மூத்த எழுத்தாளர் எஸ் பொ காலமானார்

.

மூத்த எழுத்தாளர் எஸ் பொ  அவர்கள் சிட்னியில் இன்று காலமானார் . சிறுகதை,நாவல் நாடகம்,கவிதை,விமர்சனம்,அரசியல் என்று இலக்கியத்தின் அனைத்து பக்கங்களையும் தொட்ட மிகப்பெரும் எழுத்தாளர் .சடங்கு என்ற நாவலின்மூலம் தமிழ் சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை கொண்டுவந்த எழுத்தாளர் எஸ் பொ அவர்கள்  இன்று தனது 82வது வயதில் அவுஸ்திரேலியா சிட்னியில்  காலமாகிவிட்டார் .

தீ ,ஆண்மை, சடங்கு, வீ , நனைவிடைதோய்தல், இனிஒரு விதிசெய்வோம் என்ற எழுத்துக்கள் உட்பட பல எழுத்துக்களையும்  சிட்னியில்  அரங்ககலைகள் சக இலக்கிய பவரில் இருந்து "ஈடு" என்ற நாடகத்தின் மூலம் இலங்கையின் அரசியல் பிரச்சினையை தொடக்கம் முதல் துவக்குவரை சொல்லுவதற்கு பங்காற்றிய எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு தமிழோடு விளையாடிய ஒரு எழுத்தாளன் ஓய்வு பெற்றுக்கொண்டார் . தமிழை இவர் நேசித்தார் , தமிழ் இவருக்கு கைகட்டி சேவகம் செய்தது.

வாழ்ந்து கொண்டு இருக்கும் போதே வரலாற்றில் வாழ்தல் என்ற இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட தன் சுயசரிதையை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டவர் .

மித்திர பதிப்பகம் என்ற பதிப்பகத்தை நடாத்தி ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் எழுத்துக்களை அச்சேற்றிய பெருமையையும், உலகத் தமிழ் எழுத்தாளர்களை ஒன்றுதிரட்டி பனையும் பனியும் என்ற சிறு கதை தொகுதியையும் தந்த  எழுத்தாளர் இன்று ஓய்வெடுத்துக்கொண்டார் .

யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.பொ அவர்கள், தனது வாழ்நாளின் பெரும்பாகத்தை மட்டக்களப்பில் கழித்திருந்தார்

அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர்க்கு தமிழ்முரசு அவுஸ்ரேலியா  தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது.

தமிழோடு விளையாடிய இந்த  எழுத்தாளனின்  ஆண்மை என்ற நாவலில்  ஒரு சில வரிகள் 

ஈச்சேரில் விழுந்த சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது.
 
வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டது வீண் போகவில்லை. சோட்டைத் தீர்க்க ஆறாம் காலாகப் பொடியன் பிறந்தான். சந்தான விருத்தியில் அவனே மங்களமாக அமைந்தான்.

No comments: