அத்தை மகள் - செல்வ. வெற்றிவேல் செழியன். துபாய்.

.
வானுயர வளர்ந்த கொடிகள்
  வண்ண மலர் பூக்கள் குலுங்க
கண் கொள்ளா காட்சியாக
   கண்டு அதனை  ரசிக்க
பருவ மங்கை ஒருத்தி
   பாதம் படாமல் நடந்து வர
பூத்து குலுங்கும் பூக்கள் நடுவே
   புகுந்து வரும் வேளையிலே
என்னை கண்ட பருவ மங்கை
   எடுத்தாள் ஓட்டம் கொடிகளிடையே
கொடிகளைக் கண்ட நான், அவளின்,
   கொடியிடையைக் கண்டேன்
பூக்களைக் கண்ட   நான், அவளின்



   பூ முகத்தைக் கண்டேன்.
பார்த்ததும் பதிந்தது மனதில்
   பட, படவென்று அடித்தது நெஞ்சில்
துடித்தது மனது மட்டும்,
   துரத்திப் பிடிக்க வேண்டுமென்று
மனதை மாற்றிக்கொண்டு,
   மறுபடி திரும்பி விட்டேன்.
வீடு வந்து சேர்ந்து விட்டு,
   விட்டத்தை பார்த்து கொண்டு,
கண்ணை மூடி கனவு கண்டேன்,
   கள்ளி, அவள் கண்முன் நின்றாள்.
கண்ணை கசக்கி திரும்பி பார்த்தேன்,
   களுக்கென்று சிரித்து அறையினில் மறைந்தாள்.
அன்னையை அழைத்து,  யாரவள் என்றேன்,
   அத்தை மகள் என்று அதிரச்செய்தார்.
பருத்தி செடியோ பஞ்சாய் காய்க்கும்,
   புடவையாய் காய்த்ததில் பூரிப்படைந்தேன்.