திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
 கலை - இலக்கிய    விமர்சனத்துறையில்   நயக்கும் பண்பினை   வளர்த்த  முன்னோடி   - தகவம்  இராசையா  
  
                                           
ஈழத்து  கலை,  இலக்கிய  வளர்ச்சியில்  விமர்சகர்களின்  பங்கும் பணியும்  முக்கியமானது.
விமர்சகர்களில்   எத்தனையோ   ரகம்.  தாம்  சார்ந்த  அரசியல் கோட்பாடுகளுக்குட்பட்டு   விமர்சிக்கும்  பெரும்பாலான  விமர்சகர்கள் மாக்ஸீய   பண்டிதர்களாகவும்  விளங்கினர்.  சிலர்  தமது கருத்துக்களை   மிகவும்  எளிமையாக  பதிவு செய்து  படிப்பதற்கு ஆர்வமூட்டினார்கள்.
சிலர்  நீண்ட  காலமாக  விமர்சனத்துறையில்  ஈடுபட்டாலும் அவர்களை  தொடர்ந்து  படித்து வருபவர்கள்   மீண்டும்  மீண்டும் படித்தே   தெளிவுபெறவேண்டியவர்களானார்கள்.  சில சமயங்களில் அவர்கள்  எழுதியதை  புரிந்துகொள்ள  முடியாமல்  தமது தலையைப்பிய்த்துக்கொண்டவர்களும்  இருக்கிறார்கள்.
சில   இலக்கிய  சிற்றிதழ்களில்  குறித்த  விமர்சனங்களை   படிக்கும் ஆர்வம்   அற்று  அதன்    பக்கங்களை   புரட்டி  மறுபக்கங்களுக்கும் சென்றுவிடுவார்கள்.
ஈழத்து  இலக்கிய  உலகத்தில்  ஒருவகை    நெறிப்படுத்தப்பட்ட விமர்சன    முறைமைகள்  நீடித்தமையினால்    ஆக்க  இலக்கியங்களில்   அழகியல்  மங்கிப்போனதாகவும்  குற்றச்சாட்டு தொடர்கிறது.குறிப்பாக   பேராசிரியர்கள்  சிவத்தம்பி -  கைலாசபதி  முதலானோர் தமது    விமர்சனங்களில்    மாக்ஸீய   கண்ணோட்டத்தை ஆழமாக்கியமையினால்  அந்த   ஆபத்து    நீடித்ததாகவும்   புகார் எழுப்பப்பட்டது.
படைப்பு    இலக்கியங்களில்    சோஷலிஸ  யதார்த்தப்பார்வை   என்ற பதப்பிரயோகத்தினால்   அதனை  போதித்தவர்களிடமிருந்தே  தமது நூல்களுக்கு    ( கவிதை,   சிறுகதை,   நாவல்)   முன்னுரைகளை கேட்டுப்பதிவுசெய்தவர்கள்     இலங்கையில்    ஏராளம்.


ஆனால் -  காலப்போக்கில்  ஈழத்து  இலக்கியப்படைப்புகள்  மீதான தமிழகத்தவர்களின்    பார்வையில்  செறிவு  கூடியதும்,  தமிழக முன்னணி    படைப்பாளிகளின்  முன்னுரைகளுக்காக   எம்மவர்கள்  அவர்களை   நாடினார்கள்.  அதன்  மூலம்  தமிழகத்தில்  அங்கீகாரம் பெறுவதற்கும்   முயன்றனர்.
இந்தப்பின்னணிகளுடன்     இலங்கையின்  மூத்த  கலை,  இலக்கிய ரசிகர்   - ஆசிரியப்பெருந்தகை    அமரர்  வல்லியப்பர்  இரசையா அவர்களின்    வாழ்வையும்  பணிகளையும்  பார்க்கின்றேன்.
அவர்    இன்று    இருந்தால்    அவருக்கு   95   வயது.    கடந்த  22-11-2014 ஆம்    திகதி    அவருக்கு   95   வயது    பிறக்கிறது.    ஆனால்,  அவர் எம்மிடம்    இல்லை.
1919  ஆம்  ஆண்டு    நவம்பர்   மாதம்  22   ஆம்  திகதி  யாழ்ப்பாணம் திருநெல்வேலியில்   பிறந்த   இராசையா,  பண்டிதமணி கணபதிப்பிள்ளையின்   மாணாக்கர்.
