கவி விதை 11 - பாலைவனப் பயணி - --விழி மைந்தன்--

.

பாலை வனத்தில் தனியே நடக்கும் பயணி நான்.

நீலம், பச்சை என்ற நிறங்களின் நினைவற்றுப் போய்  விட்டது, என் கண்களுக்கு.

சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள், இள மஞ்சள், மண்ணிறம், மண்-மஞ்சள், செவ்விள மஞ்சள்......என் பயணத்தில் கூட வருகிற நிறங்கள் இவை தாம்.

ஒவ்வொரு நாளும் எனக்கோர் திருவிழாத் தான் ..... தீ மிதிப்புத் திருவிழா.

காலையில் எழும்போதே, சூரியன் சிவந்த முகத்துடன் சினந்து கொண்டே எழுந்து வருகிறான்.

மத்தியானம் ஆகி விட்டால், வனாந்தரக் காற்று தீயை அள்ளிப் பொழிகிறது.

மணல் துகள்கள் ஒவ்வொன்றும், பழுக்கக் காய்ச்சிய பட்டாக் கத்திகள் போலக் கொதிக்கின்றன. குத்திக் கிழிக்கின்றன!

என்னுடைய நிழலில் நானே ஒதுங்க ஏதாவது வழியுண்டா என்று மனம் கேட்கிறது  -  வங்கிக் கடனை வங்கியிலே போட்டு விட்டு வட்டி கேட்பவனைப் போல!

தாகத்தில் வீங்கிய நாக்கு வாய்க்குள்ளே தத்துகிறது -  ஒரு தவளையைப் போல!

காலில் போட்டிருக்கும் கொப்புளங்கள் வெடிக்கும் போது வேதனைப் படுகிறேன் -  அதற்குள் இருக்கும் கொஞ்சம் நீர் வீணாகச் சிந்துகிறதே என்று!

மாலை ஆகும் போது  மகிழ முடிவதில்லை -  ஏனென்றால் வரவிருப்பது கடும் குளிர்!

இந்த உலகில் என்னைப் போல் பயணிகள் பலர் இருக்கிறார்கள். எல்லோரும் நடப்பது ஒரே திசை நோக்கித் தான் - வடக்கு நோக்கி.

ஆனால் எல்லோர் பாதைகளும் ஒன்றல்ல.

சிலர் பச்சைப் புல்  தரைகளிலே, இரண்டு பக்கமும் ரோஜாச் செடிகள்  தலையசைக்க, தலைக்கு மேல் நிற்கும் வில்லோ  மரங்களின்  இலைகள் உதிர  நடக்கிறார்கள்.

சிலர் செம்மண் நிலங்களிலே, கடப்பம் பூக்கள் கால் படும் இடங்களுக்குக் கம்பளம் விரிக்க, வேப்ப  மரங்களின் ஜில்லென்ற நிழலில், முல்லை மணத்தை  மூக்கில் முகர்ந்த படி நடக்கிறார்கள்.  

சிலர் நான் பயணம் தொடங்கிய இடத்திற்குப் பல காதம் வடக்கில் தங்கள் 'ஜேர்னி' யை 'ஸ்டார்ட்' பண்ணியவர்கள்.

இருந்தாலும், நானும்  ஒவ்வொரு நாளும் விடாமல் நடக்கிறேன் -  ஏனென்றால் இது என்பயணம். என் கால்களுக்கு முன்னால்  கடவுள் விரித்துப் போட்டிருப்பது என் பாதை.

ஓ  -  சொல்ல மறந்து விட்டேன். பாலை வனத்தில், பல கோடி மணல் பருக்கைகளை விட வேறு விடயங்களும் இருக்கின்றன. 

கறுப்பு நிறத்தில் கதிரொளியில் மின்னும், வாளெனக்  கூரிய முனைகள் கொண்ட பாறைகள். 

ஒடுங்கிய மண்ணிற  இலைகளை விட நீண்ட முட்களை அதிகமாக உடைய செடிகள்.

கொதிக்கும் மணலில் தங்கள் தடங்களை விட்டு விட்டு மிக வேகமாய் ஊர்ந்து மறைகிற, பயங்கர விஷமுள்ள பாம்புகள்.

எங்கேயாவது தண்ணீர் கண்டு, அது கானல் நீராக இல்லாத பட்சத்தில், ஒட்டகங்கள் கலக்கிச் சேறாக்கி விட்டுப் போயிருக்கின்றன.  இருந்தாலும் குடிக்கத் தான் வேண்டும்.

தொடர்ந்து நடக்கிறேன்.

கடும் குளிர் இரவில் ஏதாவது பாறை முடுக்கில் படுக்கை விரித்துக் கொள்ளும் போது, பாலை வனத்து  நட்சத்திரங்களும் நெருப்புக் கங்குகள்  எனவே தலைக்கு மேலே  சுழன்று செல்கின்றன.

ஒவ்வொரு நாளும் கிழக்கில் எழுகிற வேட்டைக் காரன், உருவிய வாளுடன் நிலவைத் துரத்திச் சென்று மேற்கிலே மறைகிறான். நான் நடப்பதோ  வடக்கு நோக்கி.

எல்லா மனிதர்களும் செல்ல விரும்புவது ஒரே திசை தான். பாதைகள் வேறு. பயணங்கள் வேறு. ஆனால் எல்லோரும் வடக்கு நோக்கியே செல்ல ஆசைப் படுகிறோம்.

வடக்கு நோக்கி எவ்வளவு சென்றாலும் ஒரு நாள் தெற்கில் தான் எங்கள் பயணம் நிறைவடையும் என்கிறார்கள். ஏனென்றால் பூமி உருண்டையாம்!

தெற்கு யமனின் திசை.

முன்னேற்றம் என்று கருதித் தொடர்கிற பயணம் ஒரு நாள் யமனின் மடியில் தான் முடியப் போகிறது. பாலை வனத்தில் நடப்பவர்க்கும், பச்சைப் புல்லில் நடப்பவர்க்கும் இது உண்மை.

இருந்தும் விடாமல் நடக்கிறேன்.

இன்னுமொரு மாலை  வந்து கொண்டிருக்கிறது.

பச்சைப் புல்லில் பயணிப்பவர்கள் இன்று பல காதம் ஓடியிருப்பார்கள். பாலை வனப் பயணியான நான் சில மைல்களே  சென்றிருக்கிறேன்.

இருந்தாலும், நான் எடுத்து வைக்கும் அடி ஒவ்வொன்றும், என் காலடியில் மின்னும் தங்க மணல் துகள்கள் போலப் பொன் எழுத்திலே  பொறிக்கத்  தக்கதாயிருக்கியது.

ஏனென்றால், இந்தப் பாழ்வெளியிலே  தண்ணீர் இல்லா விட்டாலும் என் கண்ணீர் விழுந்திருக்கிறது.  இந்த மண்ணுக்குப் பச்சைப் போர்வை இல்லா விட்டாலும், என் வேர்வை கலந்திருக்கிறது. பரிதி சூடாக்கும் இந்தப் பாலை  மணலை, என் குருதி குளிர்வித்திருக்கிறது. 

மகாபாரதத்தில், எனக்கு அருச்சுனனை விட, அவன்  மகனைப்  பிடிக்கிறது.

அருச்சுனன் மிகப் பெரிய வீரன். வில் விஜயன். ஆணழகன். பெண்களைக் கவர்ந்தவன்.

அவன், இறைவனே வந்து துணை  செய்யக் குருஷேத்திரத்தில் வென்றான். பல காலம் அரசாண்டான்.


வீமனும், அசுவத் தாமனும், சாத்யகியும், விதுரனும், பல ராமனும் கூட ஜெயமகள்  விரும்பிய வீரர்கள் தான். இவர்கள் எல்லோரும் வென்றார்கள். அல்லது பிழைத்தார்கள்.

ஆனால், ரத்த கங்கை பாயும் போர்க்களத்திலே புகுந்த மறவர்களில் அபிமன்யு போலப் போர் செய்தோர் யார்?

தூரத்தில் பெரும் புழுதிப் புயல் உருவாகி  என்னை நோக்கி வருகிறது.

அதை எதிர்கொண்டு, இன்னும் ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைக்கிறேன்.