படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

.
தமிழ்  ஆவண  மாநாடு - ஆய்வுக்கட்டுரைக்கோவை
தமிழர்தம்  வரலாற்றை   எளிதாக  பதிவுசெய்வதற்கு ஆலோசனைகள்  கூறும்  அரியதொரு  மலர்

அண்மைக்காலங்களில்  நான்  படித்த  பல  நூல்கள் நூற்றுக்கணக்கான  பக்கங்கள்  கொண்டிருந்தன.   இந்திய  சாகித்திய அக்கடமியின்  விருது  பெற்ற  தமிழக  படைப்பாளி   பூமணியின் அஞ்ஞாடி  நாவல்  1066  பக்கங்கள்   கொண்டது.   இதனை வெளியிட்ட "க்ரியா"  அஞ்ஞாடிதான்  உண்மையில்  தமிழின்  முதல்  வரலாற்று நாவல்  என்று  அதனைப் பதிப்பித்தமைக்கு  பெருமிதம்கொள்கிறது.
அவ்வாறு  பெருமிதம் கொண்ட  நூலகம்  நிறுவனம்  வெளியிட்டுள்ள ஆவணப்படுத்தல்  தொடர்பான  மலர்  பற்றியதே  இந்தப்பதிவு.
சமூகத்தின்   வரலாறுகள்  ஆவணப்படுத்தப்படல்  வேண்டும்.  அதனை விரிவான  நாவல்  தளத்திலிருந்தும்  மேற்கொள்ள  முடியும். அத்துடன்    பலருடையதும்  கூட்டு  முயற்சியால் ஆய்வுகளாகத்தொகுத்தும்    வெளியிட முடியும்.
 எனது  நூலகத்தில்  கடந்த  ஒரு வருட  காலமாக "  என்னைப்பார் நேரம்  கிடைக்கும்பொழுதிலெல்லாம்  என்னை  எடுத்துப்படி"  - எனச் சொல்லிக்கொண்டிருந்த  2013  ஆம்  ஆண்டு  கொழும்பில்  நடந்த தமிழ்  ஆவண  மாநட்டில்  சமர்ப்பிக்கப்பட்ட  ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு  640  பக்கங்கள்  கொண்டது.
இம்மலர்  ஒரு  வருடத்தின்  பின்னர்  கடந்த  2014  ஆம்  ஆண்டுதான் வெளியானது.   நூலகம்  நிறுவனம்  வெளியிட்டுள்ள  இம்மலர் இலங்கையில்   இரண்டாயிரம்  ரூபாவுக்கு  கிடைக்கும்.இம்மலரின்   ஆலோசனைக்குழுவில்,  பேராசிரியர்கள்  .மகேஸ்வரன்,   சி. பத்மநாதன்,   மௌனகுரு,   சபா. ஜெயராசா,  செ. யோகராசா,    சி. தில்லைநாதன்,   சோ. சந்திரசேகரம்,  முனைவர்  செல்வி  திருச்சந்திரன்  ஆகிய  ஆளுமைகள்  இடம்பெற்றுள்ளனர்.
மலர்க்குழுவில்  மயூரன்  சிவநாதன்,  பார்கவி  காந்திநாதன், விஷாலினி   ஜயராஜன்,  ஜனனி   அருந்தவரட்ணம்  ஆகியோர் அங்கம்வகித்து  அரியதொரு  ஆவணத்தொகுப்பை  கனதியாகவும் தரமாகவும்   வெளியிட்டுள்ளனர்.
கடந்த   ஆண்டு  மேற்கு  அவுஸ்திரேலியா  மாநிலத்திற்கு சென்றிருந்தபொழுது   தமிழ்  நூலகம்  திட்டத்தில்  அங்கம்வகிக்கும் இலக்கிய   ஆர்வலர்  திரு. கோபி. கோபிநாத்திடமிருந்து இம்மலரைப்பெற்றுக்கொண்டேன்.
ஆவணப்படுத்தல்   திறக்கப்படாத  பல  கதவுகளை  திறப்பதெப்படி எனக்கூறும்வகையில்   எழுத்தாவணங்களை  பற்றி  மாத்திரம்  கூறாது,   புதிய  பல  வடிவங்களில்  ஆவணப்படுத்தும் ஆலோசனைகள்  மற்றும்  ஆலோசனை   தருபவர்களின் முன்னெடுப்புகள்   குறித்தும்  ஆய்வாளர்கள்  தமது அறிவைப்பகிர்ந்திருப்பதால்   இந்நூலின்  சுவையும்  செறிவும் கூடியுள்ளது   என்று  மலர்க்குழுவினர்  தெரிவித்துள்ளனர்.
நூலகம்   நிறுவனத்தின்  இயக்குநரான  திரு. சி. சேரன்,  "  தசாப்தம் ஒன்றை   நோக்கிய  பயணத்தில்  நூலகம்  நிறுவனம்  கடந்துவந்த மைல்கற்கள்  பல.   அவற்றுள்  ' தமிழ்  ஆவண  மாநாடு  2013 ' அனைத்திற்கும்   சிகரம்வைத்தாற்போன்று  அமைந்தது" -  என்று தெரிவிக்கின்றார்.
ஆம்,   சிகரம்  வைத்த  செயல் வடிவம்தான்  இம்மலர்.   இதன் பின்னாலிருக்கும்   தேடலும்  கடின  உழைப்பும்  காலத்தால் போற்றப்படவேண்டியவை.


ஆவணப்படுத்தலும்   தொழில்  நுட்பமும்,   வரலாறு  தொல்லியல், மரபுரிமை,    நாட்டாரியல்,   கலை,  சமூகம்,  தமிழ்  மொழியும் இலக்கியமும்நூலகவியல்,   பண்பாடு  முதலான  அரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட   ஆய்வுக்கட்டுரைகளின்  தொகுப்பாக  இம்மலர் வெளியாகியுள்ளது.
ஆவணம்  என்ற   சொல்   கி.பி. 12  ஆம்   நூற்றாண்டில்  குலோத்துங்க சோழன்   காலத்திலிருந்தே  தமிழ்நாட்டில்  வழங்கிவருகிறது  என்றும் -  சேக்கிழார்  தாம்  இயற்றிய  பெரிய  புராணத்தில்  ஆவணம்  என்ற    சொல்லை    குறிப்பிட்டிருப்பதாக  இம்மலரின் முதல்   ஆய்வுக்கட்டுரை  பதிவுசெய்கிறது.   நவீன  காலத்தில் ஆவணப்படுத்தல்   தகவல்    அறிவியல் ( Information Science )    என்ற  பெயர்  மாற்றத்தையும்  கொண்டிருக்கிறது எனத்தெரிவிக்கின்றார்   முதல்  கட்டுரையை   எழுதியிருக்கும்  திரு. . வேலுசாமி.
ஆவணப்படுத்தல்  என்பது  மொழியை   மாத்திரமன்று,  ஓவியம், சிற்பம்,    இசை,  நடனம்,  உட்பட  நுண்கலைகள்,   இலக்கியம், மருத்துவம்,    கட்டிடக்கலை,  கல்வெட்டுக்கள்,  சமூகம்  என்று  அதன் தளம்   விசாலமானது.
இன்றைய   நவீன  தொழில்  நுட்பத்தில்  ஆவணப்படுத்தல்  என்பது இலகுவானது.    ஒரு  காலத்தில்  பழந்தமிழ்  இலக்கியங்களை  தேடி கால்நடையாக   அலைந்த  பெரியவர்  .வே.சாமிநாத  அய்யர் காலத்தில்   இன்றைய  வசதிகள்  இருக்கவில்லை.
பனையோலை  ஏடுகளிலிருந்தே  நாம்  தொல்காப்பியம்கம்பராமாயணம்,    சிலப்பதிகாரம்,   திருக்குறள்,  உட்பட  பல தொன்மையான    பேரிலக்கியங்களை   பெற்றுக்கொண்டோம்.
இலங்கையில்   முதலாவது  தமிழ்  மருத்துவ  முன்னோடி  மருத்துவ கலாநிதி  சாமுவேல்   பிஸ்க் கிறீன்  1852  முதல் 1884  இல் மறையும்வரையில்     தமிழில்  எழுதிய  மருத்துவ   நூல்களுக்கும் ஏட்டுச்சுவடிகள்தான்   பக்கத்துணையாக  விளங்கியிருக்கின்றன  என்ற செய்தியை   மூத்த  கவிஞர்  அம்பியின்  நூலிலிருந்து தெரிந்துகொண்டோம்
அவ்வாறு   தமிழ்  ஆவண  மாநாட்டு  மலரிலிருந்தும்  பல  அரிய தகவல்களை   நாம்  அறிந்துகொள்கின்றோம்.
இலங்கையில்   அரச  தேசிய  சுவடிகள்  திணைக்களம்  கொழும்பில் நீண்டகாலமாக  இயங்குகிறது.   அங்கே  ஏதும்  தேடிச்சென்றால் களஞ்சியத்திற்குள்   பிரவேசிக்கும்பொழுது  நிச்சயம்  மாஸ்க் அணிந்துதான்    செல்லவேண்டும்.   இல்லையேல்  மீண்டும்  வந்து இருமலுக்கும்    சுவாசக்கோளறுகளுக்கும்  மருத்துவரிடம்  செல்ல நேரிடும்.
இலங்கை   தேசிய  நூதன  சாலையில்  கண்டி  மன்னர்களின்  வாள் மற்றும்    அரண்மனைச் சாமான்கள்  திருட்டுப்போன  செய்திகள் அறிவோம்.
இந்நிலையில்   தமிழ்ச்சுவடிகளை  - அச்சுப்பிரதிகளை    எவ்வாறு பாதுகாப்பாக  வைத்திருக்க  முடியும்  என்பது  பற்றி  எண்ணிமமாக்கல்   ( DIGITIZING   ) தொடர்பாகவும்   இம்மலரில் விளக்கம்   தரப்படுகிறது.   புராதன  ஏட்டுச்சுவடிகளையும்  காகிதங்களில்    அச்சிடப்பட்டவற்றையும்  எவ்வாறு  பாதுகாக்கலாம் என்பதற்கும்   வழிகாட்டியாக  இம்மலரின்  கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
கௌரி  புண்ணியமூர்த்தியின் "  மட்டக்களப்புத்  தேசத்தில் கண்டறியப்பட்ட  கல்வெட்டுக்களும்  கல்வெட்டாய்வின்  இன்றைய போக்கும் " என்ற  கட்டுரையிலும்  " பழுகாமத்து  சாசனங்களும் வரலாறும்  " என்ற  எஸ்.கே. சிவகணேசனின்  கட்டுரையிலும் கிழக்கிலங்கையின்    தொன்மையான  தகவல்களுக்கு சான்றாதாரங்களாக  பல  கல்வெட்டுப்படங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தமிழில்   அச்சேறிய  முதல்  நூல்களும்  அவற்றைக்கண்டுபிடித்த தனிநாயகம்  அடிகளாரின்  பெரு  முயற்சியும்  பற்றி  அருட்திரு தமிழ்நேசன்   அடிகளாரும்  ஒரு  கட்டுரை  எழுதியுள்ளார்.
48 கட்டுரைகள்    இடம்பெற்றுள்ள  இம்மலரில்  ஒவ்வொரு  ஆய்வுமே  தனித்தனி   வாசிப்பு  அனுபவத்தை   தரவல்லவை. பல்கலைக்கழகங்களில்  கலைத்துறை  தமிழ்ப்பீட  மாணவர் ஒவ்வொருவரும்    படித்துப்பயன்பெறவேண்டிய  இம்மலர் -   இதன் பதிப்பாளர்கள்    ஏற்கனவே   குறிப்பிட்டிருப்பதுபோல்  நூலகம் நிறுவனத்தின்   மற்றும்  ஒரு  மைல்கல்தான்.
letchumananm@gmail.com


1 comment:

Unknown said...

நூலக நிறுவனம் வெளியிட்டுள்ள இம்மலரை அவர்களது இணைய நூலகமான www.noolaham.org இல் பார்த்துப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம். அவர்கள் ஆவணப்படுத்திய 15,000 ஆவது ஆவணமாக இது காணப்படுகிறது. அச்சு வடிவத்தில் வாங்க விரும்புவோர் இலங்கையில் கொழும்பு தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள நூலக நிறுவன அலுவலகத்தில் இரண்டாயிரம் ரூபாவுக்குப் பெற முடியும்.