பாடசாலையில்    கற்ற  பால்யகாலத்திலிருந்தே  வாசிப்பு  அவரது சிறந்த    பொழுதுபோக்காக    விளங்கியமையினால்  தனது  அந்திம காலம்வரையில்   சிறந்த   வாசகராகவே   அவர்    விளங்கினார். தொடர்ந்து    வாசிக்கும்    அவரது   இயல்பினால்     நாளடைவில் வாசித்தவற்றில்  பிடித்தமானதைப்பற்றி    நயந்து    எழுதுவதிலும் தன்னை     ஈடுபடுத்திக்கொண்டவர்    இராசையா.
எனக்கு    அவர்     அறிமுகமானது   1974   இற்குப்பின்னர்தான். கொழும்பில்    பிரபல்யமான   கொட்டாஞ்சேனை  புனித  பெனடிக்ற் கல்லூரியில்   அவர்   ஆசிரியாராக  கடமையாற்றிவந்தார்.   அவரது முயற்சியினால்  கொழும்பில்  உருவாக்கபட்டது  தமிழ்க்கதைஞர் வட்டம்.
இதனை    தகவம்   என்று    நாம்   சுருக்கமாக  அழைப்போம்.
இக்காலப்பகுதியில்    நான்  நீர்கொழும்பில்   இந்து  இளைஞர் மன்றத்திலும்    விஜயரத்தினம்  மகா    வித்தியாலய   பழைய   மாணவர்    மன்றத்திலும்   இலக்கிய    வட்டத்திலும்    கொழும்பில் இலங்கை    முற்போக்கு   எழுத்தாளர்     சங்கத்திலும்   இணைந்து தீவிரமாக     இயங்கிக்கொண்டிருந்தேன் .   அத்துடன்  வீரகேசரியின் நீர்கொழும்பு    பிரதேச   நிருபராகவும்     பணியாற்றியதனால்    எனக்கு      இராசையா அவர்களுடன்    உறவாடும்    சந்தர்ப்பங்கள்   அதிகரித்தன.
அவரை   நாம்    இராசையா   மாஸ்டர்  என்றே   அழைப்போம்.   அவர் கவிஞர்,  விமர்சகர்,  சிறுவர்  இலக்கியம்  படைப்பவர்.    அத்துடன் இலங்கை  வானொலியில்  வானொலி   மாமாவாக  ஞாயிறு தோறும் மதியம்     ஒலிபரப்பாகும்  சிறுவர்  மலர்  நிகழ்ச்சியை   தயாரித்து வழங்குபவர்.
அவர்  வானொலி  மாமாவாக  பணியாற்றிய  காலத்தில்  சிறுவர் மலர்   நிகழ்ச்சிக்காக  எமது  ஊரிலிருந்து  உறவினர்கள் -  நண்பர்களின்    குழந்தைகளையும்   வானொலி  கலையகத்திற்கு அழைத்துச்சென்றுள்ளேன்.
எமது   வாழ்க்கைப்பாதையில்  எத்தனையோ   வகையான  மனிதர்களை    சந்தித்திருப்போம்.  அவர்களின்  இயல்புகள்  ஆரம்பத்தில்    நெஞ்சத்துக்கு  நெருக்கமானதாகவும்    காலப்போக்கில் சில  சந்தர்ப்பங்களில்  வெறுப்பின்  அடையாளமாகவும்   மாறிவிடும் சோகங்களும்    இருக்கின்றன.


சில    நேரங்களில்  சில  மனிதர்கள் -  என்று  எம்மை  நாமே ஆறுதல்படுத்திக்கொண்டு    நகர்ந்துகொண்டிருப்போம்.
நாம்   சந்திக்கும்  மனிதர்கள்  தர்மாவேசம்    மிக்கவர்களாகவும் இருப்பவர்.    அதிர்ந்துபேசத்தெரியாதவர்களாகவும்    இருப்பர்.   அதே சமயம்    இடத்துக்குத்தக்கவாறு  பேசி  உறவாடி  தமது  காரியங்களை பல   தரப்பிலும்  சாதித்துக்கொண்டு  அனைவருக்கும்  நல்லவர்  என்ற வேடதாரிகளாகவும்    இருப்பர்.    ஆனால்,   இத்தகைய    வேடதாரிகள் விரைவில்    இனங்காணப்பட்டுவிடுவார்கள்.
நான்   சந்தித்த  ஏராளமான  மனிதர்களில்  இயல்பிலேயே   நற்குணம் வாய்ந்த    அதிர்ந்தே   பேசத்தெரியாத   ஆழமான   சிந்தனையுள்ள பலரில்   ஒருவராக   அமரர்  இரசையா  மாஸ்டர் அவர்களைப்பார்க்கின்றேன்.
தமிழ்   நாட்டில்  நீண்ட காலமாக    இயங்கிவரும்  இலக்கியச்சிந்தனை   என்ற  அமைப்பு  அறக்கட்டளையாகவே   தனது பணிளை   தொடருகிறது.  அதற்கு  இணையான   ஒரு அமைப்பாகத்தான்  இலங்கையில்  தலைநகரில்  இராசையா   மாஸ்டர்   உருவாக்கிய   தமிழ்க்கதைஞர்  வட்டம்  அமைந்தது.
 தகவம்,  ஈழத்து  இலக்கிய  வளர்ச்சியில்  காலத்தின்  தேவையாகவும்  இருந்தது.
தனிமரம்    தோப்பாகாது -  தென்னை   மரம்  கிளைவிடாது  என்பார்கள். அதனை   நன்கு   தெரிந்துவைத்திருந்தவர்    இராசையா.    அவர் இணைந்து    செயலாற்றும்  வல்லமை  .  தம்முடன்  மேலும்  பலரை    இணைத்துக்கொண்டார்.
எனது   நினைவுக்குள்  உடனடியாக  வரும்  அவர்களின்  பெயர்கள்  சில  வருமாறு:  வேல்   அமுதன்,   குலமணி,  ராஜதுரை,   மாத்தளை கார்த்திகேசு,    தயாபரன்  ஆகியோர்.
இலக்கியத்தினது  சமுதாயப்பயன்பாட்டை   முன்னிறுத்தி  எந்தவொரு அரசியற்கோட்பாட்டினுள்ளும்  தன்னை   சிறையிட்டுக்கொள்ளாமல் ஈழத்து  தமிழ்ச்சிறுகதைகளை    மதிப்பீடு  செய்யும்  காலத்தையும்  மீறிய  சமூகப்பணியை    தகவம்  இராசையா  மேற்கொண்டார்.
அதனால்தான்  அந்தப்பெருந்தகையின்  பணிகள்  அவருக்குப்பின்னரும்  அவரது  அன்பு  மகள்  வசந்தியினாலும்  அவரது   கணவர்  தயாபரனினாலும்  தொடருகின்றது.
இவர்கள்   இருவரும்  இலக்கியத்தம்பதியினர்.  இவர்களை   இணைத்தது    இலக்கியம்.  அதன்  மூலவர்  பெரியார்  இராசையா மாஸ்டர்.
கலாண்டுக்கு  ஒரு  முறை  அக்காலப்பகுதியில்  இலங்கையில் வெளியான   அனைத்து  சிறுகதைகளையும்  தேடி  எடுத்துப்படித்து குறிப்புகள்  எழுதி  தகவத்தில்  இணைந்திருப்பவர்களும்  படித்து குறிப்புகள்   எழுதி  இறுதியில்  கலந்துரையாடி  விவாதித்து தரநிர்ணயம்  செய்து  பரிசுக்குரிய  சிறுகதைகளை    தேர்வுசெய்து அறிவித்து   பரிசுகளை   வழங்கி வருவதற்கு  அயராத  உழைப்பு வேண்டும்.
சோர்வற்ற   தேடல்  செயற்பாடு  வேண்டும்.  நிதானமும்  பொறுமையும்   வேண்டும்.  இந்த  இயல்புகளை   வரித்துக்கொண்டு இராசையா    மாஸ்டர்  வாழ்ந்தமையினால்  அவர்  உருவாக்கிய  தகவம்   அமைப்பும்  தங்குதடையின்றி  தனது  பணிகளை தொடருகின்றது.
1974   காலப்பகுதியில்  தகவம்  அமைப்பு  தோன்றி   1975 முதல் 1979 வரையிலான  நான்காண்டு  காலப்பகுதியில்  வெளியானவற்றை தேர்ந்தெடுத்து   பன்னிரண்டு  சிறுகதைகள்  அடங்கிய  முதலாவது தொகுப்பினை  1987   அக்டோபரில்   வெளியிட்டது.
தகவம்  அமைப்பு  ஆரம்பிக்கப்பட்ட  காலத்தில்  நான் இலங்கையிலும்   அதன்   முதல்  வெளியீடு  வெளியான  வேளையில்   அவுஸ்திரேலியாவிலும்   இருந்தேன்.
தகவம்   பரிசுக்கதைகள்   தொகுதி -1  நூலின்  பிரதியை   நண்பர் ராஜஸ்ரீகாந்தன்  எனக்கு  அனுப்பியிருந்தார்.
1975   இலிருந்து   வெளியான  சிறுகதைகளை  தேர்வுசெய்து தெரிவானவற்றை   தனி நூலாகத்தொகுப்பதற்கு  ஏற்பட்ட  கால தாமதம்  புரிந்துகொள்ளத்தக்கதே.
1983  கலவரம்  தகவம்  சார்ந்த  பலரை   இடம்பெயரச்செய்திருக்கிறது.
எனினும்  இராசையா  மாஸ்டரினதும்  தகவம் அமைப்பைச்சார்ந்தவர்களினதும்   விடா  முயற்சி திருவினையாக்கியிருக்கிறது.
அவர்   தலைமையில்  கொழும்பில்  நடந்த  இலக்கியக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு   உரையாற்றியிருக்கின்றேன்.  அவர்  நீர்கொழும்பில் நடந்த   கூட்டங்களுக்கும்  வருகைதந்தார்.  நாம்  அங்கு  நடத்திய நாவன்மைப்போட்டிகளிலும்   நடுவராக    கடமையாற்றினார்.
அவர்   தமது  எழுத்திலும்  பேச்சிலும்  நிதானமானவராகவே  திகழ்ந்தார்.   அவரிடம்  உரத்த  குரலை   காண்பது  அரிது.  அதிர்ந்து பேசாத   எளிமைதான்  துலக்கமானது.   இலக்கியத்தில்  நயக்கும் பண்புகளை  நாம்  தமிழ்  நாட்டிலும்  இலங்கையிலும்  இரண்டு இரசிகமணிகளிடம்  கண்டிருப்போம்.   அந்த  மணிகள்:   இரசிகமணி டி.கே. சிதம்பரநாதன்   (டி.கே.சி) ,   இரசிகமணி   கனக  செந்திநாதன்.
இந்த   இரண்டு  இரசிகமணிகளினதும்  வாரிசாகவே  இராசையா மாஸ்டர்   எம்மால்  இனம்காணப்படுகிறார்.
இலக்கியத்தில்  காய்தல் -  உவத்தல்  அற்று  நயப்பதற்கு  விசேட ஆற்றல்   வேண்டும்.
அதுபோன்று  சிறுவர்   இலக்கியம்    படைப்பதற்கும்  குறிப்பிடத்தகுந்த   திறமை   வேண்டும்.   இராசையா   அவர்கள்  தமது இளமைக்காலம்   முதலே  சிறுவர்  இலக்கிய  ஈடுபாடு  மிக்கவர்.   சில சிறுவர்   இலக்கிய  நூல்களையும்   வாசகர்களுக்கு வரவாக்கியிருப்பவர்.   தமது  வாழ்நாளில்  பெரும்பாலும்  மாணவர் சமுதாயத்துடனேயே  இணைந்திருந்தவர்.  வானொலியிலும்  அவர் சிறுவர்   மலர்  நிகழ்ச்சியின்  தயாரிப்பாளராகத்தான்  செயற்பட்டார்.
மேற்குறித்த  காரணங்களும்  அவரது  பொறுமைக்கும்  நிதானத்திற்கும்  மூலதனங்கள்  என்றும்  சொல்லலாம்.
1980  காலப்பகுதியில்   தகவம்  அமைப்புக்கும்  சிறு  சோதனை   வந்தது. அவ்வேளையில்  வீரகேசரியில்   இலக்கியப்பலகணி   என்ற  பத்தியை  ( ரஸஞானி )    எழுதிக்கொண்டிருந்தேன்.    மூத்த  பத்திரிகையாளர் எஸ்.டி. சிவநாயகம்   சிந்தாமணியில்   இலக்கியச்செய்திகள் எழுதினார்.   தினகரன்   வாரமஞ்சரியில்    பத்திரிகையாளர் எஸ்.திருச்செல்வம்    எஸ்தியின்  பக்கம்  என்ற  பகுதியில்  எழுதினார்.
இந்த   மூன்று  பத்திகளும்  ஒரே  காலப்பகுதியில்  இலங்கை - தமிழக இலக்கியப்புதினங்களை  சுருக்கமாகவும்  சுவாரஸ்யமாகவும் பதிவு செய்துகொண்டிருந்தன.
ஒவ்வொரு  வாரமும்  ஈழத்து  எழுத்தாளர்கள் விரும்பிப்பார்த்துப்படிக்கும்   பத்திகள்   அவை.    இலக்கிய  செய்தி வேட்டையில்  நாம்  மூவரும்  ஈடுபட்ட  காலத்தில்  கலை, இலக்கியவாதிகள்  மற்றும்    கலை,  இலக்கிய   அமைப்புகள்   குறித்த செய்திகளுக்கு    முக்கியத்துவம்  வழங்கினோம்.
இலக்கிய   அமைப்புகளினுள்  உருவாகும்  முரண்பாடுகளை  எப்படியோ   மணந்து  பிடித்து  அம்பலப்படுத்தும்  கலையில் தேர்ந்தவராக    எஸ்.திருச்செல்வம்  விளங்கினார்.   
அவருக்கு  முன்னர்   எச். எம்.பி. மொஹிதீன்   தினகரன் வாரமஞ்சரியில்    அபியுக்தன்   என்ற   பத்தியில்  இவ்வாறு எழுதியதனால்   ஒரு  கட்டத்தில்  கல்வி   அமைச்சர்  பதியூதீன் மஹ்மூத்தினதும்    கோபத்துக்கு    ஆளாகினார்.    விளைவு    அமைச்சரின்    செல்வாக்கு  மிக்க  அழுத்தத்தினால்   அந்தப்பத்தி தினகரன்    வார மஞ்சரியில்   நிறுத்தப்பட்டது.
எப்பொழுதும்   சுறுசுறுப்பாக  இயங்கும்  எச். எம். பி. மொஹிதீன் உடனடியாகவே   அபியுக்தன்   என்ற   பெயரில்  ஒரு  பத்திரிகையை தனியாகத்   தொடங்கி  சில  மாதங்கள்  வீம்பாக  நடத்தினார்.
தினகரனில்  அபியுக்தனால்  ஏற்பட்ட  வெற்றிடத்தை    எஸ்தியின் எழுத்துக்கள்   நிரப்பின.
தகவம்   அமைப்பில்  ஆரம்பத்தில்  இணைந்திருந்த  நண்பர்  வேல் அமுதனுக்கும்   அமைப்பிற்கும்  இடையே   ஏற்பட்ட கருத்து  முரண்பாட்டை  தீர்ப்பதற்கு  நிறைய    வாய்ப்புகள்   இருந்தன.    தினமும்   நான்  வீரகேசரிக்கு  செல்லும்  கொழும்பு  கிராண்ட் பாஸ் வீதியில்  அமைந்த  பவர்  அன்  கம்பனியின்   நிருவாகத்தின் வீட்டிலேயே   வேல்  அமுதன்  குடும்பத்தினரும்  வசித்தனர்.  அவர் குரும்பசிட்டியிலிருந்து   பணி  நிமித்தம்  கொழும்புக்கு  வந்தவர். எழுத்தாளர்.    அத்துடன்    சிறந்த    நிருவாகியுமாவார்.  அவருக்கும் தகவம்   அமைப்பிற்கும்  இடையே    தொடர்ந்த    நிழல்   யுத்தத்தை பேச்சுவார்த்தைகளின்   மூலம்  தணித்திருக்கலாம்.   புரிந்துணர்வின் அடிப்படையில்  வேற்றுமையில்  ஒற்றுமை   கண்டு  அவர்கள் இணைந்து   இயங்கியிருக்கலாம்.
உள்ளுக்குள்ளேயே   அணிகள்  திரட்டப்பட்டதை   அவதானிக்க முடிந்தது.    எரியும்    நெருப்பில்   குளிர்காய்ந்து    இலக்கியவாதிகளின் கவனத்தில்    பரபரப்பை    ஏற்படுத்தும்    எண்ணத்தில்   எஸ்தி.  --  வேல் அமுதன்  பக்கம்   சார்ந்து நின்று   தமது    பத்திகளில்   அவசரப்பட்டு எழுதிவிட்டார்.    விளைவு    தகவம்     அமைப்புக்குள்   பிளவு தோன்றியது.
வேல்  அமுதன்  தமது  மகன்  மதியின்  பெயரும்  இணையத்தக்கதாக மகவம்  என்ற   புதிய   அமைப்பை  தோற்றுவித்தார்.
இதுவிடயத்தில்  நான்   எனது  பத்தியில்  தகவம்  அமைப்பு  குறித்து எதனையும்    எழுதவே   இல்லை.  குட்டையை   குழப்பி  மகிழ்ச்சியடைய   நான்  தயாராக  இருக்கவில்லை.  இராசையா   மாஸ்டர்    உட்பட   ஏனைய  தகவம்  உறுப்பினர்கள்  எனது இலக்கியப்பலகணியை    தொடர்ந்து    அவதானித்துவந்தனர்.
நான்   தினமும்  சந்திக்கும்  ஒரு  இலக்கியவாதியாக  நண்பர்  வேல் அமுதன்   இருந்தபோதிலும்  கூட  அவர்  தரப்பு  நியாயங்களுக்கோ அவ்வப்பொழுது  சந்திக்கும்  தலைவர்  இராசையா  உட்பட  ஏனைய  உறுப்பினர்களின்   கருத்துக்களுக்கோ    களம்  வழங்கவே   இல்லை.
எனது   குறித்த  கால  கட்டத்தின்  நடுநிலைமையை   இராசையா மாஸ்டர்    என்னைக்காணும்தோறும்  விதந்து    பாராட்டிக்கொண்டே இருந்தார்.
தனது  தரப்பு  நியாயங்களுக்கு  நான்  இலக்கியப்பலகணியில்   களம் தரவில்லை  என்பதனால்  சற்று  ஏமாற்றமடைந்திருந்தபோதிலும்  நண்பர்   வேல் அமுதன் - எமது  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம் 1983 மார்ச்   மாதம்  நாடளாவிய  ரீதியில்  நடத்திய  பாரதிநூற்றாண்டு விழா   கொண்டாட்டங்களில்  முக்கிய  நிகழ்வாக   கொழும்பு பம்பலப்பிட்டி  சரஸ்வதி   மண்டபத்தில்    நடத்திய  பாரதி  நூல்களின் கண்காட்சியிலும்   ஈழத்து  எழுத்தாளர்களின்   ஒளிப்படக்காட்சியிலும் எனக்குப்    பக்கபலமாக  இருந்து  ஒத்துழைப்பு  வழங்கினார்.
இன்றும்   கூட   எனக்கும்  நண்பர்  வேல்  அமுதனுக்கும்  தகவம் அமைப்பினருக்கும்   இடையே  ஆரோக்கியமான  நட்புணர்வு தொடருகின்றது.
 இராசையா   மாஸ்டர்   எனது   பாட்டி  சொன்ன   கதைகள்   நூல்  பற்றி பேசிய   நயப்புரையை   பின்னர்  எனக்கு  தபால்  மூலம் சேர்ப்பித்திருந்தார்.   நூல்கள்   பற்றிய  நயப்புரையை   எழுதும் கலையையும்  நான்   அவரிடம்தான்   கற்றுக்கொண்டேன்.
2007  ஆம்  ஆண்டு  அவர்  கொழும்பில்   மறைந்தார்.  இன்று  அவர் இருந்திருப்பின்,  அவரது   மனைவி  மக்கள்  மருமக்கள்   பேரப்பிள்ளைகள்  மற்றும்    இலக்கிய  நண்பர்கள்  அவரது  95  வயது  பிறந்த   நாளை     கொண்டாடியிருப்பார்கள்.
அவரது   மறைவுக்குப்பின்னர்  சில  வருடங்கள்  கடந்து  அவர் இல்லம்    சென்றபொழுது   அவரது  துணைவியார்    அரவிந்தம்   என்ற நினைவு   மலரை   எனக்குத்தந்தார்.  இலங்கையின்   முக்கியமான இலக்கிய    ஆளுமைகளும்    புகலிட    எழுத்தாளர்களும்   இராசையா மாஸ்டரின்     மாணாக்கர்களும்    அவரது   நல்லியல்புகளை   குறித்த மலரின்    பக்கங்கள்    தோறும்    நயந்தும்   வியந்தும் பதிவுசெய்துள்ளனர்.
எனினும்   அவரது  நினைவுகளை  சுமந்தவாறு  இராசையா  மாஸ்டரின்   பிறந்த   நாளை   அவுஸ்திரேலியாவிலிருந்து    இந்த நினைவுப்பகிர்வின்    ஊடாக     பதிவுசெய்து    அமைதியாக கொண்டாடுகின்றேன்.
letchumananm@gmail.com
---0---


No comments: