்தா   வித்தியாலயம் தோன்றியதும்    அங்கு    மகளைச்சேர்த்துவிட்டார்.
மாமா   முருகபக்தர்  மாத்திரமல்ல,   முருகன்  பற்றி  சில நூல்களையும்  அங்கு  அந்தக்காலத்தில்  சமயம்  போதித்த, பிரார்த்தனை  வகுப்புகள்  நடத்திய  சாமிசாத்திரியார்  என்ற பெரியவருடன்  இணைந்து  பதிப்பித்தார்.   நீர்கொழும்பு சிறைச்சாலையில்    அமைந்துள்ள   கோயிலை  ஸ்தாபித்தவர்களில் மாமாவுக்கும்   சாமிசாத்திரியாருக்கும்  முக்கிய  பங்கிருக்கிறது  என்று எனது   அம்மா  சொல்வார்கள்.
என்னைவிட  மூத்தவரான  தேவசேனா  எம்மத்தியில்   தேவா   என அழைக்கப்;பட்டவர்.   நானும்  இவருடைய  தம்பி  முருகானந்தனும் முஸ்லிம்   பாடசாலையில்  கற்றமையால் ,  எனக்கு  எனது  அக்கா செல்வியும்,    முருகானந்தனுக்கு  அவருடைய  அக்கா  தேவாவும்தான்    இந்து   சமய  ஆசிரியர்கள்.    இந்த  இரண்டு  வீட்டு ரீச்சர்மாருக்கும்   நாம்  பல  தடவைகள்  டிமிக்கிகொடுத்துவிட்டு விளையாடச்செல்வோம்.    எங்கள்  குழப்படிகளையும் குறும்புத்தனங்களையும்    நன்கு  அறிந்து  எம்மை  எமது பெற்றவர்களிடமிருந்து   பல  தடவை   காப்பாற்றிய  பெருந்தகைகள் இந்த   இரண்டுபேரும்.
விவேகானந்தா   வித்தியாலயம்  தமிழ்ப்பண்டிதர்  மயில்வாகனன் என்பவரின்   தலைமையில்   1954   இல்   தொடங்கி   பின்னாளில்  பெரி. சோமாஸ்கந்தர்,   தங்கரத்தினம்  முதலான  கலை,  இலக்கிய ஆர்வலர்களான   தமிழ்ப்பாட  ஆசிரியர்களினால் இலக்கியச்செழிப்புடன்  விஜயரத்தினம்  மகா   வித்தியாலயமாக வளர்ந்தபொழுது,   1967   ஆம்   ஆண்டு    பாடசாலையின்  வருடாந்த சிறப்பு   மலர்   கலாதீபத்தில்   தனது   முதலாவது    கட்டுரையை  தேவா    எழுதியிருந்தார்.    அதுவே   சிலம்பினுள்ளே  ஒரு  செல்வி.


அதன்  தொடக்கத்தையே  இந்தப்பத்தியின்  ஆரம்பத்திலும் குறிப்பிட்டேன்.    அந்தக்கட்டுரையை    தான்தான்  எழுதியது  என்ற   நினைவு    தேவாவுக்கு  இன்று  இருக்குமா--- ?  என்பது  எனக்குத் தெரியாது.
தங்கரத்தினம்   மாஸ்டர்  நகுலன்  என்ற  பெயரில்  சிறுகதை,  நாடகங்கள்  எழுதினார்.    இரண்டு  சிறுகதைத்தொகுதிகளும் வெளியிட்டவர்.    பல  நாடகங்களை  இயக்கியவர்.  1970  இற்கு முன்னர்   கொழும்பிலிருந்து  வெளியான  தினபதி  நாளிதழில்  அதன் ஆசிரியர்  எஸ். டி. சிவநாயகம்    புதிய  இளம்  எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி   வளர்த்துவிடும்  நோக்கத்தில்   தினம்  ஒரு  சிறுகதை  என்ற  பகுதியை   தினபதியில்  தொடக்கினார்.   முதலில் சிறுகதை   எழுதத்தொடங்கும்  இளம்  எழுத்தாளர்,   தனக்கு  நன்கு தெரிந்த  ஒரு  மூத்த  எழுத்தாளரிடம்  தனது  சிறுகதையை காண்பித்து   அவர்  செம்மைப்படுத்தியதும்  அவருடைய அறிமுகத்துடன்  குறிப்பிட்ட  சிறுகதை  தினபதியில்  வெளியாகும்.
அவ்வாறு  வெளியிடும்பொழுது  எழுதியவரின்  முகவரியும் பதிவாகும்.
அவ்வாறு  தனது  முதலாவது  கதையை   தினபதியில்  எழுதினார் தேவா.   அதனால்  இவருக்கு  சில  பேனா  நண்பர்களும்  கிடைத்தனர். இவருடைய  கையெழுத்து  அழகானது.   தனித்தனியாக  இருக்கும். இவருடைய   அப்பா -  எங்கள்  மாமா,   ஊரில்  இரண்டு  கோயில்களின்  பரிபாலன  சபையிலும் .  அத்துடன்  பாடசாலை பெற்றோர்  ஆசிரியர்  சங்கத்திலும்  தொடர்ச்சியாக  செயலாளராக இருந்தவர்.   மாமா  கூட்டக்குறிப்புகளை   தேவாவின் கையெழுத்திலேயே    பதிவுசெய்துகொள்வார்.
மாமாவுக்கு  சமயம்  சார்ந்துதான்  நாம்  அனைவரும் நூல்களைப் படிக்கவேண்டும்  என்ற விருப்பம்.   அவருக்கு   நவீன  இலக்கியம் கதைகள்,    நாவல்கள்  பிடிக்காது.
முடிந்தவரையில்  புராணப்படங்களுக்குத்தான்  அழைத்துச்செல்வார். கண்டிப்பானவர்.   அதனால்  அவருக்குத் தெரியாமல்தான்  நாம் இலக்கிய    நூல்களை  படிப்போம்.   தேவா   சிறுகதையும் எழுதக்கூடியவர்  என்ற  தகவல்  தேவாவின்  சிறுகதை  தினபதியில் வெளியாகும்   வரையில்  அவருக்கோ  வீட்டில்  அத்தைக்கோ மற்றவர்களுக்கோ   ஏன்---  எனக்கும்தான்   தெரியாது.
தினபதி   கிடைத்ததும்  எடுத்துக்கொண்டு  தேவாவிடம்  சென்றபொழுது    யாருக்கும்   காட்டிவிடவேண்டாம்  என்று கேட்டுக்கொண்டார்.
அவர்   வீட்டில்  தெரிந்தால்  பிரச்சினைதான்  என்று  அவர்  தொடர்ந்து எழுதுவதற்காக    ஒரு   பெயரைத்தெரிவு  செய்து  சூட்ட விரும்பியபொழுது,  நானும்  எழுதத்தொடங்கிவிட்டேன்.
அப்பொழுது   1971   ஆம்  ஆண்டு.   கொழும்பில்  பணியாற்றிய தேவாவின்   அண்ணன்  ஸ்ரீஸ்கந்தராஜா  குமுதம்,  ஆனந்தவிகடன் வாங்கிவருவார்.  வீட்டில்   எப்படியோ  அவற்றை  படித்துமுடித்துவிடும்  தேவா,   நாம்   உருவாக்கிய   வளர்மதி நூலகத்திலும்    இணைந்து  நூல்களை  பெற்று  படித்தார்.
1972  இல்  எனது  முதல்  சிறுகதையை   எழுதிவிட்டு தேவாவிடம்தான்  திருத்தித்தருமாறு  கொடுத்தேன்.  அவர்  அதனை செம்மைப்படுத்தி,  தனது  கைப்பட  அழகான  கையெழுத்தில் எழுதித்தந்தார்.    அப்பொழுது  கதை,  கட்டுரைகளை  ஒரு  தாளில்  ஒரு  பக்கத்தில்  மாத்திரம்தான்  எழுதிப்பழகவேண்டும்  என்று கற்பித்தார்.    இரண்டு  பக்கங்களிலும்  எழுதவேண்டாம்  என்று சொல்லிக்கொடுத்தார்.
அவ்வாறு  எனது  இலக்கிய  ஆசானாக  இருந்த  தேவா,  எனது கனவுகள்   ஆயிரம்  சிறுகதை  கடல்  மாந்தர்களைப்பற்றியதாக இருந்தமையால்   தானும்   அவ்வாறே   பிரதேச   மொழிவழக்குடன் கதை    எழுதுவதற்கு    ஆர்வம்   கொண்டார்.
அவர்   எழுதிய  இரண்டாவது  சிறுகதை  அவர்கள்  நடக்கிறார்கள். அதனை   நாம்  வெளியிட்ட  வளர்மதி  கையெழுத்துப்பிரதியில்  பதிந்த பொழுது   எழுதியவர்  தேவி   என்றே  குறிப்பிட்டேன்.   அவரும் யார்   தேவி ---?  என்பது  தெரியவேண்டாம்  என்றும்   எனக்கு  நிபந்தனை   விடுத்தார்.
அச்சிறுகதை   வித்தியாசமானது.   அக்காலப்பகுதியில்  நீர்கொழும்பு கடற்கரைப்பிரதேசம்   வெளிநாட்டு  உல்லாசப்பிரயாணிகளை   கவரும் விதமான  மாற்றங்களை  தொடங்கியிருந்தது.   பிரவுண்ஸ்  பீச் ஹோட்டல்  முதலான  உல்லாசப்பயணிகளை  பெரிதும்  கவரும் விடுதிகள்   தோன்றின.
இந்த   ஹோட்டல்  அமைந்த  கடற்கரையோரத்தில்  முன்பிருந்த  ஒரு பாழடைந்த   வீடு    இடிபாடுகளுடன்   காணப்பட்டது.    அதில்   1962  இல்    வெளியான  காமினி  பொன்சேக்கா,   ஜோ  அபேவிக்கிரம, ஜீவராணி  நடித்த  ரண்முத்து துவ  திரைப்படத்தின்   காட்சிகள் எடுக்கப்பட்டன.     அதன்  இயக்குநர் Pho Mike Wilson ; ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்தவர்.    அதன்  பின்னர்  அந்தப்பிரதேசம் உல்லாசப்பயணிகளை    பெரிதும்    கவரத்தொடங்கியது.
ஆனால்,  ரன்முத்து துவ,   கஹா பளலு,  Three Yellow Cats   முதலான   வெற்றிப்படங்களை  எடுத்த  Pho Mike Wilson ;  பின்னர் உலக    இன்பங்களைத்துறந்து,   பௌத்த  துறவியாகி   எங்கோ மலையகப்பக்கம்   ஒதுங்கி  காணமல்  போய்விட்டார்  என்பதும்  ஒரு முக்கியமான    செய்தி.
            அங்குவரும்  வெளிநாட்டு  உல்லாசப்பயணிகளின்  பின்னால்  ஓடும் மீனவச்சிறுவர்கள்  பற்றிய  சமூக  யதார்த்த  சித்திரிப்பை   கூறும் இச்சிறுகதையை  படித்த  இலக்கிய  நண்பர்  மு. கனகராஜன், இலங்கை   கம்யூனிஸ்ட்  கட்சியின்   வெளியீடான   புதுயுகம் ( 24-06-1972)   இதழில் வெளியிட்டார்.    அக்கதை அக்காலப்பகுதியில்    இலங்கையின்  கடற்கரையோரங்களில்  நேர்ந்த சமூக  மாற்றங்களை  துல்லிமாகச்சொன்னது.
தேவைகளின்   நிமித்தம்  என்ற  தேவியின்  மற்றும்  ஒரு  சிறுகதை அதே  1972   ஆம்    ஆண்டு   பூரணி   காலாண்டிதழில்   வெளியானது. இரண்டு   கதைகளும்   நீர்கொழும்பு   மீனவ  மக்களின் பிரதேசமொழி வழக்குடன்   சித்திரிக்கப்பட்டிருந்தன.
அவ்வேளையில்  மல்லிகை   ஆசிரியர்  டொமினிக்ஜீவா  தனது  நீண்ட கால  நண்பர்    ஜெயகாந்தனின்  போக்குப்பிடிக்காமல்  நீண்ட விமர்சனத்தொடரை    எழுதத்தொடங்கியிருந்தார்.
அதனை    மல்லிகை   வாசகர்கள்  அனைவரும்  படித்தார்கள். முடிவுற்றதும்  தேவி,  அதனைக்கண்டித்து  ஒரு  கடிதம்  மல்லிகைக்கு   எழுதினார்.   அப்படி  ஒரு  துணிச்சல்  அன்று  மல்லிகை   வாசகரிடம்  நான்  அறிந்தவரையில்  எவரிடமும் வரவில்லை.   எனினும்  ஜீவா  அடுத்த  இதிழின்  அட்டையில் தேவியின்    பெயரையும்  அச்சிட்டு  அந்த  இதழில்  அக்கடிதத்தை பிரசுரித்தார்.
அதற்கு   யாழ்ப்பாணத்திலிருந்து  ராஜம்தேவராஜன்  என்ற  யாழ். பெரியாஸ்பத்திரியில்   மருத்துவராக  பணியாற்றிய  மல்லிகை  வாசகி    எதிர்வினையாற்றி  ஜீவாவின்  தரப்பை  ஆதரித்தார்.   அதற்கும்  தேவி  எதிர்வினையாற்றினார்.   அதனால்  சூடு  பிடித்த அந்த  விவாதம்  அத்துடன்    முடிந்தது.   தேவி  மல்லிகையில் மண்மனம் ,    மல்லிகை   ஓராண்டு   மதிப்பாய்வு    முதலான கட்டுரைகளையும்  எழுதியதுடன்  வருடத்தில்  ஒருநாள்  என்ற  நீண்ட    கதையையும்    இரண்டு   அங்கங்களில்    மித்திரனில் எழுதினார்.
இச்சிறுகதை கண்டியில் குண்டசாலையில் வசித்த  தேவாவின் அம்மாவின் தாய்மாமனார் ஒருவரின்  மகனின் அகால மரணம் தொடர்பான உருக்கமான கதைவருடம் ஒரு முறை அந்த வீட்டில்  நடக்கும் நினைவுப்பிரார்த்தனை பற்றி ஒரு குழந்தையின் பார்வையில் சொல்லப்படும் கதை.
வாழ்வின் தரிசனங்களே நாம் எழுதும் கதைகள் என்று எனக்கு இலக்கிய அரிச்சுவடி சொல்லித்தந்தவர் தேவா.
தொடரும்)
---0---