திரும்பிப்பார்க்கின்றேன் - இலக்கிய உலா வந்த தருமு சிவராம். -முருகபூபதி

.
நான்  சந்திக்கத் தவறிய  பல  பெயர்களில்  இலக்கிய உலா  வந்த   தருமு  சிவராம்.
 திருகோணமலையிலிருந்து   தமிழகம்  சென்று   மறைந்த இந்த  கலை   இலக்கிய  ஆளுமைக்கு   இன்றைய தினம்   பிறந்த  மண்ணில்   நினைவரங்கு
              
 
வீரகேசரியில்   பணியிலிருந்த  காலத்தில்   எனக்கு  முன்பின்தெரியாத  ஒரு  அன்பர்  அன்று  ஒருநாள்  காலை வேளையில்   அங்கு   வந்து  என் முன்னால்  தோன்றினார்.
அருகிலிருந்த   அறையில்  வீரகேசரி  வாரவெளியீட்டு  ஆசிரியர் பொன். ராஜகோபால்   அவரை  என்னிடம்  அனுப்பியிருந்தார்.   எனக்கு முன்னாலிருந்த   ஆசனத்தில்  அவரை  அமரச்சொன்னேன்.
அவரது    கரத்தில்  முதல்நாள்  ஞாயிற்றுக்கிழமை   வெளியான வீரகேசரி  வாரவெளியீட்டின்  கிழக்கு  மாகாணப்பதிப்பு  இருந்தது. தான்  அன்றுகாலைதான்  திருகோணமலையிலிருந்து  கொழும்பு வந்ததாகவும்,    நேரே  எமது  அலுவலகத்தை  தேடிக்கண்டுபிடித்து வந்து    சேர்ந்ததாகவும்  சொன்னார்.
அவருடைய   முகத்தில்  சோகத்தின்  ரேகைகளும்   சோர்வும் தென்பட்டது.    அத்துடன்  அவரது  கண்கள்  எதனையோ தேடிவந்திருப்பதையும்    உணர்த்தியது.   நீங்கள்தானா  ரஸஞானி...? என்றுதான்  அவர் தனது  உரையாடலை   தொடங்கினார்.

எனக்கு    முன்பின்தெரியாத  ஒரு  இலக்கியவாதியாகத்தான்  அவர் இருப்பார்.    ஏதும்  செய்திகொண்டுவந்திருப்பார்  என  நினைத்து, " ஆம் நான்தான்."  என்றேன்.
" அதுதான்  உங்கள்  பெயரா...?  அல்லது  புனைபெயரா...? " என்று அடுத்தகேள்வியை  தொடுத்தார்.
"  எனது   பெயரைச்சொல்லி,   ரஸஞானி   எனது  புனைபெயர்  என்றேன்.
" அதுமட்டுமா  உங்கள்  புனைபெயர்,  மேலும்  ஏதும் வைத்திருக்கிறீர்களா...? "    என்ற  அவரது  மற்றும்  ஒரு  கேள்வி,   அவர்   என்னை   பேட்டி காணவந்துள்ளாரா...? என்ற யோசனைக்குத்தள்ளியது.
"  இல்லை.... எனது  உறவினர்  ஒருவரைப்பற்றி  நேற்று  வெளியான வீரகேசரியில்    எழுதியிருக்கிறீர்கள்.   அவரை   நீங்கள்  சென்னையில் பார்த்தீர்களா...?  அவரது  முகவரியை  கேட்டுத்தெரிந்துகொண்டு தொடர்பு கொள்வதற்குத்தான்  நேற்று  இரவு  ரயிலில்  புறப்பட்டு வந்தேன்."    என்றார்.
நான்  அதிர்ச்சியடைந்தேன்.   நான்   எழுதிய  செய்தியில்  ஏதும் பிரச்சினையோ...?  என்ற  யோசனையுடன்   அவரை   உற்றுப்பார்த்தேன். அவர்  கையிலிருந்த  முதல்நாள்  பத்திரிகையை   விரித்து  அதில் இலக்கியப்பலகணியில்   நான்   படத்துடன்  குறிப்பிட்டிருந்த  பல பெயர்  மன்னன் , புதுக்கவிதை  முன்னோடி,  எண்  சாத்திர  நிபுணர் தருமு  சிவராம்  பற்றிய  மேலதிக  தகவல்  அறியவந்திருக்கிறார் என்பதை   உடனடியாகவே  அறியமுடிந்தது.
" அவரது   முகத்தில்  கவலையின்  ரேகைகள் படர்ந்திருந்திருந்தமையால்    நானும்  என்ன  விடயமாக  வந்தீர்கள்...?" என்று  பதட்டத்துடன்  கேட்டேன்.
 "  இவர்  எமது  உறவினர்.   சின்ன வயதில்  காணாமல் போனார். பின்னர்   இவர்  இந்தியாவில்  இருப்பதாக  சிலர்  சொன்னார்கள். ஆனால்,  இந்தியாவில்  எங்கே  என்றும்  தெரியாது.   இவருக்கு  எமது குடும்பத்தில்    வைத்தபெயர்  சிவராம்.   ஆனால் -  அவர்  பல பெயர்களில்   மறைந்திருந்தமையால்  இலக்கிய உலகம்  பற்றி எதுவும்   தெரியாத  எமக்கு  சிவராம்தான்  இத்தனை   பெயர்களில் மறைந்திருந்து   எழுதியிருக்கிறார்  என்பது  உங்கள் தகவல்களிலிருந்து    தெரிகிறது..."  எனச் சொல்லிவிட்டு  நீண்ட பெருமூச்சை  விட்டார்.
அவர்   மீது  எனக்கு  பரிதாபம்  தோன்றியது.  என்ன  சொல்வது...? என்ற   தயக்கமும்  வந்தது.
எனது   இலக்கிய  பலகணி  பத்தி   எழுத்தைப்பார்த்துவிட்டு  தருமு சிவராமின்    எழுத்துக்களினால்  ஆகர்சிக்கப்பட்ட  எந்தவொரு எழுத்தாளனிடமிருந்தோ,    வாசகனிடமிருந்தோ   இதுநாள்வரையில் தருமு சிவராம்   பற்றி  எவரும்   என்னிடம்   கேட்டதில்லை.
ஆனால்,  ஒரு  இரத்த  உறவு  இலக்கியப்பிரக்ஞையே  இல்லாத ஒருவர்   நித்திரைவிழித்து  பயணம்செய்து  இவ்வளவு தூரம் வந்திருப்பதைப் பார்த்ததும்,  இலக்கிய  உறவுகளுக்கும்  குடும்ப இரத்த   உறவுகளுக்கும்  இடையே   நீடிக்கும்  பாரிய  இடைவெளியை ஆழ்ந்து  யோசித்து  துணுக்குற்றேன்.
தற்பொழுது    இதனை   எழுதும்வேளையில்   எனது  அம்மா  எனக்கு அடிக்கடி   சொல்லும்  அந்த  வார்த்தைதான்  நினைவுக்கு  வருகிறது.
" பறவை   என்னதான்  உயரத்தில்  வட்டமிட்டுப்பறந்தாலும்  இறுதியில்   ஆகாரத்திற்கு  தரைக்குத்தான்  வந்து  தீரவேண்டும். ஆகாயத்தில்   அதற்கு  உணவு  கிடைக்காது."
" சிறகிலிருந்து  பிரிந்த
இறகு  ஒன்று
காற்றின்
தீராத   பக்கங்களில்
ஒரு  பறவையின்   வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது"
 என்ற  இலக்கிய  உலகில்  மிகவும்  பிரபலமான  தருமு சிவராமின் கவிதை   வரிகளும்  நினைவுக்கு  வருகின்றன.   இன்றைய  தினம் தருமுசிவராமின்    வாசகர்கள்  அவர்  பிறந்த  திருகோணமலையில் அவருக்காக    சிறப்பிதழும்  வெளியிட்டு  அவரை  நினைவுபடுத்தும் அரங்கும்   ஒழுங்கு  செய்துள்ளார்கள்.
தான்    பிறந்த  மண்ணுக்கே  திரும்பிவராமல்  தமிழகத்தின் தரையிலேயே   அடக்கமாகிப்போன  ஆன்மா  இன்றைக்கும் பேசப்படும்   ஆளுமையாகவே   மறைந்தது.
பிரமிள்,  பிரமிள்  பானு சந்திரன்,  அரூப்  சிவராம்  என்றெல்லாம் எண்சாத்திரப்படி   தனது  பெயரை   அடிக்கடி  மாற்றி  எழுதியவரின் தலைவிதியை  யார்  எழுதினார்கள்...?  என்று  நாம்  அவரது இறுதிக்காலத்தை   எண்ணி   நொந்துகொள்ளமுடியும்.
சொந்தம்    எப்போதும்  தொடர்கதைதான்  அது  முடிவே   இல்லாதது என்பதிலிருந்து ,  சொந்த  உறவுகளையெல்லாம்  மறந்து அஞ்ஞாதவாசம்    சென்றவரின்  இரத்த  உறவு  அன்று  என் முன்னே தங்கள்    உறவைத்தேடி  வந்தபொழுது  மனம்  கனத்துப்போனது.
இலக்கியப்பலகணிக்கு   தகவல்களை   நான்  தேடிப்பெறும்பொழுது பெரும்பாலும்    இலக்கிய  நண்பர்கள்  எனக்கு  உதவுவார்கள்.
அக்காலப்பகுதியில்    தமிழகத்திற்கு  சென்று  திரும்பியிருந்த மல்லிகை   ஜீவாவும்   கவிஞர்  மேமன்கவியும்  சென்னையில் பலரையும்   சந்தித்தவேளையில்  தருமுசிவராமையும்  அவர்  இருந்த அறைக்குத்தேடிச்சென்று   சந்தித்துள்ளனர்.
நான்   அவர்கள்  சொன்ன  தகவல்களிலிருந்து  குறிப்புகளை   எழுதி  ஜீவாவிடம்   பெற்ற  தருமு  சிவராமின்  படத்தையும்  அந்தப்பத்தியில்    பதிவுசெய்திருந்தேன்.    ஆனால்,  என்னிடம்  தருமு சிவராமின்    முகவரி  இல்லை.    அவருடன்  தொடர்புகொள்ளத்தக்க தொலைபேசி    எண்களும்  இல்லை.


தேடிவந்த   அன்பருக்கு  யாழ்ப்பாணத்திலிருக்கும்  மல்லிகை காரியாலய   முகவரி  கொடுத்து  அங்கு  சென்றால்  மேலதிக  விபரம்   கிடைக்கும்  என்றேன்.
வந்தவர்  முகம்  மேலும்  வாடிப்போனது.   எனது  இயலாமையை எண்ணி     வெட்கப்பட்டேன்.   அவர்  வணக்கம்  தெரிவித்துவிட்டு எழுந்து   சென்றார்.
அவரை    வாசல்வரை   வந்து  விடைகொடுத்து  அனுப்பினேன்.
நான்   அந்தப்பத்தியில்  எழுதாத  பல  விடயங்கள்   இருந்தன.   தருமு சிவராமின்   அந்தச் சிறிய   வாடகை   அறையின்  சுவர்களிலெல்லாம் எண்கள்   எழுதப்பட்டும் -  வெட்டி  அழிக்கப்பட்டும்  நவீன ஓவியச்சுவர்கள்   போன்று  காட்சி  அளித்ததாக  நண்பர்  மேமன்கவி சொன்னார்.
அறையின்  மூலையில்  தரையில்  விரிக்கப்பட்டிருந்த  பத்திரிகையில்    இரண்டு  கரட்,   ஒரு  வெங்காயம்,  சில உருளைக்கிழங்குகள்தான்    இருந்தன  என்றார்  ஜீவா.
இவர்கள்    இருவரும்  அவர்  வாழ்ந்த  கோலம்  பார்த்துவிட்டு அவர்கையில்   சில  இந்திய  ரூபாய்  தாள்களை   செருகிவிட்டு விடைபெற்றுள்ளார்கள்.
தான்    தற்பொழுது  எண்சாத்திரத்தில்  தீவிரமாக  ஆய்வுகள் மேற்கொண்டிருப்பதாகவும்  விரைவில்  தான்   எழுதப்போகும் எண்சாத்திர   நூல்  சர்வதேச  அளவில்  பேசப்படும்  என்றும்  அவர் சொன்னதாக   மல்லிகை  ஜீவா   என்னிடம்  சொன்னபொழுது, உலகிற்கும்     மனிதர்களுக்கும்   விதியை   எழுதி  அவர்களின் முன்னேற்றத்திற்கு   எவ்வாறு  பெயர்களை   மாற்றிக்கொள்ளவேண்டும்    என்று  சொல்லப்புறப்பட்டவரின் வாழ்க்கை    விதியை   யார்தான்  எழுதினார்கள்...?
வழிகாட்டி    மரங்கள்  நகருவதில்லை   என்று  இதனைத்தான் சொல்வார்களா....?
அன்று  என்னைத்தேடி  வந்த  அந்த  திருகோணமலை  அன்பர் அடுத்தவாரமே   யாழ்ப்பாணம்  வந்துவிட்டார்.   விதிவசத்தால்  அவர் அங்கு    வருவதற்கு  முதல்நாள்  ஒரு  செய்தி விவகாரம்  தொடர்பாக நானும்    யாழ்ப்பாணத்தில்  நின்றேன்.   மறுநாள்  காலையில் கஸ்தூரியார்    வீதியில்  ராஜா  தியேட்டருக்கு  பின்புறமாகவுள்ள தற்பொழுது  யாழ்.  தினக்குரல்  காரியாலயம்  அமைந்திருக்கும்  அந்த    ஒழுங்கையில்  அமைந்திருந்த  மல்லிகை  அலுவலகத்தில் ஜீவாவுடன்   உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில்   அந்த திருகோணமலை   அன்பர்  நான்  கொழும்பில்  எழுதிக்கொடுத்துவிட்ட முகவரியுடனும்    வீரகேசரி  வாரவெளியீட்டுடனும்  அங்கு  தோன்றி என்னை    ஆச்சரியத்தில்  ஆழ்த்தினார்.
தனது    முயற்சியில்  சற்றும்  தளராத  விக்கிரமாதித்தனாக  அவர் புன்னகை  தவழ  நின்றார்.
ஜீவாவிடமும்  தருமு  சிவராமின்  சரியான  முகவரி  கைவசம் இருக்கவில்லை.   சென்னையில்  யாரோ  ஒரு  இலக்கிய  நண்பரின் வழிகாட்டலுடன்    சென்றவர்  அந்த  இடம்  குறித்த  சரியான தகவலுடனும்   முகவரியுடனும்  வரவில்லை  என்பது  தெரிந்தது.
தருமு  சிவராம்  அடிக்கடி  தனது  பெயர்களை  மாற்றிக்கொள்வது போன்று    தமது  இருப்பிடங்களையும்  முகவரிகளையும்  மாற்றிக்கொள்பவர்   என்று  சொல்லி  தேடி  வந்த  திருகோணமலை அன்பரை  சமாதானப்படுத்தினார்.
வந்தவர்   ஏமாற்றத்துடன்  திரும்பினார்.  அவர்  பின்னர் தருமு சிவராமை    தேடிச்சென்று  பார்ப்பதற்கு  தமிழகம்  சென்றாரா...? என்பது  எனக்குத்தெரியாது.
அன்று   முழுவதும்  தருமு  சிவராமின்  நினைவுதான்  என்னை ஆக்கிரமித்திருந்தது.
1987  இல்  அவுஸ்திரேலியாவுக்கு  நான்  வந்தபின்னர்  1991  ஆம் ஆண்டு   தமிழ்நாட்டிலிருந்து  அவுஸ்திரேலியாவுக்கு  வந்திருந்த மூத்த    எழுத்தாளர்  இந்திரா பார்த்தசாரதி  சில  நாட்கள்  எனது வீட்டிற்கு    விருந்தினராக  வந்திருந்தார்.  அவருக்காக  மெல்பனில் ஒரு   இலக்கியச் சந்திப்பை   நடத்தியபொழுது,   தருமு  சிவராம் பற்றியும்   அவரிடம்  கேட்டேன்.
இ.பா.வின்    தகவல்  எனக்கு  மேலும்  ஆச்சரியமூட்டியது.   " பிரமிள் என்று   அறியப்பட்ட  அவர்   எங்கோ   ஒரு  மலையடிவாரத்தில்  ஒரு குகையில்    இருந்துகொண்டு  அவ்வப்பொழுது  வெளியே  வந்து விருட்சம்  முதலான    சிற்றிதழ்களில்  யாரையாவது  கடுமையாக விமர்சித்துவிட்டு    மறைந்துவிடுவார் "  என்றார்.
எனக்கு    தருமு  சிவராம்  பற்றி  மற்றவர்கள்  எழுதியிருக்கும் விமர்சனங்கள்  -  குறிப்புகளிலிருந்து  எத்தகைய  ஒரு  பெரிய இலக்கிய   ஆளுமை,  இப்படி  பறவையின்  இறகு  போன்று  விதியின் காற்றில்  பறந்து  அலைந்திருக்கிறதே  என்பதில்  இன்றளவும் வருத்தம்   நீடிக்கிறது.
அவரது   வாழ்வு   எங்களுக்கெல்லாம்  முன்னுதாரணமான  படிப்பினை.    அவர்  தேர்ந்த  இலக்கியவாதிகளின்  பொக்கிஷம்.
 அவர் எழுதியிருக்கும் நூல்கள்:
கவிதைத்  தொகுதிகள் :-   கண்ணாடியுள்ளிருந்து -   கைப்பிடியளவு கடல் -   மேல்நோக்கிய  பயணம் - பிரமிள் கவிதைகள்
சிறுகதை தொகுப்புகள்:-  லங்காபுரி  ராஜா,  பிரமிள்  படைப்புகள்
குறுநாவல் :- ஆயி, பிரசன்னம், லங்காபுரி ராஜா
நாடகம் ;- நட்சத்ரவாசி
அமெரிக்காவில்  நியூயோர்க்கிலிருக்கும்  விளக்கு  அமைப்பின்  இலக்கிய   ஆர்வலர்கள்  அவருக்கு  புதுமைப்பித்தன்  விருதை வழங்கியுள்ளார்கள்.   கும்பகோணத்தில்  சிலிக்குயில்  என்ற   அமைப்பு    புதுமைப்பித்தன்  வீறு   என்ற  விருதை   வழங்கியுள்ளது.
தருமு சிவராம்  வாழ்ந்த  காலத்தில்  அவர்  தாக்கி  எழுதாத எழுத்தாளர்களே    இல்லை   என்பார்கள்.   சி.சு. செல்லப்பாவின்  எழுத்து இதழில்    எழுதத்தொடங்கிய  தருமு சிவராம்,  தமிழகம்  சென்றதும் தனது    வாழ்வாதாரத்திற்கு  எழுத்தையே   முழுமையாக நம்பிவாழ்ந்தவர்.
அதேவேளை   சில  இலக்கிய  நண்பர்களின்  தயவிலும்  காலத்தை கடத்தியிருக்கிறார்.
தனது   பெயர்களை  எண்சாத்திரப்படி  மாற்றிக்கொண்டே   சில எழுத்தாளர்களினதும்    அவர்களின்  குடும்பத்தினரதும்  பெயர்களையும்    மாற்றிக்கொடுத்தவர்.   அதற்காக  பணம்  கேட்டும் வற்புறுத்தியிருக்கிறார்.    கொடுக்காவிட்டால்  வெளியே திட்டிக்கொண்டு    திரிந்திருக்கிறார்.   சுந்தர ராமசாமி  இவ்வாறு தனக்கு    பணம்  கொடுக்காமல்  ஏமாற்றிவிட்டார்  என்றெல்லாம் தருமுசிவராம்  சொல்லிக்கொண்டு  அலைந்திருக்கிறார்.
அவர்   தமது  எழுத்துக்களில்  சுந்தர ராமசாமியை  மட்டுமல்ல, ஞானக்கூத்தன் ,  நகுலன்,   வெங்கட்சாமி  நாதன்,  கோவை   ஞானி  பற்றியெல்லாம்   திட்டியிருக்கிறார்.
 எங்கள்  நாட்டின்  மூத்த  எழுத்தாளர்  எஸ்.பொன்னுத்துரையின்  தீ நாவல்  பற்றி  கடுமையான  விமர்சனத்தை  தருமு  சிவராம்  எழுதிய பின்னரே   சுந்தர ராமசாமி,  ஜெயகாந்தன்  முதலான  பல  தமிழக எழுத்தாளர்களின்  கவனத்திற்கு  எஸ்.பொ.  வந்திருக்கிறார்.
இறுதிக்காலத்தில்  தருமு  சிவராம்  நோயினால்  மிகுந்த சிரமப்பட்டபொழுது  பல  இலக்கியவாதிகள்  அவருடைய மருத்துவசிகிச்சைக்கு    உதவியிருக்கிறார்கள்.   அவர்  யார்  யாரைத்  திட்டினாரோ... அவர்களும்  அவருடைய    சிகிச்சைக்கு உதவியிருக்கிறார்கள்  என்பதும்  தெரியவருகிறது.
தருமு  சிவராமின்  வாழ்வையும்  அவரது  எழுத்துலகத்தையும் இணைத்துப்பார்த்தால்    அவரிடமிருந்தது  உண்மைக்கான தேடுதலா....?
  மனித  வாழ்வையும்  பிரபஞ்சத்தையும்  ஆராய்ந்தவர்  என்றெல்லாம்  அவருக்கு  புகழாரம்  சூட்டப்படுகிறது.  ஆனால்,  அவர் மீது  நேசமும்  பரிவும்  கொண்டிருந்தவர்கள்  பற்றி அவர்கொண்டிருந்த     மதிப்பீடுகள்  யாவும்  புரியாத  புதிராகவே தோன்றும்.
நான்  எழுதப்புகுந்த  1970  கால கட்டத்தில்  கொழும்பில்  பூரணி மகாலிங்கம்   அவர்களின்  இல்லத்தில்   நடக்கும்  சந்திப்புகளில் தருமு சிவராமின்   பெயர்  அடிக்கடி  உதிர்க்கப்படுவதை அவதானித்திருக்கின்றேன்.
தமிழகத்திற்கு   அவர்  சென்றதற்கான  நதிமூலம் -   ரிஷி மூலம் தெரியாது.
இலக்கிய   நண்பர்  ரத்னசபாபதி  அய்யர்  தருமு சிவராம்  பற்றி மல்லிகை   ஆண்டு  மலர்  ஒன்றில்  அருமையான    கட்டுரையை எழுதியிருந்ததைப்    படித்திருக்கின்றேன்.
கொழும்பில்    இலங்கை  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,   ரூபவாஹினி தொலைக்காட்சி  நிலையம்  உட்பட  பல  வெளிநாட்டுத்தூதரகங்கள், மற்றும்    அமைச்சர்களின்  வாசஸ்தலங்கள்  அமைந்துள்ள  கேந்திர முக்கியத்துவம்   வாய்ந்த  பிரதேசத்தில்  இருக்கும்  சீன  அரசினால் ஸ்ரீமாவோ   காலத்தில்  நிர்மாணித்து வழங்கப்பட்ட  பண்டாரநாயக்கா   சர்வதேச   மாநாட்டு  மண்டபம்  அமைந்துள்ள பிரதேசம்   ஒரு  காலத்தில்  புல்லும்  புதரும்  மண்டிக்கிடந்திருக்கிறது.    அங்கிருந்த  ஒரு   சிறிய கட்டிடமொன்றிலும்  தருமு  சிவராம்  வாழ்ந்திருக்கிறார்  என்ற தகவலை   ரத்தினசபாபதி  அய்யர்  தமது  கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில்  திருகோணமலையில்  தருமு சிவராமுக்கு எத்தனையோ   சொந்த  பந்தங்கள்  இருந்தும்  பிற்காலத்தில் தமிழகத்தில்    அஞ்ஞாதவாசம்  மேற்கொண்டு -  வாழ்நாள்  பூராவும் நஷ்டிக   பிரம்மச்சாரியாக  துறவு  வாழ்க்கை  வாழ்ந்தவரின்  உடல் தமிழகத்தில்   வேலுருக்கு  அருகாமையில்  கரடிக்குடி  என்ற கிராமத்து  மயானத்தில்  அடக்கமாகியிருக்கிறது.
1939   ஆம்  ஆண்டு   ஏப்ரில்  மாதம்  20  ஆம்  திகதி   இலங்கையில் திருகோணமலையில்   பிறந்து  தமது  20  வயதிலேயே எழுதத்தொடங்கி   1997  ஆம்   ஆண்டு  ஜனவரி  மாதம்  6  ஆம்  திகதி தமது  58  வயதில்  மறைந்த  தருமு  சிவராம்  சிறுகதை,  கவிதை, விமர்சனம்,   நாடகம்,   மொழிபெயர்ப்பு  முதலான  துறைகளில் மட்டுமன்றி  ஓவியம்,  மண்  சிற்பங்களிலும்  ஈடுபட்டவர்  என்பது அவரது  வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்து  தெரிகிறது.
தமது    இளம்  வயதிலேயே   மௌனியின்  சிறுகதைத்தொகுதிக்கு முன்னுரை   எழுதியிருப்பவர்  இந்த  வியப்புக்குரிய  மனிதர்.
தான்   சிறுகதை  எழுதும்  முன்னர்  மௌனியின் கதைகளைப் படித்துவிட்டே  சிறுகதை   எழுதத்தொடங்குவதாக    ஜெயகாந்தனும் முன்பொருதடவை   குறிப்பிட்டுள்ளார்.
இன்று   20-09-2015  ஆம்   திகதி  அவரது  அபிமான  வாசகர்கள் திருகோணமலையில்   நீங்களும்  எழுதலாம்  வாசகர்  வட்டம்     என்ற  இலக்கிய  அமைப்பின்  சார்பில்   மட்டக்களப்பிலிருந்து வெளியாகும்  மகுடம்   இதழின்  பிரமிள்  சிறப்பு  மலர் அறிமுகவிழாவையும்   நடத்தி  எங்கள்  தேசத்துக்கும்  தமிழகத்திற்கும்   பொதுவான   மனிதனாக  மறைந்த  தருமு சிவராமின் நினைவரங்கை    நடத்துகிறார்கள்.
இன்று   ஞாயிறு  மாலை  4   மணிக்கு  திருகோணமலை  புனித சூசையப்பர்  கல்லூரிக்கு  சமீபமாக  அமைந்துள்ள  Jesuits Academy  மண்டபத்தில்  நடக்கும்  இந்த  அரங்கிற்கு  நீங்களும்  எழுதலாம் இதழ்  ஆசிரியர்  திரு. எஸ்.ஆர். தனபாலசிங்கம் தலைமை தாங்குகிறார்.
சிரேஷ்ட  சட்டத்தரணி,  இலக்கிய  ஆர்வலர்  ஆ. ஜெகசோதி  பிரதம விருந்தினராக  கலந்துகொள்ளும்  இந்நிகழ்வில்  படைப்பிலக்கியவாதி   திருமலை   நவம்  சிறப்பு  மலர்  குறித்த விமர்சனவுரை   வழங்குகிறார்.
மனிதவாழ்வுக்கும்  பிரபஞ்சத்திற்கும்  இடையே   அந்த  கலை இலக்கிய  ஆளுமை  தேடிக்கண்டு பிடித்தது  என்ன...?
அதுவும்  அவர்  வாழ்க்கையைப்போன்று  ரிஷிமூலம்... நதி மூலம்தானா...?
----0---
Letchumananm@gmail.comNo comments: