“அரங்காடல்” 2015 - - என் பார்வையில் - மது எமில்

.

2015 ஆவணித்திங்கள் 23ம் நாள் ஞாயிற்றுக்கிழமை  Parramatta வின் பிரபல்யமான Riverside திரை அரங்கு யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தினரின் “அரங்காடல்” நிகழ்வுக்காக சிட்னித்தமிழ் ஆதரவாளர்களால் நிறைந்திருந்தது…..
தாயகத்தின் தனித்துவமான நினைவுகளை சுமந்தவர்களாக,  மண்ணின் மறக்கமுடியாத நிகழ்வுகளை மீட்டிப்பார்க்கும் வீணைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களாகிய நமக்கு நிதி சேகரிப்புகளும் அதற்கான அரங்க நிகழ்வுகளும் சமகாலத்தில் சம்பிரதாயமாகிவிட்டன.
ஆதரவாளர்களில் ஒருத்தியாக அரங்கினுள் எதுவித எதிர்பார்ப்புகளுமே இல்லாமல் நுழைந்த எனக்கு ஏதேர் ஓர் மாற்றத்தையோ அல்லது தனித்துவத்தையோ இந்த “அரங்காடல்” தந்நது என்பதை ஆவணப்படுத்த முடியாமல்; இருக்க முடியவில்லை என்பது தான் உண்மை.





வழக்கமான சடங்குகள் சம்பிரதாயங்கள் யாவுமே மிகவும்; கட்டுப்பாடான முறையில் ஓழுங்கமைக்கப்பட்டிருந்ததை ஆரம்பத்திலேயே உணர முடிந்தது. அரங்காடலின் பிரதான அறிவிப்பாளர் அலோசியஸ் ஜெயசந்திரா ஒரு தரமான தன்னாழுமையை பின்பற்றியது மட்டுமல்லாமல் பவித்தா செல்வநாதன் அவருக்கு சற்றும் சளைக்காதவர் போல ஆங்கிலத்தில் தனது திறமையை வெளிப்டுத்திய பக்குவம் அவையோர் எல்லோரையுமே கவர்ந்திருந்தமை பாராட்டப்பட வேண்டியது ஒன்றாகும். காரணம் “தமிழ் அவமானமல்ல அடையாளம்” என்பதனை அறிவிப்பாளர் இருவருமே உளமார உணர்த்தியிருந்தார்கள். மொழிபெயர்ப்பு தேவைப்படவில்லை இருமொழியவையோரையும் தரமான மொழி கையாள்கையினால் அறிவிப்பாளர்கள் கவர்ந்திருந்தார்கள்.


காலம் தாழ்த்தாமல் ஆரம்பிக்கப்பட்ட “அரங்காடல்”  நிகழ்வு “புதிய பூ பாளம்”; இசைக்குழுவினரின் இசையோடும் பிரேம் கோபாலின் நடன நிகழ்வோடு மட்டுமின்றி “ஒரு பேரரசரின் புலம்பல்”; என்னும் நடன அமைப்பினாலான நாடகத்தோடும் ஓர் புதிய பாதையை சிட்ணி அரங்க அமைப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது என்று பெருமையோடு கூறிக்கொள்ளலாம். மிகவும் எளிமையான மேடையமைப்பு,  விளம்பரதாரர்களின் பெறுமதிமிக்க விளம்பரங்கள் அரங்கத்தை அலங்கரித்தமையும் முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியதாகும்.


புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம் தமிழ் இளையோர்களின் இசைப்புலமையை அதிலும் “புதிய பூ பாளம்”; இசைக்குழுவினரின் தனித்துவத்தை  பாராட்டாமல் இருக்க முடியாது. “சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா?” என்ற சங்கர் மகாதேவ்வின் பாடலோடு ஆரம்பித்த இருமணி நேர “இன்னிசை மழை” நிகழ்ச்சி, நிரோஷன் சத்தியமூர்த்தியின் நெறியாள்கையில் பல சிட்ணி, மெல்பேண் இளம் பாடகர்களையும் இசைக்கலைஞர்களையும்  தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தியது மட்டுமல்லாமல் வளர்ந்து  வரும் இளைஞர்களுக்கும் ஓர் முன்னுதாரணமாக விளங்கியமை ஒரு சரித்திர சான்றாகும்.


குரல்வளம் மொழிவளம் மட்டுமன்றி பல்வேறு இசைக்கருவிகளையும் அவற்றுக்கே உரிய தனித்திறமையோடு வாசிக்க கூடிய தகுதியை இவ் இளம் கலைஞர்கள் கொண்டிருக்கிறார்கள் என்றால் இன்று மட்டுமன்றி என்றுமே தமிழ் வாழும் என்பதில் சந்தேகமேயில்லை. இத்தகைய இளம் கலைஞர்களுக்கு களம் அமைத்து கொடுத்த யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தினருக்கு; நமது பாராட்டுக்கள். அறுபதுகளின் ஆரம்ப காலங்களில் வெளியாகிய வு.ஆ. சௌந்தரராஜன் P. சுசிலாவுடன் இணைந்து பாடிய “பசுமை நிறைந்த நினைவுகளே” எனும் பாடல் யாழ் பல்கலைகழக மாணவர்களை மட்டுமன்றி அவையோர் அனைவரையுமே தமது கல்வி கூடங்களின் மறக்கமுடியாத நினைவுகளுக்கு அழைத்து சென்றதாகவே  அமைந்துவிட்டது.



தொடர்ந்து நடைபெற்ற - யாழ் மண்ணின் மைந்தன் பிரேம்கோபால் கிருத்திகா ஜோடியின் நடன நிகழ்வு ஒரு புதிய உலகுக்கே நம்மை அழைத்து சென்றது என்றே சொல்லலாம். பல்வேறு நடன நுட்பங்களையும் தனக்கே உரிய திறமையினால் உள்வாங்கி அதிலும் மிக குறுகிய கால இடைவெளிக்குள் உள்ளுர் இளையோரை மிக நுணுக்கமாக பயிற்சி அளித்து முறையான கட்டுக்கோப்போடு அவர்களை மேடையேற்றிய அவர்களது சிறந்த நெறியாள்கை பல நடன அமைப்பாளர்களுக்கு ஓர் சிறந்த உதாரணம் என்றே சொல்லலாம்.


நடன நிகழ்வில் பங்குபற்றிய கலைஞர்கள் எல்லோருமே அந்த நடனத்தில் ஊறி உணர்ந்து பங்கு கொண்டமை பார்வையாளர் எல்லோரையுமே மெய் சிலிர்க்க வைத்திருந்தது. தரமான படைப்பு, தன்னிகரில்லா நெறியாள்கை, தனித்துவமான கலைக்கொள்கை அனைத்துமே பிரேம்கோபால் கிருத்திகா ஜோடியின் உன்னதமான உளப்பூவமான நடன ஆர்வத்துக்கு எடுத்துக்காட்டாய் அமைந்து விட்டன.



நடன ஒத்திகை மட்டுமன்றி நடனங்களுக்குரிய ஒப்பனைகளும் உடை அலங்காரங்களும் அணிகலன்களும் மிகவும் குறுகிய காலத்திலேயே தயார் செய்யப்பட்டிருந்தமை உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய ஒன்று. தரமான ஒரு கலைப்படைப்பிற்கு தம் ஆதரவை வழங்கிய குழந்தைகளும் குடும்பங்களும் நலன் விரும்பிகளும் கூட பாராட்டப்பட வேண்டியவர்கள்…..
மொத்தத்தில் டாக்டர் சிதம்பரகுமார் தெய்வேந்திரம்பிள்ளையின் தலைமையுரையும் செல்வி சவுந்தரி கணேசனின்  நன்றியுரையும் அவையோரை கவரும் வண்ணம் மொழி வன்மையும் தெளிவுண்மையும் கலந்திருந்தமை யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தினருக்கே உரிய பாணி என்பதனை கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.
இந்த அருமையான “அரங்காடல்” நிகழ்வு எதிர்காலத்திலும் தனித்துவமான படைப்புகளுக்கு முக்கியம் கொடுக்க வேண்டுமென்பதே எம்மவரின் எதிர்பார்ப்பாகும்.
நன்றியுடன் - மது எமில்





No comments: