இலங்கைச் செய்திகள்



காணாமல்போனோர் தொடர்பான கலந்துரையாடலில் குழப்பம்;இராஜதந்திரிகளும் சிறைப்பிடிக்கப்பட்டனர்

11 இலட்சம் பேர் வரட்சியினால் பாதிப்பு

மலையகத்தில் தொடரும் மழையால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

அவுஸ்­தி­ரே­லி­யாவில் கொல்­லப்­பட்­ட­வரின் உடல் ஏழு மாதங்களின் பின் கொண்டுவரப்பட்டு இறுதிக்கிரியை

பல்கலை மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை இடம்பெறவேண்டும் : டக்ளஸ்

மாணவன் மீதான தாக்குதல் சிறுபான்மை மக்கள் மீதான அடக்கு முறையை வெளிக்காட்டுகிறது: சுகிர்தன்

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மரணம்: இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்







===============================================================

காணாமல்போனோர் தொடர்பான கலந்துரையாடலில் குழப்பம்;இராஜதந்திரிகளும் சிறைப்பிடிக்கப்பட்டனர்

05/08/2014   காணாமல் போனோரை கண்டறியும் அமைப்பினர் கொழும்பு, மருதானை, சீ.எஸ்.ஆர்.மண்டபத்தில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வின்போது வேனொன்றில் வந்த பெளத்த தேரர்கள் தலைமை யிலான சிவில் உடை தரித்த குழுவொன்று அத்துமீறி பிரவேசித்து குழப்பம் விளைவித்ததனால் நேற்று மாலை அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
அத்து மீறிய குழுவினர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த ஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் குழுவினரையும் ஏற்பாட்டாளர்களையும் கலந்துகொண்டிருந்த காணாமல் போனோரது உறவுகளையும் சிறைப்படுத்தி அவர் களை தேசத்துரோகிகள் என சித்தரித்ததினாலேயே அங்கு பதற்றம்நிலவியது.
எவ்வாறாயினும் உடனடியாக மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வந்த பொலிஸ் குழு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சிறைப்பட்டிருந்த வெளி நாட்டு இராஜ தந்திரிகளை அங்கிருந்து வெளியேற உதவி செய்தது. எனினும் காணாமல் போனோரை கண்டறியும் அமைப்பின் கலந்துரையாடல் கூட்டமானது குழப்பத்தை அடுத்து இரத்து செய்யப்பட்டது.
காணாமல் போனோரை கண்டறிவதற்கான அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் கூட்டமானது நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மருதானைஇ சீ.எஸ்.ஆர்.மண்டபத்தில் ஆரம்பமானது. இந்த கலந்துரையாடலில் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் காணமல் போன உறவுகளின் உறவினர்களும் காணாமல் போனோர் தொடர்பிலான விபரங்களை தெரிந்துகொள்வதற்காக வெளி நாட்டு இராஜதந்திரிகள் குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.
இந் நிலையில் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலம் கடந்த நிலையில் சுமார் பிற்பகல் 3.30 மணியளவில் வேனொன்றில் 8 பெளத்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேருக்கும் மேற்பட்ட குழுவொன்று குறித்த கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.
கட்டிடத்துக்குள் நுழைந்தவர்கள் ' சிங்களவர்களிலும் காணாமல் போனோர் உள்ளனர். அது தொடர்பில் நாம் சாட்சியம் வழங்குகின்றோம். அதனையும் கேளுங்கள். தேசத் துரோக வேலைகளில் ஈடுபட வேண்டாம்' எனக் கூறியவாறே குழப்பத்தில் ஈடுபட்டதாக கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த அருட் தந்தை சக்திவேல் ஊடகங்களிடம் தெளிவுபடுத்தினார்.
இதனை அடுத்தே கலந்துரையாடலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிங்களவர்கள் காணாமல் போயிருப்பின் அது தொடர்பில் விகாரையில் கூட்டம் நடத்தி விளக்கமளிக்க முடியும் எனவும் அவ்வாறு ஏற்பாடு செய்யப்படுமிடத்து தாம் கண்டிப்பாக அங்கு வருகைதந்து விடயங்களை கேட்டறிய தயார் என கலந்துரையாடலில் இருந்தோர் தெரிவித்துள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்டோர் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை குழப்ப வேண்டாம் எனவும் கோரியுள்ளனர். எனினும் இது தொடர்பில் பெளத்த தேரர்கள் தலைமையிலான குழுவினர் கவனம் கொள்ளாது குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
கூட்டதில் கலந்துகொண்டிருந்த வெளி நாட்டு இராஜதந்திரிகள் குழு இதனால் கட்டிடத்துக்குள்ளேயே சிறைப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் வரை அந்த குழு கட்டிடத்துக்குள்ளேயே சிறைப்பட்டிருந்தது.
குறித்த கல்ந்துரையாடலானது புலிகளின் மா வீரர் குடும்பங்களை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்படுவதாகவும் மீண்டுமொரு பிரச்சினையை கொண்டுவரும் நோக்குடன் முன்னெடுக்கப்படுவதகவும் தேசத் துரோக செயல் எனவும் தேரர்கள் தலமையில் அத்துமீறிய குழுவினரால் குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் ஏற்பாட்டாளர்கள் பெளத்த தேரர்களிடம் விடயங்களை விளக்கிய போதும் அதனை ஏற்றுக்கொள்ள அங்கு வந்த அங்குலுகல்லே சிதா நந்த தேரர் தலைமையிலான சுமார் 8 தேரர்களும் ஏனைய சிவில் உடை தரித்தவர்களும் மறுப்பு தெரிவித்ததுடன் அந்த கூட்டதை நடத்த இடம் தர முடியாது எனவும் தேச துரோக வேலைக்காக இடம் கொடுப்பது அபத்தமானது எனவும் கூச்சலிட்டனர்.
இதனிடையே மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் விஷேட பொலிஸ் குழு ஸ்தலத்துக்கு விரைந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபடுவது இதனூடாக தடுக்கப்பட்டது.
இதனிடையே சீ.எஸ்.ஆர்.மண்டபத்திலிருந்து வெளியே வந்த பெளத்த தேரர்கள் தலமையிலான குழுவினர் அந்த மண்டப முன்றலில் நிறுத்தப்பட்டிருந்த ஞீ முN - 2991 என்ற கறுப்பு நிற சொகுசு வாகனத்தையும் னுP முது - 8639 என்ற வெள்ளை நிற சொகுசு வாகனத்தையும் சுட்டிக்காட்டி அது அரசால் வழங்கப்பட்டது எனவும் அதனை தேசத் துரோக வேலைகளுக்கு பயன்படுத்துவது குறித்து நாட்டின் புலனாய்வுப் பிரிவும் உயர் அதிகாரிகளும் தூங்குகின்றனரா என கேள்வி எழுப்பி மீண்டும் பதற்றத்தை தோற்றுவித்தனர்.
எனினும் இதன் போது பொலிஸார் தலையிட்டு குறித்த கட்டிடத்துக்கும் அங்கு நடைபெற்ற கூட்டதில் கலந்துகொண்டோருக்கும் பாதுகாப்பளிப்பதாகவும் எனினும் பிரச்சினை ஏற்படா வண்னம் கூட்டத்தை தொடராது அதனை நிறுத்துமாறும் ஏற்பாட்டாளர்களிடம் வேண்டினர். இதனை அடுத்து அந்த கூட்டம் இரத்து செய்யப்பட்டது. அத்துடன் பங்கேற்ற வெளி நாட்டு இராஜதந்திரிகள் பாதுகாப்பக அவர்கள் வருகை தந்த வாகனங்களில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந் நிலையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் அமைப்பின் பிரதி நிதிகளையும் அவர்களது கூட்டதுக்குள் அத்துமீறிய பெளத்த தேரர்கள் தலைமையிலான குழுவினரையும் பொலிஸார் நேற்று மாலை மருதானை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்திருந்தனர். 
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த அழைப்பொன்றை அடுத்தே அவ்விடத்து தாம் வந்ததக குறிப்பிடும் மருதானை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி 










11 இலட்சம் பேர் வரட்சியினால் பாதிப்பு

05/08/2014   நாட்டில் நிலவி வரும் வரட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 11 இலட்சத்து 50 ஆயிரத்து 720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களே வரட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
வட மாகாணம்
வட மாகாணத்தில் நிலவும் வரட்சியினால் ஐந்து மாவட்டங்களிலும் குடிநீர் மற்றும் அன்றாட தேவைகளுக்கான நீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் அதிக சிரமப்படுகின்றனர். குறிப்பாக கிளிநொச்சியில் 60 இற்கும் அதிகமான கிராமங்கள் நீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 16 ஆயிரத்து 576 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கால் நடைகள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரைப்பெற்றுக் கொள்வதிலும் அதிக சவாலை எதிர்நோக்குவதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்திலும் கடும் வரட்சி நிலவுகின்றமையினால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்து 913 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 ஆயிரத்து 733 குடும்பங்களும் அம்பாறை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 180 குடும்பங்களும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமேல் / வடமத்திய மாகாணம்
இதேவேளை வடமேல் மற்றும் வட மத்திய மாகாணத்திலும் அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடமேல் மாகாணத்தில் குருணாகல் மாவட்டத்தில் 1 இலட்சத்து 39 ஆயிரத்து 664 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களும் வட மத்திய மாகாணத்தில் பொலனறுவை மாவட்டத்தில் 45 ஆயிரத்து 274 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்திலும் 20 ஆயிரத்து 368 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இம் மாவட்டத்திலேயே அதி கூடிய வெப்ப நிலையான 37.3
செல்சியஸ் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஊவா மற்றும் தென் மாகாணம்
அதேபோல் ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்தில் 32 ஆயிரத்து 39 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தென் மாகாணத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 26 ஆயிரத்து 584 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இவ்வாறு கடந்த ஒரு வார காலமாக நிலவும் கடும் வரட்சி காரணமாக மூன்று லட்சத்து 23
ஆயிரத்து 418 குடும்பங்களைச் சேர்ந்த 11 லட்சத்து 50 ஆயிரத்து 728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பிரதீப் கொடிப்பிலி
இது தொடர்பில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில்;
பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் இன்றியே அதிக சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் குளங்கள் வற்றியுள்ளமையும் கிணறுகளின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையும் அதிகளவில் மக்களை பாதித்துள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் வசதிகளையும் உலர் உணவுப் பொருளையும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வளி மண்டலவியல் திணைக்களம்
இதேவேளை, தற்போது இடம்பெற்று வரும் வரட்சியான காலநிலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரையில் நிலவக் கூடிய சாத்தியம் உள்ளதெனவும் அதுவரையில் மழை வீழ்ச்சியினை எதிர்பார்க்க முடியாதெனவும் வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலவும் இவ் வரட்சியின் காரணத்தினால் 10 ஆயிரம் ஹெக்டேயர் விவசாய நிலங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதோடு 40 ஆயிரம் ஹெக்டேயர் நிலப் பரப்பில் விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட ஆறு மாகாணங்களிலும் 72 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 20 வீதமாக குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.    நன்றி வீரகேசரி 











மலையகத்தில் தொடரும் மழையால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

05/08/2014 
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக களனி, மவுஸாகலை மற்றும் காசல்ரீ ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.  
மேலும், கெனியன், லக் ஷபான, மேல்கொத்மலை  ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதால் அவற்றின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.  
இதன் காரணமாக தாழ்நில பிரதேசங்களை அண்டிய மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி 








அவுஸ்­தி­ரே­லி­யாவில் கொல்­லப்­பட்­ட­வரின் உடல் ஏழு மாதங்களின் பின் கொண்டுவரப்பட்டு இறுதிக்கிரியை


05/08/2014  அவுஸ்தி­ரே­லி­யாவில் கடந்த 16–-01-–2014 அன்று வைத்து கத்­தியால் குத்தி படு­கொலை செய்­யப்­பட்ட கிளி­நொச்சி பளையை சொந்த இட­மா­கவும் ஊற்­றுப்­பு­லத்தை வதி­வி­ட­மாகக் கொண்ட சிவ­பெ­ருமான் கேதீஸ்­வ­ரனின் பூத­வுடல் சனிக்­கி­ழமை கிளி­நொச்சி ஊற்­றுப்­புலம் கிரா­மத்தில் உள்ள அவ­ரது இல்­லத்­திற்கு ஏழு மாதங்­க­ளுக்கு பின்னர் கொண்டு வரப்­பட்டு இறுதி கிரி­யைகள் இடம்­பெற்­றன.
கடந்த வருடம் ஜூன் மாதம் படகு மூலம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்குச் சென்ற கிளி­நொச்சி, பளையை சேர்ந்த சிவ­பெ­ருமான் கேதீஸ்­வரன் (வயது 35) என்­பவர் அவுஸ்­தி­ரே­லி­யாவில் வைத்து கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.
கொல்­லப்­பட்ட கேதீஸ்­வரன் சம்­பவ தினத்­தன்று தொழி­லுக்கு செல்­லாமல் வீட்டில் இருந்த நிலையில் சில இளை­ஞர்கள் வீட்டின் கத­வினை தட்­டி­யுள்­ளனர். இதன்­போது வீட்டு உரி­மை­யா­ளர்கள் கத­வினைத் திறந்­துள்ளார்.
அப்­பொ­ழுது உள் நுழைந்த இளை­ஞர்கள், கேதீஸ்­வ­ரனை கத்­தியால் குத்­தி­யுள்­ளனர்.
இதன்­போதே கேதீஸ்­வரன் உயி­ரி­ழந்­துள்ளார். கொலை செய்­யப்­பட்ட கேதீஸ்வ ரன் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
மனைவியும் பிள்ளைகளும் ஊற்றுப்பு லத்தில் வசித்து வருகின்றனர்.
நன்றி வீரகேசரி 











பல்கலை மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை இடம்பெறவேண்டும் : டக்ளஸ்

04/08/2014  பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்டதற்குரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும்  ஏனைய மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க ஆகியோரிடம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்துவது மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தியுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கிளிநொச்சி முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் எனும் முதலாம் ஆண்டு மாணவன் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இனந்தெரியாதவர்கள் என்று கூறப்படுகின்ற இருவரினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் அனைத்து இலங்கை மக்களினதும் ஐக்கியத்திற்காக பாடுபடும் எமது முயற்சிகளை கேள்விக்குட்படுத்தும். எனவே இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க விஷேட செயற்திட்டத்தினைத் தயாரித்து ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளேன்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உடனடியாக செயற்படுகின்றபோதே பாதுகாப்பான சூழலில் எமது மாணவச் செல்வங்கள் தமது கல்வியை தொடர முடியும். தூரப் பகுதிகளிலிருந்து உயர் கல்வியைத் தொடர்வதற்காக பல்கலைக் கழகங்களுக்கு பிள்ளைகளை அனுப்பி வைக்கும் பெற்றோர் இவ்வாறான தாக்குதல்களால் மிகுந்த வேதனையும், பதற்றமும் அடைந்துள்ளனர். 
எனவே பல்கலைக் கழகங்களுக்குள் நடைபெறும் இவ்வாறான அநாகரிகமான தாக்குதல்கள் மாணவர்களின் கல்வியையும், இனங்களுக்கிடையேயான ஐக்கியத்தையும் பாதிக்கச் செய்துவிடும். எனவே சப்பிரகமுவ பல்கலையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்படுவதோடு உரிய தண்டனையையும் பெற்றுக் கொடுக்கவேண்டும்.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து வெளி இடங்களில் இருந்து வருகை தந்து கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள பாதுகாப்புத் தொடர்பான அச்சத்தை கற்றவேண்டும் எனும் கோரிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமும் விடுத்துள்ளேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
 நன்றி வீரகேசரி 











மாணவன் மீதான தாக்குதல் சிறுபான்மை மக்கள் மீதான அடக்கு முறையை வெளிக்காட்டுகிறது: சுகிர்தன்

05/08/2014 பல்கலைக்கழக மாணவன் மீதான கொடூரத்தாக்குதல் சம்பவமானது இலங்கையில்  சிறுபான்மையின மக்கள் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்கு முறைகளை வெளிப்படையாக காட்டி நிற்கின்றது என்றும் இவ்வாறான அடக்கு முறைகளும் தாக்குதல் சம்பவங்களும் தமிழ் மாணவர்கள் மத்தியில்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று வடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கிளிநொச்சி முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவன்  கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் மாணவர்கள் விடுதிக்குள் புகுந்த முகமூடி அணிந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முகமூடி அணிந்த ஒரு நபர் தனது வாயைப் பொத்திப் பிடித்திருக்க மற்றுமொருவர் தன்னைத் தடியொன்றினால் பலமாகத் தலையில் தாக்கியதாகவும் இதனால் தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் தாக்குதலுக்குள்ளான மாணவன் தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கொச்சைத் தமிழில் கொலை அச்சுறுத்தல் விடுத்து கடந்த மாதம் 20ஆம் திகதி மாணவர்களின் கழிப்பறையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதனையடுத்து அதேபோன்ற சுவரொட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒட்டப்பட்டிருந்ததாகவும் அந்த கழிப்பறையில் வைத்தே மேற்படி மாணவன் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மாணவன் மீதான தக்குதல் சம்பவமும் ஏனைய மாணவ மாணவிகளுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்களும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவை.சிங்கள மாணவர்களினால் விடுக்கப்பட்ட இத்தகைய அச்சுறுத்தல்கள்  தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்களும் அச்சுறுத்தல்களும் எதிர்காலத்தில் பாரியவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதை அதிகாரத்திலுள்ளவர்கள் புரிந்துகொள்வதோடு  இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நன்றி வீரகேசரி 










No comments: