மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை :நிர்மாணப்பணிகள் ஜூன் மாதம் ஆரம்பம்
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!
குமார் குணரத்னத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு
வைத்தியசாலையில் ஏட்டிக்கு போட்டியாக ஆர்ப்பாட்டம் : பதுளையில் பதற்றம்
ஹரிஷ்ணவியின் கொலையை கண்டித்து வடக்கில் ஹர்த்தால்
இலங்கை வந்த நியூசிலாந்து பிரதமருக்கு யானை குட்டியை வழங்கிய ஜனாதிபதி
மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது
அமைச்சரானார் சரத் பொன்சேகா
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்
22/02/2016 வரலாற்று சிறப்பு மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம் இன்று திங்கட்கிழமை சிறப்பாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன்று காலை மூல மூர்த்திகளுக்கு அபிசேக பூஜைகள் இடம்பெற்றதுடன் அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகளும் உற்சப மூர்த்திகளுக்கான பூஜைகளும் நடைப்பெற்றன.
அதன்பின்னர் காலை 9.30 மணியளவில் உற்சப மூர்த்திகளின் வெளி வீதி வளம் ஆரம்பமானது. ஆலங்கார சகிதம் விநாயக பெருமான், வள்ளி தெய்வானை சமைதராக முருகபெருமான், சிவன் அம்பிகை, ஸ்ரீ முத்துமாரி அம்மன் மற்றும் சண்டேஸ்வரர் ஆகிய இரதங்கள் வெளி ஊர்வளம் வருவதற்கு ஆலயமுன் தயாராகின.
மகோற்சவத்தின் பிரதான அங்கமான மகோற்சவத்தினை காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்காணக்கான மக்கள் வருகை தந்திருந்தனர். தூர பிரதேசங்களில் இருந்து கால்நடையாக வருகை தந்திருந்த யாத்திரர்களும் பஜனை குழுவினரும் பக்தி பரவசதோடு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.
மஹோற்சவ பெருவிழா ஜனவரி மாதம் 31 ஆம் திகதி மு.ப. 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நன்றி வீரகேசரி
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை :நிர்மாணப்பணிகள் ஜூன் மாதம் ஆரம்பம்
22/02/2016 வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பாதையின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது குறித்தான நடவடிக்கைகள் நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஏற்கனவே தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளை ஆரம்பித்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாகும். அதுமாத்திரமின்றி முக்கிய அபிவிருத்தி திட்டங்களை எமது கட்சியே ஆரம்பித்து வைத்தது.
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பாதை ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது குறித்தான நடவடிக்கைகள் நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படும்.
கொழும்பிலிருந்து மீரிகமைக்கும் பொத்துஹரவிலிருந்து கலகெதரவிற்கும் பொத்துஹரவிலிருந்து குருநாகலுக்கும் குருநாகலிருந்து தம்புள்ளை வரைக்குமாக நான்கு கட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நன்றி வீரகேசரி
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!
23/02/2016 பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் கலஹா சந்தியில் இன்று பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
எட்கா என்றழைக்கப்படும் இந்தியாவுடனான பொருளாதார மற்றும் கூட்டுறவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நன்றி வீரகேசரி
குமார் குணரத்னத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு
23/02/2016 முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டப்பட்டிருந்த இவர், கேகாலை, அருகுருவெல பகுதியில் வைத்து கடந்த நவம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வைத்தியசாலையில் ஏட்டிக்கு போட்டியாக ஆர்ப்பாட்டம் : பதுளையில் பதற்றம்
23/02/2016 பதுளை அரசினர் வைத்தியசாலையில் இரு பிரிவினர் ஏட்டிக்கு போட்டியாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தொலைத்தொர்பு டிஜிட்டல் அபிவிருத்தி அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ அரச வைத்தியர்களை “ஜடையா” என்று அநாகரீகமான வார்தை பிரயோகங்களை பிரயோகித்தமையை கண்டித்து, சுமார் 500கும் அதிகமான வைத்தியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
பகல் 12 மணிமுதல் 1 மணிவரையிலான மதிய உணவு வேளை நேரத்தில் நடைபெற்ற வைத்தியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட மற்றும் ஒரு ஆர்ப்பாட்டம் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
நடாத்தப்பட்ட எதிரப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சுமார் ஒரு மணித்தியாலம் பதுளை ஹாலிஎல பிரதான வீதியினூடான போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமும், கலவர நிலையும், பதட்டமான சூழலும் காணப்பட்டன.
அந் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக, பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டதோடு பரஸ்பர மோதல்களை தவிர்ப்பதற்கு வீதியின் இரு மறுங்கிலும் பொலிசாரின் வாகனம் நிறத்தப்பட்டிருந்ததோடு, கலகம் தடுக்கும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
வைத்தியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக பதுளை வைத்தியசாலை வளாகம் எங்கும் கறுப்பு கொடிகளும், கறுப்பு பதாதைகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. நன்றி வீரகேசரி
ஹரிஷ்ணவியின் கொலையை கண்டித்து வடக்கில் ஹர்த்தால்
வவுனியாவில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஹரிஷ்ணவி என்ற மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்து இன்று வட மாகாணம் முழுவதும் இரண்டு மணிநேரம் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு பொது மக்களை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் மற்றும் யாழ். வணிகர் சங்கம் என்பன கோரியுள்ளன.
இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வவுனியா உக்கிளாங்குளத்தில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியின் கொலையைக் கண்டித்து இன்று நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தமது முழு ஆதரவை வழங்குகின்றது.
எமது பிரதேசங்களில் நடைபெறும் வன்முறைகளுக்கும், கொடுமைகளுக்கும், அரக்கத்தனங்களுக்கும் இது வரை எந்த நீதியும் கிடைத்ததில்லை. அகிம்சைவழியில் நாம் செய்கின்ற எந்த எதிர்ப்பு நடவடிக்கைகளும் இதுவரை பயனைத் தந்ததில்லை. காலம் காலமாக நாம் அனுபவித்துவருகின்ற துன்பங்களும், துயரங்களும் சொல்லில் அடங்காதவை. இதற்காக நாம் எத்தனை வடிமான போராட்டங்களை முன்னெடுத்தோம். அவற்றுக்கெல்லாம் இன்று வரை நீதியான எந்தத் தீர்வுகளும் கிடைக்கவில்லை.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டித்தும், நீதி வழங்குமாறு கோரியும் பிரமாண்டமான ஒன்று கூடல் முன்னெடுக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கானவர்கள் அதில் பங்கேற்றனர். வடபுலம் முழுவதும் ஸ்தம்பித்து நீதிகேட்டு ஆர்ப்பரித்தனர். ஆனால் இன்று வரை அதற்கான நீதி கிடைக்கவில்லை. ஆனால் மாணவர்கள் மீதான வன்புணர்வு கொலைகள் நடந்தவண்ணம் உள்ளன. சட்டத்தையும், சமூகத்தையும் ஏமாற்றி தாம் நினைத்ததைச் செய்யும் துஷ்டர்கள் இந்த நாட்டில் உள்ளவரை எமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை.
ஆனாலும் அகிம்சை வழியை நாம் கைவிடக்கூடாது என்பதற்காக இன்று நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு எமது சங்கம் முழு ஆதரவை வழங்குவதோடு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் ஆளணியினர், மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் காலை இரண்டு மணிநேரம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.
அதே வேளை க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கு நடைபெறவுள்ள செய்முறைப் பரீட்சையில் எவ்வித இடர்ப்பாடுகளும் ஏற்படாதவண்ணம் எதிர்ப்பை வெளிப்படுத்துமாறும் கோருகிறது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹர்த்தால் அனுஷ்டிப்புத் தொடர்பில் யாழ் வணிகர் கழகம் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி செல்வி கங்காதரன் ஹரிஸ்ணவியின் படுகொலையை யாழ் வணிகர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக இச் சம்பவம் வட பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவமாகும். இச் சம்பவம் எமது மக்கள் மத்தியில் ஆழ்ந்த துயரத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட வித்தியா என்ற பாடசாலை மாணவியின் கொலை நடைபெற்ற ஒரு வருடத்திற்குள் இவ்வாறான இரண்டாவது சம்பவம் இடம் பெற்றமை கண்டிக்கப்படவேண்டியதாகும். அரசாங்கமும் அதனோடு இணைந்த நீதித்துறை, காவல்துறை என்பன தீவிரமாக செயல்பட்டு இவ்வாறான சம்பவங்கள் இனியாவது இடம்பெறா வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
மேலும் இக் கொலையை கண்டித்தும் நீதி கோரியும் வவுனியா பிரஜைகள் அமைப்பு நேற்று மாலை 4.30 மணியளவில் மின்னஞ்சல் மூலம் கேட்டுக்கொண்டதற்கு அமைய அவசர நிர்வாக சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக இன்று புதன்கிழமை இரண்டு மணிநேர கடையடைப்பில் குறிப்பாக காலை 8.00 மணி தொடக்கம் முற்பகல் 10.00 மணி வரை மட்டும் கடைகளை புட்டி அமைதியான முறையில் தங்கள் கண்டனத்தை தெரிவிக்குமாறு யாழ் வணிகர் கழகம் சகல வர்த்தகர்களையும் கேட்டுக்கொள்கின்றது. நன்றி வீரகேசரி
இலங்கை வந்த நியூசிலாந்து பிரதமருக்கு யானை குட்டியை வழங்கிய ஜனாதிபதி
மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது
அமைச்சரானார் சரத் பொன்சேகா
இலங்கை வந்த நியூசிலாந்து பிரதமருக்கு யானை குட்டியை வழங்கிய ஜனாதிபதி
24/02/2016 இலங்கைக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இன்று ஜனாதிபதி செயலகத்தில் அரச மரியாதையுடன் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இதன்போது அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன் , நியுசிலாந்து பிரதமருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் துப்பாக்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவாரத்தைகளும் நடத்தப்பட்டன.
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் யானைக் குட்டியொன்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியூசிலாந்து பிரதமருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் வரவேற்பு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, ஹரீன் பெர்ணான்டோ, துமிந்த திஸாநாயக்க, காமினி ஜயவிக்கிரம பெரேரா, பீ ஹரிசன், ரிஷாத் பதியுதீன் மற்றும் தயா கமகே , பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். நன்றி வீரகேசரி
மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது
25/02/2016 படுகொலை செய்யப்பட்டு வவுனியா, உக்குளாங்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் கொலை தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான 35 வயதுடைய பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை டி.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் ஊடாக நடவடிக்கை எடுக்க பொலிஸார் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
டி.என்.ஏ. சோதனைகளை முன்னெடுக்க தேவையான மூலக் கூறுகள் சாட்சியாக ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி கெ.ஹரிஸ்ணவி (வயது 14) கடந்த செவ்வாய்கிழமை (16) தனது வீட்டில் தூக்கில் தொங்கியிருந்த நிலையில் சடலமாக பிற்பகல் 2.15 மணியளவில் மீட்கப்பட்டார்.
தாயார் தொழிலுக்கும் சகோதரர்கள் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த மாணவி 2.15 மணியளவில் தாயார், சகோதாரர்கள் பாடசாலை முடிந்து வந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பது அவதானிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு மீட்கப்பட்டார்.
இந் நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளிலேயே சந்தேகத்தின் இன்று சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அமைச்சரானார் சரத் பொன்சேகா
25/02/2016 அமைச்சரவை அந்தஸ்துள்ள பிரதேச அபிவிருத்தி அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அண்மையில் மரணமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர், எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் பாராளுமன்ற ஆசனத்திற்கு பொன்சேகா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி