திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.

 ஊடறு  - பெண் படைப்பாளிகளின்  தொகுப்பில் இணைந்திருந்த   தேவா

சிலப்பதிகார  இந்திர  விழாவின்  மகிமையை எழுதியவர் -  ஜெர்மனியின்  கோடை விழாவையும் பதிவுசெய்தார்
 (கடந்த வாரத்தொடர்ச்சி)

                                         

நீர்கொழும்பு  இந்து  இளைஞர்  மன்றத்தின்  மாதாந்த  பௌர்ணமி விழாக்களுக்கு  தேவா   நாடகங்களும்  எழுதித்தந்தார்.  அதில்  ஒன்று அரிச்சந்திரன் - மயான  காண்டம்.    சந்திரமதி  பாத்திரமேற்று நடிப்பதற்கு   எவரும்  முன்வராதமையினால்  நான்  சந்திரமதியானேன்.
தேவாவும்  எனது  தங்கை  ஜெயந்தியும்  எனக்கு  ஒப்பனை  செய்து, எனது  கோலத்தைப்பார்த்து  விழுந்து  விழுந்து  சிரித்தனர்.  ஆனால் நாடகத்தில்  மயானகாண்ட  காட்சியில்  சந்திரமதி,  லோகிதாசனின் உடல்மீது  விழுந்து  கதறிக்கதறி  அழுதபோது  அவர்கள்  இருவரும் திரைக்குப்பின்னால்  நின்று  கண்கலங்கியதாக  அறிந்தேன்.   சில நாட்கள்  அவர்கள்  என்னை   சந்திரமதி  என்றே   அழைத்தனர்.
சந்திரமதியின்  கழுத்தில்  விழுந்த  அட்டைக்கத்தி,  வீசிய வேகத்தில் மடங்கியதனைப்பார்த்து  சபையில்  சிரித்தனர்.
இதனால்   சிறிதுகாலம்  அந்த  அட்டைக்கத்தி  பற்றியும்  நினைத்து நினைத்து   சிரித்தனர்.
அரிச்சந்திரன்  நாடகத்தின்   சந்திரமதி  உங்களை  அழவும்  சிரிக்கவும் வைத்துவிட்டாள்  என்று  நான்  சமாளித்தேன்.
திருஞானசம்பந்தர் - திருநாவுக்கரசர்  சந்திக்கும்  காட்சியையும்  தேவா நாடகமாக   எழுதித்தந்தார்அதில்  வயதில்  குறைந்த  பிள்ளைகள் நடித்தனர்.
தேவாவுக்கும்  நாடகமேடைப் பரிச்சயம்  இருந்தது.   பாடசாலையில் படித்த   காலத்தில்  மாணவர்  இலக்கிய  மன்றத்தில்  அவர் அவ்வையார்  சுட்டபழம்  சாப்பிட்ட  காட்சியில்  அவ்வையாராக நடித்தவர்.
எனது  தொடக்க  கால  சிறுகதைகளை   முதலில்  அவரிடம்  காண்பித்த  பின்னரே  இதழ்களுக்கு  அனுப்புவேன்.   இவ்வாறு  கலை, இலக்கியப்பயணத்தில்   இணைந்திருந்தவர்,  திருமணமாகி ஜெர்மனுக்கு   சென்றதனால்  பெரிய  வெற்றிடம்  தோன்றிய  தாக்கம் நீடித்திருந்தது.
குறுகிய  இரண்டு  ஆண்டு (1972 - 1974 )  காலத்துள்  மல்லிகை, பூரணி,   புதுயுகம்  முதலானவற்றில்  தேவி   என்னும்  புனைபெயரில்  எழுதி  கவனத்தை  பெற்றிருந்தமையால், "  அவர்  எங்கே---? "  என்று மல்லிகை  ஜீவாவும்  பூரணி  மகாலிங்கமும்,   புதுயுகம்  கனகராஜனும்  கேட்டபொழுது  அவருடைய  திடீர்  பயணம் பற்றிச்சொன்னேன்.
" இனி  அவர்  எழுதப்போவதில்லை " - என்று  மல்லிகை  ஜீவா  மிகுந்த  ஏமாற்றத்துடன்  சொன்னார்.   பெண்  எழுத்தாளர்கள்  பலர் திருமணத்தின்  பின்னர்  இலக்கியத்திற்கு  ஓய்வுகொடுக்கின்றனர் என்ற   பொதுவான  கருத்து  அப்போது  நிலவியது.மல்லிகையில்  ஜாலம்  என்ற  தரமான,  ஆனால்  முற்றிலும் வித்தியாசமான   சிறுகதையை  எழுதியிருந்த  கவிதா   என்பவர்,   ஒரு முஸ்லிம்   கவிஞரை  காதலித்து  மணம்  முடித்து  மதம் மாறிச்சென்றதையும்   அதன்  பின்னர்  கவிதா  எழுதவில்லை  என்றும் அறியக்கிடைத்தது.   ஜாலம்  என்ற  கதையை  படிக்குமாறு  எனக்கு நினைவூட்டியதும்  தேவாதான்.   ஆம்,  அது  ஒரு  நல்ல  சிறுகதை. இன்னும்  என்னால்  மறக்கமுடியவில்லை.
ஆளுகைக்கும்   ஆளுமைக்கும்  இடையே  நீடிக்கும்  உணர்வுகளை துல்லிமாகச்சொன்ன  கதை.
குறிப்பிட்ட  கவிதா  என்ற  பேராதனை  பட்டதாரியான  அந்தப் படைப்பாளி   எழுதியது  சொற்பம்தான்.   ஆனால்,  ஈழத்து  இலக்கிய உலகில்  அவர்  மறக்கப்பட்டவரானது  துரதிஷ்டம்.
ஒருநாள்   ஜெர்மனியிலிருந்து  தேவா   எழுதிய  கட்டுரையை வீரகேசரியில்  திடீரென்று  பார்த்தபொழுது  அவர்  பற்றிய  எமது முன்தீர்மானம்    பொய்த்துப்போனது.
புகலிடம்   சென்ற  அவரின்  கண்களில்  கிட்டிய  தரிசனம் அய்ரோப்பியர்   கொண்டாடும்  வசந்த  விழா  பற்றியதாக  இருந்தது. அதற்கு  அவர்  இட்டிருந்த  உப  தலைப்பு:   ரைன்  நதியில்  நீந்துவோம்,  அது  வைன்   மதுவாயிருக்கட்டும்.
" பட்டும்   பவளமும்   சந்தனமும்   அகிலும்   முத்தும்   மணியும்   பொன்னுமாக   நிறைந்த  விண்ணுலகோஎன  ஐயுறவுகொள்ள   நினைத்த   இந்திரவிழாவினை    மிகச்சிறப்பாகக்  கொண்டாடிக்கொண்டிருக்கிறது  பூம்புகார்.  "   என்று  1967 இல் பாடசாலை   மலரில்  எழுதியவர்,   சுமார்  பத்தாண்டு காலத்திற்குப்பிறகு,    09-10-1977   ஆம்   திகதி   வீரகேசரி வாரவெளியீட்டில்,    பூத்துக்குலுங்கும்  பயிர்கள்,   கொத்துக்கொத்தான மலர்கள்,   காடுகளிலும்  மலைகளிலும்  சிரித்து  நிற்கும்  இயற்கை அன்னை  பற்றிய  வர்ணிப்புடன்  ஜெர்மனி  வசந்த  காலத்தை கொண்டாடுவதாக   எழுதியிருந்தார்.


காலம்  விரைந்துவிடும்.   அதில்  திசைமாறிய  பறவைகளாய் எங்கெங்கோ  வாழத்தலைப்படுகின்றோம்.
தேவா   இன்று  ஜேர்மனியில்,   மல்லிகையில்  அவருக்கு எதிர்வினையாற்றிய  மருத்துவ  கலாநிதி  ராஜம்  தேவராஜன் (இலங்கை  சட்டத்தரணி  ரங்கன்   தேவராஜனின்  அக்காஇங்கிலாந்தில்,    பூரணி  மகாலிங்கம்  கனடாவில்,   நான் அவுஸ்திரேலியாவில்,   மு. கனகராஜன்  மேல்  உலகத்தில்,   மல்லிகை ஜீவா  யாழ்ப்பாணத்தை  விட்டு  இடம்பெயர்ந்து  கொழும்பில். ஆனால்,  எமது  தாயகத்தின்  அந்த  இலக்கிய  வசந்த  காலம்  எமது நெஞ்சமதில்  இன்றும்  நிறைந்திருக்கிறது.
1978  ஆம்  ஆண்டு  இலங்கை  வந்திருந்த  தேவாவை  சந்தித்து எழுதிய  நேர்காணல்  மல்லிகையில்  வெளியானது.   மல்லிகைக்கு சந்தா   செலுத்தி  ஜெர்மனிக்கு  தருவித்தார்.   இலங்கை, தமிழ்நாட்டிலிருந்தும்  நூல்களைப் பெற்றார்.
எங்குசென்றாலும்  அவரிடமிருந்த  கலை,  இலக்கிய  தாகம் குறையவில்லை.   அவுஸ்திரேலியாவுக்கு  நான்  வந்த பின்னரும் அவருடன்  தொடர்புகளை  மேற்கொண்ட  காலப்பகுதியில் அய்ரோப்பா  மற்றும்  கனடாவில்  நடந்த  இலக்கிய  சந்திப்புகளிலும் பெண்கள்  சந்திப்புகளிலும்  அவர்  பங்குகொண்டிருந்தார்.   சில சர்வதேச  திரைப்பட விழாக்களிலும்  அவர்  காணப்பட்டதாக  சில இலக்கிய  நண்பர்கள்  தெரிவித்தனர்.
ஊடறு,   எக்ஸில்,   பாரிஸ்  ஈழநாடு  முதலானவற்றிலும்  கதைகள், கட்டுரைகள்   எழுதினார்.   பனியும்  பனையும்  தொகுப்பில் இடம்பெற்ற தேவாவின்  ஆண்பிள்ளை  என்ற  சிறுகதையை  கடந்த  ஆண்டு (2015) வெளியான  ஞானம்  புகலிடச்சிறப்பு  மலரிலும்  காணலாம்.
இலங்கையில்  இவரை  தினபதி  ஊடாக  அறிமுகப்படுத்திய தங்கரத்தினம்  மாஸ்டர்,  வவுனியாவில்  ஒரு  வாகன விபத்தில் இறந்துவிட்டார்.   சிறுவயதில்  இவருடன்  அவ்வையார்  நாடகத்தில் சுட்ட  பழம்  வேண்டுமா ---?  சுடாத  பழம்  வேண்டுமா---?  என்று முருகன்  வேடத்தில்  தோன்றிக்கேட்ட  அந்த  மாணவரும் இறந்துவிட்டார்.    அம்மாணவரை  இலங்கை  வந்த  சமயத்தில் சந்தித்திருக்கும்  தேவா  அவருடைய  ஏழ்மையையும் அவரைப்பீடித்திருந்த  நோயையும்  அறிந்து  தன்னால்  முடிந்த உதவிகளையும்  செய்திருக்கிறார்.
அம்மாணவரின்   நினைவாக  நிழல்  குடைகள்  என்ற   சிறுகதையை பாரிஸ்   ஈழநாடுவில்   1993   இல்   எழுதினார்.    தங்கரத்தினம்  மாஸ்டர்   பற்றிய  நினைவுப்பதிவை  கடந்த  2015   ஆம்  ஆண்டு  நாம் நீர்கொழும்பில்   வெளியிட்ட    நெய்தல்  இலக்கியத்தொகுப்பில் எழுதினார்.
1996  ஆம்  ஆண்டு  அவுஸ்திரேலியாவுக்கு  வந்த சமயத்தில்  மெல்பன்  பாரதி  பள்ளியின்  நிகழ்ச்சியிலும்  நாம்  ஒழுங்குசெய்த இலக்கிய  சந்திப்பிலும்   கலந்துகொண்டார்.
எழுத்தாளர்  விழா  என்ற  எண்ணக்கருவை   எனக்குள்  விதைத்தவரும் தேவாதான்.    எனினும்   அதனை  சாத்தியமாக்க  நான்கு  ஆண்டுகள் காத்திருந்தேன்.
2002- 05    காலப்பகுதிக்கான  ஊடறு  இலக்கியத்தொகுப்பிலும்   அவர் இணைந்திருந்தார்.    இவருடன்  இணைந்திருந்த  ஏனைய  தோழியர்: றஞ்சி  (சுவிஸ்),  விஜி   (பிரான்ஸ்)   நிருபா  ( ஜெர்மனி).
ஊடறு  மலரில்,   சர்வதேச  ரீதியாக  பெண்களுக்கு   எதிராக நிகழ்த்தப்படும்  வன்முறைகள்,   ஆயுத  உற்பத்தி,  அதன் பின்னாலிருக்கும்  பலம்பொருந்திய  சக்திகள்,   சோவியத்திலிருந்து இன்றைய   அமெரிக்கா  வரை -  ஒரு  பெண்நிலைப்பயணம்  முதலான பல   பயனுள்ள  கட்டுரைகளும்,  பெண்ணியம்  சார்ந்த  சிறுகதைகள், கவிதைகள்,   மொழிபெயர்ப்புகள்  இடம்பெற்றுள்ளன.
பெண்ணியம்  தொடர்பாக  எழுதவிரும்புவோருக்கு  இந்தத்தொகுப்பு உசாத்துணையானது   எனவும்  சொல்லலாம்.
நாம்  மெல்பனில்  2003  ஆம் எழுத்தாளர்  விழாவை  நடத்தியபொழுது  அதில்  கலந்துகொண்ட  ஆழியாள் மதுபாஷினி  குறிப்பிட்ட  ஊடறு  தொகுப்பினை  அறிமுகப்படுத்தினார்.   அவுஸ்திரேலியாவில்  வதியும் பாமதி,   ஆழியாள்  ஆகியோரையும்   தேவாதான்  எனக்கு அறிமுகப்படுத்தினார்.
இலங்கையில்  ஒரு  கடற்கரையோர  நகரத்தில்  பெரிய  குடும்பத்தின் மூத்த   பெண்பிள்ளையாக  சமயம்,   விரதம்,   அனுட்டானங்கள், கோயில்  உற்சவம்,   பண்டிகைகள்,  சொந்த  பந்த  உறவுகள்  என்று ஒரு   வட்டத்துக்குள்  வாழ்ந்த  தேவா,   ஜெர்மனி  சென்றதும்,  அங்கு அந்நாட்டின்   மொழியையும்  பயின்று,   மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவாறு  பெண்ணியம்   குறித்து  சிந்தித்து  செயல்படும் ஆளுமையாக   மாறியது  அவர்  குடும்பத்தில்  மட்டுமல்ல  எமது உறவுகள்   மத்தியிலும்  ஒரு  ஆச்சரியக்குறிதான் !!!.
வெளியுலகம்  ஒவ்வொருவரையும்  மாற்றும்  இயல்பைக்கொண்டது.
தேவாவின்  இயல்புகளை  அறிந்திருந்தமையால்,  பறவைகள்  என்ற நாவலை   2002   ஆம்  ஆண்டு  நான்   எழுதியபொழுது,   அதில்  வரும்  பெண்ணியம்  பேசும்  பாத்திரமாக   சுமதியை  படைத்தபொழுது தேவாவைத்தான்    உருவகித்தேன்.
பயணங்களில்   ஆர்வம்  மிக்க  இவர்,   ஒரு  நீண்ட  பயணத்தை முடிக்கும்பொழுதே   அடுத்த  பயணத்துக்கான  திட்டமிடலையும் தயாரிப்பார்.
ஒரு  தொகுப்புக்குத் தேவையான  பல  சிறுகதைகள்  இவரிடம் இருக்கின்றன.   ஆனால்,  அவ்வாறு  ஒரு  தொகுப்பினை வெளியிடுவதில்  அக்கறையோ   ஆர்வமோ   இல்லை.   மேலும்  நல்ல கதைகளைத் தருவதற்குரிய  ஆற்றலும்,   பயண  இலக்கியங்கள் எழுதக்கூடிய   அனுபவங்களும்  இவரிடம்  இருக்கின்றன.
இலக்கிய   உலகம்  இவரிடம்  மேலும்  எதிர்பார்க்கின்றது.
---0---