"கூலித் தமிழ்" ஈழத்து மலையகத் தமிழரின் துயர்மிகு வரலாறு பேசும் சாட்சியம் - கானா பிரபா‏

.

வீரகேசரி வாரமலர் ஒன்றின் புத்தக அறிமுகப்பகுதி வழியாகத் தான் மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய
"கூலித் தமிழ்" என்ற நூல் குறித்த அறிமுகம் எனக்குக் கிடைத்தது.
அப்பொழுதே இந்த நூலை வாங்கி விட வேண்டும் என்ற வேட்கை என்னுள் எழுந்தது. 
ஈழத்து இலக்கிய அரங்கில் மலையக இலக்கியமும் செழிப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றது என்றாலும் ஒப்பீட்டளவில் அந்த மண்ணும் மக்களும் இன்று வரை எவ்வளவு தூரம் அரசியல் தான் தோன்றித் தனங்களால் உரிமை மறுக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட சமூகமாக இருக்கிற சூழலே வாசகப்பரப்பில் மலையக இலக்கியங்களுக்கும் நிகழ்வதாக நான் கருதுகிறேன். மலையக இலக்கியகர்த்தாக்கள் குறித்த பதிவு இதுவன்று என்பதால் இத்தோடு முற்றுப்புள்ளி வைத்து "கூலித் தமிழ்" இற்குத் தாவுகிறேன்.

மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய இந்த "கூலித் தமிழ்" ஒரு முறையான வரலாற்று ஆவணம். 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் மலையகத்தில் தேயிலைத் தோட்டப் பயிர்ச் செய்கைக்காக இந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து வந்த சமூகத்தின் துயரம் தோய்ந்த வரலாற்றை உண்மைத் தரவுகளோடு சான்று பகிர்கின்றது. இந்த நூலில் பொதிந்திருக்கும் வரலாற்று ஆதாரங்களை நூலாசிரியர் நூற்றாண்டுக்கு முந்திய வரலாற்று ஆவணங்களை முன் வைத்து எழுதியிருப்பதே இந்த நூலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.


மு.நித்தியானந்தன் அவர்கள் ஈழப்போராட்ட காலத்தில் வெலிகடை சிறையில் இருந்த பின்னணி பலரும் அறிந்ததொன்று.  சில வருடங்களுக்கு முன் வானொலிப் பேட்டிக்காக அவரிடம் பேசிய போதெல்லாம் முகம் தெரியாத போதும் அவர் பேசிய அன்பொழுகும் வார்த்தைகள் இன்னும் நினைப்பில் இருக்கு.
ஆனால் இந்த நூலைப் படித்த பின்னர் இவரின் இன்னொரு முகம் கண்டு உண்மையில் பிரமித்துப் போனேன்.
ஒரு தேர்ந்த வரலாற்றாசிரியனின் கட்டுமானத்தோடு அவர் இந்த நூலில் மலையக மக்களின்  இருண்ட வாழ்வியலை எழுதும் போது உள்ளதை உள்ளவாறு ஒப்புவிக்காமல் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு அம்சங்களையும் வரலாற்றாதாரங்களோடு ஒப்பிட்டும், முரண்பட்டும், அப்படி முரண்படும் போதெல்லாம் தான் முன் வைக்கும் கருத்தை மறுதலிக்கமுடியாதவாறு நிரூபித்துச் செல்கிறார். இந்த மாதிரியான செயற்பாடு என்பது உண்மையில் இப்படியானதொரு ஆய்வில் முழுமையாக மூழ்கி மெய்யறிவைத் தேடி ஒப்புவிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வான வரலாற்றாசிரியனுக்கே உள்ள மாண்பு.

நூலைப் படித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த ஜூன் மாதம் கனடா இலக்கியத் தோட்டம் விருது வழங்கிச் சிறப்பித்தபோது
காலத்தினால் செய்த தகுந்த அங்கீகாரம் என்று நினைத்துக் கொண்டேன்.

மலையகத்தில் எழுந்த முதல் நூலான "கோப்பிக் கிருஷிக் கும்மி" குறித்த விரிவான மதிப்பீடை முதல் அத்தியாயம் கொண்டிருக்கிறது. மத்திய மாகாணத் தோட்டத்தில் கண்டக்டராகப் பணியாற்றிய ஆபிரகாம் ஜோசப் என்பவரால் இயற்றப்பட்ட 280 கும்மிப் பாடல்கள் கொண்ட இந்த நூலை முன் வைத்து ஆசிரியர் எழுப்பும் கேள்விகளில் நியாயம் முன் வைக்கப்படுகின்றது.
ஒரு துரைத்தன விசுவாசியின் பிரசார நோக்கிலான நூலாகவே இந்த "கோப்பிக் கிருஷிக் கும்மி" இருப்பதைத் தக்க உதாரணங்களோடு விளக்குகிறார்.
ஆங்கிலேயத் துரைத்தனத்தை வியந்து போற்றும் அதே வேளை கூலிகளாக வரவழைக்கப்பட்ட தொழிலாளர்களை அந்த எஜமானர்களின் விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அமைந்த கும்மிப் பாடல்கள், தொழிலாளிகளை உற்சாகப்படுத்தி வேலை வாங்கும் பாங்கினையும் இந்தக் கும்மிப் பாடல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
மலையகத்தில் நிலவிய அடிமை யுகத்தை மறைத்து  அங்கே கூலித் தொழிலாளர்கள் மாண்புற வாழவே இந்தத் துரைமார்கள் பாடுபடுகின்றார்கள் என்ற மாயை நிலைப்பாட்டை வெளியுலகுக்குப் பிரச்சாரப்படுத்தும் வண்ணம் இந்த கோப்பிப் கிருஷிக் கும்மி இருப்பதை அதற்கு முரணாக சமகாலத்தில் எழுந்த மலை நாட்டு மக்கள் நாட்டார் பாடல்கள் போன்றவற்றில் பொதிந்திருக்கும் துன்பியல் பின்புலத்தைக் காட்டி நிறுவுகிறார்.

அடுத்த அங்கமாக ஆபிரகாம் ஜோசப் எழுதிய "தமிழ் வழிகாட்டி" என்ற பகுதியில் ஆங்கிலத் தோட்டத்துரைமார்களுக்காகவும், ஆங்கில வர்த்தகர்களுக்காகவும் எழுந்த நூல் பற்றிய விரிவான பார்வை முன் வைக்கப்படுகின்றது. அந்த நூல் தோட்டத் தொழில் சமூகத்தில் அன்றாடம் துரைமார், கண்டக்டர், தொழிலாளருக்குமான அடிப்படைச் சம்பாஷணை எப்படி அமைகின்றது என்ற வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
உதாரணம் 
துரை : கண்டக்டர்! இன்று காலையிலே நீ எத்தனை ஆள் பிரட்டு எடுத்தாய்? ஏன் அந்தப் பெண் பிள்ளையை அடித்தாய்?
கண்டக்டர் : ஐயா! மறுபடியும் அவள் அடிபடுவதை நான் பார்க்கச் சந்தோஷப்படுவேன். ஏனெனில் அவள் மற்ற ஜனங்களோடே சண்டை போடுகிறாள்

"துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும்" என்ற பிரிவில் அந்தக் காலகட்டத்தில் நிலவிய கடும் அடக்குமுறையின் பிரதிபலிப்பாய் நிகழ்ந்த தொழிலாளி அடித்துக் கொல்லப்படுதல், பதினான்கு வயதுப் பெண் பாத்திரம் கழுவாததால் நிர்வாணமாக்கிப் பிரம்பால் அடிக்கப்படுதல், தன் கூலிக்கான பற்றுச்சீட்டு கேட்ட கூலிக்காரர் அதன் விளைவாய் பிரம்படியும் அபராதமும் பெறுதல் போன்ற உதாரணங்களை முன் வைத்து அந்தக் காலத்தில் நிலவிய மோசமான தொழிலாளர் சட்டமுறையை விரிவாக எடுத்து நோக்குகிறது.

இந்தியத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிய முதல் பத்திரிகையாளர் கருமுத்து தியாகராசர் ஆற்றிய பணிகளில் இந்திய மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் தொழிலாளர் அனுபவித்த கஷ்டங்களை அந்தப் பத்திரிகையாளர் விபர நுணுக்கங்களோடு எடுத்துக் காட்டியதைச் சான்று பகிர்கின்றார். அவர் 
"Indian Emigrants on Ceylon Estates" என்ற தலைப்பில் "சிலோன் மோர்னிங் லீடர்" ஆசிரியர் தலையங்கங்களைத் தொகுப்பாகக் கொண்டுவந்த முயற்சியும் பதிவாக்கப்பட்டிருக்கிறது.
செல்வந்தப் பின்னணி கொண்ட இந்த கருமுத்து தியாகராசர் காரைக்குடியில் இருந்து வந்து இலங்கையில் பத்திரிகையாளனாகத் தன் பணியில் மலையகத் தமிழரின் பேரவலத்தைப் பதிவு செய்த வகையில் முக்கியத்துவம் பெறுவதை அறியும் போது இந்த மனித நேயர் மீதான நேசமும் இயல்பாகவே எழுகிறது. 

மஸ்கெலியா ஆ.பால் எழுதிய "சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி" என்ற மலையகத்தின் முதல் நாவலை முன் வைத்து அத்தியாயமும் அதனைத் தொடர்ந்து வரும் பகுதியாக "கண்ணனின் காதலி" (எழுதியவர் ஜி.எஸ்.எம்.ஸாமுவேல் கிரியல்லை, இரத்தினபுரி) ஆகிய நாவல் இரண்டையும் முன் வைத்து அந்தக் காலகட்டத்தில் எழுந்த நாவல்களின் பகைப்புலம், தோட்டத் தொழிலாளரது வாழ்வியல் எவ்வளவு தூரம் குறித்த அந்த யுகத்தின் இலக்கிய முயற்சிகளில் பதிவாகியிருக்கின்றன என்பதையும் சீர்தூக்கிப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளன.

நிறைவாக மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமை "அஞ்சுகம்" என்ற தலைப்பின் கீழ் அக்காலத்தில் நிலவிய தேவதாசி மரபு, அந்த மரபில் உதித்த க.அஞ்சுகம் குறித்த வாழ்வியல் பின்னணி குறிப்பிடப்படுகின்றது.
அஞ்சுகத்தால் ஆக்கியளிக்கப்பட்ட "உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு" எனற படைப்பின் வழியாக மலையக இலக்கியத்தின் உன்னதமான முன்னோடிப் பெண் ஆளுமையாக அவரை அடையாளப்படுத்துகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு அத்தியாயங்களிலும் ஈழத்து மலையக மக்கள் வாழ்வியலின் முற்காலத்தைய வரலாற்றுப் பதிவு பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு விளக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் நான் இதே பாங்கிலான எத்தனையோ ஆய்வு நூல்களைப் படித்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை உசாத்துணைகளின் வெட்டி ஒட்டல்களோ அல்லது செவி வழி நிரம்பிய வரலாறுகளோ என்ற தோரணையில் அமைந்ததுண்டு. ஆனால் இந்த நூலின் சிறப்பே எடுத்துக் கொண்ட ஒவ்வொரு அம்சங்களையும் அப்படியே ஒப்புவிக்காமல் விமர்சன ரீதியாகவும், ஒப்பு நோக்கல் அடிப்படையிலும் சொல்லப்பட்ட்டிருக்கின்றது.

The British Library, The School of Oriental and African Studies Library, The National Archives (London), The National Archives of the Netherlands (Hague), The National Bibliotheque (Paris), ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிறுவனம் (சென்னை), University of Minnesota ஆகிய பெரு நூலகங்கள் சுமந்து நிற்கின்ற ஆதார உசாத்துணைகள் இந்த நூலை மெய்த்தன்மையோடு ஆசியர் எழுத உதவியிருக்கிறது அத்தோடு இவ்வளவு தூரம் பரந்துபட்ட தேடல் முனைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற வியப்பும் எழுகிறது. அதன் அறுவடை தான் இந்த "கூலித் தமிழ்".


"கூலித் தமிழ்" க்ரியா வெளியீடாக வந்திருக்கின்றது. நல்ல உயர் தர அச்சுத்தாள், நூலக முறைமைக்கான கனதியான அட்டை, இவற்றோடு மிக முக்கியமாக இலக்கண வழுக்கள் களையப்பட்ட, எழுத்துப்பிழை இல்லாத ஒரு நேர்த்தியான நூல் 179 பக்கங்கள் வரை விரிந்திருக்கிறது. 
இந்த நூல் ஈழத்து மலையக மக்களின் வாழ்வியலின் மெய்யான வரலாற்றைத் தேடி நுகர விரும்புவோர் கையிலும், பல்கலைக்கழக ஆய்வு மட்டத்தில் நம் இளைய சந்ததியின் தேடலிலும் கண்டிப்பாக இருக்க வேண்டியது.

"விடியலிலே என்னை வேலைக்கு விரட்டுவது யார்?
என் சொந்த மனைவியிடமிருந்து என்னைப் பிரித்தவர் யார்?
என்னை ஏசி உதைத்துச் சம்பளத்தைப் பிடிப்பவர் யார்?
என் துரைமாரே!

அவசரமாய் வீடு போனால்
தெரியாமல் தூங்கிப் போனால்
என்னைப் போட்டு உதைப்பது யார்?
என் துரைமாரே!

அவசரமாய் கோப்பிப்பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பி விழுந்து போனால் 
என் சம்பளத்தை அப்படியே நிறுத்துவது யார்?
என் துரைமாரே!

"19 ஆம் நூற்றாண்டுக் கோப்பித் தோட்டத் தொழிலாளியின் வேதனைகள்" என்ற தலைப்பில் Muniandi என்ற ஆங்கில இதழில் (14 ஆகஸ்ட் 1869) கவிதையின் தமிழாக்கமே "கூலித் தமிழ்" நூலிலிருந்து மேலே பகிர்ந்தது. 
இந்த நூற்றாண்டிலும் அதே நிலை தானே அவர்களுக்கு...

No comments: