வேர்களைத் தேடிச் செல்வோம்

.

மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுடன் தமிழுக்கு இருந்த உறவு அரசியல் காரணங்களால் நலிவடைந்தது.
திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ், இந்திய விடுதலைக்கு முன்புகூட தன் சக மொழிகளுடன் நல்லுறவு கொண்டிருந்தது. மொழிவாரி மாநிலம் உருவான பிறகு ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி, மொழி மீதான அரசியல்வாதிகளின் நிதானமற்ற ஆவேசம் இரண்டும் ஒரு குடும்ப மொழிகளுக்குள்ளே மாறுபாட்டை உருவாக்கிவிட்டன.
கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் தமிழுக்குமான உறவில் சில அரசியல் காரணங்களால் இடைவெளி வந்துவிட்டது. என்றாலும், விதிவிலக்காகப் பண்பாட்டு ஆய்வாளர் சிலர் இனத்துக்கும் மொழிக்குமான பழைய உறவைச் சரியாகவே பதிவுசெய்துள்ளார்கள்.
ஷெட்டரின் ஆராய்ச்சி
சங்க இலக்கியங்களின் கன்னட மொழி பேசிய பகுதியின் வரலாற்றை நேர்மையாக ஆராய்ந்தவர் ஷெட்டர். இவரது முக்கியமான நூல், ‘ரிஃப்லெக்‌ஷன் ஆன் தி எர்லி டிரவிடியன் ரிலேஷன்’ (Reflection on the Early Dravidian Relation). ஷெட்டர் மானுடவியல், தொல்லியல் வரலாற்றுப் பேராசிரியர். கர்நாடகப் பல்கலைக்கழகத்திலும் கேம்பிரிட்ஜ், ஹார்டுவேர்டு பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியராக இருந்தவர்.



தென்னிந்திய வரலாறு சங்க காலத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று ஷெட்டர் பலமுறை வற்புறுத்தியிருக்கிறார். கன்னடமும் தமிழும் ஒரே வேரில் முளைத்தவை என்ற கருத்தை தன் நூல் வழி வெளிப்படுத்திய ஷெட்டர், கன்னட கவிராஜ மார்க்கத்துக்கு முன்னோடி தொல்காப்பியர் என்கிறார்.
கவிராஜரும் தொல்காப்பியரும்
கவிராஜ மார்க்கம் என்பதைத் தமிழில் ‘கவிஞர்களின் ராஜபாதை’ எனக் கூறலாம். இது தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்; கவிதை, உரைநடை பற்றியும் கன்னடம் பேசிய மக்களின் நிலம், பண்பாடு பற்றியும் பேசுகிறது. இந்நூலின் ஆசிரியர் ஸ்ரீ விஜயன். இவர் அமோகவர்ஷ நிருதுபங்கன் என்ற அரசனின் (கி.பி.814-878) காலத்தவர். இந்நூல் கி.பி. 850-ல் இயற்றப்பட்டது.
தண்டி முதலானோரின் வடமொழி இலக்கண நூற்களின் பாதிப்பால் கவிராஜ மார்க்கத்தை அதன் ஆசிரியர் எழுதினார்; என்றாலும் கன்னட இலக்கணத்தை வடிவமைக்க திராவிட வேரை நம்பினார். ஒரு விதத்தில் தொல்காப்பியரும் இத்தகையவரே. இருவரும் சமஸ்கிருத, பிராகிரத மரபை அறிந்தவர்கள். பெண்களை வர்ணிப்பதில்கூட இவர்கள் திராவிட வேர்களைத் தேடியவர்கள். தொல்காப்பியத்தையும் கவிராஜ மார்க்கத்தையும் ஒப்பிடும் சூழ்நிலையில் ஷெட்டர் தமிழ் மொழியின் தொன்மை பற்றிய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். சங்கப் பாடல்களும் தொல்காப்பியமும் சேர்ந்து ஏறத்தாழ 4,000 பாடல்கள் வருகின்றன. இவை சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இந்த அளவுக்குச் செறிவான பழமையான பதிவு உலகில் வேறு மொழிகளுக்கு இல்லை என்கிறார்.
திராவிட வேரைத் தேடலாம்
பொதுவாக, தென்னிந்திய மொழிகளின் இலக்கணக் கூறுகளையும், பண்பாட்டுத் தன்மைகளையும் ஆராய்ந்த ஐரோப்பிய அறிஞர்கள் இவற்றில் திராவிட வேர்களைத் தேடவில்லை. இவற்றின் மூலம் சமஸ்கிருதம் என்றனர். தொல்காப்பியம், கவிராஜ மார்க்கம் இரண்டையும் ஆராய்ந்தவர்கள் இவற்றில் வடஇந்தியச் செல்வாக்கையே தேடினர். இவர்கள் மட்டுமல்ல பழைய உரையாசிரியர்களும் பிற்காலத் தென்னிந்திய மொழியியல் பண்பாட்டு ஆய்வாளர்களும் சமஸ்கிருத வேர்களை மட்டுமே தேடினார்கள். ஒரு வகையில் இது எல்லாமே சமஸ்கிருதமயமாக்கலின் ஆரம்பம். இவர்களைப் பின்பற்றியே மு. ராகவையங்கார் போன்ற தமிழறிஞர்கள் சிலரும் நகர்ந்தனர். ஷெட்டர் இதிலிருந்து வேறுபடுகிறார்.
தொல்காப்பியத்திலும் கவிராஜ மார்க்கத்திலும் கூறப்படும் பண்பாடு பண்டைத் தமிழ்ப் பண்பாடுதான். இவற்றின் மூலத்தை திராவிட வேர்களில் தேடலாம். அரசியல் சார்பில்லாத திராவிடப் பண்பாடு ஒன்று உண்டு. அதைத் தென்னிந்திய மொழிகளின் வழி தேடிக் கண்டுபிடித்தால் ஒரு பொதுமைப் பண்பு கிடைக்கும் என்கிறார் ஷெட்டர்.
தமிழிலிருந்து மலையாளம்
தமிழ் மொழியிலிருந்துதான் மலையாள மொழி உருவானது என்ற கருத்தை கால்டுவெல், குண்டர்ட் போன்றவர்கள் ஆரம்ப காலத்தில் வெளியிட்டபோது கேரளத்து அறிஞர்கள் அதை ஒத்துக்கொண்டனர். பேராசிரியர் இளங்குளம் குஞ்சம்பிள்ளை என்ற மலையாள மொழி ஆய்வாளர் இந்தக் கருத்தை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். சங்க காலத்திலிருந்து கி.பி. 8-ம் நூற்றாண்டுவரை கேரளத்தின் செய்யுள் மொழியும், பேச்சுவழக்கு மொழியும் தமிழாகத்தான் இருந்தது என்கிறார் இளங்குளம். கேரளத்தின் நவீனப்படைப்பாளிகளும் சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, சங்கப் பாடல்கள் சில ஆகியவற்றைத் தங்கள் மண்ணின் கவிதைகளாகவே உரிமை கொண்டாடுகிறார்கள். வையாபுரிப்பிள்ளையின் கருத்துப்படி தொல்காப்பியம்கூட தென் கேரளத்தைச் சார்ந்தது. குலசேகர ஆழ்வார் கேரள அரசர்; சேரமான் பெருமாள் நாயனார்; புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் வேணாட்டிகள் என கேரளப் படைப்பாளிகளின் நீண்ட பட்டியலே உள்ளது. அதோடு தீயாட்டுப் பாட்டுகள், சர்வப்பாட்டுகள், கிருஷிப்பாட்டுகள், வள்ளப் பாட்டுகள், சாற்றுப் பாட்டுகள் முதலிய நாட்டார் பாடல்களும் தமிழ் செல்வாக்குடையவை.
