எல்லைகளை உடைத்த கலாசார சங்கமம் - பேராசிரியர். சி. மௌனகுரு

.
எல்லைகளை உடைத்த கலாசார சங்கமம்
இலங்கையின்  பல்வேறு  பிரதேசத்தைச்  சேர்ந்த, உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஒன்றிணைந்த காட்சி
சர்வதேச நடன நாடக விழாவில் மட்டக்களப்பு   அரங்க ஆய்வு கூடத்தின் காண்டவதகனம் --- கூத்துரு நாடகம்
பேராசிரியர். சி. மௌனகுரு


குக்கிராமங்களில்  ஆடப்படும்  கலைகளுள்  ஒன்றான  கூத்துக்  கலை சர்வதேச  நடனக்  கலைஞர்கள்  பங்கு கொள்ளும்  ஒரு  சர்வதேசக்  கலை விழாவில்   கலந்து  கொண்டு  பலரது  கவனத்தையும்  ஈர்த்துப் பாராட்டுக்களையும்   பெறுகின்றதென்றால், அதற்கான  காரணம் அக்கூத்துக்கலையுள்  காணப்படும்  உள்ளார்ந்த   வலிமை  மிகுந்த  ஆடல் பாடல்கள்தான்அவற்றை  வெளிக்கொணர  மட்டக்களப்பு  அரங்க  ஆய்வு கூடம்  ஒரு  கருவியாயச் செயற்பட்டமை  அரங்க  ஆய்வு  கூடம்  பெற்ற  பெரும் பாக்கியம்
NATANDA நடன அரங்கின் ஆதரவில் சர்வதேச நடன விழா கடந்த 14,15,16 17,18 ஆம் திகதிகளில் கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் நடந்தேறியது. இவ்விழாவில்  அமெரிக்கா,  இங்கிலாந்து, ஜேர்மனி, லெபனான்,  இந்தியா, மலேசியா, கொரியா  ஆகிய நாட்டுக் கலைஞர்களுடன் இலங்கைக்கலைஞர்களும் தத்தம் அளிக்கைகளுடன் கலந்து கொண்டனர்.
.சர்வதேச நடனக் கலைஞர்களின் சங்கமமாக அமைந்த இவ்விழாவுக்கான கட்டணம் மிக அதிகம்தான். எனினும் 5 நாட்களும் பெரும்  திரளான மக்கள் கலந்து கொண்டமை நடனத்தில் அவர்களுக்கிருந்த ஆர்வத்தைச் சுட்டி நின்றது
40க்கு மேற்பட்ட உள்ளூர், வெளியூர்  கலைஞர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் மாலையில் நிகழ்வுகள் லயனல் வென்ட் அரங்கில் மேடையேறின.

 காலையில் பங்கு கொண்ட உள்ளூர் கலைஞர்கள் 40 பேருக்கும் வெளிநாட்டுக் கலைஞர்களினால் சமகால நடனப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
நடனப் பயிற்சிகள் ஹைட் பார்க்கில் அமைந்துள்ள  நிலும் கலை அரங்கில் அளிக்கப்பட்டன.
ஐந்து நாட்களும் முழு நாள் நிகழ்வாக வடிவமைக்கப்பட்டிருந்தமை நடன நாடக விழாவின் சிறப்பம்சம்.
ஒருவகையில் ஐந்து நாட்கள் காலையிலிருந்து இரவு 9 மணிவரை
 உள்ளூர்க் கலைஞர்களும் வெளி நாட்டுக் கலைஞர்களும் இணையவும் - ஒருவர் கலாச்சாரம் பற்றி மற்றவர் அறியவும் - கலைஞர்கள் முகம் பார்த்துக் கதைக்கவும் கலந்துரையாடவும் ஒருவரை ஒருவர் அன்போடு அணைத்துக் கொள்ளவுமான மகத்தான ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துவிட்டது
அன்பும் புரிந்துணர்வும் அறியும் ஆர்வமும் இரு சாராரிடமும் அபரிதமாகக் காணப்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
எல்லைகள் உடைந்து அன்பும் கலந்த உணர்ச்சிப் பிரவாகம் நிறைந்த கலாசார சங்கமம் அது.
இலங்கையின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த, உலகத்தின் பல் வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஒன்றிணைந்த காட்சி மனதைக் கவர்ந்தது.
முதலாம் நாள் நிகழ்வில் அனைவரும் தத்தம் பாரம்பரிய உடைகளுடன் கலந்து கொண்டனர்.
அரங்க ஆய்வுகூட அங்கத்தவர்களும் பொதுவாக இலங்கைத் தமிழர்களுக்கும் சிறப்பாக மட்டக்களப்புத் தமிழர்களுக்கும் (சேலை கட்டும் முறை, உத்தரீயம் அணியும் முறை) உரிய தமது பாரம்பரிய உடைகளுடன் கலந்து கொண்டமை பலரையும்  வெகுவாக ஈர்த்தது.
மேற்கத்தைய முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அன்றைய இரவு விருந்திலும்  அரங்க ஆய்வு கூடத்தினர் அதே உடைகளுடன் கலந்து கொண்டனர்.


14ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை நடைபெற்ற இவ்விழாவில் இலங்கைக்கலைஞர்களான  கபில பளிகவர்த்தனா, சி.மௌனகுரு, காயன் மிதிலினி, சிதிஜா ஆனந்தரக்கிதா,  ரூவன் மாலித் உபேந்திரா, ஜோன்சன் ராஜ்குமார்  ஆகியோரின் வின்வின்னியாசத்தில் (Choreography)உருவான புத்தாக்க நடன நாடகங்களும் வெளியூர்க் கலைஞர்களான ஹென்ட்ராப் ஹோர்ஸ்வெர்க் (இங்கிலாந்து), ஒலிவர் தார்பகா (அமெரிக்கா) லோரன்ஸ் சக்றிஸ் (மலேசியா), சஞ்சிப் பட்டாச்சாரியா (இந்தியா), ,கயூங் மிஞ்சி (கொரியா), அலி சாருவார் (லெபனான்) ஆகியோரின் வின்னியாசனத்தில் (Choreograpaphy) உருவான தனிநபர்,கூட்டு நடன நாடகங்களும் என மொத்தமாகப் 16 நாடகங்கள் மாலை 7.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை மேடையேறின..

தினமும் மண்டபம் நிறைந்த ரசனை மிக்க பார்வையாளர்கள். உற்சாகமூட்டும் கரவொலிகள், வாழ்த்துக்கள் என அரங்கு தினமும் அதிர்ந்து அமர்க்களப்பட்டது


.நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சுவனவாக அமைந்து பார்வையாளர்களுக்குப் பெரு விருந்தளித்தன.
இலங்கையில் நடந்தேறிய முதலாவது சர்வதேச நடன நாடக விழா இதுவாகும்.

மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடமும் தனது கூத்துக் கலையுடன் இப்பெரு விழாவில் தனது 17 கலைஞர்களுடன் கலந்து கொண்டது.
கூத்தினடியாக அரங்க ஆய்வுகூடம் உருவாக்கிய புத்தாக்க நடன நாடகமான காண்டவ தகனம் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் ஒன்றாக மேடையேறியது.

ஏனைய நிகழ்வுகள் அனைத்திலும் அவர்கள் நடன இசைக்கு இசைத்தட்டுகளைப் பாவித்தனர். அரங்க ஆய்வுகூடமோ பிரத்தியட்சமான இசைக் கருவிகளுடன் கலந்து கொண்டது.
தப்பு, பறை, தவில், மத்தளம், உடுக்கு, வயலின், ஹார்மோனியம் தாளம், சலங்கை என நாம் நமது பரம்பரியக் கருவிகளை மேடை முன் பரப்பி வைத்து நாடகத்தில் தோய்ந்து வாசித்தமையை வெகுவாக ரசித்தனர்.
 நாடகம் முடிய பலர் நேரில் வந்து அதனை  வெகுவாகப் பாராட்டினர்.
.ஒத்திகையின் போது ஒருவர் வந்து உடுக்கை அடித்துபார்த்து அதன் உறுமல் ஓசையில் மயங்கி எனக்கு ஒன்று இப்படி பெற்றுத்தர முடியுமா என்று கேட்டார்.

சமகால நடன  நாடகம் செய்யும் அவர் அந்த ஓசையை தனது உடல் அசைவுக்கு எப்படிப் பாவிக்கலாம் என்று யோசித்திருக்கக் கூடும்.
ஊரில் அது புனித சடங்குகளுக்குப் பாவிக்கப்படும் முறையை  நான் அவருக்கு விளக்கினேன்


காண்டவ தகனம் நாடகத்திற்கான அறிமுக உரை வழங்கும்  பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தனர்.
ஈழத்துத் தமிழ் மக்களின் கூத்துக்கலையையும், அதன் சமூகத்தன்மையையும் அதன் ஆடல் பாடல் அழகுகளையும், அவற்றை  எவ்வாறு ஒரு சமகாலக் கருவை விளக்க நாம் கையாளுகிறோம் என்பதனையும் விளக்க நான் அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்.

நாடகம் முடிய ஓடிவந்து எமது பிரதான பாடகியான சுகிர்தாவின் கைகளைப் பற்றிக்கொண்ட லெபனான் நடனக் கலைஞன் அலி சாருவார், உங்கள் இசை என் கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது என்று உணர்ச்சி பொங்கக் கூறினான். நன்றி என்று கூறக்கூட வாய்  வராமல் விக்கித்துப்போய் நின்றாள் சுகிர்தா.
எங்கள் கலைஞர்கள் சங்கமம் அது.

எமது அரங்க ஆய்வுகூடக் கலைஞர்களுக்கு அந்த 5 நாட்களும் பெரும் பிரயோசனமாக இருந்தது. உலகப் புகழ் வாய்ந்த பாரம்பரிய,சமகால நடனக் கலைஞர்கள் கீழ் பயிற்சி பெறுதல் என்பது எல்லோருக்கும் வாய்க்கும் ஒன்றல்ல.

குக்கிராமங்களில் ஆடப்படும் கலைகளுள் ஒன்றான கூத்துக் கலை சர்வதேச நடனக் கலைஞர்கள் பங்கு கொள்ளும் ஒரு சர்வதேசக் கலை விழாவில் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்துப் பாராட்டுக்களையும் பெறுகின்றதென்றால் அதற்கான காரணம் அக்கூத்துக்கலையுள் காணப்படும் உள்ளார்ந்த வலிமை மிகுந்த ஆடல் பாடல்கள்தான்.
 அவற்றை வெளிக்கொணர அரங்க ஆய்வு கூடம் ஒரு கருவியாகச்செயற்பட்டமை அரங்க ஆய்வு கூடம் பெற்ற பெரும் பாக்கியம்.
---0---

No comments: