எழுத மறந்த குறிப்புகள் - முருகபூபதி

.
எங்கிருந்தாலும்   இயங்கும்   செயற்பாட்டாளர்  வீரகேசரியின்  முன்னாள்   விளம்பர - விநியோக   முகாமையாளர்   சிவப்பிரகாசம்
                                                  


இலங்கையில்   இலக்கியம்  மற்றும்  பத்திரிகைத்துறையில் 1970 முதல்   ஈடுபட்டு    வந்தமையினால்  இவற்றில்   சம்பந்தப்பட்ட மூவினங்களையும்  சேர்ந்த   பலருடன்   எனக்கு  தொடர்பாடல்  நீடிக்கிறது.
தொடர்பாடலை    பேணுவதற்கும்  அடிப்படையில்   சில   இயல்புகள் இருத்தல்   வேண்டும்.
எனது    பத்தி   எழுத்துக்களில்   தொடர்ச்சியாக   பல இலக்கியப்படைப்பாளிகள்  -   கலைஞர்கள்  -   ஊடகவியலாளர்கள்  - சமூகப் பணியாளர்கள் -  மனித   உரிமை   ஆர்வலர்கள்  -   ஓவியர்கள் - இதழாசிரியர்கள்  -   கல்விமான்கள்  மட்டுமல்ல   அச்சுக்கோப்பாளர்கள் -அரசியல்   தலைவர்கள்   -   தொழிற்சங்கவாதிகள்  -  மத குருமார் - ஆசிரியர்கள்  -   குழந்தைகள் -   மாணவர்களும்கூட இடம்பெற்றுள்ளனர்.
பலரைச்சந்தித்து  நேர்காணல்களும்   எழுதியிருக்கின்றேன்.    மல்லிகை  -   ஞானம்   முதலான    இதழ்களில்  சிலரைப்பற்றிய  அட்டைப்பட   அதிதி   கட்டுரைகளும்   படைத்தேன்.
தினகரன்    ஆசிரியர்களாக   பணியாற்றிய   பேராசிரியர்  கைலாசபதி - சிவகுருநாதன்  -   ராஜஸ்ரீகாந்தன்  -    இலங்கை  வானொலியில்   பணியிலிருந்த    அப்பல்லோ  ' சுந்தா'   சுந்தரலிங்கம்  -   வி.ஏ. திருஞானசுந்தரம்  -   காவலூர்  ராஜதுரை  -   சில்லையூர்   செல்வராசன் -  கே.எஸ்.சிவகுமாரன்  -  வீரகேசரி    குழுமத்தில்   முன்னாள்    பிரதம ஆசிரியர்   க.சிவப்பிரகாசம்  -   செய்தி  ஆசிரியர்களான  டேவிட்ராஜூ - 'நடா ' நடராஜா  -  கார்மேகம்  -    வாரவெளியீட்டுக்குப்பொறுப்பாகவிருந்த  பொன். ராஜகோபால்  -   தேவராஜ்  -   வீரகேசரி   முன்னாள் முகாமையாளர்    பாலச்சந்திரன்  -  தினக்குரல்    பிரதம   ஆசிரியர்  தனபாலசிங்கம்  -  ஆகியோரைப்பற்றியெல்லாம்   ஏற்கனவே  எழுதியிருக்கின்றேன்.
அதே  சமயம்   தினக்குரல்  பதினைந்தாவது   அகவை   சுவடு  விசேட மலரில்  (2011)   ஊடகத்துறையில்   பதிவாகும்   அனுபவப்பகிர்வு என்ற   எனது    கட்டுரையில்   நான்   இணைந்து    பணியாற்றிய   பல பத்திரிகையாளர்கள்    பற்றியும்   பதிவு  செய்திருக்கின்றேன்.



ஆனால் -   இதுவரையில்   நான்    அவ்வாறு   பத்திகள்  எழுதி குறிப்பிடத்தவறிய   அல்லது   பின்னர்    எழுதலாம்   என்று காலத்தைக்கடத்திய     மேலும்   சிலர்    இருக்கிறார்கள்.    அவர்களில் திரு. ஆ. சிவநேசச்செல்வன்  -   திருமதி   அன்னலட்சுமி   இராஜதுரை - டி.பி.எஸ். ஜெயராஜ்    ஆகியோர்    குறிப்பிடத்தகுந்தவர்கள்.
மற்றும்   ஒருவர் -   இலங்கையில்    நீண்டகாலம் பத்திரிகைத்துறையில்   ஈடுபட்டவர் -    கனடாவுக்குப்புலம்பெயர்ந்த பின்னரும்    அந்தத்துறையை   விட்டு   விலகிவிடாமல்  -  ஏழு   தசாப்த   காலத்தையும்    கடந்து   அயராமல்     இயங்கிக்கொண்டிருப்பவர் பற்றித்தான்   இந்தப்பதிவை   எழுதுகின்றேன்.
ஏன்    இந்த   நீண்ட   கால   தாமதம் ?  என்று    எனக்குள்ளேயே பலமுறை  கேட்டுக்கொண்டேன்.
அவர்  பத்திரிகைத்துறையில்   எழுத்துப்பணிகளில்   அதிகமாக ஈடுபடவில்லை    என்பதனாலா?


பத்திரிகைகள்   என்றால்  அங்கு    பிரதம   ஆசிரியர்  -   செய்தி ஆசிரியர் - வாரவெளியீடு    ஆசிரியர்  -   மற்றும்    துணை    ஆசிரியர்களின்  பெயர்கள்தான்    வெளியே   தெரியும்.    சாதாரண   நிருபரின்   பெயர்  By Line  இல்  வாசகர்களுக்குத்   தெரிந்துவிடும்.
ஆனால் -   அவ்வாறெல்லாம்   தன்னை    வெளி  உலகத்திற்கு காண்பிக்காமல்   பத்திரிகையின்   வெளியீட்டுக்கான தயாரிப்புச்செலவை    ஈட்டித்தரும்    விளம்பரம்   மற்றும் விநியோகத்துறையில்    தீவிர   கவனம்    செலுத்தி    பத்திரிகையின் எண்ணிக்கையை  அவர்  உயர்த்திக்கொண்டிருந்தமையினாலா....?   பலரது  கண்களுக்கும்   அவர்    தென்படவில்லை.
அத்திவாரங்கள்    வெளியே    தெரிவதில்லை.    கண்களைப்பாதுகாக்கும்   இமைகளும்   கண்களுக்குத் தெரிவதில்லை.
அவ்வாறு   வெளியே   தன்னைப்பற்றிய    எந்த    அறிமுகப்படலத்திலும் ஈடுபடாமல்   அமைதியாகவும்   நிதானமாகவும்   கடமையே   கண் என்று   வாழ்பவர்தான்  எனது    மதிப்பிற்குரிய   நான்   எப்பொழுதும் மரியாதையின்    நிமித்தம்   சேர்    என  அழைக்கும்   திரு. து. சிவப்பிரகாசம்   அவர்கள்.
லேக்ஹவுஸ்   நிறுவன   டெய்லி  நியூஸ்  பத்திரிகையின்   நிதி முகாமைத்துவ   ஆசிரியராக   1961  முதல்  1965  வரையில்  பணியாற்றிய   இவர்    தொடர்ந்து  1993  வரை  சுமார்   27  ஆண்டுகாலம்   வீரகேசரியில்  பணியாற்றி   1997   முதல் கனடாவில் வாழ்கின்றார்.
கனடாவில்   Monsoon Journal   என்ற  ஆங்கில  பத்திரிகையை நடத்துவதோடு   கனடிய   தமிழர்களுக்கான   வர்த்தக  களஞ்சியமான ‘தமிழர் மத்தியில் என்ற   மலரையும்   முன்பு   வெளியிட்டிருக்கின்றார்.
இவ்வளவு   காலத்திற்குப்பின்னர்   இவரைப்பற்றி   நான்   ஏன் எழுதுவதற்கு   முன்வந்தேன்   என்று   வாசகர்கள்   கேட்கலாம்.
அதற்கு   முன்னர்   சில   சுவாரஸ்யங்களையும்   சொல்லிவிட வேண்டும்.    வீரகேசரியில்   இரண்டு   சிவப்பிகள்   இருந்தார்கள்.
சிவப்பி   என்றால்   சிவந்த   பெண்களை   அடையாளப்படுத்தும்    குறியீடு அல்ல.   க.சிவப்பிரகாசம்   -  து. சிவப்பிரகாசம்    ஆகியோர்   அங்கு முக்கிய   பதவிகளில்   இருந்தார்கள்.
முதலாமவர்   வீரகேசரியின்   பிரதம   ஆசிரியராக   நீண்ட   காலம் பணியிலிருந்துவிட்டு  1983   கலவரத்தையடுத்து    நாட்டை   விட்டு புலம்பெயர்ந்து    அமெரிக்காவுக்குச்சென்றவர்.    தற்பொழுது   கனடாவில்   வசிக்கிறார்.   
 இவரது   மனைவி   எங்கள்   ஊர்   விஜயரத்தினம்  இந்து மத்தியகல்லூரியின்   முன்னாள்   ஆசிரியை.
மற்றவர்  து. சிவப்பிரகாசம்.  இவர்   வீரகேசரியில்   விளம்பர   மற்றும் விநியோக    முகாமையாளராக   நீண்ட  காலம்   பணியாற்றினார்.
இவர்கள்   இரண்டு  பேருமே    பிரபல    ஏரிக்கரை    பத்திரிகை இல்லம்    லேக்ஹவுஸிலிருந்து   வந்தவர்கள்.    இவர்களுடன்   வந்தவர்    பின்னாளில்   வீரகேசரியின்   ஆக்கத்துறை மேலாளராகவும்    அதனைத்தொடர்ந்து   பொதுமுகாமையாளராகவும் பணியாற்றி   சில   வருடங்களுக்கு   முன்னர்   கொழும்பில்    மறைந்த   எஸ். பாலச்சந்திரன்.
இவர்கள்    மூவருமே  சிறந்த   நிருவாகிகள்   என்று  எஸ்மண்ட் விக்கிரமசிங்கா   என்ற   மூத்த   பத்திரிகையாளர் இனங்கண்டமையினால்   லேக்ஹவுஸில்   பணியாற்றிக்கொண்டிருந்த   இந்த  மும்மூர்த்திகளையும்  தன்னுடன் இணைத்து   அழைத்துக்கொண்டு   வந்து    வீரகேசரியில் இணைத்துவிட்டதாக   நான்   வீரகேசரியில்   பணியாற்றத்தொடங்கிய   1977   காலப்பகுதியில்  அறிந்துகொண்டேன்.
இன்றைய  எதிர்க்கட்சித்தலைவர்  ரணில்   விக்கிரமசிங்காவின் தந்தைதான்  எஸ்மண்ட்  விக்கிரமசிங்கா.
இலங்கை  முற்போக்கு   எழுத்தாளர்   சங்கத்தின்    செயலாளர் பிரேம்ஜிதான்    இரண்டு   சிவப்பிரகாசங்களையும்   சிவப்பிகள்  என்று என்னிடம்    சொன்னதாக   ஞாபகம்.
இந்த  மும்மூர்த்திகளிடமும்   பணியாற்றிய    சந்தர்ப்பங்களும்    எனது வாழ்வில்    இணைந்த   மகிழ்ச்சியான   தருணங்கள்தான்.
பாலச்சந்திரன்    மறையும்  வரையில்   அவருடன்   தொடர்பில் இருந்தேன்.    மறைந்த   செய்தி    அறிந்ததும்   அவரைப்பற்றிய கட்டுரையை    உடனடியாக   தாமதிக்காமல்   வீரகேசரியில்   எழுதுமாறு   என்னைக்கேட்டுக்கொண்டதுடன்   எனது   கட்டுரை வருகிறது   -  அதற்காக   இடம்   ஒதுக்கிவையுங்கள்   என்று   வீரகேசரி ஆசிரிய   பீடத்தைக்கேட்டுக்கொண்டவரும்    து. சிவப்பிரகாசம் அவர்கள்தான்.
இவ்வாறு   அருகில்   இருந்துகொண்டு   பணிக்கவில்லை. கனடாவிலிருந்து   தொலைபேசி   மார்க்கமாகவே   தனது சகாவுக்கான   துயர்  பகிர்வதற்கு    என்னையும் இணைத்துக்கொண்டார்.
திருமதி    பாலச்சந்திரனுக்கு   தொலைபேசியில்   அனுதாபம் தெரிவித்துவிட்டே   அந்த   இரங்கல்   கட்டுரையை    எழுதினேன்.
து. சிவப்பிரகாசம்   அவர்களுடன்  1972  காலப்பகுதியில்   நீர்கொழும்பு நிருபராக    நான்  பணியிலிருந்த   காலம்   முதல் -  பின்னர்  1977  இல் அங்கே   அலுவலகத்தில்   இணைந்த   காலத்தில்   சில   மாதங்கள் விளம்பரப்பிரிவில்   அவரது   மேற்பார்வையின்   கீழே பணியாற்றியதன்   பின்னரும்   அவுஸ்திரேலியாவுக்குப்புலம்பெயர்ந்த  காலம்   முதலும்  இன்றுவரையில்    தொடர்பில்   இருக்கின்றேன்.
இவ்வாறு    தொடர்பாடல்  ஆரோக்கியமாக   இருப்பதற்கு இந்தப்பத்தியின்    தொடக்கத்தில்   குறிப்பிட்ட   இயல்புகளும்தான் காரணம்   என்று   திடமாக   நம்புகின்றேன்.
வீரகேசரி   அலுவலகத்தில்  1977  இல்   முதலில்   ஒப்புநோக்காளர் பிரிவில்தான்   பணியாற்றினேன்.   எனது   கனவு   பத்திரிகையாளனாக மாறுவதுதான்.      அவ்வேளையில்   விளம்பரப்பிரிவில்   ஒரு வெற்றிடம்   வந்தது.   என்னுடன்    ஒப்புநோக்காளர்  பிரிவில் பணியாற்றிய     நண்பர்   வர்ணகுலசிங்கத்திற்கு   அந்தப்பதவியை குறித்த   பிரிவின்   முகாமையாளர்   து. சிவப்பிரகாசம்    வழங்கினார்.
சில மாதங்களில்  Legal Draftsman     திணைக்களத்தில் வேலைகிடைத்து   வர்ணகுலசிங்கம்   போய்விட்டார்.
உடனே   சிவப்பிரகாசம்   அந்த  வெற்றிடத்துக்கு   என்னை   அழைத்தார்.
முதலில்   அதற்கு   நான்    சம்மதிக்கவில்லை.   எனக்கு   கணக்கு வழக்கு    பார்ப்பது  -  விளம்பரங்களை     மொழிபெயர்ப்பதில்   ஆர்வம் இல்லை.    ஆசிரியபீடத்துக்குச்செல்லவே    விரும்பினேன்.
எனினும்   எனது  விருப்பத்தை   ஏற்றுக்கொண்டு  -  புதிதாக அந்தப்பணிக்கு    ஒருவரை  தெரிவுசெய்யும் வரையில்   வந்து அமர்ந்து   வேலை    செய்யுமாறு   அன்புக்கட்டளை   இட்டார்.
அச்சமயம்   அரச   ஆசிரியர்களின்   தொடர்  வேலை நிறுத்தப்போராட்டத்தில்   ஈடுபட்டு   தனது   ஆசிரியப்பணியை இழந்திருந்த   எழுத்தாளர்    க. சட்டநாதனும்   அங்கே விளம்பரப்பிரிவில்    பணியாற்றினார்.
அருகில்   ஒரு   இலக்கியவாதியும்   இருக்கிறார்    என்ற   தைரியத்தில் நானும்   அங்கே   இணைந்தேன்.   ஆனால் -  எமக்கெங்கே   இலக்கியம் பேசுவதற்கு   அங்கு   நேரம்   கிடைத்தது.
சட்டநாதனும்   அந்தப்பிரிவுக்குப்  பொறுப்பாக  இருந்த    கந்தசாமி அவர்களும்   அடிக்கொரு தடவை   அச்சுக்கோப்பாளர் பிரிவுக்குச்சென்று    வருவார்கள்.   தினமும்   சட்டநாதன்   ஓட்டமும் நடையுமாகச்சென்றே    இளைத்துவிட்டார்.   
சில  விளம்பரங்கள்   விவகாரமாகியுமிருக்கின்றன.  இன்று திரும்பிப்பார்க்கின்றபொழுது   அந்த    வசந்த  கால  சுவாரஸ்யங்கள் நினைவுக்கு   வந்து    வாய்விட்டுச்சிரிக்கவைக்கின்றன.
மின்னஞ்சல்   வசதிகள்   இல்லாத    காலத்தில்தான்   எவ்வளவு வேடிக்கைகளை    நாம்   பத்திரிகையில்    பார்த்துவிட்டோம்.
கணினி    அறிமுகமில்லாத   அக்காலத்தில்    விளம்பரங்களும் தனித்தனி    வெள்ளீய   அச்சுக்களின்   கோர்வையில்தான்   பதிவாகின.    ஒரு   எழுத்து   தவறி  தூஷண   வார்த்தைகளும் வந்துள்ளன.  
காதலி   ஏமாற்றிவிட்டு  வேறு   ஒருவனுக்கு   கழுத்தை நீட்டப்போகிறாள்   என  அறிந்த   ஒரு   முன்னாள்   காதலன் அவளைப்பழிவாங்க   அவளது  திருமண   நாளன்றே   அவளுடைய மரண    அறிவித்தல்   வெளியாகும்   விதமாக   விளம்பரம் கொடுத்துவிட்டு    மாயமாகிவிட்டான்.
திருமணத்துக்குச்சென்றவர்கள்    படையெடுத்து   வந்தார்கள்.
அதன்  பிறகுதான்   மரணச்சான்றிதழ்   அத்தாட்சியுடன்    மரண அறிவித்தல்   விளம்பரங்கள்  ஏற்கப்பட்டன.
ஒரு   ஆங்கிலத்திரைப்படம்   சம்பந்தமான   விளம்பரத்தில்    ஒரு எழுத்துப்பிழை   நேர்ந்து   ஒரு   சொல்   கெட்ட வார்த்தையாகியதும் நடந்திருக்கிறது.
வீட்டு  வேலைக்கு  ஆள்தேவை   என்ற   விளம்பரத்தை   சரியாக எழுதத்தெரியாமல்    பொடியன்   வேலைக்கு  ஆள்   தேவை  என்று எழுதிவந்த   விளம்பரத்தையும்    விதியே   என்று திருத்தியிருக்கின்றோம்.
இப்படி   எத்தனையோ   விவகாரங்களுக்கு  மத்தியில்  பத்திரிகையின் விநியோகத்திலும்   விளம்பரத்திலும்   பதட்டம்    ஏதும்   இன்றி   மிகவும் நிதானமாக   இயங்கியவர்தான்   சிவப்பிரகாசம்.    போர் நெருக்கடிகளினால்   வடபகுதிக்கான   இரவு    தபால்   ரயில்   சேவை பாதிக்கப்பட்டதும்   மாற்று   வழியில்   வடபகுதிக்கு    பத்திரிகையை அனுப்புவதிலும்   அவர்  தீவிர   கவனம்  செலுத்தினார்.
ஒரே   சமயத்தில்    இரண்டு   பொறுப்பான   பணிகளுக்கு   அவர் முகாமையாளராக   இயங்கி   பலருக்கும்   முன்மாதிரியாக செயற்பட்டார்.
அவரது   முகத்தில்  கோபத்தை    கடுகளவும்   நான்   கண்டதில்லை. பல  ஆண்டுகள்   வரலாறுகொண்ட   வீரகேசரி   நிறுவனத்தின் வளர்ச்சிக்கு   அவர்   ஆற்றிய  சேவை   மகத்தானதுதான்.
1987   ஜனவரி  இறுதியில்   அங்கிருந்து   விடைபெறும்பொழுதுதான் அவர்   எனது   கைபற்றினார்.   கையை   குலுக்கி   வாழ்த்தினார். அவுஸ்திரேலியாவுக்கு    வந்தபின்னரும்   அவருடன்   கடிதம்   மற்றும் தொலைபேசி    தொடர்பில்   இருந்தேன்.
எனது   இலக்கிய  எழுத்துக்கள்   -  அவுஸ்திரேலியா    நிகழ்வுகள்   பற்றிய   செய்திக்கட்டுரைகளை  பார்த்துவிட்டு   அவர்   எழுதிய கடிதங்கள்  யாவும்   இன்றும்   எனது  பிரத்தியேக   கோவையில் பாதுகாப்பாக    இருக்கின்றன.
1989   முதல்  1990  வரையில்   அவர்  எனக்கு   எழுதிய   கடிதங்களில் சில  முக்கியமான   விடயங்களும்  இடம்பெற்றுள்ளன.
 எனது   இலக்கியப்படைப்புகளை   வீரகேசரி  - தினகரனில் படித்துவிட்டு   தனது  வாழ்த்துக்களையும்   கருத்துக்களையும் தெரிவித்த   அவரது   முதலாவது  கடிதம்  10-11-1989  இல் எழுதப்பட்டிருந்தது.
வீரகேசரி  நிறுவனம்  வெளிநாட்டு  தமிழ்   வாசகர்களுக்காக வாராந்தம்  ஒரு  இதழை   வெளியிட   ஆலோசிப்பதாகவும்   அதற்கு அவுஸ்திரேலியா   தமிழ்   அமைப்புகளின்   ஆலோசனைகளையும் எனது   கருத்துக்களையும்   தாம்   எதிர்பார்ப்பதாகவும் எழுதியிருந்தார்.
சில   நாட்களில்   அதற்காக  இங்கே  ஆய்வு  மேற்கொண்டு விரிவான   அறிக்கையை   ஐந்து   பக்கங்களில்   அவருக்கு அனுப்பினேன்.
 நான்  பதிலுக்கு  காத்திருப்பேன்   என்பதனால்    அவரும்   தாமதிக்காமல்  19 - 12 - 1989   இல்  எனக்கு   முதலில்   அவசர தந்திமூலம்   தகவல்    அனுப்பிவிட்டு    பின்னர்   விரிவான   கடிதமும் எழுதியிருந்தார்.
இதனை   இங்கு  நினைவுபடுத்தி  நான்   குறிப்பிடுவதற்கு   காரணம் இருக்கிறது.
கணினி  -   மின்னஞ்சல் - ஸ்கைப் - ட்விட்டர்  வசதிகள்  இல்லாத அக்காலத்தில்   ஒரு  பெரிய   நிறுவனத்தில்   பொறுப்பான   இரண்டு பதவிகளையும்   வகித்த   ஒருவர் -  என்னைப்போன்ற   ஒரு   சாதாரண மனிதனையும்   பொருட்டாக   மதித்து   தொடர்பாடலை  மேற்கொண்ட அவரது   நல்லியல்புகளை   மற்றவர்களுக்கும் இனம்காண்பிக்கவேண்டும்   என்பதுதான்   அக்காரணம்.
அவரது   குறிப்பிட்ட  அக்கடிதங்கள்   பற்றியும்   அவருக்கு   நான் அனுப்பிய   அறிக்கை  தொடர்பாகவும்    பின்னாளில்   நான்   எழுதிய அவுஸ்திரேலியாவில்  தமிழ்   இதழ்கள்  என்ற   நீண்ட  கட்டுரையில் பதிவுசெய்துள்ளேன்.
இந்தக்கட்டுரை   முதலில்  பிரான்ஸிலிருந்து   வெளியான  அம்மா இதழிலும்  பின்னர்   எனது   இலக்கிய   மடல்   (2000  ஆம்  ஆண்டு) நூலிலும்   இடம்பெற்றது.
தற்காலத்தில்   எம்மவர்கள்   வெளிநாடுகளில்  வாழ்ந்தவாறு கணினியில்   தரவிறக்கம்  செய்து   வீரகேசரி -  தினக்குரல்   உட்பட   ஏராளமான  பத்திரிகைகள் -   இதழ்களை  பார்க்கிறார்கள்.   படிக்கிறார்கள்.
விஞ்ஞானத்தின்  இத்தகைய  வீரியமான  பாய்ச்சல்  தொடங்கும் முன்பே   தட்டச்சு   இயந்திரத்தையும்    பேனையையும்   தபால் சேவையையும்   மாத்திரம்   நம்பிக்கொண்டு   அயராமல் இயங்கியவர்கள்    அந்தப்பழக்கத்தின்    தொடர்ச்சியாக    இன்றும் தொடர்பாடலில்    ஈடுபட்டுவருகிறார்கள்.
   அவர்களின்   வரிசையில்   என்னைக்கவர்ந்த    ஒருவராகவே   திரு. து. சிவப்பிரகாசம்   அவர்களை   நான்   பார்க்கின்றேன்.
அவர்   வீரகேசரியில்   பணியாற்றிய   கால  கட்டத்தில்  ஸ்ரீமாவின் ஆட்சிக்காலத்தில்  எமது   முற்போக்கு   எழுத்தாளர்   சங்கத்தின் அழுத்தத்தினால்   தமிழகத்திலிருந்து    இறக்குமதியாகும்   தரமற்ற  சஞ்சிகைகள்   மீது  கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டன.
இக்காலத்தில்   உள்ளுர்   திரைப்படத்துறையை    வளர்ப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனமும்   உருவானது.
   ஆனால்  -  காலப்போக்கில்  திறந்த  பொருளாதாரக்கொள்கையை    யூ. என்.பி.  அரசு  அமுல்படுத்தியதனால்    முற்போக்கான  பல விடயங்கள்   முடிவுக்கு  வந்தன.
இந்திய  இதழ்கள்   மீதான   கட்டுப்பாடுகள்  நடைமுறைக்கு வந்தபொழுது   அதனை   தக்கவாறு   பயன்படுத்தியது   வீரகேசரி நிறுவனம்   மாத்திரமே.
முகாமையாளர்   பாலச்சந்திரன்  வீரகேசரி   பிரசுரங்களை அறிமுகப்படுத்தினார்.
நிலக்கிளி  பாலமனோகரன்  -   செங்கை  ஆழியான்  - டானியல் - சொக்கன் -  செம்பியன்  செல்வன்  -   கோகிலம்   சுப்பையா -  அன்னலட்சுமி  இராஜதுரை  -   நா. பாலேஸ்வரி  -   செ. கதிர்காமநாதன் - நயீமா  ஏ. சித்திக் -  வ.அ. இராசரத்தினம்  -  கனக  செந்திநாதன் - தெணியான்  -  தெளிவத்தை   ஜோசப்   -   ஞானசேகரன் -  கே.விஜயன் -  எஸ்.ஜோன் ராஜன்  -  உட்பட   பல  ஈழத்து  படைப்பாளிகளின் நாவல்கள்   வீரகேசரி  பிரசுரமாக   வெளியாகின.
இந்நாவல்களின்  மூலப்பிரதிகளை   படித்து  தெரிவுசெய்யும்   முக்கிய பொறுப்பிலும்   து. சிவப்பிரகாசம்   ஈடுபட்டிருக்கிறார்.
டானியல் -   ஞானசேகரன்  -   தெணியான்   உட்பட   சிலரது நாவல்களின்   முடிவில்  மாற்றங்களை   கொண்டுவரவேண்டும்  என்ற   தீர்மானங்களையும்   இவர்   பாலச்சந்திரனுக்கு   பரிந்துரைத்தார்   என்ற   தகவலும்   அக்காலப்பகுதியில்   வெளியே கசிந்தது.
ஒரு   பிரபல்யமான   பத்திரிகை   நிறுவனத்திற்கு   அதன் வெளியீடுகளின்    தரத்தில்   நடுநிலைமை   வகிக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பு   இருந்தமைபோன்று  அதன்  நாவல்   வெளியீட்டு முயற்சியிலும்   இருத்தல்   வேண்டும்   என்ற   உணர்வின் உந்துதலே   சிவப்பிரகாசம்   அவர்களின்   கவனிப்புடன்   நாவல் பிரசுரங்கள்   வெளிவரக்காரணம்   என   நினைக்கின்றேன்.
இவ்வாறு  தரத்தை  பேணுவதில்   சிரத்தை  காண்பித்த  வீரகேசரி நிறுவனம்   ஜனமித்திரன்   வெளியீடுகளாக   ஜி. நேசனின்   பட்லி  -  ஜமேலா  மற்றும்  ரஜனி   கே.வி.எஸ்.  வாஸ்   அவர்களின்   துப்பறியும் கதைகளை   வெளியிட்டதையும்   கண்திருஷ்டி  பரிகாரம் எனக்கொள்ளலாமா?
 வீரகேசரி  பிரசுரங்கள்   பற்றி   விரிவான  ஆய்வை   மேற்கொண்டவர்   தற்பொழுது   கனடாவில்  வதியும்  கலாநிதி  நா. சுப்பிரமணியன்.
சிவப்பிரகாசம்  தனக்கு   நிருவாகத்தில்  வழங்கப்பட்ட   இரண்டு பதவிகளிலுமிருந்தவாறே   பிரசுரத்துக்காக   வந்த   நாவல்களை தேர்வுசெய்வதிலும்   முகாமையாளருக்கு   ஒத்துழைப்பு   நல்கினார்.
இவர்   ஆங்கில  இலக்கியங்களை   படிப்பதிலும்   ஆர்வம்  மிக்கவர். தான்  ஹெமிங்வேயின்   கடவுளும்  கிழவனும்  நாவல்   உட்பட  பல ஆங்கில   நாவல்களை   படித்திருப்பதாக  ஒரு   சந்தர்ப்பத்தில்   என்னிடம்  சொன்னார்.
1990  ஆம்   ஆண்டென  நினைக்கின்றேன்.   அச்சமயம் கொழும்பிலிருந்து   வீரகேசரி  பத்திரிகையை   சந்தா   செலுத்திப் பெற்று வந்தேன்.   ஒருநாள்   இவருடன்   தொலைபேசியில் உரையாடியபொழுது -    முருகபூபதி    விரைவில்   உம்மைப்பார்க்க அங்கே   வருகின்றேன்   என்று   அவர்   சொன்னதும்   எனக்கு  இன்ப அதிர்ச்சியாக   இருந்தது.
இலங்கையில்   ஏயார்  லங்கா  விமான  சேவை அவுஸ்திரேலியாவுக்கு  நேரடி  சேவையை   ஆரம்பித்த பொழுது அதனது   அவுஸ்திரேலியாவுக்கான  நேரடி  (சுமார் பத்து மணித்தியாலங்கள்)   (Inaugural )  முதலாவது   பயணத்தில் இணைந்துகொள்ளும்   வாய்ப்பு  இவருக்கும்  கிடைத்திருந்தது.
வரும்   நாளை   அறிந்துகொண்டு   மெல்பனில்   நகர   மத்தியில் அமைந்த   பிரபலமான   உல்லாசப்பயண   ஹோட்டல்  வின்ஸரில் காத்திருந்தேன்.
அங்கே   என்னைக்கண்டுவிட்டு   அணைத்துக்கொண்டார்.   அவரது அணைப்பு   என்னை   சிலிர்க்கச்செய்தது.
 கொழும்பில்   வீரகேசரி   காரியாலயத்தில்  அத்தகையதொரு   பாச அணைப்புக்கு    சாத்தியமே    இல்லை.   அவர்   எமது  மேலதிகாரி.   நாம் அவரின்   கீழே   பணியாற்றும்   ஊழியர்கள்.
அந்நியநாடும்   அதன்   பழக்கவழக்கங்களும்    அவ்வாறான அணைப்புகளை   அன்பின்   அடையாளமாக   சாத்தியப்படுத்துகின்றன.
அவரை   அழைத்துக்கொண்டு   உடனடியாகவே   எனது   ஒரு  அறை வாடகை   குடியிருப்புக்கு   அழைத்து   வந்துவிட்டேன்.   அங்கிருந்து கொழும்பிலிருக்கும்   அவரது   மனைவியுடன்    தொலைபேசியில் உரையாடச்செய்தேன்.    தாம்   நலமே  அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டதாகத்தகவல்   சொல்லிவிட்ட   திருப்தியுடன்  என்னுடன் நீண்ட  நேரம்   உரையாடினார்.
அவருக்கு   மிகவும்  மகிழ்ச்சியாகவும்   மனநிறைவாகவும் அந்தக்கணங்கள்   அமைந்தன.    உயர்தரத்தில்   அமைந்த   உல்லாச ஹோட்டலில்   அவருக்கான   இரவு   உணவு  அங்கே காத்திருந்தபொழுதும்  அவர்   அன்று   என்னுடன்   வந்து  ஒரு  பீட்ஸா ஹட்டில்  பீட்ஸா  சாப்பிட்டார்.
அந்நியநாட்டில்  தெரிந்தவர்களுடன்   இவ்வாறு  கலந்துரையாடுவது அவருக்கு   மட்டற்ற   மகிழ்ச்சியை   தந்தது.   மெல்பனில்   இருக்கும் அவரது  சில   நண்பர்களுடன்   பேசுவதற்கும்  அவருக்கு  தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுத்தேன்.
மறுநாளும்   அவர்  தங்கியிருந்த   ஹோட்டலுக்குச்சென்று   அவர் விரும்பிய   சில   இடங்களுக்கு   ஷொப்பிங்  அழைத்துச்சென்றேன்.
மீண்டும்  கொழும்பு  திரும்பியதும்   மறக்காமல்  எனக்கு   தன்  கைப்பட கடிதம்  எழுதி   அனுப்பினார்.
அதன்   பின்னர் -   நீண்ட   இடைவெளிக்குப்பின்னர்   2007  ஆம்  ஆண்டு இறுதியில்   கனடாவுக்குச்சென்றபொழுது  அவரையும்   முன்னாள் பிரதம   ஆசிரியர்  க. சிவப்பிரகாசத்தையும்   மற்றும்   வீரகேசரியில் எம்முடன்  பணியாற்றிய  மூர்த்தி  -   கனக. அரசரட்ணம் - வர்ணகுலசிங்கம்  -  கமலா  தம்பிராஜா   ஆகியோரையும்   அரசரட்ணம் நடத்திய   தமிழர்   செந்தாமரை  இதழின்  வருடாந்த   ஒன்றுகூடல் விழாவில்   சந்தித்தேன்.
ஏற்கனவே  பிரதம   ஆசிரியர்   க. சிவப்பிரகாசம்   பற்றிய   விரிவான பதிவுக்கட்டுரையை  வீரகேசரி   வாரவெளியீட்டில் எழுதியிருக்கின்றேன்.
ஆனால்  -  எமது   வீரகேசரியின்   முன்னாள்  விளம்பர - விநியோக முகாமையாளர்   திரு. து.சிவப்பிரகாசம்   பற்றிய   நான்   எழுத  மறந்த குறிப்புகளை   காலம்   தாழ்த்தி  எழுத   நேர்ந்தமைக்கு   இந்தியாவின் புதிய  பிரதமர்   நரேந்திர   மோடிதான்   காரணம்.
 மோடியின்  புதிய  திட்டம் (Modi's Blue Print For India)  என்ற  தலைப்பில்   நூலொன்றை   புதுடில்லி  பென்டகன்  பதிப்பகத்தினர்   வெளியிட வுள்ளனர்.
இந்தியாவின்  நிதி அமைச்சர்  அருண்   ஜெட்லி    இந்த  நூலை வெளியிட்டு    வைக்கவிருக்கின்றார்.
உலகெங்கும்   மிக  ஆவலுடன்  எதிர்பார்க்கப்படும்   இந்த   நூலின் முதல்  கட்டுரையை    து.சிவப்பிரகாசம்   எழுதியுள்ளார்.
மோடி   சகாப்தத்தின்   ஆரம்பம் என்ற  தலைப்பில்  இக்கட்டுரை அமைந்துள்ளது -   என்ற  தகவல்   எனக்கு   கிடைத்தது.
இப்படி  ஒரு   தகவல்   கிடைத்த பின்னரும்   தாமதிக்காமல் இவரைப்பற்றி   எழுதவேண்டும்   என்ற   உந்துதல்   ஏற்பட்டது.
உலகில்  எங்கே   எந்தப்பகுதியில்   வாழ   நேரிட்டாலும்  தான்   நேசித்த   தொழில்  துறையை   ஏதோ   ஒரு   வழியில்   - வடிவத்தில் தொடருபவர்கள்   மரியாதைக்குரியவர்கள்.
ஆங்கிலத்தில்   எழுதும்  பத்திரிகையாளர்கள்  இந்தியாவில் ஆயிரக்கணக்கில்   இருப்பார்கள்.   அவர்கள்   மத்தியில்  எம்மவர் ஒருவரின்   கட்டுரை   இந்தியப்பிரதமர்   பற்றிய   நூலில் இடம்பெறுவது   கவனத்திற்குரியது.
இலங்கையிலும்  பின்னர்   கனடாவிலும்  அவருக்கிருந்த  தொடர்ச்சியான   வாசிப்பு   அனுபவம்தான்    குறிப்பிட்ட   ஆக்கத்தின் மூலவித்தாக   இருந்திருக்கவேண்டும்.
வீரகேசரியில்  சுமார்  27  வருடங்கள்  பணியாற்றிய   காலத்தில்  வீரகேசரி   ஊழியர்  நலன்புரி  சங்கத்தின்   முக்கிய  பதவிகளை வகித்து   சங்க   அங்கத்தவர்களின்   மேம்பாட்டிற்காக  உதவியவர்.
கனடா  தமிழர்  வர்த்தக  சம்மேளனத்தின்   வருடாந்த   வெளியீடான தொழில்  முயற்சி  என்ற    இதழையும்   தொகுத்து வெளியிடுகின்றார்.
அவரது   இயல்புகள்   என்னையும்   எனக்குள்  தேடச்செய்வதாகவே உணருகின்றேன்.
 ----0---





  

No comments: