பாடலை நிறுத்திய பாணன் – எஸ். பொ. - பி.எஸ்.நரேந்திரன்

.
Ess_Ponnudurai_Ponnuthurai_Writers_Eezham_Sri_Lanka_Eelam_Authors_Faces_People
முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்.
முன்னாலே வந்து நின்றான் காலன்.
சத்தமின்றி, வந்தவனின்
கைத் தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான், போனான் முச் சூலன்!
– எஸ். பொ. வின் ? புத்தகத்திலிருந்து.
எஸ்.பொ. என்று தமிழிலக்கிய உலகில் அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை அவர்களைப் பற்றி நான் அறிந்தது அதிகமில்லை. நான் மட்டுமன்ன? ஈழத்து எழுத்தாளர்களில் எத்தனை பேர்களை தமிழ்நாட்டு தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள்? அல்லது அறிந்திருப்பார்கள்? எஸ். பொ. ஏதாவது தமிழ் சினிமாவில் தலை காட்டியிருந்தால் ஒருவேளை தமிழர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம்.


“இவர்தான் இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்” என்று தமிழ்நாட்டுத் தமிழனுக்கு அறிமுகப்படுத்தினால், “ஆங்…அவுரு இன்னா படத்துல ஆக்ட்டு குடுத்துங்கீறாரு!” என்பவனல்லவா இன்றைய தமிழன்! என்னே முன் தோன்றிய மூத்த குடியின் மாண்பு!! மெச்சிக் கொள்ள வேண்டியதுதான்.
எஸ்.பொ.வைக் குறித்து என்னிலும் ஏராளம் அறிந்த அசோகமித்திரனோ அல்லது ஜெயமோகனோ அல்லது சக இலங்கையரான அ.முத்துலிங்கமோ எழுதுவதுதான் சாலச் சிறந்தது. அவர்கள் எழுதியுமிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் யானையைப் பார்த்த குருடனைப் போல ஒரு சாதாரண வாசகனாக அவரைக் குறித்தான எனது சில எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். தவறிருப்பின் பொருத்தருள்க!
மேலும், இது அவசர கதியில் எழுதப்பட்டதொரு அஞ்சலிக் கட்டுரை. எனவே பிழைகள் வர வாய்ப்புகளும் அதிகம்.
oOo
உலகில் நிகழ்ந்த எந்தவொரு பெரும் மாற்றமும் அந்தந்த நாடுகளைச் சார்ந்த சிந்தனாவாதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பல பெரும் சமூக மாற்றங்கள் நிகழ சந்தேகமில்லாமல் இண்டலெக்சுவல்ஸ் எனப்படும் சிந்தனாவாதிகளே முக்கிய இடம் வகித்திருக்கிறார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. அரைவேக்காட்டு மூடர்களும், அயோக்கிய சிகாமணிகளும், நேர்மையும், அறவுணர்ச்சியுமற்ற பதர்களும் தங்களை அறிவுஜீவிகளாக, சிந்தனாவாதிகளாக நாணமின்றிக் காட்டிக் கொண்டு திரியும் நிலை இன்று வந்திருக்கிறது. கல்வியிலும், கலாச்சாரத்திலும், கலையிலும், இலக்கியத்திலும் சிறந்து விளங்கிய ஒரு பெரும் மனிதக் கூட்டம் சிந்தனை அழுகல்களைக் கொண்ட வீணர்களாக மாறிப்போயிருக்கிறது. ஈழத்துத் தமிழர்களும் இவர்களை அடியொற்றி மாறிப் போனதுதான் இதனிலும் வருத்தமூட்டும் ஒரு அம்சம்.
உண்மையான அறிவுஜீவிகள் இன்றைக்குக்கு தமிழ்நாட்டில் தேடினாலும் காணக்கிடைக்காத ஒரு அபூர்வமான வஸ்துவாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. உண்மையான சிந்தனாவாதிகள் இன்றைக்குத் தமிழ்நாட்டில் எள்ளி நகையாடப்படுவார்கள். விரட்டியடிக்கப்படுவாரகள். மூடர்கள் அறிவாளிகளைக் கண்டு அஞ்சுவது இயற்கைதானே?
மறைந்த எஸ். பொ. ஒரு மார்க்ஸியச் சிந்தனாவாதி. மார்க்ஸிஸம் என்றும் எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை. ஆனால் தமிழ்நாட்டின் உண்மையான மார்க்ஸியர்கள் தங்களின் கலாச்சார வேர்களை அறிந்தவர்களாக, அதனைக் குறித்த பெருமிதமும், அதனைக் காக்க வேண்டிய அவசியத்தினைக் குறித்தும் உணர்வுடன் இருந்தார்கள். தமிழ்நாட்டு மார்க்ஸியர்களான ப. ஜீவானந்தமும், ஜெயகாந்தனும் அதற்குச் சிறந்ததொரு உதாரணம். நான் படித்த வரையில் எஸ். பொ.வும் கலாச்சார உணர்வும், தமிழக்கிய இலக்கிய அறிவும் கொண்டவராக இருந்தார் என்பது என் எண்ணம்.
