.
வீரகேசரி குடும்பத்திலிருந்து ஒரு ஓவியர்
மொராயஸ்.
இலங்கை
புத்தக அபிவிருத்திச்சபையின் விருதினைப் பெற்றவர். மல்லிகை அட்டைப்பட அதிதியாக கௌரவிக்கப்பட்டவர்.
இலங்கையில்
நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் கதைகளுக்கு படம் வரைந்தவர். எம்.ஜீ.ஆரின்
விருப்பத்தில் அவரது ' தாய் ' இதழுக்கும்
படம் வரைந்தார்
உலகப்பிரசித்திபெற்ற ஓவியர் பிக்காசோ, மொனாலிசா
ஓவியம் பற்றி அறிந்திருப்போம். ஆனால், இந்தப்பெயர்களை
இலங்கையில் பிறந்து, தனது வாழ்நாள்
முழுவதும் ஓவியராகவே வாழ்ந்த ஒருவர் தமது பிள்ளைகளுக்கு
வைத்து அழகு பார்த்த செய்தி தெரியுமா...?
வீரகேசரியுடன் எனக்கு உறவும்
தொடர்பும் ஏற்பட்ட 1972 ஆம்
ஆண்டு முதல் என்னுடன் நட்புறவாடிவரும் ஓவியர் மொராயஸ்
அவர்களது பிள்ளைகள்தான் அந்த பிக்காசோவும்
மொனாலிசாவும். அவரது மற்றும் ஒரு மகன்
சார்ள்ஸ்.
ஓவியத்துறைமீது அவருக்கு இருந்த ஆர்வம்தான்
அவரது பிள்ளைகள் இருவருக்கு பிரசித்தி பெற்ற அந்தப்
பெயர்களை சூட்ட வைத்திருக்கிறது. சிலர் தமது
முன்னாள் காதலிகள், காதலர்களின் அல்லது தமது விருப்பத்துக்குரிய
கடவுள்களின் பெயர்களை -வாசித்து அனுபவித்த கதைப்பாத்திரங்களின் பெயர்களை அல்லது குடும்பத்தின் பரம்பரை பெயரை தமது பிள்ளைகளுக்கு
வைப்பார்கள்.
அவ்வாறு தமக்குப் பிடித்த ஓவியத்துறை சார்ந்த பெயர்களை மொராயஸ் தமது பிள்ளைகளுக்குச்
சூட்டியது வியப்பல்ல.
வத்தளை புனித
அந்தோனியார் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை முடித்திருந்த மொராயஸ் விரும்பியவாறு இவரது தந்தையார்
தமிழ்நாட்டுக்கு இவரை அனுப்பி
படிக்கவைத்தார். இளம் வயதுமுதலே இவருக்கு ஓவியம் வரைவதில் இருந்த நாட்டம்தான் பின்னாளில் ஓவியக்கல்லூரியிலும் இணையச் செய்திருக்கிறது.
பொதுவாக எமது தமிழ்
சமூகத்தில் தமது பிள்ளைகள்
மருத்துவர்களாக பொறியியலாளராக சட்டத்தரணிகளாக கணக்காளராக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புத்தான்
அந்நாளைய பெற்றோர்களிடம் இருந்தது.
காரணம் இந்தத்துறைகளில் நிறைய சம்பாதிக்கமுடியும் சமூக அந்தஸ்தை
வளர்த்துக்கொள்ளவும்முடியும் என்ற மனப்பான்மைதான்.
ஓவியம், கலை, ஊடகம்
முதலான துறைகள் புகழைமட்டும்தான் தரும், சோற்றுக்கு திண்டாட்டத்தைதான் தரும் என்று
அந்நாளைய பெற்றோர்கள் நினைத்தார்கள்.
தமது மகனின்
விருப்பம் அறிந்து தமிழ்நாட்டில் ஓவியக்கல்லூரியில் இணைத்துவிட்ட அந்தத் தந்தை
சற்று வித்தியாசமானவர்தான். அத்துடன் மொராயஸின் அண்ணன் லெனின் மொராயஸ், இலங்கையில் பிரபலமான சினிமா இயக்குநர். சுமார்
நாற்பது சிங்களப்படங்களை இயக்கியிருப்பவர். அவர் இறுதியாக இயக்கிய படம் நெஞ்சுக்குத்தெரியும்
என்ற தமிழ்ப்படம். ஆனால், அது வெளியாகவில்லை.
