நினைவில் நீங்காத விக்டர் அன்ட் சன்ஸ் மற்றும் நியூ விக்ரேர்ஸ் - கானா பிரபா

.

யாழ்ப்பாணத்தின் பொழுது போக்குச் சந்தையில் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று விக்டர் அன்ட்  சன்ஸ். குறிப்பாக எண்பதுகளிலே டேப் டெக்கார்டர்களின் சந்தை பரவலாக்கப்பட்ட போதும், தொலைக்காட்சி ஊடகத்தோடு வீடியோப் பெட்டிகளும் ஒவ்வொரு வீடாக வந்து சேரவும், இந்தப் பொருட்களோடு தொடர்புபட்ட வியாபாரங்களும் பல்கிப் பெருகின. முதலில் நகரப்பகுதியில் மட்டுமே நிலைபெற்றிருந்த றெக்கோர்டிங் பார் என்று சொல்லப்பட்ட பாடல் ஒலிப்பதிவு நிலையங்களும், வீடியோக் கடைகளும் பின்னாளில் கிராமங்களுக்கும் தமது தொழில் சந்தையை விரிவுபடுத்தின. 

இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த யாழ்ப்பாண நகரத்தில் விளங்கிய தொழில் முயற்சியாக அமைந்தது விக்டர் அன்ட் சன்ஸ். 
விக்டர் அன்ட் சன்ஸ் உரிமையாளராக விளங்கியவர் திரு விக்டர் இம்மானுவேல் ஆசீர்வாதம் அவர்கள்.  இவர்களிடமேயே அப்போது தொலைக்காட்சிப் பெட்டியையும், வீடியோ கசெட் ப்ளேயரையும்  அப்போது சுடச் சுட வந்த சினிமாப் படக் கசெட்டுகளையும் வாங்கி மக்கால் தம் பொழுது போக்குக்குத் தீனி போட்டதுண்டு. திருமணம் போன்ற குடும்ப விழாக்களில் வாடகைக்கு இவற்றை எடுத்துப் படம் போட்டுப் பார்ப்பது என்பது ஒரு சடங்காகவே மாற ஆடம்பித்தது.



எண்பதுகளிலே வீடியோப் படக் காட்சி என்பது உள்ளூர் சன சமூக நிலையங்களின் காணிகளில் தற்காலிகத் தடுப்பு வேலிகள் போடப்பட்டு , கிளுவை மரத்தால் சுற்றி வளைக்கப்பட்ட பொந்து வழியாக உள் வருகைக்கு ஆளுக்கு ஒரு ரூபாவோ இரண்டு ரூபாவோ கட்டணம் வசூலிக்கப்பட்டுக் காண்பிக்கப்படும். சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் மூன்று படங்கள் வரை சிறப்புக் காட்சியாக இருக்கும். ஒரு படம் பெரும்பாலும் வாத்தியாரின் மாட்டுகார வேலன், மீனவ நண்பன், நாளை நமதே வகையறாவாக இருக்கும். அதுதான் ஸ்பெஷல் காட்சியாக அந்த வீடியோப் படக் காட்சியில் இருக்கும். 
எங்களூர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற சனசமூக நிலையம் காட்டிய "அண்ணன் ஒரு கோயில்" படம் பார்த்த அனுபவம் குறித்து முன்னர் எழுதியிருக்கிறேன்.

எங்களின் உறவினர் ஊரில் பெரும் தனவந்தர், அவர்களிடம் சொந்தமாகவே தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோ கசெட் ப்ளேயரும் வந்தபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  மதியம் படம் போட்டுப் பார்ப்பது வழமையாகி விடவே, சனிக்கிழமைக்கெல்லாம் விக்டர்ஸ் இல் முன்கூட்டியே பதிவு செய்து நல்ல படமொன்றின் வீடியோ காசெட்டை எடுத்து வருவது எங்கள் உறவினர் மகனுக்கும் அவரின் வயதையொத்த என் அண்ணனுக்கும் பொறுப்பாக இருந்தது. அதுவரை காலமும் தூரதர்ஷன் போட்ட ஓலியும் ஒளியும், ஞாயிற்றுக் கிழமை சினிமாவையெல்லாம் பாயாசம் போல  புள்ளி குமியப் பார்த்த எங்களுக்குத் துல்லியமான ஒளி, ஒலியில் சினிமா பார்ப்பது புதினமான ஒரு காரியம்.
காலப் போக்கில் சனிக்கிழமை வந்தால் புதுப்படங்களை எங்கள் உறவினர் வீட்டுக்கே ஒதுக்கி வைத்து முன்னுரிமை கொடுக்கும் அளவுக்கு விக்டேர்ஸ் ஆட்கள் நெருக்கமாகி விட்டனர்.

விக்டர் அன்ட் சன்ஸ் இன் சகோதர நிறுவனம் நியூ விக்ரேஸ் வெலிங்க்டன் தியேட்டம், நியூ சயன்ஸ் அக்கடமிக்கு அருகில் பெரியதொரு அடுக்கு மாடிக் கட்டடத்தை நிறுவியது. முழுமையான நவீன ஒலிப்பதிவு கூட வசதியோடு அமைந்த ஒலி, ஒளிச் சாதனக் கடை அது. அந்தப் பென்னம்பெரிய கட்டடம் அளவுக்கு இன்று வரை இலங்கையில் இதே பாங்கில் நான் இன்னொரு றெக்கோர்டிங் ஸ்ரூடியோவை நான் கண்டதில்லை. சயன்ஸ் அக்கடமியில் படிக்க வந்த பெடி, பெட்டையள் நியூ விக்ரேர்ஸ் இலிருந்து வரும் பாட்டுகளைக் கேட்பதற்கே கூட்டம் போடுவதுண்டு.

தொண்ணூறுகளிலே ஒருநாள் நண்பன் இளங்குமரனுடன் நியூ விக்ரேர்ஸ் போகிறேன்.
லல லாலாலா லால லால என்ற ஆலாபனையோடு அப்படியே வாளியால் அடித்து இறைத்த தண்ணீர் போலப் பொங்கிப் பிராவகித்த இசையின் துல்லியத்தை அங்கு கேட்டு மெய்மறந்து நின்றதெல்லாம் என் வாழ்நாள் மறக்காது.
பின்னாளில் போர் உச்சம் பெற்ற இலங்கை அரச படைகளால் சுவீகரிக்கப்பட்டு பல்லாண்டுகளாக உயர் பாதுகாப்பு வலையத்துள் தன்னைத் தொலைத்தது நியூ விக்ரேர்ஸ். யாழ்ப்பாணம் போகும் போதெல்லாம் அந்த வழியால் ஒரு எட்டுப் போய்ப் பார்த்து ஏக்கத்தோடு கடப்பேன்.

என்னுடைய ஆரம்பப் பள்ளி காலத்தில்  கிடைத்த இப்படியானதொரு பந்தம் அவுஸ்திரேலியா வந்த பின்னரும் நீளும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
மெல்பர்னில் Swinburne  University இல் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் விக்டர் அன்ட் சன்ஸ், விக்டர் அவர்கள் எங்கள் பல்கலைக்கழக வளாகம் அமைந்திருந்த Hawthorn என்ற உப நகரத்தில் கடை வைத்திருந்ததை அறிந்து ஒன்றிரண்டு தடவை அங்கே போயிருக்கிறேன். மின்சார உபகரணங்களோடு, ஒரு சில தமிழ்த்திரை இசைத்தட்டுகளுமாக இருந்த கடை அது. பின்னர் நான் வானொலிக் கலந்துரையாடல் நிகழ்ச்சி படைக்கும் போதெல்லாம் பழைய விக்டர் அன்ட் சன்ஸ் நினைவுகளோடு திரு விக்டர் அவர்களும் அவருடைய மனைவியும் வானொலியில் உரையாடிய கணங்கள் சுவையானவை.
எங்களூர் வாழ்வியல் அனுபவங்களை வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த போது விக்டர் அவர்களின் மனைவியிடம் அவர்களது கடையின் பழைய புகைப்படங்களைக் கேட்டபோது மிகுந்த மனச்சுமை தன் வார்த்தைகளில் வெளிப்பட, அவற்றைத் தருகிறேன் என்று சொன்ன போதெல்லாம் ஒரு குழந்தையைப் பறிகொடுத்த உணர்வையே அவரிடம் காண முடிந்தது.

ஸ்ரான்லி வீதியில் இருந்த விக்டர் அன்ட் சன்ஸ், மற்றும்  நியூ விக்டேர்ஸ் எல்லாம் எங்கள் மண்ணின் பொழுதுபோக்கு அடையாளங்களில் நீக்கமற நிரம்பியவை.
விக்டர் அன்ட் சன்ஸ் உரிமையாளர் திரு.விக்டர் இம்மானுவேல் ஆசீர்வாதம் தன்னுடைய வாழ்வை கடந்த வெள்ளியோடு முடித்துக் கொண்டார் என்ற செய்தி இன்று என்னைக் கிட்டிய போது உள்ளே ஒரு வலி எழுந்தது.  இந்த வலி எண்பதுகளில் என் மாதிரி மேற் சொன்ன வாழ்வியலில் இருந்தவருக்கு வெகு இயல்பாக எழக்கூடியது. விக்டர் அவர்களின் ஆன்மா இளைப்பாறுவதாக.

No comments: