அன்புள்ள யேசுதாஸ், உங்களுக்கு ஒரு கடிதம்!



அன்புள்ள யேசுதாஸ், ‘அணியும் ஆடையினால் மற்றவர்களுக்குத் தொல்லை தரக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறீர்கள். மறைத்தே வைத்துக்கொள்கிறோம் யேசுதாஸ், கவலைப்படாதீர்கள். இந்தப் பாவப்பட்ட பெண்கள் திசைமாறிப் போகிறார்களே என்று துயருறாதீர்கள். உங்கள் குரல் எங்கள் தந்தைமார்களின் குரல்போல், எங்கள் அண்ணன்மார்களின் குரல்போல் இதயத்துக்கு வெகு அணுக்கமாகவே இருக்கிறது. அதனால் உங்கள் குரலில் ஒலிக்கும் துயரத்தை எங்களால் புறக்கணிக்க முடியாது. கடந்தும் போக முடியாது. அப்படியெல்லாம் போகக் கூடியவர்களா நாங்கள்?
2004 ஆகஸ்ட். யு.எஸ். ஓப்பன் டென்னிஸ் போட்டியில் நான்காவது சுற்றுக்குள் சென்ற முதல் இந்தியப் பெண் என்று டென்னிஸ் உலகம் சானியா மிர்ஸாவைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் பெண் ணுக்கு வயது வெறும் பதினெட்டுதான்.டென்னிஸில் இந்தியாவின் பெயரை உலக அளவில் உயரவைப்பாள் என்று வெளிநாட்டுப் பத்திரிகைகள் ஆருடம் கூறிக்கொண்டிருந்தபோது, எங்கள் தந்தைமார்களாகிய நீங்கள் இந்தியாவில் என்ன சொல்லிக்கொண்டிருந்தீர்கள் தெரியுமா?



“சானியா மிர்ஸா ஆறு இஞ்ச் குட்டைப் பாவாடை போட்டுக்கொண்டு டென்னிஸ் விளையாடுகிறாள். அந்தக் குட்டைப் பாவாடையுடனே பத்திரிகையா ளர்களைச் சந்திக்கிறாள். ஓர் இஸ்லாமியப் பெண், பேருக்குக்கூடத் தலையில் ஒரு துணியைப் போடுவதில்லை” என்று சொல்லிக்கொண் டிருந்தீர்கள். யு.எஸ். ஓப்பன் டென்னிஸில் நான்காம் சுற்றில் நுழைந்ததற்கான பரிசாக, ஃபத்வாவை வாங்கிக்கொண்டு விழித்து நின்றாள் அந்தப் பெண். அவள் பெற்ற வெற்றியின் பரவசம் அவளுடைய குட்டைப் பாவாடைக்குள் புதைந்துபோன உண்மையை நாங்கள் எவ்வளவு சாமர்த்தியமாக மறைத்துக்கொண்டோம்?
அரைகுறை ஆடைதான் காரணமா?
நம் தலைநகரம் டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி, ஆறு பேர் (ஆண்களேதான் சார்!) கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டு, மிகக் கொடுமையான வதைகளையும் பேச்சுகளையும் சந்தித்த பின் மரணத்தைத் தழுவினாள். உயிர் வதையை அவள் எதிர் கொண்டு, துடித்துக்கொண்டிருந்தபோது எங்கள் சகோதரர்மார்களாகிய நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள் தெரியுமா? “நள்ளிரவில் அரைகுறை ஆடையுடன் ஆண் நண்பருடன் அந்தப் பெண் ஏன் தனியாகச் சென்றாள்? அவளுக்குக் கிடைத்த இந்தத் தண்டனைக்கு முழுக்க முழுக்க அந்தப் பெண்ணின் அரைகுறை ஆடை மட்டும்தான் காரணம்” என்று சொல்லிக்கொண்டிருந்தீர்கள்.
வெட்கமேயில்லாமல் உள்மனசில் ஒரு கேள்வி வந்தது: “அப்படியென்றால், திரௌபதியை எதற்குத் துகிலுரித்தார்கள்? அவள் நிச்சயம் இன்றைய நவீனப் பெண்ணைப் போல நாகரிக உடை அணிந்திருக்க மாட்டாள். இந்தியப் பண் பாட்டின் அத்தனை கூறுகளையும் ஒருங்கே பெற்ற வளாகவே இருந்திருப்பாள். அண்ணன், தம்பிகள் சூதாட்டத்தில் அவளைப் பகடையாக உருட்டி னார்களே ஏன்?”
பிரச்சினை என்றால் ஆடையை உரிப்பதும், ஆடையைக் காரணம் காட்டுவதும் உங்களுக்கு இரண்டாயிரம் ஆண்டு கால வழக்கம் என்பதைப் புரிந்துகொண்ட நாங்கள், எப்போதாவது உங் களுக்குத் தொல்லை தந்திருக்கிறோமா? மூன்று வயதுப் பெண் குழந்தை பலாத்காரம் செய்யப் பட்டாலும், தவறு எங்கள் பக்கம்தான் இருக்கும் என்று நாங்கள் பழகிவைத்திருக்கிறோம். எல்லாத் தவறுகளுக்கும் தலை வணங்கி ஆமென்தானே சொல்லியிருக்கிறோம்?
ஆண்களின் ஜீன்ஸ்
எளிமையையும் அன்பையும் பெண்களின் உயர்ந்த குணங்களாகக் கொண்ட இந்திய கலாச் சாரத்துக்கு ஜீன்ஸ் போன்ற உடைகள் எதிரானது என்கிறீர்கள். நிச்சயமாக, சந்தேகமேயில்லாமல் உங்களின் கூற்றை ஏற்றுக்கொள்கிறோம். இன்று இளைய தலைமுறை ஆண்கள் துவங்கி, முதுமையைத் தொடும் ஆண்கள் வரை எல்லோருமே ஜீன்ஸ் உள்ளிட்ட நவீன ஆடை களைத்தான் அணிகிறார்கள். பெண்களின் ஆடை வடிவமைப்பாளர்கள் கொஞ்சம் ரசனைக்காரர்கள், அவர்களின் அழகைக் கூட்டிக் காண்பித்துவிடும்படி ஆடைகளை வடிவமைத்துவிடுகிறார்கள். ஆண் களுக்கு ஆடை வடிவமைக்கும் ஆண்கள் அவ்வளவு ரசனை குறைவானவர்களோ என நாங்கள் ஐயப்படுகிறோம். இடுப்பு பெருத்த ஆண்களுக்கு இந்த ஜீன்ஸ் பேன்ட் அடிவயிற்றைத் தாண்டி இடுப்புக்கு ஏறவே மாட்டேன் என்கிறது. சட்டைகளையும் குட்டையாக்கிவிட்டார்கள். பேருந்தில் முன் சீட்டில் உட்கார்ந்திருக்கும் ஆண் களின் பேன்ட் உள்ளாடையைத் தாண்டி கீழே இறங்கி, அவர்கள் போட்டிருக்கும் உள்ளாடைக்கு இலவச விளம்பரம் செய்துகொண்டிருப்பதைத் தினம்தினம் பார்க்கிறோம். அரைக் கால்சட்டை களுடன் மேலாடை இல்லாமல் சுற்றும் இளைஞர் களை நாங்கள் பார்க்கிறோம்.
இவையெல்லாம் உங்கள் உரிமை. எங்கள் எல்லைகளை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இன்னும் எங்களைச் சந்தேகிக்கலாமா நீங்கள்?
எங்கள் சுதந்திரம் உங்கள் கையில்…
நாங்கள் இன்னும் எங்கள் தாத்தன்மார்களை, தந்தைமார்களை, கணவன்மார்களை, பெற் றெடுத்த பிள்ளைமார்களை நம்பித்தான் வாழ்க்கை நடத்து கிறோம். எங்களுக்கு வேண்டிய, வேண்டி யிராத எல்லா ஆண்களையும் கணக்கில் கொண்டே நாங்கள் நடந்துகொள்கிறோம். அனைவரின் தணிக்கைக்கும் நாங்கள் எங்களை உட்படுத்திக்கொண்டே இருக்கிறோம். எங்கள் சுதந்திரம் என்பது உங்களின் கை பிடித்து, உங்களுக்குப் பின்னால் ஓரடி இடைவெளி விட்டு நடந்துவருவதே என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
எங்கள் ஆடைகளை உரித்துத்தான் நீங்கள் எல்லோரும் ஆண் பிள்ளைகள் என்ற கவுரவ ஆடையுடன், மீசையை முறுக்கிக்கொண்டு எகத்தாளமாக உலா வருகிறீர்கள் என்ற ரகசியம் அறிந்தவர்கள் நாங்கள். எங்கள் பிரியத்துக்குரிய ஆண்களை நிர்வாண மாக்கிவிட்டு நாங்கள் எப்படி வெளியேறுவோம் திரு.யேசுதாஸ் அவர்களே?
- அ. வெண்ணிலா, எழுத்தாளர், ஆசிரியர்,
தொடர்புக்கு: vandhainila@gmail.com

nantri tamil.thehindu

No comments: