கடல்புறத்தில் ஒரு பெண்...

.

ஒரு இளம்பெண். கல்யாணமாகி மூன்று ஆண்டுகள். இரண்டு குழந்தைகள். இரண்டு வயதில் ஒன்று, ஒரு வயதில் ஒன்று. ஒரு நாள் கடலுக்குப் போன கணவன் திரும்பவில்லை. ஊர் தேடிப் போனது. ஆள் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கழித்துக் கடலோரப் பாதுகாப்புப் படையும் காவல் துறையும் பக்கத்து ஊரில் கரை ஒதுங்கிய ஒரு உடலைக் காட்டுகிறார்கள். உடல் என்று அதைச் சொல்ல முடியுமா? மீன் தின்ற மிச்சம். நீரில் ஊறி வெடித்த பிண்டத்தின் எச்சம். உயிர் உடைந்து, கதறித் துடிப்பவள் அப்படியே உறைந்து சரிகிறாள் சுவரோரம். சோறு இல்லை, தூக்கம் இல்லை. பித்துப் பிடித்தவளாய் உறைந்திருக்கிறாள்.
கடல்புறத்தில் ஒரு பெண் தனித்துப் பிழைப்பது அத்தனை எளிதல்ல. ஒரு ஆண் தினமும் கடலோடும்போதே, பெண் வீட்டு வேலையோடு ஆயிரம் கரை வேலைகளையும் சேர்த்துப் பார்த்தால்தான் ஜீவனம் சாத்தியம். இந்த நடைப்பிணம் இனி என்ன செய்யும் என்று ஊரும் குடும்பமும் கூடிப் பேசுகிறது. அவளை நோக்கி, கடல் கொன்றவனின் தம்பியைக் கை காட்டுகிறது. உடனிருக்கும் இரண்டு உயிர்களைக் காட்டி வற்புறுத்துகிறது. உலுக்குகின்றன பிள்ளைகளின் பார்வைகள். அவள் கரம் பிடிக்கிறாள். ஓராண்டு ஓடுகிறது. இப்போது இன்னொரு பிள்ளை அந்தக் குடும்பத்தில்.


மேலும் ஓராண்டு ஆகிறது. கடலுக்குச் சென்றவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். வீடு திரும்புகிறான் அவன். அதிர்ந்துபோகிறாள். வீடு திரும்பியவன் பிந்தையவன் அல்ல; முந்தையவன். எவன் செத்தவன் என்று ஊர் நினைத்து எரித்ததோ அவன். கொஞ்ச நேரத்தில் பிந்தையவன் வருகிறான். மூவரும் வாய் பொத்தி நிற்கிறார்கள். மூவரின் முன்னே மூன்று குழந்தைகள். முடிவெடுக்க வேண்டியவள் அவள். இப்போது அவள் என்ன செய்வாள்?
கடல்புறத்தில் ஆயிரம் கதைகள் கிடக்கின்றன இப்படி. இந்த ஒரு கதை போதும் என்று நினைக்கிறேன் ஒரு கடல் சமூகப் பெண்ணின் வாழ்க்கைப் பாட்டைச் சொல்ல!
மனதுக்குள் கடலைச் சுமப்பவள்
ஒரு கடல் சமூக ஆணுக்கு, கடலில் போராடுவது வாழ்க்கைப்பாடு என்றால், கரையில் ஆயிரமாயிரம் வேலைகளோடு, மனதில் கடலையும் அதில் தன் வீட்டு ஆணையும், அவனுடைய போராட்டத்தையும் சுமந்து போராடும் பாடு கடல் சமூகப் பெண்ணுடையது. ஒவ்வொரு கடல் சமூகப் பெண்ணும் கடக்க வேண்டிய பாதையை ரோஸம்மாவும் மேரியம்மாவும் சொன்னார்கள்.
வலி பழகல்
“கடக்கரையில பொறக்குற ஒரு பொட்டப்புள்ளைக்கு வெவரம் தெரியிற வயசுலயே வலி பழக்கணும்னு சொல்லுவாங்க. வலி பழக்கணும்னா என்ன அர்த்தமுண்டா, உங்களை அடிச்சாலும் வலி தெரியக் கூடாது. நீங்க தடுக்கி வுழுந்து புண்ணு பட்டாலும் வலி தெரியக் கூடாது. அடி பாட்டுக்கு அடி, புண்ணு பாட்டுக்கு புண்ணு, நட பாட்டுக்கு நட. அப்படிப் பழகணும். இப்போ நகரத்துல இருக்குற பொண்டுவோபோல, கடக்கரையில பொண்டுவோ தான் சோலி பார்த்து வாழ முடியாது. கஷ்டமோ நஷ்டமோ, குடும்பத்தோடு சேர்த்துதான் எல்லாம்.
வீட்டுல ஆம்பிளைங்க நடுராத்திரி ரெண்டு மணி இல்ல, மூணு மணி இல்ல, கடலுக்கு ஓடுவாங்க. அந்த நேரத்துல, வலைய எடுத்துக் குடுக்கிறது, வள்ளத்துல போறதுக்குத் தளவாட சாமானுகளை எடுத்துக்குடுக்குறது, ஒரு வா கொடுத்தனுப்ப கஞ்சித் தண்ணியோ, கட்டுச்சோறோ எடுத்துக் குடுக்குறதுனு அப்பமே ஒரு வீடு முழிச்சிக்கிடும். கடலுக்கு ஆம்பளையை அனுப்பிப்புட்டு, பொம்பளை நிம்மதியா தூங்க முடியுமா? விடியிற வரைக்கும் கூரையை வெறிச்சிக்கிட்டு, சாமியை வேண்டிக்கிட்டு கிடப்போம்.
கொஞ்சம் வானம் கரைஞ்சதும் எந்திரிச்சு பிள்ளைங்களுக்குக் கொடுத்து அனுப்ப எதையோ செஞ்சுவெச்சுட்டு, பிள்ளைங்களை எழுப்பிவுட்டு, படிக்கச் சொல்லி டீத்தண்ணி வெச்சுக்கொடுத்து, சோத்தைக் கட்டிக் கொடுத்தோம்னா, வானம் தெளிஞ்சிரும். அவசர அவசரமா, கடக்கரைக்கு மீன் வாங்க ஓடுவோம். ஏலத்துல மீன் எடுத்து, கூடையில கட்டிக்கிட்டோம்னா ஆளுக்கொரு திசையா வாடிக்கை ஊருக்குப் போவோம். சூரியன் உச்சில போற முட்டும் தெருத்தெருவா கூவி நடப்போம். ஒண்ணு ரெண்டு நா எல்லாமும் வித்திரும். பல நா பாதிக்குச் சொச்சம் மிச்சப்படும். தூக்கிக்கிட்டு வீடு வந்தோம்னா, பசி பொரட்டி எடுக்கும். கஞ்சியைக் குடிச்சிட்டு மிச்ச மீனைக் கருவாடாக்க எந்திரிப்போம். அந்த நா மீனை ஊறல்ல போட்டுட்டு, முன்ன நா ஊறலைக் கலைச்சி, மீனைக் காயப்போட எடுத்தோம்னா, முடிக்கையில பள்ளிக்கூடம் போன புள்ளைங்க வீடு திரும்பிடும். ராத்திரி சோத்தை வடிச்சி, பசியாற வெச்சதுக்கு அப்புறம் உட்கார்றோம் பாருங்க... அப்பம்தான் ஒலகம் தெரியும். ஆனா, அப்பவும் மனசு முழுக்க கடல்லேயே அலை அடிச்சிக்கிட்டு கெடக்கும். போன மனுஷம் இப்ப எங்க நிக்குதோ, காத்தும் நீவாடும் எப்படி அடிக்குதோ, மீனு கெடைச்சுதோ, கெடக்கிலியோ, எப்பம் மனுஷம் கர திரும்புமோன்னு அடிக்கிட்டே கெடக்கும். மனுஷம் வர்ற வரையில இதே பாடுதான். கரைக்கு வந்து திரும்ப கடலுக்குப் போற வரைக்குள்ள எடைப்பட்ட நேரம்தான் மனசு கொஞ்சம் நெலையா இருக்கும்.
இதுவே நல்லூழ்
இந்த வாழ்க்கையே நல்ல வாழ்க்கம்போம் கடக்கரையில. ஏன்னா, என்ன கஷ்டம்னாலும் கூட சுமந்துக்க ஒரு நாதி இருக்கு. இன்னும் கட்டினவனைக் கடலுக்குக் கொடுத்துட்டு, அவன் கொடுத்ததைக் கையில சுமந்துக்கிட்டு, அஞ்சுக்கும் பத்துக்கும் மீன் வித்து, கருவாடு சுமந்து, கால் வயிறு, அரை வயிறைக் கழுவுற கொடுமையெல்லாம் இருக்கே... அதெல்லாம் காணச் சகிக்காதய்யா... ஆனா, தெருவுக்கு நாலு பேரு இப்படிச் சிறுவயசிலேயே அறுத்துட்டு, அம்போன்னு சுமந்து நிக்கிற கொடுமை எந்தக் காலத்துலேயும் குறையலீயே...”
அப்படியே ஆத்துப்போகிறார்கள், கண்கள் கலங்கி நிற்கின்றன.
“முடியலைய்யா... எந்த நேரமும் வாய்க்கரிசி வெச்சிக்கிட்டுதான் உட்கார்ந்திருக்கணும்... ஒரு வா சோத்துக்காக. அதாம் பொழப்பு, அதாம் விதி கடக்கர பொண்ணுக்கு!”
(அலைகள் தழுவும்...)
-சமஸ் (தொடர்புக்கு samas@thehindutamil.co.in)
nantri tamil.thehindu.com/

No comments: