அனைத்துலகப் பெண்கள் தினவிழா – 2016 - சாந்தினி புவனேந்திரராஜா

.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச்சங்கத்தின் அனைத்துலகப் பெண்கள் தினவிழா2016


ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் நாள் அனைத்துலகப் பெண்கள் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுவதைப் பலரும் அறிவீர்கள். 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில், பெண்கள் தமது உழைப்புக்கேற்ற ஊதியம் கோரியும், தமக்கெதிரான அடக்கு முறைகளுக்கெதிராகவும், போராடி வெற்றியடைந்ததன் பின்னர் 1913ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள், அனைத்துலகப் பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னரே இத்தினம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கடைப்பிடிக்கப்பட்டதாகவும், அத்துடன் அமெரிக்கப் பெண்கள் தமது வாக்குரிமைக்காகப் போராடி 1920 இல் வெற்றிபெற்றதன் பின்  இத்தினத்திற்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் அறிகிறோம். 1913 இலிருந்து  ஆண்டுதோறும் இதற்கென்று ஒரு கருப்பொருளும்  நிறமும் கொடுக்கப்பட்டு இந்நாள் சிறப்பிக்கப்படுகிறதென்பதும்இந்த ஆண்டுக்கான  கருப்பொருள் “Pledge for Parity” என்பதும், நிறம் ஊதா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டின் அனைத்துலகப் பெண்கள் தினத்தையொட்டி மார்ச் 6 ஆம் (2016) நாள் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தினால் முதல் முறையாக, அனைத்துலகப் பெண்கள் தினவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஇலங்கை, இந்தியா, சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த  தமிழ்ப் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பங்கு பற்றவிருக்கின்ற இவ்விழாவில் கவியரங்கு, கருத்தரங்கு, விவாத அரங்கு, கலையரங்கு, நினைவரங்கு உட்படப் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த பெண்ணினம், தன்னிலை அறிந்து, விழிப்படைந்து சிந்திக்க ஆரம்பித்த போது, தம்மைப்பற்றி ஆழமாகச் சிந்திக்கவும், செயலாற்றவுமென்று ஆரம்பிக்கப்பட்டதே அனைத்துலகப் பெண்கள் நாள்.




பெண்களின் தேவைகளை, அவர்களது பிரச்சனைகளை, மனப்போராட்டங்களை, சோதனைகளை, வேதனைகளை, அவர்கள் காலம் காலமாகக் கடந்து வந்த கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதையினையென்று இவற்றையெல்லாம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு நாள் அனைத்துலகப் பெண்கள் நாள்.
சோதனைகள் பல தாண்டித் தாம் அடைந்த சாதனைகளைக் கொண்டாடி மகிழும் ஒரு நாள் அனைத்துலகப் பெண்கள் நாள். சாதாரண குடும்பப் பெண்களாகக் கணிக்கப்பட்ட பெண்கள் சாதனை படைத்த வரலாற்றைச் சுட்டிக்காடுகின்ற ஒரு நாள் அனைத்துலகப் பெண்கள் நாள்.
தாம் இன்றும் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளயும் சவால்களையும் எப்படி எதிர்கொண்டு, எதிர் நீச்சல் போட்டுச் சமாளிக்கலாம், சாதிக்கலாம் என்று சிந்திக்கவும் செயற்படவும் ஊக்குவிக்கின்ற ஒரு நாள் அனைத்துலகப் பெண்கள் நாள்.

பெண்ணின் அறிவு, ஆற்றல், தகுதி, திறமை இவை எல்லாமே பெண் என்ற ஒரு காரணத்துக்காக, குடும்பத்தில்-சமூகத்தில் மற்றும் தொழிலிடங்களில் புறக்கணிக்கப்படுவதும், மற்றும் இவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதும், பல்வேறுபட்ட வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதும் போன்ற பெண்ணுக்கெதிரான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நாள் அனைத்துலகப் பெண்கள் நாள்.
ணும் பெண்ணும் நிகரெனக்கொண்டு ஒருமைப்பாட்டுடன், ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பது போல, ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, அவளது இலட்சியங்கள் நிறைவேறுவதற்கு, அவள் வெற்றியின் சிகரங்களை அடைவதற்கு அவளுக்குப் பின்னாலும் ஆண் இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு விளங்க வைக்க முயற்சி செய்யும் ஒரு நாள் அனைத்துலகப் பெண்கள் நாள்.

நாம் வெறுமனே பேசிக்கொண்டிருந்தால் போதாதுசெயலில் இறங்க வேண்டும் “It is a day for action – It is a day for commitment” என்கிறார்கள் மேலை நாட்டுப்பெண்கள். இந்த விடயத்தில் நாம் சிறிது பின் தங்கியே உள்ளோம்
பெண்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு, அடிமைகளாய் வாழ்ந்தது-வாழ்வது, கீழைத்தேசச் சமூகங்களில் மட்டும் தானென்று பலரும் நினைக்கிறார்கள். நாம் எங்கு பிறக்கிறோம், எங்கு வாழ்கிறோம் என்பதல்ல! உலகத்தின் எந்த ஒரு மூலையில் பிறந்தாலும் சரி, பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வகையிலாவது இதன் தாக்கத்துக்கு உட்படுகிறார்கள் என்பது தான் உண்மை. இல்லையென்றால் இப்படி ஒரு நாள் ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காதே!
மேலை நாட்டவரைப் பொறுத்த வரை ஆணாதிக்கமென்பது குறிப்பிடக்கூடிய அளவு குறைந்து விட்டதென்று கூறலாம். ஆனாலும் இது முற்றாக ஒழிய வேண்டும், ஒழிக்கப்பட வேண்டுமென்று முழுமூச்சுடன் முயற்சி செய்கிறார்கள் அவர்கள். அனைத்துலகப் பெண்கள் தினத்தில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், அறிவுரைகள், ஆய்வுகள் போன்ற பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதுடன், பல்வேறு வகைகளிலும் இடருற்றிருக்கின்ற பெண்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கான பணிகளையும் தொடக்கிவைத்துத் தொடர்ந்து செயற்பட்டும் வருகிறார்கள்.
மேலை நாட்டவருடன் ஒப்பிடும்போது,  இந்நாடுகளில் வாழ்கின்ற தமிழ்ப்பெண்களில் பலர் இன்னமும் பின் தங்கியே வாழ்கிறார்கள். மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு, இவர்களும் சம உரிமையுடனும் சகல உரிமைகளோடும் வாழ்வது போலவே தோன்றும்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக மேலை நாட்டவரைப் பின்பற்றி வாழ்கின்ற ஒரு சிலரைக் கருத்திற்கொண்டு, - தமிழ்ப்பெண்கள் எல்லோருமே சுதந்திர வானில் சிறகடித்துப் பறக்கிறார்கள், இவர்களுக்கு இங்கு என்ன குறை? இவர்கள் ஏன் இப்படி அங்களாய்க்கிறார்கள், உண்மையில் ஆண்கள் தான் பரிதாபத்துக்குரியவர்கள் என்பன போன்ற வாதங்களும் எழத்தான் செய்கின்றன.  
விதிவிலக்குகளை ஒரு புறம் ஒதுக்கி விட்டுப் பெரும்பான்மை பற்றிச் சிந்திப்போமே

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லைக் காணென்று கும்மியடி.
----0-----