சிட்னியில் சங்கீத இரட்டையர் - திருமதி பராசக்தி சுந்தரலிங்கம்

.

சென்ற சனிக்கிழமை 09/08/2014 மாலை ஆறரை மணியளவில் பரமட்டா ரிவர்சைட் அரங்கம் சங்கீத இரசிகர்களால் நிரம்பி வழிந்தது. திரு சிறீதரன் ( தமிழ் விக்கிபீடியா  புகழ் ) திருமதி வரலக்ஷ்மி (வீணை வித்துவான் )  தம்பதியினரின்  பிள்ளைகள் வெங்கடேஷ் சௌமியா சகோதரர்கள் வேணு, வீணா கான இசையை வழங்கிப் பெரு விருந்து ஒன்றை அளித்து மகிழ்வித்து விட்டார்கள்.

சங்கீத உலகிலே பல இரட்டையர்களைப் பார்க்கிறோம். பம்பாய் சகோதரிகள், ஆலத்தூர் சகோதரர்கள், சூலமங்கலம் சகோதரிகள், நீலா குஞ்சுமணி, கணேஷ்-குமரேஷ், கர்நாட்டிக்கா பிரதர்ஸ், றஞ்சினி -காயத்திரி என்று பலர். இந்த மேதைகள் எல்லோருமே ஒன்றில் வாத்திய இசையிலோ அல்லது வாய்ப்பாட்டிலோ பிரபலம் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் சிறீதரன் – வரலட்சுமி தம்பதிகளின் வாரிசுகள் புதுமை படைத்து விட்டார்கள். வெங்கடேஷ் புல்லாங்குழல் இசையிலும், சௌம்யா வீணை வாத்தியத்திலும், ஒரே மேடையில் இசையைக் கொண்டு வந்து தமது வித்துவத்தைக் காட்டி விட்டார்கள்.
இரண்டு வாத்தியங்களுமே வெவ்வேறான அமைப்பைக் கொண்டவை – ஒன்று தந்தி வாத்தியம், மற்றையது குழல் அல்லது காற்று வாத்தியம். இவை இரண்டையும் இணைத்து இசைத்து இனிய இசையை மீட்டுவது சாதாரண செயலல்ல. இருவருமே இருபது வயதிற்குள்ளேயே இருப்பார்கள். ஆனால், அவர்களின் வாசிப்பில் முதிர்ச்சி இருந்தது. இந்நிகழ்ச்சி ஒரு சாதாரண அரங்கேற்றம் போலல்லாமல் ஒரு நிறைவான கச்சேரியாக அமைந்திருந்தமை – ஒரு மாபெரும் சாதனை.




சிட்னியிலே புகழ் பெற்ற சங்கீத ஆசான் திரு. சுதந்திரராஜ் அவர்களிடம் வெங்கடேஷ் புல்லாங்குழல் இசையைப் பூரணமாகக் கற்றிருந்தார். சௌமியா தனது தாயாரான திருமதி வரலட்சுமியிடம் வீணையை முறையாகப் பயின்றிருந்தார். இருவருமே மேலதிகப் பயிற்சியை திரு ரமணி தியாகராஜனிடமும், கலைமாமணி விஜயலட்சுமி நாராயணனிடமும் பெற்றுத் தமது ஆற்றலைப் பெருக்கிக் கொண்டனர்

இவர்களின் தாய்வழிப் பெயர்த்தியார் திருமதி இராஜேஸ்வரி சோமசுந்தரம் இலங்கை வானொலியில் பிரபலமான வீணை, வாய்ப்பாட்டுக் கலைஞர். அத்தகைய பாரம்பரியத்தில் வந்த இந்த இளையோருக்கு இசையில் இயல்பாகவே ஈடுபாடு இருப்பது அதிசயமல்ல.
சகோதரர்கள் இருவரும், வாத்தியங்களை அநாயாசமாகக் கையாண்டு இனிய சாஸ்திரீய இசையைப் பொழிந்து நேயர்களை மகிழ்வித்த போது, அங்கே அங்கு சஹ்ருதய உணர்வு பரவியதை உணர முடிந்தது.


சுவாதித் திருநாள் வடிவேலு அவர்களின் காம்போஜி வர்ணத்துடன் ஆரம்பித்த கச்சேரி ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரின் ஹம்சத்வனியில் தொடர்ந்தது. அடுத்து தியாகராஜ சுவாமிகளின் எந்தரோ மகாநுபாவுலுவில் களை கட்டத் தொடங்கி விட்டது. இருவருமே சளைக்காமல் மாறி மாறி இசையை வழங்கினார்கள். மோகனம், சுத்தசாவேரி, சிம்மேந்திர மத்தியமம், என்று இராகங்கள் தொடர்ந்தன. பூர்வி கல்யாணியில் அமைந்திருந்த இராகம் – தானம் - பல்லவியில் சௌம்யாவின் முதிர்ச்சியைப் பார்க்க முடிந்தது. லால்குடி ஜெயராமனின், மாண்டு இராகத் தில்லானாவின் பின்னர், பாரோ கிருஷ்ணையா என்னும் பதத்தையும், இராஜாஜி அவர்கள் இயற்றி, திருமதி எம்.எஸ் அவர்களின் இசையில் புகழ் பெற்ற குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்று வெங்கடேஷ், சௌமியா கச்சேரியை நிறைவு செய்த போது அங்கே சாந்தி நிலவியது. தொடர்ந்து வந்த அசதோ மா சத் கமய என்னும் சுலோகம் குறையொன்றும் அற்ற ஒரு பூரண சுகத்தை அளித்தது - ஒரு சுகானுபவம்.


பக்கவாத்தியக் கலைஞர்கள் மிருதங்க வித்துவான் பாலசிறி   இராசையா, கடம், மோர்சிங் கலைஞர் ஜெயராம் ஜெகதீஸ்வரன், மற்றும் இளம் கலைஞர் ஜனகன் சுதந்திரராஜ் ஆகியோரின் அனுசரணையான வாசிப்பும், அவர்கள் தனி ஆவர்த்தனத்தில் காட்டிய திறமையும், இந்த இசை நிகழ்வுக்கு மெருகேற்றி விட்டதென்றே சொல்ல வேண்டும்.
வெங்கடேஷ் சௌமியா குடும்பத்தினர் பகவான் சத்திய சாயி பாபாவின் பக்தர்கள். இந்த சகோதரர்கள் பகவானைத் துதித்துப் பாடி இந்த நிகழ்வை அவருக்கே பிரசாதமாக சமர்ப்பித்தது அவர்களின் ஆழ்ந்த இறையுணர்வைப் புலப்படுத்தியது.

ஆழமான இசையறிவும், அனுபவமும் மிக்க திரு. சுதந்திரராஜ் போன்ற ஒருவரின், முன்னுரையோடு நிகழ்ச்சியை ஆரம்பித்தது மிகப் பொருத்தம். பிரதம பேச்சாளர் வீணை விதுஷி டன ஆசிரியை கலாசூரி ஜெயலட்சுமி கந்தையாவின் பொருள் பொதிந்த சிறப்புரை இந்நிகழ்ச்சிக்கு மகுடமாக அமைந்திருந்தது. சிறப்புப் பேச்சாளராக வருகை தந்திருந்த டாக்டர் ஜெயமோகன் இன்றைய காலகட்டத்தில் புலம் பெயர் நாடுகளில் எமது பாரம்பரிய இசையைப் பரப்புவதில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் வழங்கிய அறிவுரை காலத்தின் கட்டாயம்.
இது ஒரு அரங்கேற்றம் அல்ல – ஒரு நிறைவான புதுமையான இசைக் கச்சேரி. இந்த இரட்டையர்கள் புகழ் பரவ ஆசிகள் பல.


திருமதி பராசக்தி சுந்தரலிங்கம்.









4 comments:

கௌரி விமலேந்திரன் said...

எங்கள் அருமையான செல்ல மருமக்கள் வெங்கடேஷ் செளமியாவின் (சங்கீத இரட்டையர்) வீணை + வேணுகான அரங்கேற்றம் மிக மிக சிறப்பாக நடந்தது என அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். தங்கள் வாரிசுகளை இசைக்கலையில் ஈடுபடவைத்து சாதனை படைத்துவிட்டார்கள் சிறீதரன் வரலஷ்மி தம்பதியினர். வெங்கடேஷின் சங்கீத ஆசானுக்கும்(திரு சுதந்திரராஜ்), செளமியாவின் சங்கீத ஆசான்(தாயார் வரலஷ்மி) அவர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். இந்த அளவில் அனைவரும் பாராட்டும் வண்ணம் அரங்கேற்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது அறிந்து பெருமிதம் அடைகின்றேன்.

வெளிநாடுகளில் பிள்ளைகள் பெரும்பாலும் சீரளிந்து போகிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது எத்தனையோ பெற்றோரை கதிகலங்க வைத்துக்கொண்டும் இருக்கிறது. பிள்ளைகளை இத்தகைய கலைகளைக் கற்கவைத்து அவர்களை நல்வழிப்படுத்துவதும் பெற்றோருடைய கடமையாகிறது.

சிறீதரன் வரலஷ்மி அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
மேலும் மேலும் இக்கலையில் அவர்கள் வல்லமை பெற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். இலங்கையில் இருக்கும் நாம் இந்த சிறப்பான நிகழ்வை பார்க்க முடியவில்லையென கவலைப்பட்டோம். ஆனால் தமிழ் முரசில் வந்த புகைப்படங்களும், உங்களது மனநிறைவான விமர்சனமும் எமக்கு நேரில் பார்ப்ப்துபோன்ற உணர்வைத்தந்தது. உங்கள் அருமையான் விமர்சனத்துக்கு எங்கள் நன்றிகள்.

Anonymous said...

The review of Parasakthi Sunderalingam on the Arangetrram of Venkatesh & Sowmya is superb& very appropriate I ENDORSE .HER APPRECIATION TOTALLY..Congratulations.

Dr.Gnanaa Kulendran

பராசக்தி said...

நாம் இருப்பது எங்கே சென்னையா? சிட்னியா? என கேட்டுக் கொள்ளும் அளவுக்கு சங்கீதம் அரங்கு முழுவதும் வியாபித்திருந்தது. வெங்கடேஷ் ,சௌமியா இருவரும் குருகுலமுறைப்படி கற்றுக்கொண்டு அரங்கில் தமது வித்தையை இசைத்தும் மீட்டியும் பெருமை பெற்றார்கள். கற்றுக் கொள்வதற்கு குழந்தைகளும், கற்றுக் கொடுப்பதற்கு பெற்றோரும் போட்டி போட்டது போலொரு சூழல் அரங்க நிகழ்வில் கண்டோம்.
நிச்சயமாக இரு வேறு வாத்தியங்கள் ஒன்றாக இணைந்து ஒரே மேடையில் அரங்கேற்றம் செய்ய எடுத்துக்கொண்ட சிரமங்களை பாராட்டியே தீர வேண்டும், இரு வேறு குருக்கள், வாத்தியகார்கள் சிஷ்யர்கள் எல்லோரும் ஒரே நோக்கத்தில் பட்ட பாடுகளின் பலன்கள் வீண்போகவில்லை. "குறையொன்றும் இல்லை" என்று சூசகமாக இசைத்தார்கள். இந்தப் பெருமைகள் யாவற்றையும் தமதாக்கி கொண்ட நிகழ்வு, இல்லை! இது சிட்னியில் நடந்தது என்பதாக நன்றியுரையின் போது தெரிந்து கொண்டோம். இடைவேளைக்கு முன்பாக இருந்த ஒலி யமைப்பு குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டது, வரவேற்பு அரங்கேற்றமேடை அலங்காரம் ஒளியமைப்பு உணவு விருந்தினர் உரை யாவுமே சிறப்பாக இருந்தது

Ramesh said...

திருமதி சுந்தரலிங்கம் எழுதியதியதைப்போல் வாத்திய அரங்கேற்றம் மிக அருமையாக இருந்தது . ஸ்ரீதரன் அமைதியாக இருந்து கொண்டு மிக அழகாக செய்து முடித்துள்ளார் .இருவருக்கும் பாராட்டுக்கள் . சுடச்சுட இதை தந்த தமில்முரசை பாராட்டாமல் இருக்கமுடியாது .இங்குள்ள சமூக விடயங்களை தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.


ரமேஷ்