.
உலகிலேயே
மிகவும் புனிதமான தொழில் என்று
கருதப்படும் ஆசிரியப்பணியில் வயது நிமித்தம்
ஓய்வுபெற்றாலும், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக
இன்றும் மாணவக் குழந்தைகளுடன் தமது பொழுதை
செலவிடும் ஒருவர் இலங்கையில் நீர்கொழும்பில் இருக்கிறார். அவர் பெயர்
திருமதி
திலகமணி
தில்லைநாதன்.
கல்வியும் கலையும் கண்களாகியிருக்கும் அவருக்கு
80 வயது
முருகபூபதி (ஆசிரியையின் முதல் மாணவன்)
அவருக்கு
எண்பது வயது பிறந்தது.
இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் நெய்தல் நிலமாகத்திகழும் நீர்கொழும்பு நகரில் 1954
ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விவேகானந்தா வித்தியாலயத்தில் ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) தமது 19 வயதில் தொண்டர் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கிய காலம் முதல்
தற்பொழுது 80 வயதை நெருங்கும் இச்சந்தர்ப்பத்திலும் மாணவக்குழந்தைகளுடன் தமது பொழுதை
செலவிட்டுக்கொண்டிருக்கும் எமது மூத்த ஆசிரியப்பெருந்தகை
திலகமணி
ரீச்சர் அவர்களுக்கு முதலில் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் அன்பார்ந்த வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை எழுதத் தொடங்குகின்றேன்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என நாம்
வணங்கும்பொழுது குருவுக்கும்
முக்கியத்துவம் வழங்கப்படுதலின் தாற்பரியம், மாணவர்கள் பெற்றோர்களுடனான வாழ்விட இல்லத்தையடுத்து அதிக நேரம்
செலவிடும் இடமாகத்திகழ்வது பாடசாலை.
அங்கு ஆசிரியர்களுடனான உறவும் நெருக்கமும்
அதிகரிக்கும்.
இதனால்தான்
எமது முன்னோர்கள் மாதா - பிதா
எனசொல்லிவிட்டு குருவைப்பற்றியும் மனதில் பதியவைக்கின்றார்கள்.
32 குழந்தைகளுக்கு ஏடு துவக்கி
வித்தியாரம்பம் செய்துவைத்து கொழும்பில் இயங்கும் விவேகானந்தா வித்தியாலயத்தின் முகாமைத்துவத்தின் துணையோடு தொடங்கப்பட்ட பாடசாலைக்கு தலைமை ஆசிரியராக பண்டிதர் க. மயில்வாகனனும் துணை தலைமை
ஆசிரியராக (பெரிய ரீச்சர்)
திருமதி மரியம்மா திருச்செல்வமும் நியமனம் பெற்று வந்தபொழுது,
தனது பாடசாலைக்கல்வியை நிறைவுசெய்துகொண்டிருந்த செல்வி திலகமணி அவர்கள் தமது 19 ஆவது வயதில்
இங்கு தொண்டர் ஆசிரியராக பணியேற்றார்.
பாடல்,
இசை, நடனம் முதலான நுண்கலைகளை
பயிற்றுவிப்பதற்காக அக்காலத்தில் பிரத்தியேகமாக ஆசிரியர்கள் இருக்கவில்லை. எனினும் அந்தக்குறையை
நீக்கியவராக குறிப்பிட்ட துறைகளில்
ஆர்வம் உள்ள திலகமணி
அவர்கள், தமிழ், சமயம் பாட
நெறிகளை சொல்லித்தந்தவாறு இக்கலைகளையும் மாணவர்
மத்தியில் வளர்த்தார்.
பாடசாலை பெற்றோர் தின விழாவாகட்டும்
வட்டாரப்போட்டி கலை விழாவாகட்டும் மாணவர்களை கலை நிகழ்ச்சிகளுக்கு
தயார்படுத்தும் பணி அவரிடம்
ஒப்படைக்கப்படும். அவர் பாடசாலையில் மாத்திரமல்லாது வீட்டுக்கும் மாணவர்களை அழைத்து பயிற்சி வழங்குவார்.
அவ்வாறு
1954 முதல் எமது கலைத்துறை ஆசிரியராகவும் இதர பாடங்களின் ஆசிரியராகவும் விளங்கியவர் திருமதி. திலகமணி தில்லைநாதன்.
இந்த எண்பது
வயதிலும் இன்றும் தமது ஆசிரியப்பணியை
நீர்கொழும்பில் தமது வீட்டிலிருந்தவாறே பாலர் பாடசாலையை
நடத்தி தொடருவதிலிருந்து அவருக்கு கற்பித்தலில் நீடித்திருக்கும் ஆர்வம் குறையவே இல்லை
என்பது தெரியவருகிறது.
எமது மத்தியில்
தற்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் பாடசாலையின் தொடக்க
கால ஆசான் இவர்
மாத்திரமே. எமது பாடசாலையின் வரலாற்றை
ஆதாரங்களுடன் பதிவுசெய்யக்கூடிய ஒரே ஒரு கண்கண்ட
சாட்சியாக வாழ்ந்துகொண்டிருப்பவர் திருமதி
திலகமணி தில்லைநாதன் -
நீர்கொழும்பு
நகரில் கடற்கரைத்தெரு கத்தோலிக்கப்
பெண்கள் பாடசாலையில் ஆறாம் தரம் வரையில்
அவர் கற்றபொழுது - அக்காலகட்டத்தில் எம்மவருக்கு இந்து தமிழ்ப்பாடசாலை அங்கு இருக்கவில்லை. அவர் ஆங்கிலமும் கற்க விரும்பி, புனித மரியாள்
தமிழ்ப்பெண்கள் பாடசாலையில் இணைந்து பள்ளிப்படிப்பை நிறைவுசெய்தார்.
இதேவேளையில் நீர்கொழும்பு ஆவே மரியா மகளிர் பாடசாலையில் பணியாற்றும்
ஆசிரியர்கள் எவரேனும் விடுமுறையில் நிற்கும் காலத்தில், அங்கு வந்து
தற்காலிகமாக பணியாற்றினார். அக்காலகட்டத்தில் அங்கு கடமையாற்றிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருட்சகோதரி ஒருவரிடமிருந்து பெற்ற நற்சான்றிதழும் மேலும் ஆசிரியப்பணியில்
ஈடுபடுவதற்கு இவருக்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறது. அக்காலகட்டத்தில் முகாமைத்துவ பாடசாலைகளே
எங்கும் இயங்கின.
இவருக்கு
சிறுவயதிலிருந்தே பாட்டு, பேச்சு,
நடனம், நாடகம் முதலான துறைகளில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தமையினால் இலங்கை
வானொலி நிகழ்ச்சிகளுக்கும் 1952 முதல் சென்றுவந்தார். பின்னர் அவ்வப்பொழுது வானொலி கலையகத்திற்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் 1982 வரையில் தொடர்ந்திருக்கிறது. இவர் இலங்கை வானொலி கலை
உலகில் திலகா தில்லைநாதன் எனவும் அழைக்கப்பட்டார்.
1955
ஆம் ஆண்டு
இவருக்கு பதியப்பட்ட ஆசிரியராக நியமனம் கிடைத்திருக்கிறது.
1962 ஆம் ஆண்டு
யாழ்ப்பாணம் நல்லூர் ஆசிரிய பயிற்சி
கலாசாலைக்கு தெரிவாகி, அங்கிருந்து கோப்பாய் மகளிர் ஆசிரியப் பயிற்சிக்கலாசாலையில் பயிற்சியை தொடங்கி, கலாசாலை
அதிபர் திருமதி ஆனந்தகுமார் அவர்களிடம் முதலாம் தர ஆசிரிய
சான்றிதழ் பெற்றுக்கொண்டு, 1964 ஆம் ஆண்டு
மீண்டும் நீர்கொழும்பு விஜயரத்தினம் வித்தியாலயத்திற்கே பணியேற்க வந்தார்.
இலங்கை வானொலியில்
கலைஞர் தேர்வுக்காக சென்று ஒலிவாங்கியில் பேசும் தொனி, குரலின் ஏற்ற இறக்கம், சிரிப்பு, அழுகை, கோபம்,
நகைச்சுவை முதலான இன்னோரன்ன ரசங்களை குரலில் காண்பிக்கும் பயிற்சிகளைப் பெற்றார்.
வானொலி
ஊடகம் தொலைக்காட்சி போன்று கட்புலனுக்குரியதன்று. செவிப்புலனுக்குரியது. சரியான தெளிவான
உச்சரிப்பு மிகவும் முக்கியமானது.
தமது விடா முயற்சியினால் அந்தத்தேர்வில் தெரிவுசெய்யப்பட்டார்.
1955 ஆம் ஆண்டு
வரையில் நாடகம்,
உரைச்சித்திரம், மத்தாப்பு முதலான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் இவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
அவரது வாழ்க்கைத்துணைவர் தில்லைநாதன் அவர்களும் ஒரு கலா
ரசிகர்.
அதனால் - திருமணத்தின் பின்னரும் கணவரின் பக்கத்துணையும் ஊக்கமளிப்பும் 1982 வரையில் அவரை இலங்கை
வானொலி கலையகத்திற்கு சென்று வருவதற்கு வழிவகுத்திருக்கிறது.
இலங்கை வானொலி கலையகத்தில் - சானா மாமா என
அழைக்கப்பட்ட சண்முகநாதன் அவர்கள் இவருக்கு ஒரு குருவாகவே
திகழ்ந்தார். கே.எம். வாசகர், பி. விக்னேஸ்வரன், எழில்வேந்தன், பிச்சையப்பா, ரொசாரியோ
பீரிஸ், பிலோமினா சொலமன், விஜயாள் பீட்டர்,
மரிக்கார் ராமதாஸ், கே.எஸ். பாலச்சந்திரன், தருமலிங்கம், வரணியூரான்
கணேசபிள்ளை, ராஜேஸ்வரி சண்முகம், சோதிநாதன்,
உட்பட பல வானொலிக்கலைஞர்களுடனும் சகோதர
பாசத்துடன் பழகியவர். பணியாற்றியவர்.
ஒரு தடவை
கனடாவுக்கு சென்றிருந்தபொழுது அங்கே விக்னேஸ்வரனை சந்தித்து பழைய நினைவுகளை
மீட்டுக்கொண்டதுடன், அவர் கனடாவில் பணியாற்றிய வானொலி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். முன்னாள் அதிபரும் வானொலி கலைஞருமான இ.சி. சோதிநாதனையும்
சந்தித்து அவருடனும் வானொலி நிகழ்ச்சியில்
இணைந்தார்.
" இலங்கை
வானொலியின் புகழ் கடல் கடந்தும்
பரவியிருந்தது. தமிழ்நாட்டிலும் நேயர்கள் விரும்பிக்கேட்ட பல நிகழ்ச்சிகள்
இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகின. ஆனால், இன்று தொலைக்காட்சியின் வருகை
மக்களின் ரசனையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துவிட்டதனால்
அந்த மாற்றங்களையும் நாம் ஏற்பதற்கு
எம்மை
தயார்படுத்திக்கொண்டு விட்டோம் "
என்று இறுதியாக இந்த ஆண்டு தொடக்கத்தில்
சந்தித்தபொழுது திலகமணி ரீச்சர் தெரிவித்தார்.
நீர்கொழும்பில் தமது இல்லத்திலே
சங்கீத நாட்டியாலயா என்ற இசை
- நடனப் பள்ளியையும் தமது கணவருடனும் தனது அண்ணன்
மயில்வாகனன் அவர்களுடனும்
இணைந்து 1963
காலப்பகுதியில் ஆரம்பித்து இளம் மாணவர்களுக்கு மிருதங்கம், கடம்,
கஞ்சிரா மற்றும் வாய்ப்பாட்டு, நடனம் முதலானவற்றை ஆசிரியர்களை நியமித்து பயிற்சி வழங்கினார்.
வருடாந்தம்
நீர்கொழும்பில் சங்கீத நாட்டியாலயாவின் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தியிருக்கின்றார். காலம் கடந்து தனது
அன்புக்கணவரும் அருமை அண்ணாவும்
மறைந்துவிட்ட துயரத்தினை போக்கிக்கொள்வதற்காக,
மாணவக்குழந்தைகளுடன் பொழுதை செலவிட்டு தனது கடந்த
கால நினைவுகளில் சஞ்சரிக்கின்றார் எங்கள் மூத்த ஆசிரியப்பெருந்தகை திருமதி திலகமணி தில்லைநாதன்.
எப்பொழுதும்
குழந்தைகள், மாணவர்களுடன் இருந்தே பழக்கப்பட்டுவிட்ட இவரால் அந்த வட்டத்திலிருந்து இன்னமும் விடுபடமுடியவில்லை.
கடந்த பல
வருடங்களாக தனது இல்லத்திலேயே
ஒரு பாலர் பாடசாலையை நடத்திவருகிறார். இவரது மகள் ராதா
அதற்கு பக்கத்துணையாக இருக்கிறார்.
எமது விஜயரத்தினம்
இந்து மத்திய கல்லூரியில்
நலிவுற்ற சில மாணவர்களுக்கு புலமைப்பரிசில்
வழங்கிவருகின்றோம். அண்மையில் நடந்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்விற்கு இவரை அழைத்து - இவரது கரங்களினால்
குறிப்பிட்ட புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தகுந்தது.
கல்வியும் கலையும் திலகமணி
ரீச்சரின் இரு கண்கள். அந்தக்கண்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்
அவரது முன்னாள் - இன்னாள் மாணவர்கள்.
----00---
No comments:
Post a Comment