.
ஆ. சபாரத்தினம் மாஸ்ரரின் மகள் மைத்ரேயியிற்கு எமது அலை இதழுடன் தொடர்பிருந்தது; பேராதனைப் பல்கலைக்கழக மாணவியாயிருந்த அவரின் சொந்தக் கவிதைகளுடன், மொழியாக்கக் கவிதைகளும் அலையில் வெளியாகின. பின்னர் அவர்மூலமாகவே மாஸ்ரருடனும் தொடர்பு ஏற்பட்டது.
1928 ஆம் ஆண்டு, ஐப்பசி 30 ஆம் திகதி பிறந்த சபாரத்தினம் மாஸ்ரர், மேலதிக ஆங்கில உதவி ஆசிரியராகச் சேவையில் சேர்ந்தார்; பின்னர் 1949 – 1950 ஆம் ஆண்டுகளில், மஹரகம ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். 33 ஆண்டுகள் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் ஆசிரியராகவும், கரம்பன் சண்முகநாத வித்தியாலயத்தில் அதிபராகவும் (1984 – 1988) பணியாற்றி, ஒய்வு பெற்றுள்ளார்.
ஆன்மிக ஈடுபாடு மிக்கவர்; பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பண்டிதர் சோ. தியாகராசபிள்ளை, சைவ ஆசிரியர் கலாசாலை உப அதிபர் பொ. கைலாசபதி முதலியோருடன் நெருக்கமான தொடர்புகளையும் கொண்டிருந்தவர். எனினும், தமிழிலும் ஆங்கிலத்திலும் நவீன இலக்கியங்களுடனும் தொடர்பு உடையவர். முற்போக்கான சிந்தனைகளையும் நடைமுறைகளையும் கொண்டவர். எப்போதும் மற்றவருக்கு உதவி புரிபவராகச் செயற்படுபவர் என்பதும் குறிக்கத்தக்கது. நெருக்கடியான சூழலில்
ஊர்காவற்றுறையிலிருந்து இடம்பெயர்ந்து, யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் வாழ நேர்ந்த காலங்களிலும், வயதில் குறைந்த மாணவரின் தேவையென்றாலும், தனது முதிய வயதிலும் சைக்கிளில் பல இடங்களுக்கும் சென்று, பலரிடமும் விசாரித்து, தேவையான புத்தகங்களையோ மற்றவற்றையோ பெற்று உதவும் பண்பு அவருடையது. மேலும், வயது சென்று முதுமைகூடி, சைக்கிள் ஓடுவதைத் தவிர்த்துள்ள – ஒரு கண் பார்வையை இழந்துள்ள - தற்போதைய நிலையிலும், வீடுதேடி வரும் முதுதத்துவமாணி முதலிய பட்டப் பின்படிப்பை மேற்கொள்ளும் பலருக்கு உதவி செய்துகொண்டிருப்பதைச் சிலரே அறிவர்! வழிகாட்டல் குறிப்புகள் மட்டுமல்லாது, தேவையான நீண்ட நூற்பகுதிகளை ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்து வழங்குவதையும் தொடர்ந்தபடி உள்ளார். இவையெல்லாம் இலவசப் பணிகளாகவே நடைபெறுகின்றன. மற்றவர்க்காய்த் தம்மை வருத்திப் பணிசெய்யும் பழைய தலைமுறையின், ‘வகைமாதிரி’ மனிதர்தான் சபாரத்தினம் மாஸ்ரர்!
எண்பதுகளின் தொடக்கத்திலும் நடுப்பகுதியிலும் பல தடவைகள் ஊர்காவற்றுறை சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன். காவலூர் இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் தலைவராக அவர் இருந்தார்; இடதுசாரிக் கருத்துநிலைகொண்ட பலரும் அந்த அமைப்பில் இருந்தனர். மற்றவர்களையும் இணைத்து, நூல் அறிமுகங்கள், இலக்கியக் கருத்தரங்குகள் முதலியவற்றை நடத்தினார்; இலக்கிய வட்டத்துக்கென நல்ல நூல்களையும் சிற்றிதழ்களையும் சேகரித்து, தீவிர வாசிப்பினையும் ஊக்குவித்தார். இக்காலங்களில் அவர் செய்த இன்னொரு பணி, மிகவும் முக்கியமெனக் கருதுகிறேன்.
பாடசாலைத் தவணை விடுமுறைக் காலங்களில், மாணவருக்கான முழு நாள் கலை இலக்கியப் பயிலரங்குகளை ஒழுங்குசெய்தமையே அதுவாகும். அனலைதீவு, நயினாதீவு ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளிலும்; ஊர்காவற்றுறையிலுள்ள அந்தோனியார் கல்லூரி, சிறிய புஷ்பம் கன்னியர்மடம் வித்தியாலயத்திலும் கல்வி கற்கும் உயர்தர வகுப்பு மாணவர்களை அழைத்துப் பயிலரங்குகளில் பங்குபற்ற வைத்தார். வேலணையிலும் சரவணையிலும் உள்ள மாணவர்களைச் சேர்த்து, அப்பிரதேசத்திலும் இவ்வாறான பயிலரங்குகளை நடத்தியுள்ளார். இப்பயிலரங்கு களில் நவீன இலக்கியங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் பற்றிய உரைகள் வழங்கப்பட்டன. ‘தண்ணீர் தண்ணீர்’ முதலிய மாறுதலான படங்கள் காட்டப்பட்டு, திரைப்பட இரசனைக்கு வழி காட்டப்பட்டது. மாணவரின் படைப்பாற்றலை வளர்ப்பதற்காக - கவிதை, சிறுகதைகள் போன்றவற்றை எழுதுமாறு அவர்கள் ஊக்குவிக்கப்பட்டு, அவைபற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்தப் பயிலரங்குகளின் வளவாளர்களாக சசி கிருஷ்ணமூர்த்தி, நான், சேரன், அ. இரவி முதலியோர் யாழ்ப்பாணத்திலிருந்து சென்று கலந்துகொண்டோம். அவரது இல்லத்தில், அவரதும் அவரது மனைவியாரினதும் அன்பான உபசரிப்புடன் மதிய உணவை உண்டோம். வேண்டாம் வேண்டாம் என்று நாம் மறுத்தாலும், போக்குவரத்துச் செலவுக்கென ஒரு தொகைப் பணத்தை எங்களின் சேர்ட் பைகளில் வற்புறுத்தித் திணித்துவிடுவார்! பங்குபற்றும் மாணவர் தமது மதிய உணவைக் கொண்டுவருவர்; முற்பகலிலும் பிற்பகலிலும் பிஸ்கற்றும் தேநீரும் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
எதிர்காலத் தலைமுறையினரிடம், கலை இலக்கியம் பற்றிய பரிச்சயத்தையும் நல்ல இரசனையை வளர்க்க வேண்டுமென்ற முன்னோக்கிய சிந்தனை, இன்றுகூடப் பலரிடம் இல்லை. ஆனால், ஒரு நல்லாசிரியனுக்குரிய முன்னுணர்வுடன் நீண்ட காலத்தின் முன்னரே சிந்தித்ததுடன், செயலிலும் ஈடுபட்ட சபாரத்தினம் மாஸ்ரரின் பணி, மதிப்புடன் நினைவுகூரத் தக்கது!
எண்பதுகளில் தினகரன் ஞாயிறு வார மஞ்சரியில், ஆங்கில இலக்கியவாதிகள் பற்றிய நீண்ட (ஏறக்குறைய முழுப்பக்கம்) கட்டுரைகள் பல அடிக்கடி வெளிவந்தன. புகழ்பெற்ற பலரையும் பற்றிய விரிவான தகவல்களையும் மதிப்பீடுகளையும் கொண்டவையாக அவை அமைந்திருந்தமை, பலருக்கும் பயன் அளித்தது. எழுதியவர் பெயர் வாமதேவி கணபதிப்பிள்ளை என்றிருந்தது! இலக்கிய உலகில் அறியப்பட் டிருக்காத ஒரு புதிய பெயர்; அவர் யார் என்ற வினா பலரிடமும் இருந்தது. ஆனால், அன்று யாருக்கும் விவரம் தெரியவில்லை. பின்னாள்களில் ஒரு நாள், மாஸ்ரருடன் கதைக்கையில், தற்செயலாக இதுபற்றிக் குறிப்பிட்டேன். அப்போதுதான் அவர், அப்பெயரில் கட்டுரைகளை எழுதியது தான்தான் எனச் சிரித்தபடி தெரிவித்தார். “ஏன் பெண்ணின் பெயரில் எழுதினீர்கள்?” எனக் கேட்டேன். சொந்தப் பெயரில் அவர் அனுப்பிய கட்டுரைகள் பல பிரசுரிக்கப்பட வில்லையாம்; ஒரு நண்பர் சொன்னபடி, பெண்ணின் பெயரில் – தனது மருமகளின் பெயரில் – ஒரு கட்டுரையை அனுப்பியவுடன் வெளிவந்துவிட்டதாம்!; அதனாலேயே, தான் எழுதும் கட்டுரைகளை அந்தப் பெயரிலே அனுப்பி வந்ததாகவும், மீண்டும் சிரித்தபடி கூறினார்! நமது பத்திரிகை உலகின் நிலைமை, இன்றும் இவ்வாறு இருப்பதும் வேடிக்கைதான்!
**
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த, டொமினிக் ஜீவாவின் மல்லிகை சிற்றிதழுக்கு, ஏ.ஜே. கனகரத்தினாவின் நிரம்பிய ஒத்துழைப்பு இருந்தமை தெரிந்ததே. எழுபதுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் பணியாற்றிய அவர், தனது பணி முடிந்ததும் மாலை வேளையிலும், விடுமுறை நாள்களில் பகல் வேளையிலும் அடிக்கடி மல்லிகை அலுவலகம் சென்று, பலவிதங்களில் ஜீவாவுக்கு உதவியாக இருந்தார். ஒரு நாள், மல்லிகைக்கு வந்த ஆக்கங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு கட்டுரை அவரை நன்கு கவர்ந்தது; அதனைப பிரசுரிப்பதற்காகத் தெரிந்தெடுத்தார். ஆனால், அக்கட்டுரையில் எழுதியவரின் பெயரோ முகவரியோ இருக்கவில்லை; எனவே, அதுபற்றி ஜீவாவிடம் விசாரித்திருக்கிறார். அதனை அவதானித்த - மல்லிகையில் அச்சுக் கோப்பாளராகக் கடமையாற்றிய - சந்திரசேகரம், அன்று காலை யாரோ ஒரு வயதுபோனவர் வந்து கட்டுரையொன்று தந்ததாகவும், விசாரித்தபோது தான் ஊர்காவற்றுறையிலிருந்து வந்ததாகச் சொன்னதாகவும் தெரிவித்தார். உடனே ஏ. ஜே., காவல் நகரோன் என்ற பெயரை எழுதி, அக்கட்டுரையை வெளியிடக் கொடுத்தார்; அதன் பிறகு, சபாரத்தினம் மாஸ்ரரின் கட்டுரைகள் பல, மல்லிகையிலும் வெவ்வேறு வெளியீடுகளிலும் இதே பெயரில் வெளிவந்துள்ளன.
அலையுடன் அவருக்கு நல்ல தொடர்பு இருந்தது. ரொம் ஸ்ரொப்பட் என்னும் நாடக எழுத்தாளர் பற்றியும், எலையாஸ் கனெற்றி என்னும் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் பற்றியும் அவர் எழுதிய கட்டுரைகள், 1981 இல் அலையில் வெளிவந் துள்ளன; அதேபோல், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மறைவையொட்டி அவர் எழுதிய கட்டுரை, 1986 இல் வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்த பொன்ட் இன்ஸ்ரியூட்டில் அலை இதழின் விமர்சனக் கூட்டமொன்று நடைபெற்றபோதும், அவரே அதற்குத் தலைமை தாங்கி நடத்தினார். எழுபதுகளின் பிற்பகுதியில், அவைக்காற்று கலை கழகம், பிற மொழி நாடகங்கள் பலவற்றைத் தமிழில் சிறப்பாக மேடையேற்றியது. அவ்வேளை ஒரு சாரார், இந்தப் பிறமொழி நாடக முயற்சிகளுக்கு எதிரான கருத்துக்களையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். சபாரத்தினம் மாஸ்ரர் இப்பிறமொழி நாடகங்கள் சிலவற்றின் மேடையேற்றம் பற்றி, விமர்சனக் கட்டுரைகள் எழுதினார்; பாதல் சர்க்காரின் முகமில்லாத மனிதர்கள் நாடகம் பற்றி அவர் எழுதிய கட்டுரை, மிகவும் நீண்ட கட்டுரையாகும். அவைக்காற்று கலை கழக முயற்சிகளின் முக்கியத்துவம், அவரின் கட்டுரைகள் மூலமும் அக்காலத்தில் உறுதிப்படுத்தப்பட்டமை முக்கியமானதாகும்! இதைத் தவிர, நான் திசை வாரப் பத்திரிகையில் துணை ஆசிரியராகக் கடமையாற்றியபோது, ஒருநாள் அருட்பணி டொமினிக் A. ஜோசப்புடன் அலுவலகம்வந்து, மாசலின் சிந்தனை பற்றி நம்மவரின் புதிய நூல் என்னும் கட்டுரையைத் தந்தார். திசை ஆசிரியர் மு. பொன்னம்பலமும் பரிசீலித்தபின் அந்தக் கட்டுரையை, 09. 06. 1989 இலிருந்து, நான்கு வாரங்கள் தொடர்ச்சியாகப் பிரசுரித்தோம். கத்தோலிக்க இருத்தலியல் மெய்யிய லாளரான கபிரியேல் மாசல் பற்றிய ஆய்வை, உரோம் நகரில் மேற்கொண்ட அருட்பணி டொமினிக் A. ஜோசப், Self – Realization and Inter Subjectivity in Gabriel Marcel என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார்; அந்த நூலின் சில பகுதிகளை மொழிபெயர்த்து, குறிப்புகளையும் சேர்த்து சபாரத்தினம் மாஸ்ரரால் எழுதப்பட்டதே மேலே குறிப்பிடப்பட்ட கட்டுரையாகும்.
எனது மொழியாக்கக் கவிதைகள்கொண்ட பனிமழை என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு, 2002 இல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறை மண்டபத்தில் நடைபெற்றபோது, அந்நூலின் முதற் பிரதியைச் சபாரத்தினம் மாஸ்ரருக்கே வழங்கி நான் பெருமை அடைந்தேன்! தனது 87 ஆவது வயதில் முதுமையின் காரணமாய்ச் சற்றுத் தளர்ச்சியுற்றிருந்தாலும், இன்னும் பல காலம் வாழ்ந்து அவர் பணியாற்ற வேண்டுமென, அவரை அறிந்த பலரைப்போலவே நானும் மனமார விழைகிறேன்!
nantri ஜீவநதி புரட்டாதி 2015
No comments:
Post a Comment