மலரும் முகம் பார்க்கும் காலம் 15 - தொடர் கவிதை

.
கவிதை 15  திருமதி. ரதி மோகன், டென்மார்க்

மலரும் முகம் பார்க்கும் காலம்
மனம் மலரும் வசந்த காலம்
மாதங்கள் பத்து காத்திருக்கும்
மங்கையவளின் கனவுக்காலம்..

காதலுக்காய் அவன் தந்த
கனியொன்றின் விதையொன்று
துளிர்விட்டு மொட்டவிழ்ந்து
கனியாகும் இப் பேறு காலம்..

காத்திருந்து காத்திருந்து
பல வருடங்கள் கடந்த பின்பு
பட்டு வண்ண ரோஜா ஒன்று
இதழ்கள் விரிக்கும் வேளை..

வனப்பும் செழிப்பும் மதாளிப்புமாய்
வஞ்சியவள் உடலுக்குள் மாற்றம்
விஞ்சையர் பாவுக்குள் அடங்காத
விந்தையான உணர்வுக்கோலம்..

பஞ்சுப்பாதங்கள் மெல்ல அரும்பும்
பிஞ்சு விரல்கள் ரோஜாவாகும்
கஞ்சமின்றிய அழகான படைப்பு
வெஞ்சுடரான மகவின் வரவுக்காலம்..

குட்டிப்பாதங்கள் வயிற்றில் உதைக்க
கள்ளனவன் செய்திட்ட குறும்பெல்லாம்
கள்ளியிவள் நெஞ்சத்தில் அலைமோத
கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருக்கும்

No comments: