சங்க இலக்கியக் காட்சிகள் 19- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

எங்கே வந்தாய்? எதற்காக வந்தாய்?



நீர்ப்பொய்கைகள் நிறைந்த அழகிய ஊர் அது. வற்றாத அந்த நீர்ப் பொய்கைகளிலே வாளை மீன்கள் துள்ளியெழுந்து புரண்டு விளையாடும். அதனால் எப்பொழுதம் நீரில் அலை எழும்பிக்கொண்டிருக்கும். அங்கே மலர்ந்திருக்கும் செந்தாமரை மலர்கள் விளக்கின் செந்நிறச் சுடரைப்போல விளங்கும். யானையின் விரிந்த பெரிய காதுகளைப்போன்ற அகன்ற தாமரை இலைகளோடு சேர்ந்திருக்கும் அந்தச் செந்நிறப் பூக்கள் நீரலைகளிலே அசைந்து அசைந்து ஆடும். அங்கே குடங்களிலே நீர்மொண்டு செல்வதற்காக வந்து பொய்கையில் இறங்கிய இளம்பெண்கள் அதனைக்கண்டதும் ஒருகணம் திடீரென அச்சப்படுவார்கள். அத்தகைய பொய்கைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன் தலைவன். அவனுக்குப் பரத்தையர் தொடர்பு அதிகம். ஒரு பரத்தையுடன் சிலநாட்கள் உறவுகொண்டாடிவிட்டுப் பின்னர் அவளை விட்டுவிட்டு வேறொருத்தியை நாடுவான். அவ்வாறு அவனுக்குப் புதிய புதிய பரத்தையர்களை அறிமுகப்படுத்துபவள்ää அதாவது கூட்டிக்கொடுப்பவள் ஒரு விறலி. இசைக் கலைஞி. அதாவது பாணன் ஒருத்தனின் மனைவி.



வளமைபோலப் பரத்தையொருத்தியோடு சிலகாலம் இன்புற்றிருந்த தலைவன் தன் மனைவியிடம் மீண்டும் வருவதற்கு விரும்புகிறான். ஆதனால் வீடு திரும்புகிறான். ஆனால் அவனது மனைவியோ அவனை வெறுக்கிறாள். அவனோடு உறவாட மறுக்கிறாள்.

அதனால் தன் மனைவியை எப்படியாவது சமாதானப் படுத்தித் தன்னோடு சேர்த்து வைக்கும்படி தலைவன் விறலியிடம் கேட்கின்றான். தான் விரும்பிய பரத்தையர்களையெல்லாம் அடைவதற்குத் தனக்கு உதவிசெய்தவள் அந்த விறலிதானே! எனவே அவளால் தன் மனைவியையும் தன்னோடு சேர்த்துவைக்க முடியும் என்று அவன் நம்புகிறான். விறலியும் தலைவியின் வீட்டுக்குச் சென்று அவளைக் காணுகிறாள். தலைவனை எற்றுக்கொள்ளும்படி கோருகிறாள். தலைவிக்குப் பொல்லாத கோபம் வருகிறது. அவளுக்கு விறலியைப் பற்றி நன்கு தெரியும். தலைவன் பரத்தையரிடம் செல்வதற்கு இந்த விறலிதான் காரணம் என்பதை அவள் அறிவாள். அத்துடன் தன் புருசன் நெடுங்காலம் தன்னைவிட்டுப் பிரிந்திருப்பதே, புதுப் புதுப் பரத்தையர்களைத் அவனுக்கு இவள் அறிமுகப்படுத்துவதால்தான் என்பதும் தலைவிக்குத் தெரியும். அதனால் விறலியைக் கண்டதும் அவளுக்கு விபரிக்க முடியாதபடி கோபம் பிறக்கிறது. அவளுக்கு ஏசுகின்றாள். அவளை ஏழனம் செய்கின்றாள்.

“ஏய் மடைச்சியே! வாயிலே ஒருநாளும் உண்மை பேசியறியாதவளே!
ஓவ்வொரு நாளும் தலைவனுக்கு ஒவ்வொருத்தியைக் கூட்டிக்கொடுக்கின்றவளே!
கன்றுக்கட்டியை உரித்துத் தின்னுகின்ற உன் புரு~னைப் போன்ற பாணர்களின் கையிலே இருக்கும் தண்ணுமை வாத்தியத்தின் தலைப்பகுதி உள்ளே எதுவும் இல்லாமல் வெளியே பெரிதாக இருக்குமே. அதைப்போல உப்புச்சப்பற்ற வார்த்தைகளைப் பேசுபவளே! இங்கே எங்கே வந்தாய்? எதற்காக வந்தாய்? உனக்கும் அந்தப் பரத்தையர்களின் தாய்மார்களுக்கும் நல்ல நெருக்கம் உள்ளதுதானே! அவர்களிடம் நீ இன்னும் கதைக்க வில்லையா? தலைவனுக்குப் புதிதாகப் பெண்தெவையென்றால் அந்தப் பரத்தையரின் தாய்மாரைச் சேர்த்து வைக்கலாம்தானே. அதை நீ இன்னமும் செய்யவில்லையா? அதையும் செய்யலாமே” என்று விறலியை இகழ்ந்துää தன்கோபத்தை வெளிப்படுத்துகிறாள் தலைவி.

நற்றிணையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் இந்தக்காட்சியை நாம் காணலாம்.

பாடல்:

விளக்கின் அன்ன சுடர்விட தாமரைக்
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க
உண்தறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளைபிறழும் ஊரற்கு – நாளை
மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு பெண்டே!
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி
உடன்பட் டோராத் தாயரோடு ஒழிபுடன்
சொல்லலை கொல்லோ நீயே? வல்லைக்
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுயிர்த் தண்ணுமை போல
உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே!

நற்றிணை. பாடல் இல: 310 மருதத்திணை. பாடியவர்: பரணர்


இதன் நேரடிக் கருத்து:

நீர்நிறைந்த ஆழமான பொய்கையிலே வாளை மீன்கள் துள்ளிப் புரண்டபடி இருக்கும். அதனாலுண்டாகும் நீரலையினால், விளக்கின் சுடரைப் போல செந்நிற ஒளியைக் கொடுக்கும் செந்தாமரை தாமரை மலர்கள் யானையின் காதைப்போன்று அகன்று பரந்த இலைகளோடு அசைந்தாடிக்கொண்டிருக்கும். அங்கே நீர் அள்ளிச் செல்வதற்காக வந்து நீரில் இறங்கிய பெண்கள் அவற்றைக்கண்டு பயந்து ஓடுவார்கள்.  அத்தகைய ஊரைச் சேர்ந்தவன் தலைவன். அவனுக்குத் தினமும் ஒவ்வொரு புதிய பரத்தையைக் கூட்டிக்கொடுப்பதற்கு முனைந்துள்ள மடமை கொண்ட பெண்ணே! உண்மை தொலைந்து போன உனது நாக்கினால் நீபேசும் நிலைகுலைந்த உன் சிறுபேச்சிலே உனக்கு உடன்பட்டுவிட்ட அந்தப் பரத்தையர்களின் தாய்மார்களோடு சேர்ந்திருக்கின்ற நீ, ஆண்கன்றினை உரித்து உண்ணுகின்ற பாணனின் கையிலேயுள்ள, உள்ளே எதுவுமில்லாத பெரிய தலையையுடைய தண்ணுமை வாத்தியத்தைப் போல கருத்து ஒன்றுமில்லாத வெறும் மேற்போர்வையைப் போன்ற உன் சொற்களை நீ அவர்களுக்கு இன்னும் சொல்லவில்லையா? அவ்வாறு சொல்லி அவர்களையும் உனது தொழிலுக்கு ஆட்படுத்தவில்லையா? (என்று தலைவி விறலியிடம் கேட்கிறாள்)

(இந்தப் பாடலைப் பாடிய புலவரான பரணர், கபிலரோடு சேர்த்து எண்ணப்படுபவர். இவரது பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் பலவற்றைக் காணலாம். பதிற்றுப்பத்து என்ற நூலில் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப்பற்றிய ஐந்தாம் பத்தினை இயற்றியவர். நற்றிணையில் இவரது பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் பாணர் குலத்தவர் என்றும், இளமையிலே, பரண் காக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தமையால் பரணர் என்ற அழைக்கப்பட்டாரென்றும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.)

No comments: