வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பத்து ஆண்டுகள்

.

டிசெம்பர் 5, 2005 ஆண்டு வலைப்பதிவு உலகில் ஆரம்பித்த என் எழுத்துப் பயணம் இந்த மாதத்துடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்து நிற்கின்றது.

ஈழத்தில் நானும் (நாமும்) வாழ்ந்து கழித்த அந்த நாட்களின் "கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்" மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற என் முதல் குழந்தை வலைப்பதிவினூடாகப் பதிவேற வேண்டும் என்ற முனைப்பில் அப்போது எழுத ஆரம்பித்தேன். மடத்துவாசல் பிள்ளையார் எங்கள் கிராமத்துக் கோயில் அந்த ஆலயத்தின் வாசல் படிகளில் எனது நண்பர் குழாமுடன் பேசிக் கழித்த் இளமை நாட்களின் நீட்சியே இந்த இணைய உலகப் பதிவு.

அந்தக் காலகட்டத்தில் ஈழத்துப் படைப்புலக ஆளுமைகள் (எழுத்து, நாடகம், சினிமா, மரபுவழிக் கூத்து) குறித்த விரிவான பகிர்வுகளைக் குறித்த ஆளுமைகளை ஒலி வழிப் பேட்டி செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற பேரெண்ணமும் எழவே அவற்றையும் சேர்த்துக் கொண்டேன். ஈழத்துப் படைப்புலக ஆளுமைகள் குறித்து தமிழகத்து நண்பர்களோடு ஈழத்தின் இன்றைய தலைமுறையும் அவற்றைப் பயன்படுத்தி வருவதைக் கண்டு இந்தப் பணியில் நிறைவை உண்டு பண்ணியிருக்கிறது.
குறிப்பாக நவீன நாடக மரபை ஈழத்தமிழ் தமிழ் உலகிற்குச் செய்து காட்டிய திரு தாசீசியஸ், ஈழத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேராசிரியர் கா.சிவத்தம்பி, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் மூலம் தமிழ் உலகை ஒன்றிணைத்த தனிநாயகம் அடிகளார் போன்றோர் குறித்த விரிவான ஒலி மற்றும் எழுத்து ஆவணப் பதிவுகள் எதிர்கால இணையத் தேடல்களில் புதையல்களாக இருக்குமென்பதில் ஐயமில்லை.


மாதத்துக்குக் குறைந்தது ஒரு இடுகை என்ற ரீதியில் இந்தப் பத்தாண்டுப் பயணத்தைத் தொடர்கிறேன்.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் "மடத்துவாசல் பதிப்பகம்" என்றதொரு பதிப்பகம் வழியாக எனது "பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி" என்ற நூலை வெளியிட்டது இந்தப் பத்தாண்டுப் பயணத்தின் இன்னொரு பரிமாணம். கிட்டத்தட்ட நாலாயிரம் அவுஸ்திரேலிய டாலர்களுக்கு மேல் செலவு செய்து, புத்தக வெளியீட்டில் கிடைத்த பணத்தை "சிவபூமி" சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலைக்கு அளித்தேன். பூபாலசிங்கம் புத்தகசாலை உள்ளிட்ட ஈழத்துப் புத்தகசாலை வழியாக விற்ற தொகையை அங்குள்ள ஆதரவற்ற உறவுகளுக்குக் கொடுக்கச் சொல்லி விட்டேன். தமிழகத்தில் ஏக விநியோகஸ்தராக ஆபத்பாந்தவனாக உதவிய நண்பர் வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த இந்தியப் பயணத்தில் அவரைச் சந்தித்த போது  "புத்தகம் விற்ற கணக்கைப் பார்ப்போமா" என்று அவராகவே ஆரம்பித்தார். என்னடா இப்படியும் ஒரு மனுஷரா என்று என் மனசு நெகிழ்ந்தது. "இருக்கட்டும்க சாவகாசமா எடுத்துக் கொள்ளலாம்" என்றேன். அவரிடமும் நான் பணத்தை வாங்கப் போவதில்லை. ஆதரவற்ற உள்ளங்கள் யாராவது அவர் வழியாகப் பயன் பெறட்டும்.
எனது "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி", "பாலித்தீவு" நூல்கள் அந்த நாடுகளுக்கான தமது பயணத்துக்குச் சிறப்பான வழிகாட்டலாக இருக்கின்ற என்று சொல்லும் அன்பர்களுக்கு என்னளவில் வழிகாட்டியாக இந்துத் தொன்மங்களைக் காட்ட வழி செய்திருக்கிறேன் என்ற மன நிறைவே போதும்.