எஸ்.ரி.ஆர். பிக்சர்ஸ் ( எஸ்.ரி. தியாகராஜா தயாரித்த) படம் வத்தளை
சினிமாஸ் ஸ்டுடியோவில் 1983 வன்செயலில்
எரிந்து சாம்பரானது.
ஒகஸ்டின் மொராயஸ் இலங்கை பத்திரிகை
ஊடகத்துறையில் ஓவியர் மொராயஸ் என்றே அறியப்பட்டவர்.
பல ஆண்டுகளுக்கு
முன்னர் காமினி பொன்சேக்கா தயாரித்து நடித்த சாகரயக்மெத ( சமுத்திரத்தின் நடுவே) என்ற
திரைப்படத்தில் அவருடைய மகனாக நடித்திருப்பவர்
பிரேமதாச காலத்தில் கொல்லப்பட்ட
பிரபல ஊடகவியலாளர் ரிச்சர்ட் டீ சொய்ஸா.
இடதுசாரி சிந்தனையுடன் தன்னை ஒரு
முற்போக்குவாதியாக காண்பிக்கும் பாத்திரம் ஏற்று நடித்திருக்கும்
ரிச்சர்ட் தந்தையிடம் தனது தலைவர்
லெனின் என்று சொல்வார்.
உடனே காமினி பொன்சேக்கா, " எந்த லெனின்....?
தனக்கு லெனின் மொராயஸைத்தான் தெரியும் " - என்பார்.
இந்தக்காட்சியில் திரையரங்கில் சிரிக்காதவர்கள் இல்லை.
அண்ணன் காட்டிய வழியில் அவர் தம்பி
மொராயஸ_ம் ஆரம்பத்தில் இலங்கையில் திரைப்படத்துறையில் கலை இயக்குநராகவும் திரைப்படங்களுக்கு
டைட்டில் எழுதுபவராகவும் தொழிற்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு ஓவியக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள்
ஓவியம் பயின்றுவிட்டு அங்கேயே இரண்டு ஆண்டுகாலம்
ஓவிய ஆசிரியராகவும் பணியாற்றிய பின்னரே நாடு திரும்பிய
மொராயஸ், கொழும்பில் வெளியான சிங்களப்படங்களுக்கு சுவரொட்டிகள் வரைந்தார்.
அக்காலத்தில் வெளியான தமிழ்ப்படம் மஞ்சள் குங்குமம்.
இந்தப்படத்திற்குரிய சுவரொட்டிகளை வரைந்துகொண்டிருந்தபொழுது, அதில் நடித்த நடிகர்
ஸ்ரீசங்கர், இவரை அழைத்துக்கொண்டு வீரகேசரி அலுவலகம் வந்து, அச்சமயம்
அங்கு செய்தி ஆசிரியராக
இருந்த டேவிட் ராஜூவிடம்
அறிமுகப்படுத்தினார்.
1969 இலிருந்து
வீரகேசரியில் ஓவியராக பணியாற்றிய மொராயஸ் 1982 ஆம் ஆண்டிலேயே
அங்கு நிரந்தர ஊழியரானார் என்பது கவலைக்குரிய செய்திதான். மித்திரன், மித்திரன்
வாரமலர், வீரகேசரி நாளிதழ்,
வீரகேசரி வாரவெளியீடு முதலானவற்றிலெல்லாம் படங்கள் வரைந்த இவர்,
அங்கு ஆசிரியர்களாக பணியாற்றிய க. சிவப்பிரகாசம், சிவநேசச்செல்வன், நடராஜா, தேவராஜா, பிரபாகரன் மற்றும் பொன். ராஜகோபால், கார்மேகம், அன்னலட்சுமி இராஜதுரை உட்பட ஆசிரிய
பீடத்தைச் சேர்ந்தவர்கள் பலரினதும் - பொது முகாமையாளர்
பாலச்சந்திரன், விநியோக விளம்பரப்பிரிவு முகாமையாளர் சிவப்பிரகாசம் உட்பட அனைத்து ஊழியர்களினதும் அன்பிற்கும் அபிமானத்துக்குமுரிய சகோதரனாகவே நடந்துகொண்டவர்.
கடந்த
2014 ஆம் ஆண்டு செப்டெம்பர்
மாதம் அங்கிருந்து ஓய்வுபெற்றாலும் இன்றும் ஓவியக்கலை பிரக்ஞையுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
ஒருதடவை புனைபெயரில் நான் மித்திரனில்
ஒரு தொடர்கதை எழுதினேன். அதன் முதல்
அத்தியாயத்தை படித்துவிட்டு அதன் நாயகனுக்கு எனது அனுமதியில்லாமலேயே எனது முகத்தோற்றத்தையே வரைந்துவிட்டார். அந்தக்கதை
முடியும்வரையில் எனது பல்வேறு தோற்றங்களுடன் வெளியானது. மொராயஸ் வீரகேசரி ஆசிரிய பீடத்தில்
என்னருகே முன்னால் அமர்ந்தவாறுதான் படங்கள் வரைவார். என்ன வம்புக்கு
அப்படி வரைந்தாரோ நான் அறியேன். அமைதியானவர். ஆனால்,
ஊமைக்குசும்புத்தனம் அவரிடம் நிறையவே காணப்பட்டது.
வீரகேசரி வாரவெளியீட்டில் இரண்டு பக்கங்கள்
சினிமாவுக்காக ஒதுக்கப்பட்டது. அந்தப்பக்கங்களை நிரப்பும் பணியும் மொராயஸ_டையதாகவே இருந்தது. சினிமா ரசிகர்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் வீரகேசரி வாரவெளியீட்டை குறித்த இந்த இரண்டு
பக்கங்களுக்காகவே பார்த்தனர்.
ஒரு காலகட்டத்தில்
விடுதலைப்புலிகளினால் வடபகுதியில் இந்தியத்திரைப்படங்கள் காண்பிப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. அதனால் அங்கிருந்த சினிமா ரசிகர்கள் வாரம்தோறும் வீரகேசரி வாரவெளியீட்டைப்பார்த்தே திருப்தியடைந்தது மட்டுமல்லாமல் நன்றி தெரிவித்து கடிதங்களும் எழுதியுள்ளனர்.
மொனாலிசா கேள்வி - பதில் பகுதியையும் மொராயஸ்தான் கவனித்தார். அத்துடன் சினிமா குறுக்கொழுத்துப்போட்டிகளும் அந்தப்பகுதியில் நடத்தப்பட்டது.
சினிமா ரசிகர்கள் (வாசகர்கள்) ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் வாரம்தோறும் வீரகேசரியை
பெற்றுப்படித்தேன். இன்றுபோல்
அன்று இணையத்தில் பார்க்கும் வசதி இருக்கவில்லை. எனது மூத்த மகள்
பாரதியும் விரும்பிப்பார்க்கும் பக்கம் வீரகேசரியில்
மொனாலிசாவின் தயாரிப்பில் அச்சாகும் சினிமா பக்கம்தான்.
ஒருநாள் ஒரு போட்டியில் சரியான விடை
எழுதியவர்களின் பெயர்களில் எனது மகளின்
பெயரும் முகவரியும் (பாரதி முருகபூபதி)
இருந்தது.
எனது மகளுக்கு
அதனை நான் காண்பித்தபொழுது,
" அப்பா நான் எங்கள் வீட்டு முகவரி எழுதாமல்தான் அந்தப்பதில் அனுப்பினேன். எப்படி முகவரி வந்தது என்பது
தெரியவில்லை. " - என்றாள்.
மொராயஸ_க்கு எமது முகவரி
தெரியும். இந்தக்குசும்புக்காரர் பதிவுசெய்துவிட்டார். ஆனால் அதன் பலனை
பிறகு அனுபவித்தோம்.
யார் யாரோ
எனது மகளுக்கு கடிதம் எழுதி
அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு உதவி செய்யமுடியுமா...?
என்றெல்லாம் கேட்கத்தொடங்கிவிட்டார்கள். அன்றோடு மகள் இந்தப்பகுதியில்
வரும் போட்டிகளில் பங்குபற்றாமல் தவிர்த்துக்கொண்டாள். ஆயினும் வீட்டுக்கு வீரகேசரி வாங்கி வந்ததும்
ஓடிவந்து சினிமா பக்கங்களை எடுத்துக்கொண்டு
முழுவதும் படித்துவிட்டுத்தான் மறுவேலை பார்த்தாள்.
மொராயஸின் ஒரு புதல்வர்
சார்ள்ஸ் அவுஸ்திரேலியா மெல்பனில் வசிக்கிறார்.
அவரிடம் அண்மையில் தமது மனைவியுடன் வருகைதந்திருந்த மொராயஸ_டன் நீண்டபொழுதுகள் உரையாட
சந்தர்ப்பம் கிடைத்தது.
அவருடனான சந்திப்பில், சினிமா உலகம் பற்றியும்
இலங்கையில் திரைப்படத்துறை பற்றியும் கலந்துரையாட முடிந்தமையினால், இந்தத்திரும்பிப்பார்க்கின்றேன்
தொடருக்கு பல தகவல்கள்
கிடைத்தன. இலங்கையில் சிங்களப்படத்துறை முன்னேறிய அளவுக்கு தமிழ்த்திரைப்படத்தயாரிப்பு முன்னேறாமல் நலிவுற்றதன் காரணங்களும் புலப்பட்டன. அதுபற்றி
பிறிதொரு பத்தியில் விரிவாக எழுதலாம்.
ஓவியர் மொராயஸ் வீரகேசரி வாரவெளியீட்டில் வாராந்தம் வெளியாகும் சிறுகதைகளுக்கெல்லாம் படம் வரைந்தவர்.
அதனால் பலரதும் கதைகளை படித்த
வாசிப்பு அனுபவமும் அவருக்கு இருந்தது. திரைப்படங்களில்
கதைக்கும் காட்சிக்கும் பொருத்தமாக அமையும் பாடல்களை
இயற்றும் திரைப்படப் பாடலாசிரியர்களின் பணிக்கு ஒப்பானது கதைகளுக்கு படம் வரையும்
வேலை.
மொராயஸ் வீரகேசரி பிரசுரங்களாக வெளியான நாவல்களுக்கும் அட்டைப்படம் வரைந்தவர். 1973 காலப்பகுதியில் , ஈழத்தின்
மூத்த எழுத்தாளர் செ. கதிர்காமநாதன் எழுதிய நான்
சாகமாட்டேன் சிறுகதைத்தொகுதிக்கு முகப்போவியம் வரைந்தவர் மொராயஸ். அந்த
நூல் வெளியானதை பார்க்காமலேயே கதிர்காமநாதன் அற்பாயுளில் மறைந்துவிட்டார்.
கதிர்காமநாதனும் முன்னர்
அங்கு மித்திரனில் துணை ஆசிரியராக
பணியாற்றியவர்தான்.
அப்பொழுது
இயங்கிய புத்தக அபிவிருத்தி
சபையினால் சிறந்த அட்டைப்படத்திற்கான விருது மொராயஸ் வரைந்த செ.
க. எழுதிய நான் சாகமாட்டேன் தொகுப்பின் அட்டைப்படத்திற்கே கிடைத்தது. அதனை வழங்கியவர் அன்றைய கல்வி
அமைச்சர் பதியுதீன் முகம்மத். புத்தக அபிவிருத்திச்சபையில் அங்கம் வகித்த
பேராசிரியர் கா. சிவத்தம்பி, மொராயஸை இலங்கை வானொலி கலையகத்திற்கு அழைத்து
நேர்காணலும் ஒலிபரப்புச்செய்தார்.
பின்னாளில் ஊடகவியலாளர் தேவகௌரி எழுதிய மல்லிகை
இதழ்கள் பற்றிய (மல்லிகைப்பந்தல் வெளியீடு ) ஆய்வு நூலுக்கும் மொராயஸ் முகப்போவியம் வரைந்துள்ளார்.
இலங்கையில் பாரதி என்ற எனது ஆய்வுநூலுக்கும்
அவர் வரைந்து தந்தார். ஆனால், அந்த
நூல் வெளியாவதில் தொடர்ந்தும் தாமதம் நீடிப்பதற்கு
நான்தான் காரணம்.
ஒருதடவை எம்.ஜி.ஆர்.
தமிழக முதல்வராக பதவியில் இருந்தபொழுது சென்னைக்கு வந்திருந்த மொராயஸை அங்கு அவ்வேளையில் தங்கியிருந்த
எழுத்தாள நண்பர் காவலூர்
ஜெகநாதன் இவரை எம்.ஜீ.ஆரிடம் அழைத்துச் சென்றார்.
அக்காலப்பகுதியில் அண்ணா தி.மு.க வின் தாய் என்ற
வார இதழ் வெளியானது. அதன் ஆசிரியர்
வலம்புரி ஜோனை அழைத்த
எம்.ஜீ.ஆர், மொராயஸை தாய் இதழுக்கு
பயன்படுத்திக்கொள்ளுமாறு பணித்துள்ளார்.
எம்.ஜீ. ஆருக்கு இலங்கை தமிழ்ப்பத்திரிகைகளில்
நல்ல அபிமானம் இருந்தது. அவரது படங்களுக்கு
ரசிகர்களின் வரவேற்பை பெற்றுக்கொடுத்ததில் இலங்கை தமிழ்ப்பத்திரிகைகள் முன்னின்றவை.
ஒருசமயம் அவரது எங்கவீட்டுப்பிள்ளை வெளியான
நேரத்தில் குணசேனா பத்திரிகை நிறுவனத்தின் வெளியீடான ராதா என்ற
வார இதழின் சார்பில் அவரை அழைத்திருந்தது. அவ்வேளையில்
எம்.ஜீ.ஆர். வீரகேசரி அலுவலகத்திற்கும் வந்திருக்கிறார். அத்துடன்
வீரகேசரி பணிப்பாளர் சபையின் தலைவர், வர்த்தகப் பிரமுகர் ஞானம் - எம். ஜீ.
ஆர். நடித்த நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்.
மொராயஸ் வீரகேசரியிலிருந்து வந்திருப்பது அறிந்து வரவேற்ற எம்.ஜீ.ஆர். இவரை தாய்
இதழ் ஆசிரியர் வலம்புரி ஜோனுக்கு அறிமுகப்படுத்தியதில் ஆச்சரியம் இல்லை. தாய் இதழில்
அவ்வாரம் வெளிவரவிருந்த ஒரு சிறுகதையை
மொராயஸிடம் படிக்கக்கொடுத்த வலம்புரிஜோன் அதற்கு படம்
வரைந்து தருமாறும் கேட்டுள்ளார்.
உடனேயே அக்கதையை படித்துவிட்டு அவர் முன்னிலையிலேயே படம் வரைந்துகொடுத்து
பாராட்டுப்பெற்றுவிட்டே நாடு திரும்பினார்.
தாய் இதழில்
மொராயஸின் நேர்காணலும் வெளியானது.
மொரயஸின்
ஓவிய வாழ்வையும் பணிகளையும் கௌரவிப்பதற்கு
மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவும் முன்வந்தார்.
2007 ஆம் ஆண்டு ஜூன்
மாதம் வெளியான மல்லிகையின் அட்டையை அலங்கரித்தவர்
ஓவியர் மொராயஸ்.
இவர் பற்றிய கட்டுரையை எழுதியவர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான உடப்பூர் வீரசொக்கன்.
வீரகேசரி
நிருவாகம் இவரை தொடர்ந்தும்
பணியில் ஒப்பந்த அடிப்படையில் வைத்திருக்கத்தான்
விரும்பியிருக்கிறது. ஆனால் பிள்ளைகளின் வேண்டுகோளினால் வந்துவிட்டார்.
தற்பொழுது இணையத்தின் வருகையினால் சினிமா பற்றிய
செய்திகளையும் படங்களையும் தாராளமாக தரவிரக்கம் செய்து பார்க்க
முடிகிறது.
மின்னல் வேகத்தில் ஊடகத்துறை வளர்ச்சிகண்டு வருவதனால் பத்திரிகைகளில் ஓவியத்துறை சார்ந்தவர்களும் ஓய்வுபெறவேண்டியதாகிவிட்டதும் காலத்தின் மாற்றம்தான்.
----0----
letchumananm@gmail.com
No comments:
Post a Comment