எனதருமைத்தோழி பாதிவழியில் விடைபெற்றார் - தாமரைச்செல்வி .

.
இலக்கியப்பயணத்தில்   இணைந்து  வந்த எனதருமைத்தோழி  பாதிவழியில்  விடைபெற்றார்

  
                         
என் இனிய தோழி ! அருண் விஜயராணியின் மறைவுச்செய்தியை திரு முருகபூபதி அவர்களின் மின் அஞ்சல் மூலம்
அறிந்து கொண்டேன்.   மனதுக்குள் தாங்கமுடியாத துயரம் நிரம்பிக்கொண்டது. அவரது சிரித்த முகமும் மலர்ந்த விழிகளும் மிடுக்கான தோற்றமும் கண்களுக்குள் நிழலாடியது .எங்களுக்குள் இருப்பது நாற்பதுக்கும் மேற்பட்ட கால நட்புஎழுபத்துமூன்றாம் ஆண்டு இலங்கை வானொலிக்கு ஆக்கங்கள் எழுதிக்கொண்டிருந்த நாட்களில் ஒருவருக்கொருவர் பேனா நண்பர்களாகத்தான் அறிமுகமானோம் .எங்களுடைய ஆக்கங்களைப்பற்றி ஒருவருக்கொருவர் அபிப்பிராயம் சொல்லிக்கொள்வோம் .அந்த விமர்சனங்கள் நாம் இலக்கிய உலகில் எம்மை வளர்த்துக்கொள்ள பெரும் உதவியாக இருந்தது .
                    நாம் கடிதங்கள்  மூலம் அறிமுகமாகி  ஒரு வருடத்தின் பின் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது . அந்நேரம் விஜயாவின் சிறியதந்தை எங்கள் பரந்தன் புகையிரத நிலைய அதிபராக பணியாற்றிக்கொண்டிருந்தார் .அவர் வீட்டுக்கு வந்த விஜயா அவர் மகள்
மஞ்சுவுடன் என்னைச்சந்திக்க எம் வீட்டுக்கு வந்திருந்தார் .
" உங்கள் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் தாமரைச்செல்வி ." என்று என் கை பிடித்து  சொன்ன அந்த வினாடியிலிருந்து எம் நட்பு இன்னும் இறுக்கமாகியது.



                     எழுபத்தி ஆறுகளில் நாம்கொழும்பில் வசித்த சமயம் விஜயராணி தெகிவளையில் பெற்றோர் சகோதரர்களுடன் வசித்து வந்தார் .ஏதாவது ஒரு ஞாயிற்றுக்
கிழமை மாலைகளில் அவர்கள் வீட்டுக்குப் போவோம் .அவருடைய தந்தையார்   கே .ரி .செல்லத்துரை அவர்கள்  மிகச் சிறந்த ஓவியர்.   எனக்கும் ஓவியத்தில் ஆர்வம் இருந்ததனால் அவருடைய ஓவியங்களைப் பிரமித்துப் பார்த்ததும் அவை பற்றிப் பேசியதும்
இன்றும் நினைவில் உள்ளது .அம்மா மிகவும் அன்பான பெண்மணி. அக்கா தம்பி என  அக்குடும்பமுமே அன்பாகப் பழகக் கூடியவர்கள் .
                        விஜயராணியின் திருமணம் நடந்த போது என்னால் கலந்து கொள்ள முடியவில்லை .ஆனாலும் திருமணம் செய்தபின் கணவருடன் பரந்தனில் எங்கள் வீட்டுக்கு   வந்திருந்தார். அன்றைய நாளின் மகிழ்ச்சி இன்றும் என் நினைவில்  நிறைந்து  நிற்கிறது .
அன்பையும் நட்பையும் மதிக்கத் தெரிந்த இனிய தோழி அவர்.  எண்பத்தி  ஐந்தாம் ஆண்டளவில்  என்று நினைக்கிறேன்  ..... தெகிவளை  இல்லத்தில்  விஜயாவைக்  கடைசியாகச்  சந்தித்தேன் .
அதன் பின்னரான   இந்த முப்பது வருடங்களில்  மறுபடி அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டவேயில்லை . இடையே சில வருடங்கள்   நாட்டுப் பிரச்சனைகளால்   அவருடன் எந்தத் தொடர்புகளும்   இல்லாமல் இருந்ததுஆனாலும்  அவர்  லண்டனில் இருந்த போது  அங்கே வசிக்கும் என் தங்கைகளுடன் அவர் தொடர்பில் இருந்ததனால் அவவின்   நலன் பற்றி  அறிய முடிந்தது . அதே போல் அவர் அவுஸ்திரேலியா  வந்த பின் என் தங்கை கெளரியோடும் நட்போடு இருந்து வந்திருக்கிறார் . நான் 2011 இல் முதல் தடவை  அவுஸ்திரேலியா வந்த போது  நீண்ட நாட்களின் பின் அவருடன் கதைக்க முடிந்தது . அதன் பின் அவுஸ்திரேலியா வரும் போது அவருடன் பேசுவதுண்டு  கடைசியாக  போன மாத ஆரம்பத்தில் நான் சிறிலங்கா  போவதற்கு  முன்பாக
அவருடன் பேசினேன்குரலில் சோர்வு  இருந்தது. ஆனாலும் அந்த அன்பும் வாஞ்சையும்  மாறவேயில்லை .   அதன் பின் இப்போது அவரின் மறைவுச்செய்தி ........
இலக்கிய  உலகில்  இவரின்  பங்களிப்பு   மிகவும் அதிகம் . நலிந்த பெண்களின்  வலி மிகுந்த உணர்வுகளை தன் எழுத்துக்களில் ஆழமாகப் பதிவு செய்தவர் . மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்ட படைப்பாளியாகவே   தன்னை   எப்போதும்   இனம் காட்டிக்கொண்டவர் தன் இனிய குணத்தாலும் அன்பான மனத்தாலும் தன்னைச் சுற்றியுள்ள அத்தனை மனிதர்களாலும் நேசிக்கப்பட்ட ஒரு மகத்தான பெண்மணியாகவே அவர் வாழ்ந்து  மறைந்திருக்கிறார் . நாற்பது வருட காலமாக அவருக்கும் எனக்குமாக  இருக்கும் நட்பை  நான் என்றும்  பெருமையோடு  நினைவு  கொள்வேன் . என் இனிய தோழி !
நீ மறையலாம் ..... உன்னால் நிகழ்த்தப்பட்ட  சாதனைகளும் உன்னைப்பற்றிய நினைவுகளும்  என்றைக்குமே  மறையாது .  என் விழி சிந்தும் நீர்த்துளிகளால்  உன் பாதங்களுக்கு   அஞ்சலி செய்கிறேன்.
தாமரைச்செல்வி .

கொழும்பு,   இலங்கை