மலரும் முகம் பார்க்கும் காலம் 13 - தொடர் கவிதை

.
கவிதை 13  டாக்டர் எழில்வேந்தன்  இந்தியா தமிழகம்

வாராமல் அவள் ஏக்கம் வரலாறாய்ப் போய்விடுமோ
தீராமல் அவள் வடிக்கும் கண்ணீரும் ஓய்ந்திடுமோ
மீட்பன் எனஒருவன் வந்திடுவான் என்றெண்ணி
வாட்டம் மிகக்கொண்டு வடிவம் குலையாமல்
தொழுது கரங்குவித்து தோளின் வலி குன்றாமல்
அழுத உன் கண்ணீர் ஆவியாகும் படிக்கு
எழுந்து விழி உயர்த்து பாரெங்கும் பார் செந்தீக்
கொழுந்து பரவட்டும் கண்ணில்  தமிழச்சி
மலரும் முகம்பார்க்கும் காலம் எதுவென்று
புலரும் பொழுதெல்லாம் ஆதவனைப் பார்த்திருந்தால்
கழுத்தின் சுளுக்கால் கடும் வலிதான் நேரும்
இழுத்து அரவணைப்பாய் இதயத்தின் அன்பால்
எல்லா தமிழரையும் புத்தொளியை நீபாய்ச்சி
பொல்லாத்தன மெல்லாம் பொசுக்கி உணர்வூட்டி
ஒத்திருக்கும்  சிந்தையெல்லாம் ஒன்றிணைத்து ஓங்கவைப்பாய்
வித்தக வீரத்தில் முனைமழுங்காத் தமிழர்எலாம்
நித்திலமாய் புவிப்பரப்பில் இறைந்து கிடக்கின்றார்
எத்தரத்தோர் என்றாலும் இணைந்திடுவர்
சத்தியமாய் நம்தமிழர்  வெற்றியென்று ஊதுசங்கே.

No comments: