ஈழத்து நாடக சிற்பி, அரசு அய்யா என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு காலமானார். இவர் நாடக கலைஞர், கவிஞர், எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த அரசு அய்யா யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றவர். வைத்திய பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவர் இரண்டாம் உலக கால கட்டத்தில் இராணுவத்தில் கடமையாற்றினார்.
|
1948இல் தூக்குமேடை என்ற நாடகத்தின் மூலம் நாடக உலகில் பிரவேசம் செய்த அரசு எழுபத்தைந்து நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார். அரங்கில் ஒப்பனைக் கலைஞன், வில்லுப்பாட்டுக் கலைஞன், நெறியாளன், புகைப்படக் கலைஞன் என பல பரிமாணங்களில் மிளிர்ந்தவர். தமிழகத்தில் வசித்த காலத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் புரட்சிகர கருத்துக்களால் கவரப்பட்டு அதன்பால் யாழ்ப்பாணம் திரும்பிய பின்னர் சில நண்பர்களுடன் இணைந்து ஒரு இளைஞர் கழகத்தை ஆரம்பித்து தமிழ் நாட்டில் அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் எழுதிய புரட்சிகர நாடகங்களை யாழ்ப்பாணத்தில் நடித்தி மேடையேற்றினார்.
“அடங்காப்பிடாரி” புகழ் வி.சி.பரமானந்தத்துடன் அரசு அவர்களின் நாடகப் பணிகள் தொடங்கின. இவர் இயக்கிய அரச வரலாற்று நாடகங்களில் ‘திப்புசுல்தான்’, ‘தமிழன் கதை’, ‘வீரமைந்தன்’, ‘வீரத்தாய்’, ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. ஈழத்து நாடக வரலாற்றில் முக்கியமான பல நாடகங்களில் பங்களித்தார்.. கலையரசு சொர்ணலிங்கம் தயாரித்த “தேரோட்டி மகனில்’ அருச்சுனனாகவும், “கோவலன்” நாடகத்தில் கோவலனாகவும் நடித்துப் புகழ் பெற்றவர். சொக்கனின் ‘கவரிவீசிய காவலன்’, ‘ஞானக்கவிஞன்’, ‘தெய்வப்பாவை’, ‘கூப்பியகரங்கள்’, பண்டிதர் சு.வேலுப்பிள்ளையின்(சு.வே.) ‘வீரசிவாஜி’, ‘சைலாக்’, ‘ஒத்தொல்லோ’ போன்ற நாடகங்களையும் மற்றும் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் ‘வையத்துள் தெய்வம்’, ‘பாஞ்சாலி சபதம்’ ஆகியவற்றையும் இயக்கி தனது முத்திரையை பதித்தவர்.
|