கி.பி. 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ராமசரித காப்பியம்’, கி.பி.15-ம் நூற்றாண்டில் எழுந்த ‘கிருஷ்ணகாதை’, ‘பாரதமாலை’ போன்ற காவியங்களும் தமிழ் மரபுக்கே முதலிடம் கொடுப்பவை. இந்தக் காவிய கர்த்தாக்கள் தங்கள் பாடல்களைத் தமிழ்க்கவி என்று கூறிக்கொள்ளுவதில் தயக்கம் காட்டவில்லை. ஒரு சான்று:
ஆதி தேவனில் அமிழ்ந்த மனக் காம்புடைய சீராமன்
அன்பினோடே இயம்பின தமிழ்க் கவி வெல்வோர்
போதில் மாதின் இடமாவருடல் வீழ்வதினு பின்
போகி போக சயனன் சரணதார் அயர்வாரே
கி.பி. 9-ம் நூற்றாண்டில் கேரள இலக்கிய மரபில் சமஸ்
கிருதக் கலப்பு வேகமாகப் பாய்ந்ததால் மணிப்பிரவாளத்தில் வைசிக தந்திரம், உண்ணிநீலி சந்தேசம், உண்ணிச்சிரி தேவி சரிதம், அனந்தபுர வர்ணனம் போன்ற இலக்கியங்கள் தோன்றின.
லீலாதிலகம்
மணிப்பிரவாள இலக்கியம் பரவலான பிறகு கி.பி. 14-ம் நூற்றாண்டில் மலையாள இலக்கண நூலான லீலாதிலகம் தோன்றியது. லீலாதிலக ஆசிரியர் தமிழ் அறிந்தவர். தொல்காப்பியம், நன்னூல் போன்ற பல இலக்கண நூற்களைக் கற்றவர். இவர் தொல்காப்பியரை மேற்கோள் காட்டுகிறார். தமிழ் இலக்கணங்கள் கூறும் புணர்ச்சி விதிகளை எடுத்துக்கொண்டவர். வீரசோழியத்தை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சேந்தன் திவாகரத்தை நாட்டுமொழி நிகண்டு என்கிறார். யாப்பருங்கலத்திலிருந்தும் ஒரு எடுத்துக்காட்டு தருகிறார்.
கேரள பாணினீயம்
மலையாள இலக்கண நூல் லீலாதிலகத்தைப் போன்ற இன்னொரு நூல் கேரள பாணினீயம். இதன் ஆசிரியர் ஏ.ஆர். ராஜராஜவர்மா (1863 – 1918) கேரள பாணினீயம் 1895-ல் வந்தது. 7 பகுதிகள் 194 நூற்பாக்கள் என அமைந்தது. இந்நூலை பேராசிரியர் இளையபெருமாள் தமிழில் பெயர்த்திருக்கிறார். தமிழகத்தில் நன்னூல்போல் மலையாள மாணவர்களின் இலக்கணப் பாடத்திட்டத்தில் இருப்பது இந்த நூல். இந்த நூலுக்கு விரிவான முகவுரையையும் உரையையும் நூலாசிரியரே எழுதியிருக்கிறார்.
ராஜராஜ வர்மா கேரள பாணினீய முகவுரையில் தமிழிலிருந்துதான் மலையாளம் உருவானது என்பதைக் காரண-காரியங்களுடன் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம் குறிப்பிடும் பண்டை தமிழ்நாட்டுப் பகுப்பையும் அவர் ஒத்துக்கொள்ளுகிறார். சேரநாட்டில் அடங்கிய தமிழ்ப் பகுதிகளில் தமிழ் வட்டார மொழியாக இருந்தது. ஆனால், இது மதுரைத் தமிழிலிருந்து வேறுபட்டது என்கிறார். வர்மா தன் நூலில் நன்னூலிலிருந்து இருபது இடங்களில் மேற்கோள் காட்டுகிறார். கபிலர், கம்பர், குலசேகர ஆழ்வார் ஆகியோரின் பாடல்களையும் எடுத்தாளுகிறார். நம்பூதிரிகள் கேரளத்தில் நிலையாகத் தங்க ஆரம்பித்த காலகட்டத்தில் (கி.பி. 600 – 774) கேரளத் தமிழில் வடமொழிக் கலப்பு அதிகரித்தது என்ற லீலாதிலக நூல் கருத்தை இவரும் ஒத்துக்கொள்ளுகிறார்.
“கொடுந்தமிழ் மொழி திராவிடமாகிய இமயமலையிலிருந்து சமஸ்கிருத யமுனையில் கலந்து மலையாளமாயிற்று” என்கிறார் ராஜராஜ வர்மா.
மலையாளம் பிரிந்ததற்குக் காரணம் தமிழிலிருந்து மலையாளம் பிரிந்ததற்கு பண்பாடு, இலக்கணம், நம்பூதிரிகளின் செயல்பாடு ஆகியவற்றை ராஜராஜ வர்மா காரணங்களாக்குகிறார். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட காலத்தில் மலையாள இலக்கியவாதிகள் பழந்தமிழ்ச் சொற்களைத் தங்கள் படைப்பில் எழுதுவதில் தயக்கம் காட்டினார்கள். இந்தத் தயக்கம் கூட்டு வெறுப்பாக வளர்ந்தது. இத்தகைய படைப்பாளிகளில் பெரும்பாலானோர் நம்பூதிரிகள். இதே சமயத்தில் திராவிட வேரிலிருந்து வந்த வினையெச்ச, பெயரெச்ச வாய்ப்பாடுகளை எடுத்துக்கொண்டார்கள்.
பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின் கேரளம் தமிழகத்திலிருந்து அரசியல்ரீதியாகப் பிரிந்தது. இந்த மாநில இயற்கையமைப்பும் ஒரு காரணம். தமிழ் மண்ணின் தாயாதிகள் என்னும் பண்டைய எண்ணம் மெல்ல மறைந்தது. தமிழர்களுடனான உறவும் குறைந்தது. பக்தர்களும் வியாபாரிகளும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்குச் செல்வது என்ற சூழ்நிலை உருவானது.
கேரளத்தின் மருமக்கள்வழி தமிழர்களுடனான உறவைத் துண்டித்தது சமூகக் காரணங்களில் முக்கியமானது என்கிறார் ராஜராஜவர்மா. தமிழிலிருந்து மலையாளம் பிரிந்து செல்வதற்கு சில இலக்கண விதிமுறைகளும் காரணம் என்கிறார் வர்மா. இந்த இலக்கண விதிகள் பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின் உருவானவை.
மலையாளத்தில் தமிழ் மூலம்
கேரளத்துக்கும் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவில் விரிசல் வந்துவிட்டது. நதிநீர் காரணமாக எழுந்த இந்த விரிசலை ஊடகங்கள் ஊதிப் பெருக்கிவிட்டன. தமிழ், கன்னடம், கேரளம் மூன்றின் பழம் பண்பாட்டு உறவு, மொழி உறவு, அரசியல் உறவு எல்லாம் ஆராய்ச்சியாளர் மத்தியில் பேசப்படுவன ஆகிவிட்டன.
சிலப்பதிகாரக் கண்ணகி வழிபாடு இன்று கேரளத்திலும் ஈழத்திலும் மட்டுமே உள்ளது. சிலப்பதிகாரத்தின் பல்வேறு கதை வடிவங்கள் கேரளத்தில் வாய்மொழியாகவும் கதைப்பாடல் வடிவிலும் உள்ளன என்பது இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை.
கேரளத் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியில் கம்பனின் பாடல்கள் 2300 பாடப்படுகின்றன. இந்த நிகழ்ச்சி வட மலபாரில் நிகழ்கின்றது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பேசப்பட்ட ஓணவிழா இன்று கேரளத்தின் மாநில விழா. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் வேலன் வெறியாடல் கேரளத்தில் தெய்யனாட்டமாக ஆடப்படுகிறது. இன்றும் அங்கு வேலன் மதிக்கப்படுகிறார். எட்டுத்தொகைப் பாடல்கள் கூறும் வேலன் இவரே.
இந்த வேர்கள் எல்லாம் எங்கே தொலைந்தன? மறக்கக் காரணம் யார் அல்லது எது?
- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர், ‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

nantri http://tamil.thehindu.com/

No comments: