மறுபடியும் வரவேண்டும் ! - எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண்

.


  
உரும்பிராய் தனில்பிறந்து உலகறிய எழுதிநின்றார்
  
அருண்விஜய ராணியெனும் அழகுமிகு தமிழ்நங்கை
  
விரும்பியவர் தமிழெடுத்தார் விதம்விதமாய் பலபடைத்தார்
  
அருந்திநிற்கத் தமிழ்தந்தார் அவரைநாம்  காண்பதெப்போ !

   
எழுதுவதைதன் தவமாய்  ஏற்றுநின்ற மங்கைநல்லாள்
   
எழுதிநின்ற அத்தனையும் எமையெண்ண வைக்கிறது
   
பழுதில்லா எழுத்தாலே பலபேரின் மனமுறைந்தார்
   
அழுதுநிற்க வைத்துவிட்டு அவ்வுலகுலகு சென்றதேனோ !

  
சங்கம் பலவற்றில் தலைமையவர் வகித்தாலும்
  
இங்கிதமாய் எல்லோரின் இனியநட்புக் கிலக்கானார்
  
தங்கநிகர் விஜயராணி சபையேறிப் பேசுவதை
  
எங்குநாம் காண்பதென ஏங்கிநின்று அழுகின்றோமே !

 
கங்காரு நாட்டினிலே கால்பதித்த நாள்முதலாய்
 
சிங்கார முகத்தோடு சிறந்தபல பணிசெய்தாய்
 
உன்காரம் உணர்ந்தவர்கள் உனையுயர வைத்தார்கள்
 
அன்பான அருணம்மா அழவிட்டுப் போனதெங்கே !

 
பெண்ணியத்தை ஆதரித்துக் கண்ணியத்தை வளர்த்தவரே
 
உன்முகத்தைக் காணாது ஓலமிட்டு அழுகின்றோம்
 
மண்மீது விஜயராணி மறுபடியும் வரவேண்டும்
 
பெண்ணினமே உன்வரவை பெருமையுடன் பார்க்கிறது !
( எமைவிட்டுப் பிரிந்த மறக்க முடியாத மாண்புடை மங்கை
எழுத்தாளர் அருண்விஜயராணி அவர்களுக்கு எனது கவிதாஞ்சலியைச்
சமர்பித்து அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.)