மகாமகம்- வானில் ஓர் அணிவகுப்பு - என்.ராமதுரை

.

மகாமகம்- அதாவது அன்றைய தினம் சூரியன், பூமி, சந்திரன், வியாழன், மக நட்சத்திரம் ஆகியவை கிட்டத்தட்ட ஒரே வரிசையில் அமைந்தவையாகின்றன. இது வானவியல் நிகழ்வாகும்--வானில் ஓர் அணிவகுப்பு‏


ஆண்டுதோறும் கும்பகோணத்தில் மாசி மகம் விழா கொண்டாடப்படுகிறது. இந்தத் தடவை இது மகாமகம் ஆகக் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் புண்ணிய தீர்த்தங்களில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடுவர். இவ்விதம் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகாமகம் வானவியல் ரீதியில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு. சொல்லப் போனால் அதை வைத்துத்தான் ‘மகா' மகம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அண்டவெளியில் சூரியன், பூமி, சந்திரன், வியாழன் கிரகம், மக நட்சத்திரம் ஆகிய ஐந்தும் கிட்டத்தட்ட ஒரே வரிசையில் அணிவகுத்து நிற்கும்.



அகில இந்திய துறவியர் மாநாட்டின் ஒருபகுதியாக மகாமக குளத்தில் நேற்று மாலை நடத்தப்பட்ட மகா ஆரத்தி

இவற்றில் மக நட்சத்திரத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மக நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்துத்தான் மகாமகம் கொண்டாடப்படுகிறது. அந்த நட்சத்திரம் பூமியிலிருந்து பல ஒளியாண்டு தொலைவில் உள்ளது. அது ரொம்ப ரொம்ப தூரம். மக நட்சத்திரம் வானில் சிம்ம ராசியில் உள்ளது. வானில் நம் தலைக்கு மேலே உள்ள பகுதியை விஞ்ஞானிகள் கிழக்கு மேற்காக 12 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். இவற்றை ராசிகள் என்றும் கூறலாம். இந்த ராசிகள் வழியே தான் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி முதலான கிரகங்கள் நகர்ந்து செல்கின்றன.
பூமியைச் சந்திரன் சுற்றிச் சுற்றி வருகிறது என்பதை நாம் அறிவோம். பவுர்ணமியன்று பூமி நடுவே அமைந்திருக்க சூரியன் ஒரு புறமும் சந்திரன் மறு புறமும் அமைந்திருக்கும். சந்திரன் மீது விழும் வெயில் தான் நமக்கு முழு நிலவாகத் தெரிகிறது.
ஆண்டுதோறும் மாசி மாதத்துப் பவுர்ணமியன்று சந்திரனுக்கு கிட்டத்தட்ட நேர் பின்னால் மக நட்சத்திரம் அமைந்திருக்கும். ஆகவே மாசி மகம் கொண்டாடப்படுகிறது.
வியாழன் கிரகமும் சூரியனைச் சுற்றி வருவதாகும். அது சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன. அந்த அளவில் வியாழன் கிரகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்துப் பவுர்ணமியன்று கிட்டத்தட்ட சந்திரனுக்கு நேர் பின்னால் அமைந்ததாகிறது. இந்த ஆண்டு அவ்விதம் நிகழ்கிறது. அதாவது அன்றைய தினம் சூரியன், பூமி, சந்திரன், வியாழன், மக நட்சத்திரம் ஆகியவை கிட்டத்தட்ட ஒரே வரிசையில் அமைந்தவையாகின்றன. இது வானவியல் நிகழ்வாகும். இப்படியான அணிவகுப்பைத் தான் நாம் மாசி மகப் பெருவிழாவாகப் பன்னெடுங்காலமாகக் கொண்டாடி வருகிறோம். இது பண்டைக் காலத்தில் தமிழர்கள் வானவியல் நிகழ்வுகளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது.
பலரும் மக நட்சத்திரம் என்பது தெரியாமலேயே வானில் அந்த நட்சத்திரத்தைக் காண நேர்ந்திருக்கலாம். நீங்கள் இப்போது கிழக்கு வானில் மக நட்சத்திரத்தைக் காண முடியும். 23-ம் தேதி இரவு சுமார் 9 மணிக்கு கிழக்கு திசையில் பார்த்தால் அடிவானத்துக்கு சற்று மேலே வியாழன் கிரகம் தெரியும். அதற்கு மேலே சந்திரன் தெரியும். அதற்கும் மேலே மக நட்சத்திரம் தெரியும்.
ஆங்கிலத்தில் மக நட்சத்திரம் ரெகுலஸ் என்று அழைக்கப்படுகிறது. வானவியலாரின் கணக்குப்படி மக நட்சத்திரம் மொத்தம் நான்கு நட்சத்திரங்களைக் கொண்டது. வெறும் கண்ணால் பார்க்கும்போது இந்த நான்கில் பிரதான நட்சத்திரமே மக நட்சத்திரமாகத் தெரிகிறது. இது சூரியனை விட சுமார் மூன்றரை மடங்கு பெரியது.
மக நட்சத்திரம் சுமார் 79 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. ஒளியாண்டு என்பது தூரத்தைக் குறிப்பதாகும். ஒளியானது வினாடிக்கு சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் செல்வதாகும். ஒளி ஓரிடத்திலிருந்து கிளம்பி ஓராண்டுக் காலத்தில் எவ்வளவு தூரம் சென்றிருக்குமோ அதுவே ஓர் ஒளியாண்டு ஆகும். அதன்படி ஓர் ஒளியாண்டு தூரம் என்பது சுமார் 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தூரமாகும்.
மகா மகத்தன்று பூமியானது சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும். பூமியிலிருந்து சந்திரன் 3 லட்சத்து 98 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலும் வியாழன் கிரகம் சூரியனிலிருந்து சுமார் 78 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும்.
தமிழகத்தில் கொண்டாடப்படும் வைகாசி விசாகம், கார்த்திகைப் பண்டிகை, ஆருத்ரா தரிசனம், தைப் பூசம் போன்றவையும் இதேபோல வானவியல் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Nantri http://tamil.thehindu.com/