விழுதல் என்பது ' நிறைவுப் பகுதி 3- திருமதி.நிவேதா உதயராயன்

.
„விழுதல் என்பது எழுகையே“ நிறைவுப் பகுதி (3)  திருமதி.நிவேதா உதயராயன்

அன்றைய பொழுதின் விடியல் சீலனுக்கு மிக மகிழ்வாக இருந்தது. தன் வாழ்வில் இத்தனை காலம் பட்ட துன்பத்துக்கு முதல் முறையாக  சஞ்சலங்கள் எதுவுமற்று, கவலைகளே இன்றி மகிழ்வு கொண்டு மனம் துள்ளிக் குதிப்பது இன்றுதான். அவனுக்கே அம்மகிழ்வைத் தாங்க முடியாது மனது கனத்தது.
துன்பங்கள் வருவது கூட நல்லதுதான். அப்பொழுதுதான் நாம் இழந்தவைகளும் பெறுமதி மிக்கவைகளும் எம் கண்ணுக்குத் தெரிகின்றது. இறைவன் தெரிந்தேதான் இரண்டையும் மனிதவாழ்வில் வைத்துள்ளான் என்று எண்ணியவனுக்கு சிரிப்பு வந்தது. எத்தனை இலகுவாகிவிட்டது மனம். வாற வெள்ளிக்கிழமை கலா வந்தால் எப்படி எப்படிச் செய்யவேண்டும், என்ன முதலில் கதைக்கவேண்டும் என்று மனதுள் பட்டியல் இட்டுக்கொண்டான். அவளுக்கு என்ன வாங்கலாம் என்று யோசித்தவன் உடனேயே அந்த எண்ணத்தைக் கைவிட்டான். பத்மகலா வந்த பிறகு அவளைக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போய் வாங்கிக் கொடுப்பதுதான் நல்லது என முடிவெடுத்தவன், பாடல் ஒன்றை மகிழ்வாக விசிலடித்தபடி எழுந்து குளியலறைக்குச் சென்றான். 

வெள்ளிக்கிழமை பிராங்பேர்டிற்குப் போறதுக்கு கார் வேணும் ஆரிட்டைக் கேட்கலாம்? என யோசித்தவனுக்கு சத்தியநாதன் தான் உடனே நினைவில் வந்தார். அவர் வேண்டாம். அவர் மகளை மறுத்துவிட்டு அவரிடமே உதவி கேட்பது ஏதோபோல் இருக்க, எதுக்கும் வேலை செய்யும் இடத்தில் மாக்கிடம் கேட்டுப் பார்ப்போம். அவன் ஏதும் ஐடியா சொல்வான் என எண்ணி மனதை அமைதிப்படுத்தியபடி வேலைக்குச் செல்ல ஆயத்தமானான் சீலன்.
மதியம் உணவு வேளையின் போது எயர்ப்போட் விடயம் பற்றி மாக்கிடம் கதைத்தபோது அவனொரு யோசனை சொன்னான். "எயாப்போட் போகும்போது நீ இங்கிருந்து ரெயினில் போய்விடு. உன் நண்பி வந்தபின் அங்கேயே ஒரு டாக்ஸி பிடித்து அழைத்து வா. ஒரு 150 யூரோ வரும் " என. ஆனால் அது நல்ல யோசனையாகச் சீலனுக்குப் படவில்லை. அவன் பணத்தில் குளிப்பவன் அல்லவே இத்தனை பணம் செலவழிக்க. பத்மகலா என்ன இரண்டு மூன்று சூட்கேசா கொண்டுவரப் போகிறாள். ஒன்றுதானே. அவளையும் ரெயினிலேயே கூட்டி வந்துவிடலாம் என மனதில் நினைத்தாலும் மாக்கிடம் சொல்லவில்லை. கலா ஏதும் நினைப்பாளோ என்று ஒரு நிமிடம் எண்ணியவன், இயல்பாக இருப்பதே எல்லாதுக்கும் நல்லது. இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசை கொள்வதுதான் தவறு என எண்ணியபடி தன் வேலையில் மூழ்கிப்போனான்  சீலன்.
இரண்டாவது வெள்ளி விடிந்தபோது மனதில் எதுவோ பிசைவதாக உணர்ந்தவுடன் ஏன் இப்படி இருக்கிறது. இன்று கலாவைப் பார்க்கும் சந்தோசத்தில் இருக்கிறேன். அம்மா தங்கச்சிக்கு ஏதும் வருத்தமோ என் எண்ணியவன் உடனேயே அவர்களுக்குத் தொலைபேசி எடுத்தான். தாயின் குரலைக் கேட்டவுடன் தான் மனம் நின்மதியானது. தங்கச்சி சுகமோ என்று அவன் கேட்காமலேயே தாய் அவள் டியூசனுக்குப் போட்டாள் என்று கூற, சீலனின் மனம் அமைதி கொண்டது.
கடவுளே பத்மகலா எந்தத் தடையும் இல்லாமல் வந்து சேர்ந்திடவேணும் என்று மனம் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிப் பிரார்த்திக்க, கட்டாயம் அவள் தன்னிடம் வருவாள் என்று மனம் சொல்ல, சில நேரம் தன்னை அறியாமலே ஏற்பட்ட மன அழுத்தத்தில் தான் நெஞ்சு பிசைந்ததாக்கும் எனத் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டான். காலையில் எழுந்தவுடனேயே ஏழு மணிக்கு எல்லாம் காலை உணவை உண்பவனுக்கு இன்று பசியே எடுக்கவில்லை.
இதுவரை போடாமல் வைத்திருந்த ஒரு சேர்ட்டை எடுத்துப் போட்டுக்கொண்டான். நல்ல காலம் இப்ப சமர்.அல்லது என்ன தான் அழகா ஆடை அணிந்தாலும் மேலே யக்கற்றைப் போட எல்லாம் உள்ளே மறைத்துவிடும் என எண்ணியவனாக ரெயின் டிக்கற் தனதும் கலாவினதும் சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்து பேர்சுக்குள் வைத்து காற்சட்டைப் பையினுள் வைத்துவிட்டு கதவைப் பூட்டியபடி இறங்கினான்.
நடக்கும்போது ஏனோ அந்தரமாக இருந்தது. என்ன இது ஒருநாள் கூட இப்படி இருக்கவில்லையே என்னும் எண்ணம் மீண்டும் வர, எனக்குப் பதட்டம் அதிகமாகிவிட்டது எனத் தனக்குச் சமாதானம் சொன்னவன் பத்து நிமிடத்தில் பஸ்தரிப்பிடம் வந்து சேர்ந்தான். தரிப்பிடம் வந்தவன்,பஸ்சுக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு ஓரிடத்தில் நிற்காமல் இருக்காமல் அங்கும் இங்கும் நடந்தான். எத்தனை தரம் என்று நடப்பது என எண்ணியபடி ஒரு பக்கமாகப் போய் நின்றவனில் கண்ணில் விளம்பரத்துக்கும் அப்பால் அவனது உருவம் தெரிந்தது. 
„ம்...“ நல்ல சிமாட் ஆகத்தான் இருக்கிறன் என பெருமிதம் ஏற்பட்ட அடுத்த நிமிடமே ஆயாசமும் ஏற்பட கீழே குனிந்து பார்த்தான். சப்பாத்தைப் போட மறந்து வீட்டில் போடும் செருப்புடன் வந்துவிட்டிருப்பது தெரிய, அய்யோ இப்ப திரும்பிப் போகவேணுமே. இன்னும் மூன்று நிமிடத்தில் பஸ்ஸைப்  பிடிக்க முடியாது. வந்துவிட்டுத் திரும்பிப் போவது சரியில்லையே என நினைத்தவன், இப்படியே போக முடியுமா ? நல்ல காலம் இப்பவாவது கண்டேனே. இதுவே எயர்ப்போடில் அல்லது ரெயினுக்கை ஏறின பிறகு கண்டால் என்ன செய்யிறது என்று மனதைச் சமாதானப்படுத்தியபடி மீண்டும்  வீட்டுக்கு விரைந்து நடந்தான்.
-------------------------------------------------------------------------------
கிறங்கிப் போய் அவன் தோழில் சாய்ந்தபடி பத்மகலா விட்ட நிம்மதிப் பெருமூச்சு இப்பகூட அவன் காதில் கேட்கிறது. கண்களில் கண்ணீர் வழிந்தோட அதைத் துடைக்க மறந்து வெளியே பார்த்தபடி நிற்கிறான் சீலன். அதுதான் எங்கள் விதியென முன்பே எழுதப்பட்டிருக்கு. அதை மாற்ற முடியாதுதான். வாழ்வு பூராவும் இந்தக் குற்ற உணர்வே என்னை சிறிது சிறிதாகக் கொல்லப்போகிறது. என்னால் இன்னொருத்தியுடன்  வாழவும் முடியப்போவதில்லை. ஆனாலும் நான் அதற்காக மனமொடிந்து வீழ்ந்து போய் விடமாட்டேன்.
எத்தனை அழிவின் பின்னும் எம் மக்கள் போராடிக்கொண்டே இருக்கிறார்களே மீண்டும் எழுந்து நிற்க. நானும் அப்படித்தான் எத்தனை முறை வீந்தாலும் எழுவேன். என் உயிர் உள்ளவரை. காதல் வாழ்வின் ஒரு பகுதியே அன்றி காதல் இன்றி வாழ்வு முடிந்துவிடுவதில்லை. என்னை இறைவன் இப்படி நிற்க வைத்துள்ளான் என்றால் ஏதோ என்னால் என் சமூகத்துக்கு ஆகவேண்டியது இன்னும் இருக்கிறது. காரண காரியமின்றி எதுவுமே உலகில் எதுவும் நடப்பதில்லை. என் எழுகையை யாரும் தடுக்கவே முடியாது என எண்ணியபடி தூரத்தில் தெரியும் காட்சிகளைப் பார்க்கத் தொடங்கினான் சீலன்.
இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகின்றன. எத்தனை தடவை நான் கீழே விழுந்தாலும் தடுமாறித் தடுமாறி எழுகிறேனே. அப்படி இருந்தும் கடவுள் என்னைச் சோதிக்கிறானே. இந்தப் பிறப்பில் என் மனமறிந்து நான் யாருக்கும் எந்தப் பாவமும் செய்யவில்லையே என சீலன் எத்தனையாவது தடவைகள் எண்ணியிருப்பான் என்று அவனுக்கே தெரியவில்லை. அத்தனைக்கு அவன் மனதில் விரக்தி ஏற்பட்டிருந்தது. எத்தனை ஆசைகள் கோட்டைகள் எல்லாம் கட்டி அவன் பத்மகலாவின் வருகைக்காகக் காத்திருந்தான். கடவுளும் பாராபட்சம் பாக்கிற ஆள்தானோ? அல்லது எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கவேண்டும். உள்ளுக்குள் கடவுள் மேல் கோபம் வந்தாலும் அடுத்த நிமிடமே கடவுளே என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேணும் என மனதினுள் மன்றாடியவனுக்கு கண்கள் நிரம்பி கண்ணீர் எட்டிப் பார்த்தது.
எத்தனை போராட்டத்தின் பின் பத்மகலாவைத் தன்னுடன் வைத்திருக்கிறேன். தடாலடியாக வந்திறங்கிய மல்லிகா உடனேயே தங்கையை கனடாவுக்குக் கூட்டிக்கொண்டு போக ஒற்றைக் காலில் நின்றதுவும் இவன் அவளின் காலில் விழாத குறையாகக் கெஞ்சி மன்றாடியும் கூட அவள் இறங்கி வரவில்லை. சத்தியநாதன் அண்ணை தான் கடைசியில் மல்லிகாவுக்கு சீலனைப் பற்றிச் சொன்னார். தன் மகள் உட்பட எத்தனை திருமணம் அவனுக்கு வந்தது என்றும் கலாவைத் தவிர யாரையும் கட்டச் சீலன் மறுத்துவிட்டதையும் சொன்னபின் தான் மல்லிகா ஒருவாறு இறங்கி வந்தாள். அத்துடன் கலாவின் நிலை இன்றும் மாறலாம் அல்லது மாதங்களோ வருடங்களோ கூட எடுக்கலாம்  என்பதும்  இந்த நேரத்தில் கலாவை கூட்டிக்கொண்டு செல்வது நல்லதும் அல்ல என வைத்தியர்கள் கூறியதும் மல்லிகா ஒருவாறு இறங்கிவந்து கலாவை இங்கேயே விட்டுவிட்டுப் போகச் சம்மதித்தாள்.
சீலனின் மனம் அப்பப்ப கிடந்தது அல்லாடும். ஆனாலும் அவன் மனதைத் தளரவிடவில்லை. தனக்கும் பத்மகலாவுக்கும் கட்டாயம் ஒருநாள் திருமணம் நடக்கும். ஆனால் எப்போது என்பது தான் தெரியவில்லை. முன்பெல்லாம் கடவுள் மேல் நம்பிக்கையற்றிருந்தவன் அவன். பத்மகலா தன்னுடன் கதைத்தால் கம் அம்மனுக்கு அபிசேகம் செய்வதாகவும், பழனிக்கு வந்து மொட்டை  போடுவதாகவும் கூட வேண்டியுள்ளான். என்ன செய்வது மற்றைய துன்பங்களைத் தாங்கிக் கொண்ட எனக்கு இதைத் தாங்க முடியவில்லையே என எண்ணியபடி வைத்தியசாளைக்குச் சென்று பத்மகலாவின் கட்டிலின் முன் கதிரையை எடுத்துப் போட்டு அவள் கைகளை தன் கைகளில் எடுத்து வைத்துக்கொண்டான்.
-----------------------------------------------------------------------

சப்பாத்தை மாற்றிவிட்டு மீண்டும் பஸ் தரிப்பிடம் வந்த சீலன்,  எதுக்கும் விமானம் வெள்ளன வந்தாலும் என எண்ணிக்கொண்டே இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் விமான நிலையம் சென்று காத்திருக்க ஆரம்பித்தான்.
நூற்றி இருபது நிமிடங்கள் நூறாகி ஐம்பதாகி முப்பதாக பிரயாணிகள் வெளியே வரும் பாதைக்கு அருகே சென்று கம்பிகளில் கையை வைத்தபடி வெளியே வருவோரைப் பார்க்கத் தொடங்கினான். அவனுக்கே தெரிந்ததுதான் நாட்டுக்குள் புதிதாக வரும் அவள் எப்படியும் வெளியே வர ஒரு மணி நேரமாவது செல்லும். ஆனாலும் காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறதுதான். இந்த ஐந்து ஆண்டுகளில் எப்படி இருப்பாள். அப்படியே தானோ என பலதும் நினைக்க முகம் சந்தோசத்தில் பூரித்தது. அவனறியாமலே சிரிப்பு எட்டிப் பார்க்க தனக்குள்ளேயே கூச்சப்பட்டவனாக அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து விழியை வழிமேல் வைத்துக் காத்திருந்தான்.
அதோ அவள்தான். அவன் முகம் அவளைக் கண்டதும் எப்படி மகிழ்வு கொண்டதோ அப்படியே அவள் முகமும் பிரகாசிக்க தூரத்திலேயே இவனைக் கண்ட மகிழ்வில் சிரித்தபடியே வந்து சீலன் என்று வாஞ்சையுடன் அவன் கைகளைப் பற்றினாள். பத்மகலா இவ்வளவு அழகியா? வெளிநாட்டுக் காற்று அவளை நன்கு பளபளப்பாக்கி என்ன அழகாக இருக்கிறாள் என மனதில் நினைத்தாலும் வெளியே சொல்லவில்லை. அவளைக் அணைக்க வேண்டும் என்று எழுந்த ஆவலைக் கட்டுப்படுத்தியபடி „பிரயாணம் எல்லாம் எப்பிடி“ என்றன்.
"சீலன் நீங்கள் இப்ப எவ்வளவு வடிவாவிட்டியள். முகமும் நல்ல குளிர்மையா வந்திட்டுது" என்று பத்மகலா கூற, "நீரும் தான்" என்று மட்டும் கூறிவிட்டு நிறுத்திக்கொண்டான். அவளைக் கண்டவுடன் அணைத்து முத்தமிடுவது பற்றி தான் எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தும் அவள் வந்தவுடன் ஏன் தன்னால் அப்படிச் செய்யமுடியாமல் போனது என்று மனதுள்ளே எண்ணியவன், அதுதான் தமிழ் பண்பாடு எனப் பெருமையாக உணர்ந்தான். வீட்டுக்குத் தானே வருகிறாள். அவளுக்கும் ஆசை இருக்கும் தானே. ஆசைதீர அணைப்போம் என எண்ணிக்கொண்டு அவளது சூட்கேசை இழுத்தபடிவாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவனின் பற்றிய கையை அவள் விடவில்லை.
வாசலை அண்மித்தபோது எதிரே கனகலிங்கம். சத்தியநாதன் வீட்டு பிறந்த தினத்தில் சந்தித்தவர்.  சீலனை சத்தியநாதனின் மகளுக்காக திருமணத்துக்குக் கேட்டவர் என அவனுக்கு ஞாபகம் வந்தது.
இவனும் அவரைப் பார்த்து „வணக்கம் அண்ணை“ என்றான். அவரும் வணக்கம் சொல்லிவிட்டு „என்ன தம்பி இந்தப்பக்கம்“ என்றவரின்  பார்வை பத்மகலாவின் மேல் விழுந்தது. „இவதான் கலா நான் கலியாணம் செய்யப் போறவ“. „நீங்கள் எங்கே இந்தப் பக்கம்“ எனக் கேட்க „எனது நண்பன் சிறிலங்கா போறான் அவனை விட வந்தனான். நீங்கள் ஆற்றேன் காரிலையோ .... „என அவர் இழுக்க, „இல்லை அண்ணை ரெயினில தான் போகப்போறம்“ என்று சீலன் கூற,  „என்னோட வாங்கோ நான் தனியாத்தான் போகப்போறன“; என்று கூறியபடி அவர் கார் தரிப்பிடம் நோக்கி நடக்கத் தொடங்கினார்.
முதலில் மறுப்போமா என எண்ணிய சீலன், சரி காரில் என்றால் கொஞ்சம் வேகமாகப் போகலாம். தானாகக் கேட்டவரை ஏன் மறுப்பான் என எண்ணிக்கொண்டு கலாவுடன் அவர் பின்னே நடந்தான். கார் டிக்கியைத் திறந்து கலாவின் சூட்கேசை வாங்கி வைத்தவர், „சீலன் நீங்களும் அவவுடன் பின்னுக்கு இருங்கோ“ என்று சொல்ல நன்றியுடன் அவரைப் பார்த்துவிட்டுக் கலாவுடன் ஏறி நெருங்கி அமர்ந்தான். தனக்கும் கலாவுக்கும் சீற் பெல்டை மறக்காமல் போட்டுக் கொண்டான்.கனகலிங்கத்துக்குத் தெரியாதா இளசுகள் மனம் எப்படி என்று. அவரும் தனக்குள் சிரித்துக்கொண்டார்.
கார் விரைவுப் பாதையில் செல்லவாரம்பிக்க மழையும் சோவென ஆரம்பித்தது. புதிய இடத்தை வடிவாப் பார்ப்போம் என எண்ணிய கலாவுக்கு மழையின் வேகத்தில் கண்ணாடியின் பின் எதுவுமே தெரியாது தலையும் சுற்ற ஆரம்பிக்க, „தலை சுத்துது சீலன்“ என்றாள்.  „மெதுவாக என்ர தோளிலை சாய்ந்து கொள்ளும் வாரும்“ என்று உரிமையோடு அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான் சீலன். அவனுக்கு மட்டுமல்ல அவளுக்கும் அவனின் அணைப்பு நெகிழ்வைத் தந்தது. அனாலும் இன்னொருவரும் இருக்கிறார் என்னும் எண்ணம் இருவரையும் கட்டியும் போட, கண்களை மூடியபடி அவனின் தொடுகையில் கிளர்வு கொண்டு லயித்துப்போய் கிடந்தாள் கலா. அவனுக்கும் அவள் உணர்வு புரிந்திருக்க வேண்டும அவள் உச்சியில் அவசரமாக ஒரு முத்தம் பதித்துவிட்டு சூழ்நிலையை மாற்ற கனகலிங்கத்தாருடன் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான் சீலன். தோளில் வசதியாக சாய்ந்து கொள்வதற்கு சீற் பெல்ட் இடைஞ்சலாக  இருக்க ஒருமாதிரி கைகளால் துலாவி அதை விடுவித்தபின் தான் அவளுக்கு நின்மதியாக இருந்தது.

----------------------------------------------------------------
கண் மூடிக் கருத்தழிந்து எந்தவித உணர்வுகளின் பிரதிபலிப்பும் இன்றி வைத்தியசாலையில் படுத்தபடுக்கையாகக் கிடக்கும் பத்மகலாவை வைத்தகண் வாங்காது பார்த்துக் கொண்டு இருந்தான் சீலன்.
அவளது அழகிய முகம் கருமைபடர்ந்து கண்கள் குழிவிழுந்து உயிருடன் இருக்கிறாள் என்பதற்;குச் சாட்சியாக சுவாசம் மட்டுமேயாக கடந்த மூன்று மாதங்களாக இதே நிலைதான்.அவளின் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தான். அவன் கண்களில் நிரம்பிய கண்ணீர் அணை உடைந்தது போல் தழும்பி அவள் நெற்றியில் உதிர, அவள் வழி அசைந்தது மூடிய இமைககளுக்குள். அவசரமாக நெற்றியில் விழுந்த கண்ணீரைத் துடைத்தான். குமுறி வரும் தனது அழுகையை  தன்னிதழை உள்ளிழுத்து அடக்கினான்.
சீலனும் ஒவ்வொரு நாளும் வேலை முடிய ஆவலுடன் வந்து அவளைப் பார்ப்பதும் அவளுடன் பழைய கதைகள் சொல்லி தானே தனக்குள் சிரித்தபடி அழுவதுமாக. ஆனால் நம்பிக்கையை மட்டும் அவன் கைவிடவே இல்லை.
கனகலிங்கம் நன்றாகக் கார் ஓட்டக் கூடியவர். கன காலம் கார் வைத்திருக்கிறார். மழைக்குள்ளும் லாவகமாக அவர் கார் ஓட்டுவதை சீலன் பார்த்துக்கொண்டு இருந்தான். பிராங்க்பேர்ட்டிலிருந்து காகன் செல்ல இரண்டு மணிநேரம் செல்லும். யேர்மனியின் மற்றைய விரைவுப் பாதைகள் எல்லாம் நேரானவை இந்தப் பாதை மட்டும் தான் சீலன் ஒரே வளைவு எனச் சொல்லியபடி கனகலிங்கம் வீதியைப் பார்க்க, ஐயோ அண்ணை உந்த லொறி சிக்னல் போடாமல் எடுக்கிறான் என்று சீலன் கத்தியது மட்டும் தான் சீலனுக்கு நினைவில் இருந்தது.
கார் லொறியுடன் மோதி உருண்டு கேடர் ஒன்றுடன் அடிபட்டுத்தான் நின்றது. அதிக வாகனங்கள் இல்லாததால் இவர்கள் உயிர் தப்பியதாக பொலிஸ் கூறியதைக் கேட்டதும் சீலன் கடவுளுக்கு நன்றி சொன்னான்.
கனகலிங்கமும் சீலனும் சிறு காயங்களுடன் தப்ப, பெல்ட் போடாமல் இருந்ததனால் பத்மகலா அதிக பாதிப்புக்குள்ளாகி கோமா நிலைக்குப் போய்விட, இப்போதும் அனைத்தையும் மனக்கண்ணில் பார்த்தபடி பத்மகலாவுக்கு முன்னால் அமர்ந்திருக்கிறான் சீலன்.
நிட்சயாய் கலா எனக்காக எழுந்து வருவாள். அவளுக்காக நான் காத்திருப்பன் என எண்ணியபடி வீட்டுக்குச் செல்ல எழுந்தவனின் கைகளுள் கலாவின் கை அசைந்தது......
சுபம்.

No comments: