கவி விதை - 5 - வலியும் எலியும் - -- விழி மைந்தன் --

.

பலபல யுகங்களுக்கு  முன்பு பகலவன் 'சைட்' அடித்த  பூமிப் பெண், வித்தியாசமானதொரு பச்சைப் பட்டாடையை விரும்பி அணிந்திருந்தாள்.

பன்னங்கள் அந்தப் பட்டாடையில்  பிரதான 'டிசைன்' ஆயிருந்தன. பனையளவு உயர்ந்திருந்த பன்னங்கள் பரந்த இலைகளை விரித்து நின்றன. பன்னக்  காடுகளுக்குள் இருந்து பயங்கரமான சத்தங்கள் எழுந்தன. சிற்சில சமயங்களில், பூமி அதிரும்படி, புதர்கள் சரசரக்கும் படி, சில்லறை விலங்குகள் சிதறி ஓடும்படி பேருருவங்கள்  சில நடந்து சென்றன.

ஆம்! எங்கெங்கும் டைனோசர் ஆட்சி! 

 நிலமெங்கும் நடந்து திரிந்தன டைனோசர்கள். நெடு வான் எங்கும் பறந்து திரிந்தன அவை. நீள்கடல் எங்கும் நிறைந்து ததும்பின அவை. இராட்சத உருவம் கொண்டு இரை  தேடிச் சமர் செய்தன அவை.

இவற்றிற்கு நடுவே, அவை அறிந்தும் அறியாமல், தெரிந்தும் தெரியாமல், அவை விட்டுச் சென்ற மிச்சங்களை உண்டு, அவற்றின் கவனத்திற்குக் கீழே, மிக மிகக் கீழே, அவற்றின் காலடியில் நெளியும் புழுக்களென, முலையூட்டிப் பிராணிகள் சிலவும் வாழ்ந்துகொண்டிருந்தன.

சிவந்த காலை ஒன்று  விடிந்த போது....

பூமி அதிர நடந்து  வந்தது, கொலைவெறி பிடித்த கொடும்பல்லி  அரசன் -  டைரன்னோசொரஸ்  றெக்ஸ்!

கண்டதும் புதரில் ஓடிப் பதுங்கியது, சின்னஞ்சிறு முலையூட்டிப்  பிராணி -  இக்கால எலியின் பாட்டன்!

"ஆ ஹா ஹா ஹா!!" என்று அதிரச் சிரித்தது றெக்ஸ்.

"ஏ  எலியே!! அஞ்சாதே!!! உன்னைப் பிடித்துண்பதைப் பற்றி நான் சிந்திக்கக் கூட இல்லை. அற்பத்திலும் அற்பனான நீ என் அரை அரைக் கால் வயிறு கூட நிரம்ப மாட்டாய். வேட்டையாட நான் விழைவது பிரம்மாண்டமான பிரகியோசார்களை! டைனோசர்களான எங்களின்  மகா யுத்தத்தில் அம்பறாத்  தூணி காவக் கூட அருகதை இல்லாதவன் நீ! எங்கள்  கால் நகம் அளவு கூடக்  கனதியில்லாத நீங்களெல்லாம் எதற்காக உலகில் இருக்கிறீர்களோ?"

இலக்கு தானல்ல என்பது இதயப் படபடப்பை இலகுவாக்கினாலும், எலிக்கும் கொஞ்சம் ரோஷம் கிளர்ந்தது.

"வலிமை மிகுந்த மகாப் பிராணியே!  காலத்தின் போக்கை யாரும் கணக்கிட முடியாது. எலியும் ஒருநாள் ஆளலாம் இவ்வுலகை" என்று முணுமுணுத்து விட்டு, தன் பதில்கேட்டு ரெக்சின் கண்கள் பயங்கரமாகச் சிவப்பதைக் கண்டதும், பக்கத்து வளைக்குள் பாய்ந்து பதுங்கிக் கொண்டது எலியின் பாட்டன்!

இது நடந்து சில தினங்கள் சென்ற பின் ஒரு நாள் இரவு.....

நீள  வானம் கிழித்தொரு விண்கல், மா நெருப்புப் பந்தம் போல விழுந்தது! கோளப்  பூமி குலுங்கி அதிர்ந்தது! கொடுந்தீ எங்கும் எரிந்திடலானது! ஆழ நீலக் கடலில் ஓர் பேரலை  ஆயிரந்தலை தூக்கி எழுந்தது! பாழடைந்து உலகம் அழிந்திடப்,  பயங்கரம் எங்கும் நேர்ந்திடலானது!!

வானுற  ஓங்கி வளர்ந்திருந்த பன்னங்கள் நிறைந்திருந்த காடுகள், நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் தீப்பற்றி எரிந்தன. பரந்து எழுந்த புகை மண்டலங்கள் பகலவனைப் பல காலம் மறைத்து நின்றன. தூண்டிய கவனத் துரகத  நெடுந்தேர்ச் சூரிய தேவன் கைகள்   தீண்டுதல் இன்றி, எஞ்சிய மரங்கள் செத்தொழிந்தன சில நாளில்! பேரிலை  விருட்சங்கள் இன்மையால், பென்னம் பெரிய தாவர உண்ணி டைனோசர்கள் பட்டினி கிடைக்கலாயின. அங்காங்கு ஒட்டிகொண்டிருந்த புல்லை  அரித்துண்டது அவற்றின் அகண்ட வயிறுகளுக்குப்  போதவில்லை. சில காலம் சென்றபின் எங்கு பார்த்தாலும் செத்துக்கிடந்தன பட்டினியால். தாவர உண்ணி  டைனோசர்கள் அழிந்த பின் அவற்றை உண்டு வாழ்ந்த மாமிச உண்ணி  டைனோசர்களும் மண் கௌவலாயின.எலியும் அணிலும் அவற்றின் பசிக்கு எந்த மூலைக்குப்  போதும்?  சில காலம் சென்றதும் செத்தொழிந்தன ஜெகத்தை அதிரவைத்த கொலைவெறி டைனோசர்கள்.

ஆனாலும், பாழடைந்த பூமியின் பஞ்சடைந்த மூலைகளில்  உயிர்வாழ்க்கை கொஞ்சம் ஒட்டிக் கொண்டு தான் இருந்தது.

விண்கல் விழுந்து பூமியை நெருப்பும் புகையும் மூடிய போது, முலையூட்டிகளில் பெரும்பாலானைவையும் செத்தொழிந்திடவே செய்தன. ஆனால், எஞ்சியவற்றிற்கு வாழ்க்கை எட்டாக் கனியாயில்லை. ஆங்காங்கு தீயிலிருந்து தப்பிய சின்னஞ்சிறு புற்கள் போதுமாயிருந்தன, தாவர உண்ணிகளுக்கு. அத்  தாவர  உண்ணிகளும், இறந்த டைனோசர்களின் எச்சங்களும் போதுமாயிருந்தன விலங்கு  உண்ணிகளுக்கு. அவற்றின் சிறிய உடலைமைப்புகள் பட்டினியின்  கோரப் பற்களில் இருந்து அவற்றைக் காப்பாற்றின. எல்லா டைனோசர்களும் இறந்தழிந்த போது, சின்னஞ்சிறிய பிராணிகள் சில தப்பிப் பிழைத்தன.

உலகம் ஆறிக் குளிர்ந்த போது, நெருப்பும் புகையும் அடங்கிய போது, பூமாதேவி புத்தம் புதிய பசும்பட்டாடையைப் போர்த்துக் கொண்ட போது, டைனோசர்களின் அடக்கு முறை இன்றிச் சிறிய பிராணிகள் பல்கிப் பெருகின.

அவற்றின் வழி வழி வந்த வம்சத்திலிருந்து எழுந்தான் மனிதன் ஒரு நாள்!

எவர் கைக்கும் அடங்காத இமயம் போன்ற ஆபத்து ஒன்று வந்த போது, வலிமையும் பெருமையும் மாட்டி வைத்தன. சிறுமையும் எளிமையும்  கவசங்களாகிக்  காப்பாற்றின.

பெரும் பாரம் தாங்கினால் பிளந்து போகும் கற்றூண்  வலியதா?

கொடும்புயலில் வளைந்து புயல் சென்றதும் எழுந்து நிற்கும் நாணல் வலியதா?

No comments: