.
ஆடிய பாதம், சிந்தாமணி என்ற இருவரும் டாக்டரிடம் செல்வதும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியினையும் காட்சிப்படுத்திய போது சற்று நீண்ட நேரம் எடுத்துவிட்டார்களோ என்று எண்ணும்படியாகவும் இருந்தது.
"சிரிப்பு
வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க
சிரிப்பு வருது சின்னப் பொடியன்
பெரிய மனுசர் நடிப்பைப் பார்க்க
சிரிப்பு வருது" என்பது போல அமைந்திருந்தது Laughing-O-Laughing. கடந்த 14/15 ம்
திகதிகளில் சிட்னி மாநகரில் இந்த
நாடகத்தினை பார்த்து மகிழக் கூடிய வாய்ப்பு
எமக்கு கிடைத்திருந்தது. 'அறம் செய்ய விரும்பு'
என்ற ஔவை மூதாட்டியின் வழிப்படி
ஆண்டுதோறும் மருத்துவ நிதி சேகரிப்பு நிகழ்வு
நடாத்தப்பட்டு வருகிறது. இன் நிகழ்வில் டாக்டர் ஜெயமோகனின் Laughing-O-Laughing
நாடகம் கடந்த சில வருடங்களாக நடை பெற்று
வருவதும் குறிப்பிடத்தக்கது. டாக்டர் ஜெயமோகன் அவர்கள் பன்முகங் கொண்ட ஒரு திறமையாளர்
என்றே கூறலாம். நாடகத்தின் வசனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்து அம்சங்களையும் நேர்த்தியாகவே
செதுக்கியிருந்தார். தனியே சிரித்துவிட்டு செல்லாமல் சிரிப்பினூடாக ஏதோவொரு சமூகத்தின்
செய்தியினை பார்வையாளர்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பது என்பதில் கவனம் எடுத்துள்ளார்
என்பதை நாடகங்களினைப் பார்கின்ற போது துல்லியமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
நாடகத்தின் பிரதான
நடிகர்களாக டாக்டர் ஜெயமோகனும் அவரது தங்கை ஷாமினியும் பங்கேற்று இருந்தனர். மேலும்
சிறுவன் விஷால் சுரேஷ், நடராஜா கருணாகரன்,
ரமேஷ் நடராஜா, ராணி பாலா, அனுஷா பிரஜீவ், நிலா சிவா, ஹரிபாலா, மதுரா மகாதேவ்,
அப்பையா நிமலேந்திரன், அர்ச்சனா சந்திரகாசன், இந்திரன் கானா போன்றோர் நடித்திருந்தனர்.
Ramesh Nadarajah |
Nadarajah Karunakaran |
ஒவ்வொரு நாடகத்திற்கும்
முத்தாய்பாக அமைந்திருந்தது அறிமுகப் படலம். பாகவதர் போல கருணாகரனும், நவீன இளைஞனாக
ரமேஷும் இணைந்து தருகின்ற அறிமுகத்துடன் நாடகத்திற்குள் நுளைகின்றபோது மிகவும் எளிதாகவும்
கதையுடன் இணையக் கூடிய தன்மையினையும் எமக்கு
வழங்கியிருந்தது என்றே கூறவேண்டும். முக்கியமாக கதை கூறும் முறையில் டாக்டர் ஜெயமோகன்
அவர்களின் நெறியாள்கை என்பது மிகவும் காத்திரமானதாக அமைந்திருந்தது எனலாம்.
1950, 2015 என்ற
இருவேறுபட்ட காலகட்டத்தில் தமிழரின் திருமணமுறை ஏற்பாட்டினை கூறுகின்ற போது, அப்பாடி எவ்வளவு
படிமுறை மாற்றத்தினை இன்று நாம் கடந்து
வந்துள்ளோம் என்று வியப்பாகவே இருக்கிறது.
1950 ல் திருமணத்தில் தாய், தந்தைக்குரிய கடமைப் பாட்டினை கூற
வந்த நாடக ஆசிரியர், கவியரசர்
கண்ணதாசனின் யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே
பிறந்திருகின்றாரோ .... என டாக்டர் ஜெயமோகனும்
மதுராவும் இணைந்து பாடற் காட்சிக்கு
நடிக்கின்ற போது அட அதற்குள்
முடிந்து விட்டதா எனும் அளவிற்கு
அருமையாக இருந்தது. குறிப்பாக அந்தக் காலகட்டத்திற்கேற்ப ஆடை
அணிகலன்களில் கவனம் எடுத்திருப்பது பாராட்டுக்குரியதே.
அன்று ஆசிரியர், மாணவனுகிடையே உள்ள உறவுமுறை எப்படி
இருந்தது என்பதை காட்டுகின்ற போது
மாணவனாக வருகின்ற சிறுவன் விஷால் பயந்து
பயந்து மிரட்சியுடன் ஆசிரியரைப் பார்ப்பதும் குறிப்பாக 7ம் வாய்ப்பாடு சொல்வதும்
பணிவுடன் நடப்பதும் போன்ற காட்சியினை பார்க்கின்றபோது
எப்படியெல்லாம் நம் முன்னோரின் குருசீட
பரம்பரை இருந்திருகின்றது என எண்ணும் போது
தற்போதைய காலகட்டத்தில் குறிப்பாக புலம் பெயர் மண்ணில்
ஆசிரியர் மாணவர் உறவு எப்படி
இருக்கிறது என்று நகைச்சுவையுடன் தருகின்ற
போதும் இத்தனை மாற்றங்களா? என்று
எண்ணுகையில் மனதில் எங்கோ ஓர்
மூலையில் சிறு வழியும் ஏற்படத்தான்
செய்கின்றது.
நாடகங்கள்
யாவும் நல்ல கதைக்கருவினையும் நகைச்சுவையினூடாக
சமூகத்திற்கு பல செய்தியினையும் கூறுவதாக
அமைந்திருந்தன. 'அட இது நம்ம
வீட்டுக் கதையாக இருகிறதே' என்று
பலரும் கூறியதை கேட்கக் கூடியதாகவும்
இருந்தது. குறிப்பாக புலம் பெயர் மண்ணில்
மாஸ்டர் பெட்ரூமில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சின்ன சின்ன
சண்டைகள் என 'காபி வித்
பாலா' என்ற நாடகம் மிகவும்
திறம்பட அமைந்திருந்தது. காதல் கல்யாணத்திற்கும் பேசிச்
செய்கிற கல்யாணத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதனை
ஒரு ஆணும் பெண்ணும் கையை
பிடிச்சுக் கொண்டு தாங்களாகவே கிணற்றுக்குள்
குதிப்பது காதல் கலியாணம் என்றும்
அவர்களை சொந்த பந்தங்கள் பின்னால்
நின்று கிணற்றுக்குள் தள்ளி விடுவது பேசிச்
செய்யும் திருமணம். ஆனால் மொத்தத்தில் எல்லாருமே
கிணற்றுக்குள் தான் என்று கூறுகின்றபோது
அரங்கம் நிறைந்த கைதட்டல் ஒலி
கேட்ட வண்ணமே இருந்தது. 'சுற்றிச்
சுற்றிப் பிள்ளையார்' என்ற நாடகத்தில் இரு
பிரதான நடிகர்களை மாத்திரமே கொண்டு மிகவும் சுவையாக
கதையினை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரிய விடையமே. சிரிப்போ சிரிப்பு அத்தனை சிரிப்பு. ஷாமினியின்
குரல்வளம் அவர் கதை சொலுகின்ற
விதம் அதிரடிச் சிரிப்பு தான்.
ஆடிய பாதம், சிந்தாமணி என்ற இருவரும் டாக்டரிடம் செல்வதும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியினையும் காட்சிப்படுத்திய போது சற்று நீண்ட நேரம் எடுத்துவிட்டார்களோ என்று எண்ணும்படியாகவும் இருந்தது.
Indiran Kana, Dr JJ, Madhura, Sharmini & Anoosha Perajeev |
மொத்தத்தில்
ஆடல், பாடல் கொண்டாட்டம் என
மூவர் உலாவாக Laughing-O-Laughing
நாடகம்
எம் மனதில் இடம் பிடித்துக்
கொண்டது. இத்தருணத்தில் ஒருசில விடையத்தினையும் பதிவு
செய்து கொள்ள விரும்புகிறேன். நாடக
ஆசிரியர் டாக்டர் ஜெயமோகன் அவர்களது
நாடகங்கள்
பல
அன்று இலங்கை வானொலியில் ஒலிபரப்புப்பட்டு
வந்தவேளை குறிப்பாக 'சந்திய
காலத்துப் புஷ்பங்கள்' என்ற நாடகம் இலங்கை
வானொலியில் ஒலிபரப்பான போது இவர் ஒரு மருத்துவ பீட
மாணவன். பல பெண் நேயர்கள்
அவருக்கு வாழ்த்து மடலினை அனுப்பியிருந்ததாகவும் 'அவரா இவர்'
என்று ஒருவர் கூறிக் கொண்டிருந்தமையும்
என் செவிகளுக்கு எட்டியது. அதேபோல இவரது தந்தை
மிகவும் 'அகடவிகடமாக' பேசக் கூடியவர், அதுதான்
இவருக்கும் அப்படி வருகுது என
ஒருவயசானவர் கூறியதையும் நான் உள்வாங்கிக் கொண்டு
மனம் நிறைந்த சிரிப்புடன் வீடு
திரும்பினேன்.
1 comment:
நல்லதொரு ஆய்வு, நேரில் பார்க்காததை எண்ணி வருந்தமாக உள்ளது. நடிகர்கள் யாவருக்கும் பாராட்டுக்கள்.
இன்றைய கால கட்டத்தில் நேரத்தை கையாள்வது தான் எல்லா நிகழ்விலும் பொதுவானதோர் குறைவாக உள்ளது.
Post a Comment