பேச்சாட்டன்.. (சிறுகதை) வித்யாசாகர்

.

“செல்லம்.. நதினி.. அப்பா வந்துட்டேன்..”
“ஹே.. ஜாலி.. அப்பா வந்தாச்சு அப்பா வந்தாச்சு..”
உள்ளறையிலிருந்து ஓடிவந்து வேலையிலிருந்துவந்த செழியனை வாசலிலேயே கட்டிக்கொண்டாள் முதல்வகுப்பு படிக்கும் மகள் நதினி. செழியன் தனது மடிக்கணினியை ஓரம்போட்டுவிட்டு மகளைத் தூக்கிவைத்துக் கொஞ்சினார்.
அதற்குள் மனைவி கலையும் தண்ணீர் எடுத்துக்கொண்டுவந்து அருகில் அமர நீர் வாங்கி அருந்திவிட்டு கொஞ்சநேரம் நிறுவனம் வீடு என பகல்நேரப் பொழுதின் கதைகளை இருவரும் ஒருவர்மாற்றி யொருவர் பேச ஆரம்பித்தார்கள்.
அதற்குள் நதினி வீட்டிற்குள் ஓடிப்போய் தனது புத்தகங்கள், வண்ணமடித்த ஓவியம், இன்று எழுதிய இன்னபிற என ஆசிரியை நட்சத்திரம் போட்டதுவரை பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவந்த அத்தனையையும் ஒன்றுவிடாது எடுத்துவந்து மாறி மாறி ஒவ்வொன்றாய்க் காட்டி செழியனை தொல்லைசெய்தாள்.
செழியனோ முக்கியமானதொரு நிறுவனத்தின் தொழில்குறித்து மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார். நதினிக்கு அப்பாமேல் ஏக கோபம். என்னடா இது அப்பா கொஞ்சம்கூட என்னை கண்டுக்கொள்ள கூட இல்லையே என எண்ணி கையிலிருந்தப் புத்தகங்களையெல்லாம் தூக்கி தூர வீசினாள்.


அதற்குக் கோபமான செழியன் வேகமாக எழுந்துப்போய் அதே போனவேகத்தில் பளாரென ஒரு அரை கன்னத்திலேயே விட்டார். நதினி பாவம் பே..................ன்னு கத்த ஆரம்பிக்க, வீடு இரண்டாகி, ஒரு கட்டத்தில் அமைதியாகி, ஆளுக்கொரு மூலையில் அமர்ந்துக் கொண்டார்கள்.
சற்றுநேரம் பொறுத்து கலை சமையலறைக்குள் சென்று தேநீர் இடுகிறாள். தேநீர் கொண்டுபோக மகள் நதினியை அழைக்கிறாள். அவளெங்கு வர, நதினி ஏதோ வரைவதில் ரொம்ப ஆழ்ந்திருந்தாள். கண்களில் பயங்கரக் கோபம் வேறு.
செழியனுக்கு கலையே தேநீர் கொண்டுவந்து தர, செழியன் மெல்லப் புன்முறுவல் செய்தவாறு நதினி செல்லம் எங்க....? என்கிறான்.
பக்கத்துக்கு மேஜையில் ஏதோ வரைந்துக்கொண்டு இருக்கும் நதினி மிக அவசரமாக கோபமாக “பேச்சாட்டன்.....” என்றாள்.
இல்லையே எங்க நதினி செல்லத்தைக் காணோமே..(?) எங்கப் போச்சு நதினி செல்லம்..?
“பேச்சாட்டன்..”
“எங்கத் தங்கம்ல..”
“பேச்சாட்டன்..” தலையை இடதும் வலதுமாக ஆட்டிக்கொண்டே மேலே நிமிராமல் சொல்கிறாள்.. தலைமுடி இங்கும் அங்கும் அழகாக ஆடுகிறது..
“எங்கப் பட்டுல்ல..?”
“பேச்சாட்டன்.. பேச்சாட்டன்..”
செழியன் அவளை நிமிர்ந்துப் பார்க்கிறான். கண்கள் புத்தகத்தில் சொருகி கிடக்கிறது. அத்தனைக் கோபமாம் மகளுக்கு அப்பாமேல். அவனும் சில வினாடிகள் கண் அசையாது அவளையேப் பார்கிறான். திரும்பினால் சிரித்துவிடும் குழந்தை என்று அவனுக்கு எண்ணம். அதெங்கு திரும்ப.. சிரிக்க... ? அசர கூட இல்லை நதினி.
செழியன் எழுந்துப் பக்கத்தில் போனார், நதினியைக் கூண்டாகத் தூக்கி “அப்படியேக் கடிச்சிடட்டா...?” என்றார்..
அவள் அப்போதும் ஓயவில்லை.
“பேச்சாட்டன்.. பேச்சாட்டன்.. பேச்சாட்டன்.. என்றாள் அழுத்தமாக.
செழியனுக்கு கோபம் வந்துவிட்டது. “ச்சீ போ.. பெரிய இவ நீ.. ஆளையும் மூஞ்சியும் பாரு.. நல்ல கொரங்கு மாதிரி..” என்று கடிக்க; அவ்வளதான் நதினிக்கு கோபம் பொங்கி பொங்கி வருகிறது.
“கிட்ட வராத இனிமே அப்பா கிப்பான்னு..” என்கிறான் செழியன். நதினி குனிந்த தலை நிமிரவில்லை, அவள் எதையோ வரைந்துக்கொண்டே இருந்தாள்.
செழியன் விருட்டென உள்ளேப் போய்விட்டார். உள்ளே மனைவியிடம். “அதுக்கு எவ்வளோ ஒட்டாரம் பார்த்தியா? அசைய மாட்டேன்னுது கலை”
“எல்லாம் உங்களால.. அதுக்கு திமிர் ஜாஸ்தி..” பேசிக்கொண்டே வெளியே போனாள்.
வெளியே அம்மா வந்ததும் “அம்மா அம்மா இங்க வாயேன் நான் ஒன்னு வரைஞ்சிருக்கேன்..” என்றாள் நதினி.
“ச்சீ போ.. அப்பா கிட்ட பேசமாட்டேன்னுட்டு அப்புறம் என்கிட்டே ஏன் பேசுற? நீ நல்லப்பொண்ணே இல்ல.. பேசாதா யார்கிட்டயுமென்றுச் சொல்லிக்கொண்டே உள்ளேப் போனாள்.
செழியனுக்கு பகீரென்றது. அவன் அவளுக்குப் பின்னாலேயே உள்ளறைக்குள் சென்று “ஏம்மா.. உனக்கேனிந்த கொலைவெறி..?”
“விடுங்க.. அப்பதான் அவளுக்கு தெரியும்.. கொஞ்சம் உணரனும்..”
“அடிப்போடி..”
“என்ன போடி..? என்ன போடின்றேன்..?”
“பின்ன செல்லத்தைப் போய்.. அப்படி..”
வெளியே நதினிக்குக் கேட்கிறது அவர்கள் பேசிக்கொள்வது.
“செல்லத்தைப்போய் அப்படி பேசுறியே குழந்தை மனசு நோகாது..”
“நோகட்டும் நோகட்டும்.. அதுக்குன்னா இப்பவே இவ்வளோ திமிர்? உங்களையே மதிக்கமாட்டுறா..”
“ச்சே.. பாவம்மா குழந்தை.. அதுக்கென்ன தெரியும்.. மதிக்கறது மதிக்காததெல்லாம்.. போ போய் குழந்தையைத் தூக்கு, குழந்தைக்கு மனசு வலிக்கப்போது.. போம்மா” என்கிறான்.
அவ்வளவுதான்... அதைக்கேட்ட நதினி ஓடிவந்து அப்பாவைக் கட்டிக்கொண்டாள். இருவரும் ஒரு வினாடி இங்குமங்குமாய் கட்டிப் புரண்டார்கள்..
அதற்குள் கலை மேஜையின் மீது நதினி வரைந்ததை எட்டிப் பார்க்கிறாள். மேஜையில் ஒரு வெள்ளைக் காகிதத்தில் அப்பாவும் அம்மாவும் போல வரைந்து ஏதோ கிறுக்கி இருந்தது.
அதைக்கொண்டுவந்து நதினியிடம் இது என்ன என்கிறாள். அதற்கு நதினி அதைப் பார்க்காமலே “நான் அப்பாகிட்டப் பேச்சுவேன் அம்மாகிட்ட பேச்சாட்டன்..” என்கிறாள். கலை ஒடியவளை மவளை என்றுத் தூக்கிக் கட்டியணைத்து ஒரு முத்தமிட செழியனும் முத்தம்தர இருவரின் அன்பிலும் அந்தப் பேச்சாட்டன் எனும் சொல் மிட்டாயைப்போல கரைந்துபோனது..

பாசமென்பது வேறென்ன? புரிந்துக்கொள்வதன்றி..

No comments: