மெல்பேர்ண் மாவீரர்நாள் - 2015 நிகழ்வுகள்

.
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 - 11 – 2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சரியாக மாலை 6 மணிக்கு மணியொலியுடன் தொடங்கிய நிகழ்வில்தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்  திருமதி மனோறஞ்சினி நவரட்ணம் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் கௌரிகரன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் தயாநிதி அவர்கள் அவர்கள் ஏற்றி வைத்தார்.


அதனையடுத்து ஈகச்சுடரேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. முதல் மாவீரன் லெப்.சங்கரினதும் முதற்பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியினதும் திருவுருவப்படங்களுக்கான ஈகச்சுடரை முறையே திரு.இரவீந்ர்திருமதி வாசுகி சிறீதர் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தோரும் உரித்துடையோரும் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். தொடர்ந்து மண்டபம் நிறைந்திருந்த மக்கள் கூட்டத்தினர் தமது மலர்வணக்கத்தைச் செலுத்தினர். மலர்வணக்கநிகழ்வின் போது தாயக துயிலுமில்லக் காட்சிகளை தாங்கிய காணொலிகளும், மாவீ­ரர் கவிதைகளின் பின்னுாட்டத்தில் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தாயக துயிலுமில்ல நிகழ்வுகளை நினைவில் சுமந்து மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினர். அதன் பின்னர் இடம்பெற்ற அகவணக்கத்தைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலித்தது. மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவரினதும் கைகளில் தீபங்கள் எரிந்துகொண்டிருக்க அப்பாடல் முழுவதும் உணர்வுமயமாக மக்கள் ஒன்றித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களை நெஞ்சிலிருத்தி தமிழீழ விடுதலைக்காக அனைவரும் அயராது உழைப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மாவீரர் நினைவான நடனத்தை நடனாலயா பள்ளி மாணவர்கள் வழங்கினர். அதையடுத்து மாவீரர் நினைவுரையை திரு.இளையவன்னியன் நிகழ்த்தினார். மாவீரர்களின் அர்ப்பணிப்பும் ஈகமும் நிறைந்த போராட்டமே உலக அரங்கில் எங்கள் விடுதலை வேட்கையை மிளிரச் செய்தது என்றும் தற்கால அரசியல் நிலைமை தொடர்பான விளக்கமும்ஈழத்தமிழருக்கு நிகழ்ந்தது இனவழிப்பே என்று அனைவரும் ஒருமித்த குரலில் சொல்வதே உலக அரங்கில் எமது போராட்டம் நீர்த்துப் போகாமல் இருக்க ஒருவழி என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இனவழிப்புக்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தும் செயற்றிட்டத்தை தொடர்ந்தும் தமிழ்ச்சமூகம் முன்னெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து தாயகத்தில் வாழ்வாதார உதவியின்றித் தவிக்கும் முன்னாள் போராளிகளின் வலிகளைச் சொல்லும் விவரண காணொலி திரையிடப்பட்டது. அவயங்களை இழந்து இன்று வாழ்வதற்குப் போராடிக்கொண்டிருப்போரின் துயர்தோய்ந்த விவரணத் தொகுப்பு நிறைவடைந்ததும் நடனாலய பள்ளிமாணவர்களின் மாவீரர் நினைவு நடனம் இடம்பெற்றது. இறுதி நிகழ்வாக பிரசாத் அவர்கள் வாசித்தளித்த மாவீரர் நினைவுக்கவிதை இடம்பெற்றது.
இரவு 8.20 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என உறுதியெடுத்துக்கொண்டு நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது.

கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வெளியிடப்பட்ட காந்தள் என்ற மாவீரர்நினைவுகளை தாங்கிய இதழ் இந்நிகழ்வில் விநியோகிக்கப்பட்டது. இதேநேரத்தில் சமகாலத்தில் ஓஸ்ரேலியாவின் ஏனைய மாநில நகரங்களான சிட்னி, பிறிஸ்பேன், அடிலெயிட், பேர்த் இல் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவினான மக்கள் பங்களிப்புடன், மிகவும் உணர்வுமயமாக நடைபெற்று, எழுச்சியுடன் நிறைவுபெற்றுள்ளது.

No comments: