எழுத மறந்த குறிப்புகளுடன் ஒரு பதிவு - முருகபூபதி

.
இலக்கியப்பணியுடன்  மருத்துவப்பணியும் மேற்கொள்ளும்    மனிதாபிமானி ச. முருகானந்தன்


                                        அவுஸ்திரேலியாவில்  தமிழர் ஒன்றியம்  தொடங்கிய 1990 ஆம் ஆண்டில்  பாரதி விழாவை  நடத்தினோம்.  அதுவே  இந்த கங்காரு நாட்டில்  நடந்த  முதலாவது  பாரதிவிழா.   சட்டத்தரணியும் கலை, இலக்கிய  ஆர்வலருமான  செல்வத்துரை  ரவீந்திரனின் தலைமையில்   பாரதி  விழா  மெல்பன்  பல்கலைக்கழக  உயர்தரக்கல்லூரியில்  நடந்தது.
சிட்னியிலிருந்து  மூத்த  எழுத்தாளர்  எஸ்.பொன்னுத்துரை பிரதம பேச்சாளராக   கலந்துகொண்டார்.    அவர்   மறைந்து   கடந்த  27  ஆம் திகதி  ஒரு வருட  தினமாகும்.
இவ்விழாவில்  மாணவர்களுக்கிடையே  நாவன்மைப் போட்டிகளும் நடத்தி,  தங்கப்பதக்கங்கள்  பரிசளித்தோம்.   இவ்வாறு  இங்குள்ள தமிழ்  மாணவர்கள்  தங்கப் பதக்கங்கள்  பெற்ற  முதல் நிகழ்ச்சியாகவும்   பாரதி விழா  அன்று  நடந்தேறியது.   அதன்  பின்னர் சில  வருடங்கள்  கழித்து  நண்பர் - எழுத்தாளர்,  நாடகக்கலைஞர் மாவை  நித்தியானந்தன்  மெல்பனில்  பாரதி பள்ளி  என்ற தமிழ்ப்பாடசலையையும்  உருவாக்கி , அதற்கும்  20 வயது கடந்துவிட்டது.


எமது  தமிழர்  ஒன்றியத்தின்  பாரதி விழாவை  முன்னிட்டு ,  மகாகவி பாரதியின்   புதுச்சேரி  வாழ்க்கையை  பின்புலமாகக்கொண்டு  ஒரு நாடகம்   எழுதிவிட்டு  பாரதியின் தோற்றத்துக்குப் பொருத்தமானவரைத் தேடிக்கொண்டிருந்தேன்.   தீட்சண்யமான கண்கள்,   நீண்ட  நாசி,  கம்பீரம்  காண்பிக்கும்  மீசையுடன்  ஒருவர் தேவைப்பட்டார்.
அவ்வாறு   தேடிக்கொண்டிருக்கையில்  நண்பர்  கிருஷ்ணமூர்த்தி எனக்கு   கிடைத்தார்.   அவர்  அப்பொழுது  தமது  குடும்பத்தினரை தமிழ்நாட்டில்   விட்டு விட்டு,  இங்கு  எம்மைப்போன்று  நிரந்தர வதிவிட   அனுமதிக்காக  காத்திருந்தவர்.

பாரதி,   செல்லம்மா,  .வே.சு . அய்யர்,  சுப்பிரமணிய  சிவா ,  பாரதி பூணூல்  அணிவித்து  உபநயனம்  செய்வித்த  கனகலிங்கம்,   குழந்தை தங்கம்மா,   செட்டியார்,   முதலான  பாத்திரங்களுக்கும் பொருத்தமானவர்கள்  கிடைத்தார்கள்.  பாரதிக்கு  நடித்த  நண்பர் கிருஷ்ணமூர்த்தி  எனது  இனியநண்பராகவும்  தேர்ந்த  வாசகராகவும் மாறினார்.   ஆரம்பத்தில்  பாலகுமாரனின்  கதைகளை   ஆர்வமுடன் படித்தவர்,    தற்பொழுது  ஜெயமோகன்,  எஸ்.ராமகிருஷ்ணன் முதலான   முக்கிய  படைப்பாளிகளின்  நூல்களை  சேகரித்துப் படித்து  அவர்களின்   தீவிர  வாசகராகிவிட்டார்.   அவருடனான  நீடித்த  நட்புறவு    இலக்கிய நயம்  மிக்கது.

பாரதிபள்ளியும்   மெல்பன்  கலை  வட்டமும்  இணைந்து  தயாரித்து அடுத்தடுத்து   மூன்று  பாகங்களில்  வெளியிட்ட  பாப்பா  பாரதி வீடியோ  இறுவட்டின்  ஒளிப்பதிவிலும்  கிருஷ்ணமூர்த்தி பெரும்பங்காற்றினார்.   சிறந்த  வீடியோ   ஒளிப்பதிவாளர்.   மயூர் வீடியோ விஷன்   என்ற  பெயரில்  மெல்பனில்  நடக்கும்  கலை, இலக்கியம்  மற்றும்  குடும்ப  நிகழ்வுகளையும்  சிறப்பாக ஒளிப்பதிவுசெய்யும்  கலைஞர்.
கடந்த மாதம்  ஒருநாள்  காலையில்  என்னுடன்  தொடர்புகொண்டு இலங்கையிலிருந்து  எழுத்தாளர்  முருகானந்தன் அவுஸ்திரேலியாவுக்கு   வருகிறார்  என்ற   செய்தியைத்தந்தார்.

எனக்கு  அந்தச்செய்தி  மகிழ்ச்சியைத்தந்தது.   இவ்வாறு  வரும்  கலை,  இலக்கியவாதிகளை   அழைத்து  கலை,   இலக்கிய  சந்திப்புகள் நடத்தி  - அறிந்ததை  பகிர்ந்து  அறியாததை   அறிந்துகொள்ளும் இயல்பை   ஒரு   மரபாகவே  பின்பற்றிவருகின்றோம்.
ஈழத்து   எழுத்தாளர்  முருகானந்தன்  என்றவுடன்  எமக்கெல்லாம் வரும்  பெயர் மயக்கம்  பற்றி  முன்னர்  அமரர்  சிற்பி சிவசரணவபவன்   பற்றிய  குறிப்பிலும்  பதிவுசெய்துள்ளேன்.அவுஸ்திரேலியா  வருகைதரவிருக்கும்  மருத்துவர்  முருகானந்தனின்   தந்தையின்  பெயர்   சண்முகம்.   அதனால் .முருகானந்தன்   என  இலக்கியவட்டாரத்தில்  நன்கறியப்பட்டவர். மலையகத்திலும் - வன்னேரிக்குளத்திலும் - அக்கராயனிலும்    மருத்துவப் பணியாற்றியிருப்பவர்.  தற்பொழுது  கொழும்பில்  தனியாக  ஒரு கிளினிக்கை  நடத்தி வருவதுடன்,  நண்பர்  மல்லிகை  ஜீவாவின் உடல்நலனையும்   கவனிக்கும்  அவருடைய  குடும்ப  மருத்தவர்.  அத்துடன்  நின்றுவிடாமல்  மல்லிகையின்  ஐம்பதாவது ஆண்டு மலரை  விரைவில்  வெளியிடுவதற்கு  இலக்கிய  நண்பர்களுடன்   இணைந்திருப்பவர்.
கொழும்பில்  வெளியாகும்  தினக்குரல்  ஞாயிறு  இதழில் தொடர்ச்சியாக   நோய்கள்,   மருத்துவ சிகிச்சைகள்  பற்றிய குறிப்புகளை   எழுதிவருபவர்.   எனினும்   இவரும்  படைப்பாளிகள் பலரைப்போன்று  இனிமையான   மனிதர்தான்!!!.  இவரும்  நீரிழிவுக்கு மருந்து  மாத்திரைகள்  எடுக்கிறார்.
இலங்கையிலும்   தமிழ்  நாட்டிலும்  சில  எழுத்தாளர்கள்  தமது இலக்கியப்பணிகளுடன்  தொழில்  ரீதியில்  மருத்துவர்கள்தான்

இலங்கையில்   டொக்டர்  நந்தி  சிவஞானசுந்தரம், எம்.கே.முருகானந்தன்,  ஞானம்  ஆசிரியர்  தி. ஞானசேகரன், புலோலியூர்  சதாசிவம்,
தமிழ்நாட்டில்   சார்வாகன்  ஸ்ரீநிவாசன்  முதலானோர்  இலக்கிய உலகில்  நன்கறியப்பட்ட  மருத்துவர்கள்.


மருத்துவர் . முருகானந்தன் , வடமராட்சியில்  கரணவாயில்  பிறந்து  அங்கு  தமது  ஆரம்பக் கல்வியை  அமெரிக்க  மிஷன்  பாடசாலையில்  தொடங்கி,  பின்னர்  கரவெட்டி  விக்னேஸ்வரா கல்லூரியில்  கற்று,  பின்னாளில்  மருத்துவக்கல்லூரிக்கு பிரவேசிக்கும்  வரையில்   யாழ். இந்துக்கல்லூரியிலும்   பயின்றவர்.
இந்தக்கல்வி  நிலையங்கள்  யாவும்  ஈழத்தில்  பல எழுத்தாளர்களையும்  கலைஞர்களையும்  உருவாக்கியிருக்கிறது. அந்த வரிசையில்   ஒருவர் . முருகானந்தன்.
தமது   முதலாவது  சிறுகதையை   தினகரன்  வாரமஞ்சரியில் எழுதியிருப்பவர்.    தொடர்ந்து  ஈழத்து  முன்னணி   பத்திரிகைகளிலும் இலக்கிய    இதழ்களிலும்  எழுதியதுடன்,  தமிழக  இதழ்களான  தீபம், கணையாழி   முதலானவற்றிலும்  எழுதியவர்.   நா. பார்த்தசாரதியின் தீபம்   இதழில்  சிறந்த  சிறுகதை   எழுதியதற்காக   சென்னை  இலக்கிய   சிந்தனையின்  விருதும்  பெற்றவர்.

மீன்குஞ்சுகள்,  தரைமீன்கள்,  இது  எங்கள்  தேசம்,  இனி வானம் வசப்படும்,  ஒரு  மணமகனைத் தேடி, நாம் பிறந்த மண் , கோடை மழை  என்பன இவருடைய   சிறுகதைத்  தொகுதிகள்
நாளை நமதே,  எயிட்ஸ்  இல்லாத  உலகம்  முதலான   கட்டுரைத்  தொகுதிகளும், சில  குறுநாவல்களும்   வரவாக்கியிருப்பவர்.
2003  இல்  வெளியான  தரைமீன்கள்  சிறுகதைத்  தொகுதிக்கு 2004 சிறுகதைக்கான  சாகித்திய பரிசு  கிடைத்தது.
'எயிட்ஸ்  இல்லாத  உலகம்'  என்ற   இவரது  மருத்துவ  நூல் வடமாகாண  விருது  பெற்றது.பல  இலக்கியப் போட்டிகளிலும்  பங்கேற்று  பரிசில்களை வென்றுள்ளார்.
வன்னியில்  அக்கராயன்,   வன்னேரிக்குளம்  ஆகிய  பிரதேசங்களில் மருத்துவராக  பணியாற்றியபொழுது   அவ்வூர்மக்கள்  இவரை வன்னேரி  டொக்டர்  என்றே   அழைத்தனர்.   போர்க்காலத்தில்  அங்கு மருத்துவசேவையும்  மேற்கொண்டு  தனது   தொழில்   ரீதியான அனுபவங்களையும்   படைப்பிலக்கியத்தில்  பதிவுசெய்தவர்.
இவருடைய   இலக்கியப்பணிகளையும்  மனிதாபிமானம்  மிக்க மருத்துவ சேவைகளையும்   விதந்து  பாராட்டி  எழுத்தாளர்கள் தாமரைச்செல்வி,   எம்.கே. முருகானந்தன்,   புன்னியாமீன்,   வெலிகம ரிம்ஸா  முஹம்மத்  ஆகியோரும்  எழுதியிருக்கிறார்கள்.
மருத்துவர்  முருகானந்தனின்  மனைவி  சந்திரகாந்தா முருகானந்தனும்    இலக்கியம் படைப்பவர்.   அத்துடன்  ஆசிரியராக பணியாற்றி   ஓய்வுபெற்றவர்.   இந்த  இலக்கியத்  தம்பதியரை அவர்களின்  உறவினர்   வீடியோ  கிருஷ்ணமூர்த்தியின்  இல்லத்தில் சந்தித்து   நீண்ட நேரம்  உரையாடினேன்.

ஈழத்து  இலக்கிய   உலகின்  தற்போதைய   நிலை குறித்தும் போருக்குப்பின்னரான    இலக்கிய  முயற்சிகள்   பற்றியும் கலந்துரையாடினோம்.   வாசிக்கும்  பழக்கம்  குறைந்துவரும்  அபாயம் குறித்து   அவரும்  கவலைகொண்டிருந்தார்.   அத்துடன்  அங்கிருக்கும் மூத்த  தலைமுறை  படைப்பாளிகள்  பலருக்கு  தற்கால  கணினி யுகம்   தொடர்ந்தும்  அந்நியமாகி  இருப்பதனால்,  தம்மைப்பற்றி வெளிநாடுகளில்   இயங்கும்  இலக்கிய  இணைய  இதழ்களில்  வரும் செய்திகளும்   தெரியாதிருக்கிறது  என்றார்.
முன்னர்    இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசிரியப்பயிற்சிக் கலாசாலைகளிலிருந்து   ஏராளமான  படைப்பாளிகள்,  கலைஞர்கள் உருவானார்கள்.  ஆனால்,  இன்று  பெரும்பாலான  பல்கலைக்கழக மாணவர்கள்   முகநூல்  பக்கம்  சென்றுவிட்டதனால்  அவர்களிடம் கலை, இலக்கியப்பிரக்ஞை   குறைந்துவிட்டது   பற்றியும்  உரையாடினோம்.
இலக்கிய  நண்பர்  முருகானந்தனிடம்  சில  வேண்டுகோள்களையும் விடுத்தேன்.

இலங்கையில்   தமிழ்  கற்பிக்கும்  ஆசிரியர்கள்   கையாளும் தமிழ்ப்பாட  நூல்களில்   பல  ஈழத்து  தமிழக இலக்கியப்படைப்பாளிகளின்    ஆக்கங்கள்  இடம்பெறுகின்றன.   ஆனால்,  அந்தப்பாடங்களை   பரீட்சைக்குத்தயாரிக்கும்  தகவல்களாக மாத்திரம்  ஆசிரியர்களும்  மாணவர்களும்  பயன்படுத்துகின்றனர். அதற்கு  அப்பால்  இரண்டு  தரப்பாருக்கும்  அந்த  படைப்புகள் குறித்தோ  படைப்பாளிகள்  பற்றியோ   ஆழ்ந்த  அறிவை   ஏற்படுத்த முயற்சிக்கும்  தேடுதல்  இல்லை.

கொழும்பு   தமிழ்ச்சங்கத்தில்    நடக்கும்   நூல்வெளியீடுகள்   மற்றும்  இலக்கிய  நிகழ்ச்சிகளுக்கு  எத்தனை தமிழ்ப்பாட  ஆசிரியர்கள், உயர்தரவகுப்பில்   தமிழையும்  ஒரு   பாடமாகக்  கற்கும்   மாணவர்கள் வருகிறார்கள்....?  எத்தனை  மாணவர்களுக்கு  அந்த   இலக்கிய மேடைகளில்   உரையாற்றுவதற்கு   சந்தர்ப்பம்  தரப்படுகிறது...?
உயர்தரவகுப்பில்   தமிழ்  கற்கும்   மாணவர்களிடம்  இலக்கிய நூல்களை  கொடுத்து   அதனை   வீட்டு வேலையாகவே  (Home Work) வாசிக்கச்செய்து -- அவர்களின்  வாசிப்பு  அனுபவத்தை   மூத்த தலைமுறையினர்   கேட்டு  ரசித்து,  அவர்களின்  உரைகளையே இதழ்களில்   வெளியிட்டு   அவர்களுக்கு  ஊக்கம்  தரும்  புதிய மரபை   பின்பற்றுவதற்கும்  தமிழும்  இலக்கியமும்  கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு   மாதம்  ஒருதடவையாதல்  இலக்கிய  பயிற்சி வகுப்புகளை   நடத்துவதற்கும்  அங்குள்ள  தமிழ்  அமைப்புகள் முன்வரவேண்டும்.

எமது  கலந்துரையாடலில்  பேசப்பட்ட  விடயங்களை  அடிப்படையாக   வைத்து,  முருகானந்தன்  கடந்த  14  ஆம்  திகதி மெல்பனில்   நடந்த  தமிழ் எழுத்தாளர் விழாவில்    ஈழத்து  இலக்கிய வளர்ச்சியில்   புதிய தலைமுறையின்   பங்களிப்பு   என்ற  தலைப்பில் உரையாற்றினார்.
அவருக்கு   ஒதுக்கப்பட்ட  குறுகிய நேர  அவகாசத்தில் முடிந்தவரையில்   கருத்துக்களை    முன்வைத்தார்.

அவுஸ்திரேலியா   சிட்னிக்கு  தமது  மகள் குடும்பத்தினரைப்பார்க்க வந்திருந்த வேளையில்  எதிர்பாராதவிதமாக    எழுத்தாளர்   விழாவிலும் சிட்னி  ATBC  வானொலியில்  கவிஞர் செ. பாஸ்கரன்  ஒழுங்குசெய்திருந்த     நேர்காணல்  நிகழ்ச்சியிலும்  பங்கேற்பதற்கு    கிட்டிய இனிய  தருணங்களை   நினைவில்  சுமந்துகொண்டு செல்வதாக,  இலங்கைக்கு  விமானம்  ஏறுமுன்னர்  தெரிவித்துவிட்டு விடைபெற்றார்   இந்த  இலக்கிய   மருத்துவர்.
---0---No comments: