சகோதரி அருண். விஜயராணிக்கு பிரியாவிடை - முருகபூபதி (20-12-2015)

.     

           
மேதாவிலாசம் கொண்டவர்களுக்கு அற்பாயுள்தான் என்பது எழுதப்படாத விதி. எம்மிடமிருந்து விடைபெறும் எமது அருமைச்சகோதரி, எங்களுக்கெல்லாம் ஒரு பாசமலராக வாழ்ந்தவர்.  இவ்வளவு சீக்கிரம் அவருடைய பெற்றவர்களும் மாமா மாமியாரும் இவரை அழைத்துக்கொள்வார்கள் என்று நாம் கனவிலும் நினைத்திருக்க மாட்டோம்.
ஆனால் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துபோகும் மேகங்கள்தான் என்று விஜயராணியின் ஆதர்சக்கவிஞர் சொல்லியிருக்கிறார்.
அந்தக்கவிஞரே  மரணத்தின் தன்மை சொல்வேன். மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும் என்றும் சொல்லிவிட்டுத்தான் சென்றார். அவ்வாறு எங்கள் விஜயராணிக்கு ஆதர்சமாகத்திகழந்தவர்களிடம்தான் இவரும் செல்கிறார் என்று நாம் எமது மனதை தேற்றிக்கொள்வோம்.
அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் பன்முகம்கொண்டவை. இப்படியான அபூர்வமான மனிதர்கள் ஆயிரத்தில் ஒருவராகத்தான் இருப்பார்கள்.



குடும்பப்பாசம்  சகோதர வாஞ்சை உறவுகளுடன் தீராத நேசம் ஆன்மீக நம்பிக்கைகள்  நட்புகளை பேணும் இயல்பு கலை இலக்கியம் ஊடகம் வானொலி திரைப்பட ரசனை சமூகம் குறித்த கரிசனை மனிதநேயத்தொண்டுணர்வு இவற்றுக்கிடையே சிறுமைகண்டு பொங்கிடும் தர்மாவேசக்குரல் அனைத்தும் கொண்டிருந்த ஒரு ஆளுமையாக எம்மத்தியில் வாழ்ந்தவர் சகோதரி திருமதி அருணகிரி விஜயராணி.
அவர் இரண்டு ஆண்செல்வங்களுக்குத்தான் ஒரு அம்மா என்பதுதான் எமக்குத்தெரியும். ஆனால்  - அவருக்கு அருணகிரி என்ற ஒரு மகனும் இருக்கிறார் என்பது நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும்.
அப்பாவைப்போல் கணவர் வேண்டும் என்பாள் மகள். அம்மாவைப்போன்று மனைவி வேண்டும் என்பான்  மகன். இதுதான் எங்கள் தமிழ்ச்சமூகத்தின் பாரம்பரிய குணாதிசயம்அவ்வாறு வாழ்ந்தவர்கள்தான் விஜயாவும் அருணும்.
ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்த விஜயா திருமணத்தின் பின்னர் எங்குசென்றாலும் தனது கணவரையும் அழைத்துக்கொண்டுதான் செல்வார். ஆனால் இந்தப்பயணத்தில் அது சாத்தியமே இல்லை. ஏனென்றொல்  இனி எமது இரண்டு செல்வன்களுக்கும் நீங்கள்தான் அம்மாவும் அப்பாவும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச்சென்றுள்ளார் எங்கள் சகோதரி.
எனவே எங்கள் அனைவரதும் அருமைச்சகோதரனே அன்பு நண்பரே அருண் நீங்கள் தைரியமாக இருக்கவேண்டிய காலம் இதுதான். நாம் அனைவரும் உங்களுடன் இருக்கின்றோம். ஆயினும் விஜயாவின் இடத்தை எவராலும் நிரப்பமுடியாதுதான். ஆனால் உங்கள் விஜயா உங்களுடன்தான் நினைவுகளாக என்றென்றும் இருப்பார்.
ஒரு வருடகாலத்தில் தாயையும் தாரத்தையும் இறைவனிடம் கையளித்த தைரியத்தை அந்த இறைவனே உங்களுக்கு வழங்கியிருக்கிறார்எனவே தாயும் தாரமும் என்றும் உங்களுடன்தான் இருக்கிறார்கள். அந்த தைரியத்தில்தான் நீங்கள் இருக்கவேண்டும்.
உங்கள் மகன்மார் அன்பு மருமகள் பேரக்குழந்தை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் உங்களுடனேயே இருக்கிறார்கள்அன்புள்ள எங்கள் சகோதரி விஜயாஎங்களுடன் அடிக்கடி உரையாடும் உங்களுக்கும் ஒரு செய்தி சொல்லவேண்டும்நீங்கள் அரைநூற்றாண்டுக்கும் மேலாக வாழும் இந்த மெல்பனில்தான் இன்று உங்களை இவர்கள் அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.
அப்படி அல்ல. தமிழர்கள் வாழும் தேசங்களில் எல்லாம் இன்று உங்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் இலங்கையில் நேசித்த படைப்பிலக்கியாவதிகளும் கலைஞர்களும் பத்திரிகை வானொலி தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் உங்கள் நினைவுகளைத்தான் அங்கு பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல நீங்கள் எமது கல்வி நிதியம் ஊடாக உதவிய இலங்கையில் நீடித்த அந்தப்போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களும் அவர்களை கண்காணிக்கும் தொடர்பாளர்களும் ஆசிரியர்களும் அதிபர்களும் உங்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்நீங்கள் செல்லாத இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நீங்கள் உதவிய பாடசாலையில் உங்களை நினைவுகூர்ந்து பெரிய பதாகைகள் (பெனர்கள்எல்லாம் தொங்கவிட்டும் அஞ்சலிப்பிரசுரங்கள் வெளியிட்டும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய சான்றோராக இருக்கும் உங்களை உங்கள் பெற்றோர்களும் மாமா மாமியும் - நீங்கள் ஆதர்சமாக கருதிய மகாகவியும் கவியரசும் உங்களைப் பார்க்க ஆசைப்பட்டிருப்பார்கள் என்றுதானே எங்களையெல்லாம் விட்டு விட்டு அவர்களிடம் செல்கிறீர்கள்செல்லுங்கள். தாராளமாகச்செல்லுங்கள். உங்களை வழியனுப்பிவைக்கின்றோம்.   அந்தத்தைரியத்தை நாம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம்.
ஏனென்றால் மானிடர் ஆன்மா மறுபடி பிறந்திருக்கும். நீங்கள் செல்வத்துரை அய்யா - சிவபாக்கியம் அம்மா - நாகலிங்கம் மாமா நாகேஸ்வரி மாமி ஆகியோரிடம்தான் செல்கிறீர்கள். நீங்கள் மீண்டும் வந்து அவர்களின் குடும்பத்திலேயே தோன்றுவீர்கள். அது நிச்சயம்.
மானிடர் ஆன்மா மறுபடி பிறந்திருக்கும்.
இனி விஜயா பேசுறன் என்ற குரலை நாம் கேட்கமாட்டோம் என்பது உண்மைதான். ஆனால் அனைவரின் உள்ளங்களிலும் நீங்கள் என்றென்றும் பேசிக்கொண்டே இருப்பீர்கள்.
உங்களை வழியனுப்புவதற்கு நீங்கள் அங்கம் வகித்த எமது கல்வி நிதியம் மற்றும் தமிழ் கலை இலக்கியச்சங்க  உறுப்பினர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களின் சார்பிலும் எனது அஞ்சலியை தெரிவிக்கின்றேன்.    மலர்களைப்போல் உறங்கும் எங்கள் பாசமலரே சென்றுவாருங்கள்.