என் மனம் கவர்ந்த ஷோனா லோகநாதனின் அரங்கேற்றம் - மது எமில்

.
என் மனம் கவர்ந்த அபிநயலயா நடனப்பள்ளியின் இன்னுமோர் நாட்டிய அரங்கேற்றம். ஸ்ரீமதி மிருணாளினி ஜயமோகனின் மாணவி செல்வி ஷோனா  லோகநாதன்;

இளவேனில் காலம்.........இனியமாலைப்;பொழுது   ....... ஐப்பசி திங்;கள் நான்காம் நாள்.........2014

மண்டபம் நிறைந்த கூட்டம்  - பட்டாடை அணிந்து நெற்றி திலகமிட்டு கூந்தலிலே பூச்சூடி மங்கல விளக்கேற்றி மங்கையவளின் வரவுக்காய் நேரம் கடந்தும் காத்திருந்தனர் சிட்ணி தமிழ் மக்கள்.
அழைப்பு வந்த போது அரங்கிலே அமைதியாய் அணிசேர்ந்த உறவுகளும் நண்பர்களும் செல்வி ஷோனா  லோகநாதனின்; அரங்கேற்ற நிகழ்விலே மெய் மறந்து ஒருங்கிணைந்த காட்சி அரங்கிற்கு மெருகேற்றியது என்பதை யாரும் மறுக்க முடியாது.
செல்வி ஷோனா கைகளிலே மலரேந்தி விநாயக கடவுளை துதி செய்து அரங்கினை வலம் வந்து குருவையும் சபையையும் வணங்கி ஆரம்பித்த அரங்கேற்ற நிகழ்வு இசை கலைஞர்களின் தனித்தவமான திறனோடு பின்னி பிணைந்து ஒரு மனம் நிறைந்த ஆடல் இன்பத்தை தந்ததென்றால் மிகையாகாது.
பரத நாட்டியத்துக்கே உரிய பாவம் ராகம் தாளம் இணைந்த ஜதிக்கோர்வைகளாலான ஜதீஸ்வரம் ஷோனாவின் தாளக்கட்டமைப்பை சுத்தமாய் வெளிப்படுத்தி நிற்க, அடுத்து வந்த சிவன் ஸ்துதி நடனத்திலே தில்லையில் ஆடும் நடராஜ பெருமானின் ஆடல் அழகை அவள் வர்ணித்த பக்குவம் எல்லோரையும் அந்த அம்பலத்துக்கே அழைத்து சென்றது எனலாம்.
கமாஸ் இராகம் ஆதிதாளத்தில் அமைந்த "வேலனை காண்போம் வாரிர்" என்ற பாடலிலே அழகன் முருகனின் வாழ்வை சித்தரித்த வர்ணம்  -  ஷோனாவின் குரு ஸ்ரீமதி மிருணாளினி ஜயமோகனின் ஆழுமையை, ஆடலமைப்பை, நிருத்த நிருத்திய நாட்டிய கலவையின் முழுமையை வெளிப்படுத்திய ஒரு மிக உன்னதமான ஆடல் நிகழ்வு என்றே கூறலாம்.

இடைவேளை முடிந்து எப்போ திரை விலகும் என காத்திருந்த சபையோருக்கு  தொடர்ந்து வந்த துர்க்கா ஸ்துதி  - ஈர்நான்கு கரங்களிலே ஆயுதம் தாங்கி அசுரனோடு போராடிய துர்க்கையின் வீர தீர தார்ப்பரியங்களை தனக்கே உரிய விழுமியங்களோடு வெளிப்படுத்தினாள்  ஷோனா... மண்டபம் அதிர்ந்த கரகோஷம் அவளின் திறமைக்கு கிடைத்த சாட்சியம்...........யமுனா நதியில் நஞ்சை கக்கிய காலிங்கன் என்னும் அரவத்தை University of New South Wales அரங்கிற்கு அழைத்து வந்தவள் ஷோனா - தன் விழிகளிலும் உடல் அங்கங்களிலும் காலிங்கன் எனும் அரவத்தை நெழிந்து வளைந்து ஆடிய பக்குவம் பார்த்தோர் கண்களிலே பரவசத்தை உண்டு பண்ண  - அவள் கழுத்திலே அணிந்திருந்த அணிகலன் கூட பாம்பாய் படமெடுத்த கதை நிதர்சனமே!

அடுத்து வந்த சஞ்சாரி பாவம்,  அவுஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து கலைஞர்களான  சிட்னி  மேடைகளில் முதல் முதல் தோன்றிய ஸ்ரீ நந்தேஷ் சிவராஜாவின் மிருதங்கம்,
நாமெல்லாம் நன்கறிந்நத ஸ்ரீ ஜெய்ராம் ஜெகதீசனின் வீணை, மோர்சிங்,
ஷோனாவின் குடும்ப நண்பரான ஸ்ரீ ஐங்கரன் மகாதேவனின் புல்லாங்குழல்
வயலின் இசையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொணட ;ஸ்ரீ நாராயணதாஸ் கோபிதாஸின் வயலின்
ஆகிய அனைத்து இசை கருவிகளிலுமே அற்புதமாய் வெளிப்பட - அங்க அசைவோடு பாவம் தாளம் ஒன்று சேர - நாம் வாழ்ந்த முற்றத்து நிகழ்வுகள் ஒருகணம் நம் கண்களிலே கண்ணீரை கொண்டுவர - ஸ்ரீ அகிலன் சிவானந்தனின் கணீர் என்ற குரலில் " தாய் மண்ணை சுற்றி வரவேண்டும் தமிழ் மண்ணை முத்தமிட வேண்டும்" என்ற கீர்த்தனம் ஷோனாவின் மண்வாசனையையும் ஸ்ரீமதி மிருணாளினி ஜயமோகனின் தனித்துவத்தையும் அச்சிட்டது என்றே கூறலாம்.இந்த பொன்நாளில் பரதக்கலையின் பல நுட்பங்களையும் நன்கறிந்த பேராசிரியர் டாக்டர் ஞானா குலேந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டமை உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒரு விடயமாகும். பேராசிரியர் அவர்கள் அழகு தமிழிலும் ஆங்கிலத்திலும் அன்றைய அரங்கேற்ற நிகழ்வை பரதக்கலையின் உள்ளடங்கல்களான நிருத்தம் நிருத்தியம் நாட்டியம் என்ற அம்சங்களோடு விபரித்த பக்குவம் எல்லேரையுமே கவர்ந்நதிருந்தது.

நாட்டிய அரங்கேற்றத்தினை பல இடையூறுகளை தாண்டி உடல் நோவுகளை தாங்கி நவீன மருத்துவ உதவியோடு தனது எண்ணத்தை நிறைவேற்றி வெற்றி பெற்ற நடன மணி செல்வி ஷோனா  லோகநாதன் இறுதி நாட்டிய நிகழ்வான தில்லானா ஆடலிலே தன் முழுமையான அர்ப்பணத்தை கிருஷ்ண பகவானுக்கு சமர்ப்பித்த போது என்னை அறியாமலே என் கண்கள் பனித்தன.........பரதக்கலையிலே மிகுந்த ஈடுபாடு கொண்ட திரு திருமதி  லோகநாதன் தம்பதிகளின் ஏக புதல்வி செல்வி ஷோனா  லோகநாதன் மேலும் மேலும் பரதக்கலையின் நுட்பங்களை அறிந்து தெளிந்து எதிர் காலத்தின் நடன கலா மணியாக திகழ வாழ்த்தி நிற்கிறேன்.


No comments: