கனவுத்துளியின் கண்ணீர் கவிதை - தெய்வீகன்

.
(கடந்த 27 ஆம் திகதி மெல்பனில் நடந்த எட்டுநாடுகளின் கவிஞர்கள் பங்கேற்ற தென்னாசியக்கவிஞர்களின் கவிதா நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட கவிதை)

ஈழத்தமிழர்களின்  தாயகத்தில்  2009  ஆம்  ஆண்டு  இடம்பெற்ற கொடூரப்போர்  காலத்தின்போது  பிறந்த  குழந்தை  ஒன்று  தன்  தாயின் அரவணைப்பில்  ஒருவாறு  தப்பித்துக்கொள்கிறது.  அப்பிஞ்சுக்குழந்தையை சுமந்துகொண்டு  கடல்வழியாக  ஆஸ்திரேலியா  வந்து  தஞ்சம் புகுந்துகொண்ட  அந்த  அபலை  தாயிற்கு  இங்கு  வந்த  பின்னர்தான் பிரச்சினை   ஆரம்பிக்கிறது.
அதுவரையும்  தொடர்ச்சியான  குண்டு  சத்தங்களையும்  துப்பாக்கி வெடிகளையும்   வரும்போது  கடல்  இரைச்சலையும்  கேட்டு  பழகிவிட்ட குழந்தைபுதிய  தேசத்தில்  எந்த  சத்தமும்  இல்லாத  சூழ்நிலையை அசாதரணமாக  உணர்ந்து  அலறுகிறது.   தனக்கு  சம்பந்தமே  இல்லாத இடத்துக்கு  வந்துவிட்டதாக  நினைத்து  தொடர்ந்து  அழுகிறது.
தனது  பிள்ளையின்  இந்த  நிலைமையை  புரிந்துகொண்டபோதும்  எதுவுமே  செய்ய  முடியாத  அந்த  ஏழைத்தாயின்  கண்ணீர்  தாலாட்டுத்தான்  இந்த  கவிதை -
கனவுத்துளியின்  கண்ணீர்  கவிதை

முந்தானையில் மூடி காத்த
முன்னூறு நாள் புதையலே...
கருப்பையால் கழிந்த பின்னர்
கந்தகத்தோல் பூண்டவளே..
போர் பெற்ற மகளே - என்
காமத்தின் விதிப்பொருளே..
நீ கேட்ட வெடிகுண்டும்
எனை உரசிய சன்னங்களும்
இனிமேலும் நடவாதென்று
இன்னும் எத்தனை நாள்
உனக்குரைப்பேன்?
ஒப்பாரி தாலாட்டும்
காய்ந்த என் முலை பாலும்
தந்த காலம் ஒருபோதும்
வாராதடி வடிவழகே..
வந்திருக்கும் சீமையிலே
நீ கேட்()கும் சத்தமில்லை

ஓயாத இரைச்சலுடன்
ஓங்காளிப்புக்களும் கரைந்த
படகினிலே வந்தோமே - அந்த
நரகம்கூட இங்கில்லை
வீரத்தின் விளைநிலைத்தில் - என்னுள்
விந்தெறிந்த உன் அப்பன்
போரறுத்து போனதாலே
போய்விட்டார் என்ன செய்வேன்
ஒன்றரை உயிர்களாக
கடல் நம்பி வந்த எந்தன்
துணிவின் மீது ஆணையடி
இதுதான் இனி எம் தேசம்
இங்கெதுவும் இரைச்சல் இல்லை
அதுவேதான் வேண்டும் என்று
அரை உயிரை அரைக்காதே!
சாம்பல் தேசத்தில்தான்
சாமத்திய படுவாய் என்று
உன் காலமெண்ணி அதிர்ந்துதானே
ஊர்விட்டு ஓடி வந்தேன்
அண்ணன்மார் இல்லாத
தெருக்களிலே உனக்கினிமேல்
ஆயுளுக்கும் அச்சமென்று
தவித்துத்தானே தப்பி வந்தோம்
நாட்டை அடகு வைத்து
நல்லாட்சி நடந்தாலும் - நாங்கள்
நகையை அடகுவைத்துத்தான்
நல்ல சோறு திண்டிருப்பம்
வேண்டாம் அது எமக்கு
வேதனையின் பழிக்கிடங்கு
இது கங்காரு தேசம் கண்ணே
காத்தருளி காசும் தருமாம்
எறிகணையின் இரைச்சல்களும்
துப்பாக்கி துப்பல்களும்
கொதி தணல்போல் சன்னங்களும்
காலன் வரும் சத்தங்களும்
இப்போதைக்கில்லையடி
நடுச்சாமம் என்றாலும்
நடந்துபோய் ரெண்டுபேரும்
தெரு முனை கடைதனிலே
தேனீராவது குடித்து வரலாம்
வெடி நெடி இல்லாத
காற்றை சுவாசித்து
வானப்பெருவெளியில்
வட்ட நிலா சோறுண்ணலாம்
சீனப்பெருஞ் சுவராய்
சிந்தனையில் எத்தனையோ
காலக்கனவுடன்தான்
காலனிடம் தப்பி வந்தோம்
எந்தன் உயிர் செடியேஎன்னுள்
புலர்ந்து வந்த புது விடிவே
பாதை தெரிகிறது
பயப்படாமல் கண்ணுறங்கு
நானும் நாளையும் இருப்போம்
தயங்காமல் கண்ணுறங்கு!
காலக்கொடுமை பெற்ற - இந்த
கடைசி குழந்தைதன்னை
என்னதான் நான் செய்வேனோ
என்னை நான் என்ன செய்வேனோ..