இந்தப் பத்தாண்டுப் பயணத்தில் தொடர் வாசகர்களாக இருந்த 
போராளிச் சகோதரன் மிகுதன் 

ஈழத்துத் தனி நடிப்பு மேதை கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணை

இந்த வாரம் மறைந்த எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அக்கா

போன்றோரை இழந்தது எனக்குப் பேரிழப்பு.
அருண் விஜயராணி அக்கா இருந்திருந்தால் என்னை விட மிகவும் சந்தோஷப்பட்டிருப்பா.

எனது சக வலைப்பதிவுகளில் தமிழ்த் திரையிசையின் பல்வேறு பகிர்வுகளையும் கொடுக்க எண்ணி ஆரம்பித்த றேடியோஸ்பதி http://www.radiospathy.com/ வழியாக ஏராளமான தமிழ்த் திரை ஆளுமைகளை ஒலி வழிப் பேட்டியையும் கண்டு சேமித்திருக்கிறேன். குறிப்பாக எழுத்தாளர் சுஜாதா, இயக்குநர் ஆபாவாணன், இயக்குநர் பாண்டியராஜன், பாடகி ஜென்ஸி, இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன், பாடகர் அருண்மொழி, எழுத்தாளர் ராஜேஷ்குமார் போன்றோரில் பலருக்கு முதல் ஒலிப் பேட்டியாகவும் அமைந்திருக்கிறது.

"உலாத்தல்" http://ulaathal.blogspot.com
எந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு என்று என் அம்மா எனக்கிட்ட புகழாரத்தை 😀 மகுட வாக்கியமாக்கி எனது பயணப் பகிர்வுகளை கேரளாவில் பயணத்தில் இருந்த போதே இந்த வலைப்பதிவை உருவாக்கித் தொடர்கிறேன்.

ஈழத்து முற்றம் http://eelamlife.blogspot.com.au/ என்ற வலைப்பதிவினூடாக "ஈழத்தின் பிரதேச வழக்குகள் பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவை ஆரம்பித்து நண்பர்களை இணைத்த போது நூற்றுக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் திரண்ட குழும வலைப்பதிவாக விளங்கியது. ஆரம்பத்தில் இருந்த தீவிரம் இந்த வலைப்பதிவில் இல்லாதது ஒரு குறை. நண்பர்கள் தமது பகிர்வுகளாக் கை கொடுத்தால் மீண்டு(ம்) வரலாம். 

இந்தப் பத்தாண்டு எழுத்துலகப் பயணம் என்னளவில் ஒரு வைராக்கியமான முயற்சி. என் குணாதிசியத்துக்குப் பொருந்தாதது எந்த முயற்சியையும் தொடர்ச்சியாக செய்வது. ஆனால் இந்த வலைப்பதிவு முயற்சி வழியாக நிறையத் தேடல்களில் இறங்கியிருக்கிறேன். எப்பேர்ப்பட்ட இலக்கிய கர்த்தாக்கள், படைப்புலக ஆளுமைகள் என்று பல ஆளுமைகளைப் பற்றி எழுதும் போது என்னை நானே சுய மதிப்பீடு செய்திருக்கிறேன். 

வலைப்பதிவு ஆரம்பித்த் போது நூற்றுக்கணக்கான சக வலைப்பதிவர் நண்பர்களோடு இயங்கிய என் உலகம், இன்று  ஒரு பக்கம் எழுத்தாளராக ஒரு கூட்டம் ஒதுங்கிப் போக, இன்னொரு பக்கம் இதை விட வேறு வேலை செய்யலாம் என்று ஒதுங்கிப் போனோர் இருக்க தொடர்கிறேன், தொடர்வேன் எழுத்துப் பயணத்தை என் தேடல் வற்றும் வரை.
http://www.madathuvaasal.com/2015/12/blog-post_16.html

நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா