இலங்கைச் செய்திகள்


பலப்பிடிய நீதவான் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி

வேலையில்லா பட்டதாரிகள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

தோட்டத் தொழிலாளர்கள் 18 பேருக்கு சிறைத்தண்டனை

மட்டக்களப்பில் ஆயதங்கள் மீட்பு

வவுனியா மாண­வி துஷ்பிரயோகத்தின் பின்னரே   14வயது சிறுமி படுகொலை

வழக்குகளிலிருந்து ஷிராணி விடுதலை

இன்றும் ஆஜராகினார் மஹிந்த

ஜேர்மன் ஜனாதிபதியுடன்  மைத்திரிபால  சந்திப்பு 





பலப்பிடிய நீதவான் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி

16/02/2016 பலப்பிடிய நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
வழக்கொன்றில் சாட்சியமளிக்க வந்த இருவருக்கே இவ்வாறு  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.  நன்றி வீரகேசரி 









வேலையில்லா பட்டதாரிகள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

16/02/2016 கொழும்பு, லோட்ஸ் பகுதியில் வேலையில் பட்டதாரிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் சற்றுமுன்னர் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்தாரை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் குறித்தப் பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், லோட்டஸ் வீதியின் ஊடாக ஜனாதிபதி செயலக பகுதிக்கு பிரவேசித்த போதே பொலிஸார் மேற்படி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி 









தோட்டத் தொழிலாளர்கள் 18 பேருக்கு சிறைத்தண்டனை

17/02/2016 பொகவந்தலாவ வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய உட்பட ஏனைய வைத்தியர்கள் மற்றும் அங்கு கடமையில் இருந்த ஊழியர்களின் சேவைக்கு பங்கம் விளைவித்த தோட்டத் தொழிலாளர்கள் 18 பேருக்கு அட்டன் நீதிமன்றத்தின் நீதவான் பிரசாத் லியனகே ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 02.12.2014 அன்று குறித்த வைத்தியசாலையில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்காக வைத்தியசாலையில் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது தொடர்பான வழக்கு  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 பொகவந்தலாவ – லொயினோன் தோட்டத்தில் வீடொன்றின் மீது மண் மேடு ஒன்று சரிந்ததில் காயமடைந்த குறித்த பெண்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் அங்கு கடமையில் இருந்த ஊழியர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் குறித்த இரு பெண்களும் உயிரிழந்ததாக குற்றம்சுமத்தி தோட்ட தொழிலாளர்கள் சிலர் குறித்த வைத்தியசாலையில் கலகம் ஏற்படும் விதத்தில் செயற்பட்டிருந்தனர்.
 மேற்படி வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
 இதனை தொடர்ந்து, இவர்களுக்கு மூன்று மாத கடுமையான வேலையுடன் கூடிய ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.   நன்றி வீரகேசரி 










மட்டக்களப்பில் ஆயதங்கள் மீட்பு


17/02/2016 மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட திராம்மடு சுவிஸ் கிராமத்திலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
இன்று பகல் 11.45 மணியளவில் பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தோட்டமொன்றினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 
ரி.56 ரக துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கி ஒன்று, 30 துப்பாக்கி ரவைகள், 1 ரைக்கூடு என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. 
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி 







வவுனியா மாண­வி துஷ்பிரயோகத்தின் பின்னரே   14வயது சிறுமி படுகொலை


19/02/2016 வவுனியா, உக்குளாங்குளம்,3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் மரணம் பாலியல் பலாத்காரத்தின் பின்னர் இடம்பெற்ற கொலை என தெரியவந்துள்ளது. 
வவுனியா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சட்ட வைத்திய பரிசோதனையிலேயே இது குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களைத் தேடி விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 
குறித்த சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெறித்து கொலைச் செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார். 
வவுனியாவில்   வயது 14  மாணவி ஒருவர் கடந்த செவ்வாய்கிழமை தனது வீட்டில் தூக்கில் தொங்கியிருந்த நிலையில் சடலமாக பிற்பகல் 2.15 மணியளவில் மீட்கப்பட்டார். தாயார் வேலைக்கும், சகோதரர்கள் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை 2.15 மணியளவில்  வீடு  வந்த  தாயார், சகோதாரர்கள் பாடசாலை முடிந்து வந்த போது கண்டனர்.  
இதனையடுத்து இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி காலை 7.15 இற்கும் பிற்பகல் 2.10 இற்கும் இடைப்பட்ட நேரத்திலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளதை அவதானித்த பொலிஸார் அதன் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை என்பதை வைத்தும் மேலும் சில தடயங்களை வைத்தும் மரணத்தில் சந்தேகத்தை வெளியிட்டனர்.
இதனையடுத்தே சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
வவுனியா வைத்தியசாலை நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி கடமை நிமித்தம் கொழும்பு சென்றிருந்தமையால் நேற்று முன் தினம் வியாழக்கிழமையே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வவுனியா சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்திய நிபுணர் சமரவீரவினால் முன்னெடுக்கப்பட்ட இந்த சட்ட வைத்திய பரிசோதனைகளின் போது சிறுமி கடுமையாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெறித்து கொலைச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 "" அவர் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவரிடம் இருந்து தப்பிக்க  முயன்றுள்ளார்.இருப்பினும் வன்புணர்வின் பின் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  
இதனை விட வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி காணப்பட்டமையானது எமது சந்தேகத்தை ஆரம்பத்தில் வலுப்படுத்தியது. சந்தேக நபரிடம் இருந்து சிறுமி தப்பிக்க எடுத்த முயற்சிகளினால் இவ்வாறு வீட்டில் இருந்த பொருட்கள் சிதறியிருக்கக் கூடும். இந் நிலையில் இது குறித்து நாம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்.  இதற்கென விசாரணைகளை மேற்கொள்ள பிரத்தியேக குழுக்கள் இரண்டையும் அமைத்துள்ளோம்.' என விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
சிறுமியின் சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, சடலத்தை இறுதிக் கிரியையின் போது புதைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன்   மாணவியின் உடற்பாகங்கள் சில மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி 













வழக்குகளிலிருந்து ஷிராணி விடுதலை




19/02/2016 முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இடம்பெற்று வந்த 3 வழக்குகளியிருந்தும்  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தனது சொத்துக்கள் பற்றிய விபரங்களை சரியான முறையில் வெளிக்காட்டவில்லை என குற்றஞ்சாட்டி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஷிராணி தரப்பினால் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்ததன் பின்னர் குறித்த குற்றப் பத்திரிகையை வாபஸ் பெறுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது. 
அத்துடன் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்த அவருடைய கடவுச்சீட்டையும் விடுவிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 









இன்றும் ஆஜராகினார் மஹிந்த




19/02/2016 பாரிய இலஞ்ச ஊழல் மோசடி எதிர்ப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஆஜராகியுள்ளார். 
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, அரச தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம் செய்தமை தொடர்பில் கட்டணம் செலுத்தாமையால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து, இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 









ஜேர்மன் ஜனாதிபதியுடன்  மைத்திரிபால  சந்திப்பு 




18/02/2016 மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று  அந்நாட்டு ஜனாதிபதி ஜோகிம் கோக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜேர்மன் ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று பெர்லின் நகரிலுள்ள பெல்லெவ்யு மாளிகையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் முடிவில் பெல்லெவ்யு மாளிகையில் வைக்கப்பட்டுள்ள விசேடஅதிதிகளுக்கான புத்தகத்தில் ஜனாதிபதி மைத்தி;ரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.
சந்தின் போது இரு நாடுகளின் தலைவர்களும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நட்புறவினை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.  
கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக ஜேர்மனி அரசாங்கம் இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு வழங்கிவரும் உதவிகளுக்கு   ஜனாதிபதி சிறிசேன  இதன்போது நன்றி  தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவை கட்டியெழுப்புவது தொடர்பிலும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய கூட்டுறவுத் துறைகளில் இருநாடுகளுக்குமிடையிலான  உறவினை அபிவிருத்திசெய்வதே எனனுடைய நோக்கமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று மாலை ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிராங்க் வோல்டர் ஸ்டென்மெயர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.   நன்றி வீரகேசரி