காந்தியின் மீதிருந்த அபிமானமும் உடையவரான எஸ். பொ. உலகின் பல்வேறு தலைவர்கள் காந்தியைப் பற்றிச் சொன்னவற்றைத் தொகுத்து “காந்தி தரிசனம்” என்னும் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக காந்தியச் சிந்தனை ஈழத்தில் எடுபடாமல் போய்விட்டது. இலங்கையில் இருக்கையில் காந்தியைக் குறித்து அவர் எழுதிய பல புத்தகங்கள் இந்தியாவிற்கு வரவில்லை. வணிக ரீதியாக அது சாத்தியமில்லை என்னும் காரணத்தால் என வருந்திச் சொல்கிறார் எஸ். பொ.
ஈழத்தில் போர் உச்சத்திலிருந்த காலத்தில் சென்னையில் பலகாலம் தங்கியிருந்த எஸ்.பொ. தமிழகத்தில் காந்தி எதனையெல்லாம் பொது வாழ்வின் விழுமியங்கள் எனக் கற்பித்தாரோ, அவையனைத்தும் கனவாய், பழங்கதையாய் மாறியிருக்கும் அவலத்தைக் கண்டு வருந்துகிறார். காந்தி தரிசனம் புத்தகத்தை எழுதுவதற்குத் தகவல்களைத் தேடி கன்னிமாரா நூல் நிலயத்திற்குச் செல்லும் எஸ்.பொ. அங்கு அவருக்குக் கிடைத்த மரியாதையை இப்படிச் சொல்கிறார்,
“….ஒரு பொது நூல் நிலையம் எவ்வாறு பராமரிக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக் காட்டாக கன்னிமாரா செயல்படுவது கண்டு நாணினேன்…..அலட்சியம், உதாசீனம், மெத்தனம், சோம்பல் ஆகிய அனைத்தினதும் கலவையாக (நூலக) ஊழியர்கள் நடமாடினார்கள். இது கண்டனமல்ல. கன்னிமாரா அறிவுக் கோவிலாகச் செயலாற்றுதல் வேண்டும் என்கிற ஆதங்கத்தில் எழுதுகிறேன்….
வாழ்க்கையின் சத்தான பகுதியை நானும் நூல் நிலயங்களிலேயே செலவு செய்துள்ளேன். அவை மனித நாகரிகம் எழுப்பியுள்ள அற்புத ஆலயங்கள் என்கிற பக்தி பாராட்டுதல் என் சுபாவம். தமிழ் நாட்டிலுள்ள தரங்கம்பாடி குறித்துச் சில தகவல்களைப் பெறுவதற்காக, சென்ற ஆண்டில் கோபன்கேஹன் நகரிலுள்ள நூல் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். டென்மார்க் ஆங்கிலம் பயிலாத நாடு. என் விசாரிப்புகளுக்குப் பதிலளிக்க ஆங்கிலம் அறிந்த ஊழியர் ஒருவரை உடனடியாகத் தருவித்தார்கள்.
அந்த ஊழியர் என்னுடன் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, அனைத்துத் தகவல்களையும் திரையிலே காட்டி, எனக்குத் தேவையான தகவல்கள் அனைத்தின் print-outகளை எடுத்து உடன் தந்தார். எதிர்காலத்திலும் உதவுவதாக வாக்களித்து, தொடர்பு கொள்ளுவதற்கான விபரங்கள் அனைத்தையும் தந்தார்.
`சார், அந்த செல்ஃபில் இருப்பதுதான் காந்தி பற்றிய நூல்கள். பார்த்து எடுத்துக் கொள்…` எனக் கூறி கன்னிமாரா ஊழியர் மாயமானார்! தூசும், செத்துக் கொண்டிருக்கும் காகிதங்களின் நாற்றமும் புடைசூழ நடந்தது தேடல். மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலே அவரை ரூபாய் நோட்டுக்களிலே மட்டும் பார்த்துத் திருப்திப் பட வேண்டும்…..”
oOo
1932-ஆம் வருடம் இலங்கையின் நல்லூரில் பிறந்த எஸ். பொன்னுத்துரையைப் பற்றி இணையத்தில் அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் கல்வி பயின்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்குப் புலம் பெயர்ந்த பின்னர் ஏறக்குறைய அவர் மிகவும் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். கனேடிய “இலக்கியத் தோட்ட” விருதிலிருந்து பல விருதுகள் அவருக்குக் கிடைத்திருப்பது தெரிகிறது. ஆனால் அவர் குறித்து வெளித் தெரியும் தகவல்கள் அதிகமில்லை.
தீ” எஸ். பொ. வின் புகழ் பெற்ற படைப்புகளிலொன்று. இன்றைய காலகட்டத்தைப் போலில்லாமல் ஆண், பெண் பாலியல் உறவுகள் குறித்து எழுத அச்சப்படும் இலக்கியவாதிகள் வாழ்ந்த 1961-ஆம் வருட காலத்தில் “தீ”யை எழுதியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் அது புரட்சிகரமான ஒரு விஷயமாக இருந்திருக்க வேண்டும். உள்ளூரில் வசதியுடன் வாழும் ஒரு பணக்கார இளைஞன் அந்த ஊரிலிருந்த ஆறு பெண்களுடன் கொண்ட உறவினைக் குறித்து எழுதப்பட்ட ஏறக்குறைய சுய சரிதம் போன்றதொரு நாவல். எஸ். பொ.வின் எல்லா நாவல்களையும் போல அளவில் சிறிய ஒன்றாக இருந்தாலும் வெளிவந்த காலத்தில் சர்ச்சைகளை உண்டாக்கியிருக்க வேண்டும்.
அதனைத் தவிர சில சிறுகதைகளும், கட்டுரைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். பெரும்பாலானவை இலங்கையில் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கின்றன. புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் கதைகளை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியுடன் சேர்த்துத் தொகுத்தெழுதியிருக்கிறார்.
அவரது முக்கியமான புத்தகமாகன “?” (புத்தகத்தின் தலைப்பே அதுதான்!) மிகத் தனிப்பட்ட வகையைச் சார்ந்தது. 2147-ஆம் வருடம் நடப்பது போன்றதன் அடிப்படையில் எழுதப்பட்ட கதையா, கட்டுரையா என்றே வகைப்படுத்த முடியாத ஆனால் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிற அங்கதம் நிறைந்த புத்தகம். இன்றைய நிலயில் இத்தகைய உயர்தர அங்ககதம் ஜெயமோகனால் மட்டுமே எழுத முடியும் என்று நினைக்கிறேன். அப்படியே எழுதப்பட்டாலும் இன்றைக்கு எத்தனை பேர் அதனைப் புரிந்து கொள்வார்கள் என்பதும் சந்தேகம்தான். எஸ்.பொ. இந்தப் புத்தகத்தை 1972-ஆம் வருடம் எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியப்படத்தக்கது. தமிழறிஞர்கள் என்போரிலிருந்து கிழட்டு சினிமா நடிக, நடிகைகள் வரை சகட்டுமேனிக்கு கிண்டலடிக்கிறார். தமிழிலக்கியம் அதிகம் தெரியாத என்னையே பல இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறார். தமிழ் இலக்கியம் புரிந்தவர்கள் இன்னும் ரசிப்பார்கள் என்று எண்ணுகிறேன்.
“?” எண்பது பக்கமுள்ள சிறு புத்தகம். அடிக்குறிப்புகளும், அந்த அடிக்குறிப்புகளுக்கான அடி,அடிக் குறிப்புகளும் அதனை அவர் சொல்கிற விதமும் உண்மையிலேயே தனிப்பட்ட வகையைச் சார்ந்தவை. அசோகமித்திரன் முன்னுரை எழுதியிருக்கிறார். யாழ்ப்பாணத்திற்குத் தான் சென்ற போது மிகவும் சந்திக்க விரும்பிய ஒருவரான எஸ்.பொ.வைச் சந்திக்க இயலாமல் போனதைக் குறித்து வருந்தும் அசோகமித்திரன், பிற்காலத்தில் அடிக்கடி எஸ்.பொ.வைச் சென்னையில் சந்தித்திருப்பார் என்று நினைக்கிறேன். போர் உச்சத்தில் இருந்த காலத்தில் எஸ்.பொ. சென்னையில் பல ஆண்டுகாலம் தங்கியிருந்திருக்கிறார்.
இலக்கிய அங்கதம் பிடிப்பவர்கள் தவறாமல் எஸ்.பொ.வின் “?” படிக்க வேண்டுகிறேன்.
oOo
ஏற்கனவே கூறியபடி இது ஒரு அவசரத்தில் எழுதப்பட்டதொரு கட்டுரை. எனவே தகவல் பிழைகளும், விடுபடல்களும் இருக்கலாம். அதற்கான என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டில் அரைவேக்காட்டு சினிமா நடிகர்களுக்குக் கிடைக்கும் மரியாதையில் ஒரு துளியளவு கூட உண்மையான அறிவுஜீவிகளுக்கு, சிந்தனாவாதிகளுக்குக் கிடைப்பதில்லை என்னும் மனவருத்தமே என்னை இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. என்றேனும் ஒருநாள் காலம் மாறலாம். அல்லது மாறாமலேயே கூடப் போகலாம். அதுபற்றி வருந்தி என்ன பயன்.
எஸ். பொ. அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.
nantri http://solvanam.com/

2 comments:

S.Srikantharajah said...
This comment has been removed by the author.
S.Srikantharajah said...

முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்.
முன்னாலே வந்து நின்றான் காலன்.
சத்தமின்றி, வந்தவனின்
கைத் தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான், போனான் முச் சூலன்!
– எஸ். பொ. வின் “?“ புத்தகத்திலிருந்து.

என்று இந்தக் கட்டுரையின் முகப்பில் எஸ்.பொ.வின் புகைப்படத்தோடு போடப்பட்டிருப்பது சரியல்ல என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தக் குறும்பா ஈழத்தின் மிகப்பெரும் கவிஞர்களில் ஒருவராக விளங்கிய மஹாகவி (உருத்திரமூர்த்தி) அவர்களால் எழுதப்பட்டது. இலஞ்சம் மக்களிடயே எவ்வளவு தாராளமாக இடம்பெறுகிறது என்பதயும், தமிழன் தேவர்களையும் இலஞ்சம் வாங்கப் பழக்கிவிட்டான் என்பதையும் கூறுகின்ற இந்தப்பாடலை, இலஞ்சம், பந்தம், கையூட்டு என்ற சொற்களை விளக்குவதற்காக எஸ்.பொ. தனது "?" என்ற நூலில் ஓருடத்தில் அடிக்குறிப்பாகப் பயன்படுத்தியுள்ளார். இந்தவரிகளை வேறுபல எழுத்தாளர்களும் எடுத்தாண்டுள்ளார்கள். எனவே, இந்தக்கட்டுரையில் இடம்பெற்றிருப்பதைப்பார்த்து, இந்தப்பாடலை எஸ்.பொ. வினுடையது என்று வாசகர்கள் எண்ணுவதற்கன சாத்தியம் மிகவும் அதிகமாகவே உள்ளது. அந்த எண்ணம் எதிர்காலத்தில் தவறான பதிவு ஒன்று தொடர்ந்துகொண்டு போவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும். நயமிகு நன்றிகள்.

அன்புடன்
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
(பின்னூட்டம் இருமுறை பதிவாகிவிட்டதால் முதலில் போட்டதை நானே நீக்கிவிட்டேன்)