‘அம்மா’வாகிறார் நயன்தாரா

.
முன்னணிக் கதாநாயகி ஒருவரை இயக்குவது அறிமுக இயக்குநர்களுக்கு அத்தனை சுலபமல்ல. ஆனால் 24 வயதே நிரம்பிய அஸ்வின் சரவணன் நயன்தாராவை இயக்கிவருகிறார். குறும்படங்கள் வழியே சினிமாவுக்கு வந்திருக்கும் இவர் கையிலெடுத்திருப்பது ஒரு அமானுஷ்ய த்ரில்லர் கதை. இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் நயன்தாராதான் முதன்மைக் கதாபாத்திரம். நெடுஞ்சாலை ஆரி நயன்தாராவின் கணவர். இந்த ஜோடிக்குக் கதைப்படி இரண்டு குழந்தைகள்.ஏற்கனவே ‘ஸ்ரீராமராஜ்யம்’ படத்தில்லவ குசன்களின் அம்மா சீதாப் பிராட்டியாக நடித்திருந்தார். ஆனால் அந்தக்கதாபாத்திரத்தின் புனிதத் தன்மை காரணமாக ரசிகர்கள் அதை ‘அம்மா’ கேரக்டராகப் பார்க்கவில்லை. ஆனால் இம்முறை நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். இயக்குநர் அஸ்வினும் வியந்து போகிறார்.
“ஒரு யங் மம்மி கேரக்டரில் மிக அழகாகப் பொருந்தியுள்ளார் நயன்தாரா. நான் எனது கதைக்கான டெமோ வீடியோவின் சில நிமிடங்களை அவரிடம் காட்டினேன். பார்த்து முடித்த பிறகு அவர் எதுவுமே சொல்லாமல் கிளம்பிவிட்டர். இரண்டு தினங்கள் கழித்து என் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடன் வேலை செய்வதும், அவரை வேலை வாங்குவதும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது, இயக்குநரை முழுமையாக நம்பும் நட்சத்திரம் அவர். தேவையற்ற எந்தவொரு கேள்வியும் கேட்க மாட்டார். இந்தப் படத்தில் நயன்தாராவின் வசீகரத் தோற்றம் இருக்காது. அவரது உடைகள், வாழ்விடம் அனைத்துமே யதார்த்தமாக இருக்கும். அம்மா கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைப்பது பற்றிப் பலமுறை யோசித்தேன். ஆனால் அவர் இந்தக் கதாபாத்திரத்தில் பொருந்தியதைப் பார்த்து வியந்துபோனேன்” என்று குதூகலிக்கிறார் அஸ்வின்.

No comments: