இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாக். சிறுமி மலாலாவுக்கு அமைதி நோபல்

.


இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி. பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலாவுக்கு 2014-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு பெறும் 7-வது இந்தியர் என்ற பெருமையை, கைலாஷ் சத்யார்த்தியும், மிக இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுபவர் என்ற பெருமையை மலாலாவும் பெற்றுள்ளனர்.
கைலாஷ் சத்யார்த்தி
கைலாஷ் சத்யார்த்தி மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் 1954-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி பிறந்தார். 1990-ம் ஆண்டு "பச்பன் பச்சாவோ ஆந்தோலன்' (குழந்தையைப் பாதுகாப்போம் இயக்கம்) என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இந்த அமைப்பு மூலம் இதுவரை இந்தி யாவில் 80 ஆயிரம் குழந்தைகளை பல்வேறு சுரண்டல்களில் இருந்து மீட்டு, அவர்கள் கல்வி கற்க உதவியுள்ளார். தற்போது கைலாஷ் சத்யார்த்தி டெல்லியில் வசித்து வருகிறார்.


கைலாஷ் சத்யார்த்தி இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் சந்திக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு செயல்பாடுகள் தவிர, வறுமை, வேலைவாய்ப்பின்மை, கல்வியறிவின்மை, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.
யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினராக உள்ள கைலாஷ் சத்யார்த்தி அனைத்துக் குழந்தை களுக்கும் கல்வி உரிமை என்பதை வலியுறுத்தி வருகிறார்.
7-வது இந்தியர்
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், நோபல் பரிசு பெறும் 7-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கைலாஷ் சத் யார்த்தி. மேலும், அன்னை தெரசாவுக்கு அடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர், அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் இந்தியாவில் பிறந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
மலாலா
கைலாஷ் சத்யார்த்தியுடன், 2014-ம் ஆண்டுக்கான அமைதிக் கான நோபல் பரிசை பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் குழந்தைகள் கல்வி உரிமைப் போராளி சிறுமி மலாலா யூசுப்சாய் (17) பகிர்ந்துகொள்கிறார்.
பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் மிங்கோரா பகுதியில் 1997-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிறந்தவர் மலாலா யூசுப் சாய்.
பாகிஸ்தானில் பெண் குழந்தை களுக்கான கல்வி உரிமைக்காகப் போராடியதால், தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வரும் மலாலா தற்போது, பிரிட்டனில் வசித்து வருகிறார்.
'இந்தியாவுக்கு கவுரவம்' - கைலாஷ் சத்யார்த்தி பேட்டி
தனக்கு கிடைத்த நோபல் பரிசு ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்த கவுரவம் என கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கைலாஷ் சத்யார்த்தி கூறும் போது, "இந்த அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தைகள் உரிமைகளுக்கான எங்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது.
குழந்தைகள் நலன் பேண தொடர்ந்து போராடுவேன். அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது ஒவ்வோர் இந்தியருக்கும் கிடைத்த கவுரவம்" என கூறியுள்ளார்.
பிரணாப் வாழ்த்து
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்திக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திரமோடி உட்பட முக்கியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துச் செய்தியில், "குழந்தைத் தொழிலாளர் போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைக்கு எதிராக இந்திய மக்கள் சமூகம் அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் உயிர்ப்புள்ள போராட்டத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருத வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மோடி வாழ்த்து
இது குறித்து மோடி தனது ட்விட்டர் பதிவில், "அமைதிக்கான நோபல் பரிசை வென்ற கைலாஷ் சத்யார்த்திக்கு எனது மனம் திறந்த வாழ்த்துகள். இந்தச் சாதனையால் தேசமே பெருமைகொள்கிறது. மனித சமூகத்துக்காக கைலாஷ் சத்யார்த்தி தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். அவரின் உறுதியான முயற்சிகளை நான் வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் உரிமைப் போராளி மலாலா யூசுப்சாய் பற்றி குறிப்பிடும்போது "இவரது வாழ்க்கை கடுமையான தைரியமும், தன்னம்பிக் கையும் கொண்ட பயணம்" என்று பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்
சிறுமிகளின் கல்வி உரிமை போராளியான மலாலா யூசுப்சாய்க்கு அமைதி நோபல் கிடைத்திருப்பது தங்களது நாட்டுக்குப் பெருமை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "மலாலா, பாகிஸ்தான் நாட்டுக்குக் கிடைத்த பெருமை. அவருக்கு கிடைத்த பெருமை, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த பெருமை.
உலகம் முழுவதிலும் உள்ள சிறுவர் - சிறுமியர் மலாலாவின் வழியை பின்பற்ற வேண்டும். உறுதியான போராட்ட குணத்தை பெற வேண்டும்.
பெண்களின் குரல் கூட உயர்த்தப்படாத சமுதாயத்தில் கல்வி போராட்டத்தை ஏற்படுத்தியவர்தான் மலாலா. இது மலாலா ஒருவருக்கு கிடைத்த பரிசு அல்ல, பாகிஸ்தானின் பெண்களுக்குக் கிடைத்த பரிசு. அவர்தான் நமது கண்களின் ஒளியாகவும் இதயத்தின் குரலாகவும் திகழ்கிறார்" என்றார்.

No comments: