உலகச் செய்திகள்


ஒரே நாளில் 121 பேர் பலி

இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியது நிவ்யோர்க் டைம்ஸ்

சீனாவில் பாரிய நிலஅதிர்வு: 300 பேர் காயம், ஒரு இலட்சம் பேர் இடம்பெயர்வு, உயிரிழப்பு விபரங்கள் வெளியாகவில்லை!

ஒரே நாளில் 121 பேர் பலி

06/10/2014 மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோனில் எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டு 121 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.


எபோலோ வைரஸினால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் அதிகளவானோர் உயிரிழந்த சந்தர்ப்பம்  இது என்பது  குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து எபோலா வைரஸினால் இதுவரை 3,439 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி










இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியது நிவ்யோர்க் டைம்ஸ்

07/10/2014 மங்கள்யான் தொடர்பான கேலிச் சித்திரம் ஒன்றை வெளியிட்டமைக்காக அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் மூத்த தினசரி பத்திரிகையான நிவ்யோர்க் டைம்ஸ் இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பி வரலாற்றில் இடம்பிடித்து வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
மேற்குலக நாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொழில்நுட்பத் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம் உலகத்தின் பேசுபொருளாக மாறியிருந்தது.
இந்நிலையில் இந்திய நாட்டையும் அந்நாட்டு மக்களையும் அசௌகரியப்படுத்தும் வகையிலான கேலிச் சித்திரமொன்றை நிவ்யோர்க் டைம்ஸ் அண்மையில்
வெளியிட்டிருந்தது.


செவ்வாய்க் கிரகத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் அமர்ந்து மங்கள்யான் செய்தியை பத்திரிகையில் வாசிப்பதாகவும் இந்திய விவசாயி ஒருவர் மாடு ஒன்றுடன் சென்று கதவைத் தட்டுவதாகவும் அந்தக் கேலிச் சித்திரம் அமைந்துள்ளது.
இது தொடர்பில் நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வந்ததைத் தொடர்ந்து அந்நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் என்றுவ் ரொசென்டல் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், பெரும் எண்ணிக்கையிலான வாசகர்கள் இந்த கேலிச் சித்திரம் தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பில் நாம் எமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நன்றி வீரகேசரி









சீனாவில் பாரிய நிலஅதிர்வு: 300 பேர் காயம், ஒரு இலட்சம் பேர் இடம்பெயர்வு, உயிரிழப்பு விபரங்கள் வெளியாகவில்லை!


08/10/2014 சீனாவின் யுன்னான்  மாகாணத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.



யுன்னான் மாகாணத்தில் உள்ள புவேர் என்ற நகரில்  6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த பூகம்பம் கடல் மட்டத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சீன புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாரிய நிலநடுக்கம் காரணமாக யுன்னான் மாகாண தலைநகர் குன்மிங் என்ற நகரில் இருந்த  வீடுகள் வைத்தியசாலை கட்டிடங்கள் மற்றும் ஏனைய கட்டிடங்களும் பயங்கரமாக குலுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒருசில வினாடிகள் உணரப்பட்ட இந்த பூகம்பத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்பு குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகத நிலையில் 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் ஒரு இலட்சத்துக்கு அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே மாகாணத்தில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி


No comments: