ஹிட்லரை அஞ்ச வைத்தவன் !

.
தனது ஆலோசகர்களை எல்லாம் அவசரமாக அழைத்திருந்தார் ஹிட்லர். தனது நீண்ட நாள் கனவை பற்றி அவர்களிடம் ஆலோசனை செய்தார். ஹிட்லரின் ஆலோசகர்கள் எல்லோரும் சுத்தி வலைத்து ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொன்னார்கள். ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைக்க வேண்டும் என்றால் நிச்சயம் 'அவர்' உதவி வேண்டும். 'அவர்' ஆதரவில்லாமல் ஆஸ்திரியாவில் ஒரு அடிக்கூட முன்னேற முடியாது. 'அவர்' இத்தாலியில் தான் இருக்கிறார். ஆனால், ஆஸ்திரியாவில் ஜெர்மனி இராணுவம் உள்ளே நுழைய போகிறது என்று திட்டம் போடுகிறோம் தெரிந்தால் போதும், உடனே இத்தாலி இராணுவம் ஜெர்மனியை தாக்கும். ஆஸ்திரியாவின் சான்ஸ்லர் டால்பஸ்க்கும், இத்தாலிக்கும் அப்படி ஒரு நட்பு உள்ளது.

ஆலோசகர் வார்த்தைகளின் உண்மை இருப்பதை உணர்ந்தார். ஹிட்லர் 'அவரை' எதிர்க்க தயங்கியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஹிட்லரின் மானசீக குருவும் அவர் தான். அவர் எதிர்த்து மோதுவது என்பது தற்கொலைக்கு சமம். அதனால், அவரின் ஆதரவு பெற சமாதானமாக போவது தான் நல்லது என்று முடிவுக்கு வந்தார்.ஹிட்லர் அவரை முதல் முதலில் 1934ஆம் ஆண்டு வென்னிஸ் நகரத்தில் தான் சந்தித்தார். 'அவர்' சுமார் ஐந்தேமுக்கால் அடி உயரம். அதற்கு தகுந்த பருமலான தேக அங்கம்; விசாலமான நெற்றி; நீண்ட கண்கள்; கூரிய மூக்கு; சிரிப்பிலே கம்பீரம் தரும் உதடுகள். வீரம், துணிச்சல், கம்பீரம் எல்லாம் நிறைந்தவரை அன்று தான் பார்த்தார். ஹிட்லரே ஒரு கனம் அஞ்சினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஹிட்லர் அவரிடம் " உங்களை தான் நான் அரசியல் குருவாக கொண்டு ஜெர்மனியில் ஆட்சி புரிகிறேன். நீங்கள் தான் எனக்கு வழிக்காட்டி " என்றெல்லாம் ஹிட்லர் பல புகழ் மாலைகள் அவருக்கு சுட்டினார். அவரும் மௌனமாக எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தார்.தன் உரையாடல் முடிவில் ஹிட்லர், "ஆஸ்திரியாவில் பல ஜெர்மனி மக்கள் வாழ்கிறார்கள். ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைக்க உங்கள் ஆதரவு வேண்டும்" என்றார். அது வரை மௌனமாக இருந்த அவர் அப்போது தான் பேசினார். ஒரே வார்த்தை..."முடியாது" என்றார். அதற்கு மேல் பேசி எந்த பலனுமில்லை என்று ஹிட்லரும் தன் வாடிய முகத்துடன் ஜெர்மன் திரும்பினார்.

அவர் மறுத்தது ஆஸ்திரிய சான்ஸ்லரான டால்பஸ்க்கு பயங்கர மகிழ்ச்சி. அவருடைய நட்பை நினைத்து மிகவும் பெருமை கொண்டார். ஆனால், அவரின் சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஆஸ்திரிய நாஜி கட்சியினரால் டால்பஸ் படுகொலை செய்யப்பட்டார். இந்த செய்தியை கேட்ட 'அவர்' கோபத்தில் எழுந்தார். அதே சமயத்தில் ஆஸ்திரியாவின் பாதுக்காப்பை பற்றியும் சிந்தித்தார். தனது இராணுவத்தை ஆஸ்திரியாவின் எல்லை பகுதியில் நிரப்பி வைத்தார். இராணுவ உதவி தேவைப்பட்டால் தனக்கு உடனே தகவல் கொடுக்கவும் என்று ஆறுதலும் கூறினார். அவரின் அதிரடி நடவடிக்கையால் ஹிட்லர் ஜெர்மனியை ஆஸ்திரியாவுடன் இணைக்கும் திட்டத்தை தள்ளி வைக்க வேண்டியதாக இருந்தது.

'அவர்' சர்வாதிகாரத்தில் ஹிட்லரை விட சீனியர். ஆனால், அதன் பின் நடந்த அரசியல் நிகழ்வுகளால் அவரை ஹிட்லர் முந்திவிட்டார். அதன் பின் இருவரும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி நண்பர்களாக மாறினர். பிறகு இருவரும் சேர்ந்து உலகத்தையே மிரட்ட தொடங்கினர். அந்த 'அவர்' தான் பெனிட்டோ முசோலினி. இருபதாம் நூற்றாண்டின் மறக்க முடியாத இன்னொரு நபர்.

ஹிட்லர் தனிப்பட்ட ஒருவருக்கு பயந்து தன் திட்டத்தை தள்ளி வைத்தார் என்றால் அது பெனிட்டோ முசோலினியாக தான் இருக்கும். பெனிட்டோ முசோலினி ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹிட்லர் உலகத்தையே மிரட்ட ஆரம்பித்தார். பொலாந்தை தாக்கி இரண்டாம் உலகப்போரை ஹிட்லர் துவக்கியவுடன், பெனிட்டோ முசோலினி உடனே கலத்தில் குதிக்கவில்லை. சற்று நிதானமாக யோசித்து தான் ஹிட்லருக்கு உதவ முன்வந்தார். இந்த இரண்டு பேர் இறந்தால் தான் உலகப்போர் முடியும் என்று பலரும் கருதிவந்தார்கள்.

அவ்வபோது இருவருக்குள் அரசியல் 'ஈகோ' இருந்தாலும், இருவரின் நட்புக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. துரியோதனன், கர்ணன் போல் இந்த இரண்டு பேரின் நட்பும் இருந்ததா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியும் கற்பனை செய்து பார்த்தால் கூட தவறில்லை. ஒரு கட்டத்தில் சர்வதேச அரசியலில் பெனிட்டோ தனிமையாக்க பட்ட நேரத்தில் ஹிட்லர் அவருடன் கூட்டனி வைத்து கொண்டார். பெனிட்டோ இறந்த இரண்டாவது நாளில் ஹிட்லர் தற்கொலை செய்துக் கொண்டார். மேலோட்டமாக பார்த்தால் நண்பர்கள் போல் தெரிந்தாலும் உண்மையில் அரசியல் சூழ்நிலையால் ஏற்பட்ட கூட்டனி என்று தான் சொல்ல வேண்டும்.

No comments: