பாரதியின் ' தராசு ' - தனித்துவமான ஓர் ஆவணம் -மாலன் ( மூத்த பத்திரிகையாளர்)

.

அன்று நிகழ்ந்த பல சம்பவங்களுக்கு இன்றும் நேரடிச் சாட்சியமாக நிற்பவை தராசு கட்டுரைகள்.
பாரதியின் படைப்புகளில் தனித்துவமானது தராசு. வாசிப்பதற்கு சுவையாகவும் யோசிப்பதற்கு பொறி கொடுப்பதுமான இந்தப் பத்திகள் எழுதப்பட்டு இன்றோடு நூறாண்டுகள் ஆகின்றன. 25.11.1915 அன்று சுதேசமித்ரனில் தராசின் முதல் பத்தி பிரசுரமானது.
நூறாண்டுகளுக்குப் பிறகும் அர்த்தமுள்ளவையாக இருப்பது மட்டுமல்ல அதன் சிறப்பு. அதன் முக்கியத்துவத்துக்கு மற்றும் சில காரணங்களும் உண்டு. அவை:
அரசியல்ரீதியாக பாரதியின் மன எழுச்சிக்குக் காரணமாக இருந்த சுதேசி இயக்கம் 1911-12-ல் ஒடுக்கப்பட்டுவிட்டது. 1910 மார்ச் 12-ம் தேதியோடு இந்தியா நிறுத்தப்பட்டுவிட்டது. மற்ற பத்திரிகைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட, தனக்கென பத்திரிகைகள் ஏதும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்.



1911 அக்டோபர் 11 அன்று அவரது இரு நூல்கள் (கனவு, ஆறில் ஒருபங்கு) அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆஷ் கொலைக்கு உடந்தையாக இருந்தாக அரசாங்கம் அவரைச் சந்தேகிக்கிறது. அரசியல் மீது விமர்சனங்கள் கொண்ட ஓர் எழுத்தாளனை மனரீதியாக முடக்க இவற்றைவிட வேறென்னெ வேண்டும்?


முதலாம் உலக யுத்தம் உச்சத்தில் இருந்த நாட்களும் அவைதான். ஊடகங்கள் அரசின் கழுகுக் கண்களால் உற்றுக் கவனிக்கப்பட்டுவந்த காலம். அந்தச் சூழ்நிலையில், ‘அரசியல் எழுதக் கூடாதுஎன்ற நிபந்தனையின்பேரில், 1915-ல் மீண்டும் சுதேசமித்ரனில் பத்தி எழுதும் வாய்ப்புக் கிடைக்கிறது. அப்போது, 1915-17 காலகட்டத்தில், எழுதப்பட்ட கட்டுரைகள்தான் தராசு.
செய்திக் கட்டுரைகளுக்கும் பத்திகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசம் உண்டு. செய்திக் கட்டுரைகளில் எழுதுபவர் ஒரு நிலை எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், பத்திகளிலோ எழுதுபவரின் நிலைப்பாடு முக்கியம். அரசியல் குறித்து எழுத முடியாத சூழலில் பாரதி என்னதான் எழுதினார் என்பதற்கான ஆவணம் இந்தத் தராசு கட்டுரைகள். அவை அன்று நிகழ்ந்த பல சம்பவங்களுக்கு இன்றும் ஒரு துணை ஆவணமாக, நேரடிச் சாட்சியமாக நிற்கின்றன என்பதால் ஆய்வாளர்களின் கவனத்துக்குரியவை.
பாரதியும் பாரதிதாசனும்
தமிழகத்தின் இருபெரும் கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும். பாரதியைச் சந்தித்த பின்பு பாரதிதாசன் எழுத்தில் மாற்றம் நேர்ந்தது என பாரதிதாசனே பல இடங்களில் சொல்கிறார்: பக்திப் பாடல்களையும் கடவுள்கள் மீது துதிகளையும் எழுதிக்கொண்டிருந்த பாரதிதாசனுக்குச் சமூகம் பற்றிய விழிப்புணர்வைக் கொடுத்தவர் பாரதிதான். “பாரதியாருடைய தொடர்பு என்னுடைய பா நெறியில் ஒரு புதிய போக்கை ஏற்படுத் தியது. இவ்வவகையில் பாரதியாருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் (கவிஞர் பேசுகிறார் தொகுப்பு -1947) என்று ஒரு உரையில் குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.
ஆனால், பாரதியை பாரதிதாசன் முதன்முறையாக எப்போது சந்தித்தார் என்பதில் பாரதிதாசன் ஆய்வாளர்களுக்கும், பாரதி ஆய்வாளர்களுக்கும் இடையே கருத்து மாறுபாடுகள் இருக்கின்றன.
பாரதிதாசன் 1908-ல் தனது உடற்பயிற்சி ஆசிரியர் வேணு நாயக்கர் திருமண நிகழ்ச்சியில் சந்தித்தாக பாரதிதாசன் கவிதைகள் நூலின் முதற்பதிப்பில் (1938) உள்ள ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிடப் படுகிறது.
பாரதியின் ஹொக்கு
மகாகவி பாரதியார் வரலாறு என்று பாரதியைப் பற்றி ஓர் திரைப்படம் தயாரிக்க எண்ணி, அதற்கான திரைக்கதையையும் பாரதிதாசனே எழுதினார். அதில்கரடிகூட வாத்தியார்வேணு திருமணத்தில், அந்த நிகழ்ச்சிக்கு பாரதியார் வந்திருப்பது தெரியாமலேயே, வீர சுதந்திரம் என்ற பாரதியாரின் பாடலை பாரதிதாசன் பாடியதாகவும், அதன் பின் பாரதிதாசனை பாரதிக்கு வேணு அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், பாரதி அவரைத் தனது வீட்டுக்கு அழைத்துவரும்படி சொன்னதாகவும் காட்சி 130 அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்த 131-வது காட்சியில், பாரதியின் வீட்டில் பாரதியும் பாரதிதாசனும் ஜப்பானிய ஹைக்கூவையும் திருக்குறளையும் ஒப்பிட்டு விவாதிப்பதாகவும் காட்சிகள் எழுதப்பட்டுள்ளன.
ஹைக்கூ (பாரதி அதை ஹொக்கு என்று எழுதுகிறார்) பற்றிய பாரதியின் கட்டுரை (ஜப்பானியக் கவிதை) 18.10.1916 அன்று சுதேசமித்ரனில் வெளியானது. அதை அடிப்படையாகக் கொண்டால், 1908-ல் நடந்த வேணு கல்யாணத்தில் பாரதி பாரதிதாசனின் முதல் சந்திப்பு நடந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நிகழ்ச்சியில் பாரதிக்கு அறிமுகம் செய்துவைக்கும் ஒருவரை 8 ஆண்டுகள் கழித்தா வேணு பாரதியின் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்? அதுவும் பாரதியே அவரைத் தனது வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லியிருக்கும்போது!
ஜப்பானிய பாஷையில் பதினேழசை கொண்டஹொக்குஎன்ற பாட்டு தனிக் காவியமாக நிற்கும்என்று பாரதி தெளிவாக எழுதியிருக்கிறார். பாரதிதாசன் தன் திரைக்கதையிலும், பின்னர் 1962-ல் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரையிலும், ஹொக்கு என்பது அயிரிய (Irish) மொழியில் வேர்ஹேரன் எழுதிய பாட்டு என்கிறார்.(“அயர்லாந்து கவிஞரான வேர்ஹேரன் என்பவர் அயிரிய மொழியில் எழுதிவந்த ஹொக்கு பாட்டைத்தான் பாரதி புகழ்ந்தார். வெர்ஹேரன் சில சொற்களை வைத்து ஒரு காப்பியத்தை முடிப்பவர். அப்படிச் சுருக்கப்பட்ட பாட்டுக்கே ஹொக்குப் பாட்டு என்று பெயர்”)
பாரதி மார்டன் ரிவ்யூ என்ற கொல்கத்தா பத்திரிகையில் என்று தெளிவாகத் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால், பாரதிதாசன் அயர்லாந்து பத்திரிகை என்கிறார்(“அவர் (வெர்ஹேரன்) எழுதும் பாட்டுகள் அயர்லாந்துக் கிழமை இதழ் ஒன்றில் வெளிவரும். அது பாரதியாருக்கு அனுப்பப்படும்..”)
வெர்ஹேரனைக் காணவில்லை
பாரதியார் தனது ஜப்பானியக் கவிதை என்ற கட்டுரையில், உபயநே நோகுச்சி, மிஸ்.ரீஸ், வாஷோ மத்ஸுவோ என்ற கவிஞர்களைக் குறிப்பிடுகிறார். ஆனால், அதில் வெர்ஹேரன் என்ற பெயரே காணப்படவில்லை. பாரதிதாசனின் குறிப்புகள் காலக் கணக்கைக் கொண்டு பார்த்தால் குழம்பிக் கிடக்கின்றன. பாரதியாரோடு 12 ஆண்டுகள் பழகியதாக பாரதிதாசன் குறிப்பிடுகிறார். ஆனால், பாரதிதாசனைப் பற்றி பாரதி எங்குமே குறிப்பிடவில்லை, இரண்டே இரண்டு இடங்களைத் தவிர.
புதுச்சேரியில் வீசிய புயலைப் பற்றி 30.11.1916 அன்று சுதேசமித்திரனில் பிரசுரமான, “ஆலங்குப்பத்து வாத்தியார் புயற்காற்றை அனுபவித்த கதைஎன்ற அவரது செய்திக் கட்டுரையில், பாரதிதாசன், சுப்புரத்ந முதலியார் என்றும் ஆலங்குப்பத்து வாத்தியார் என்றும் குறிப்பிடப்படுகிறார். மற்றொன்று 27.10.1916 வெளியான தராசுக் கட்டுரை. அதில் பாரதிதாசனுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அதில் இடம்பெற்றுள்ள கவிதை பாரதிதாசனுடையது என்பதால் அதில் குறிப்பிடப்படும் புலவர் அவர்தான் எனக் கருதலாம்.
பாரதி - பாரதிதாசனின் முதல் சந்திப்பைக் குறித்து பாரதியாரின் வார்த்தைகளிலேயே நமக்குக் கிடைத்துள்ள நம்பிக்கைக்குரிய ஆவணம் தராசுக் கட்டுரைதான்.
பாரதிதாசனின் முதற் சந்திப்பை மட்டுமல்ல, காந்தி சென்னையில் நடத்திய சொற்பொழிவு, அன்னி பெசன்ட் ஒரு மலை நகரில் சிறை வைக்கப்பட்டிருந்தது, நாவலாசிரியர் மாதவையா சுதேசமித்திரனுக்கு எழுதிய கடிதம் இவற்றுக்கெல்லாம் சாட்சியும் கூறுவதும் தராசுதான்.
பத்திரிகையாளன் வம்பளக்கலாம். ஆனால், அந்த வம்பும் வரலாறாக வேண்டும். சான்று நூறாண்டு காணும் தராசு!
(- மாலன், மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: maalan@gmail.com )



No comments: